சனி, 15 ஜனவரி, 2011

சொந்தமாக (சாமியார்)த் தொழில் தொடங்கி கோடீஸ்வரனாவது எப்படி?


இப்போதெல்லாம் மணிமேகலைப் பிரசுரப் புத்தகங்கள் கொஞ்சம் டல்லடிப்பதாலும், அண்ணன்கள் கேஆர்பியாரும் ஓஆர்பியாரும் பதிப்பகம் ஆரம்பித்து விட்டதாலும், நானும் "எப்படி?" வரிசைப் புத்தகங்களை எழுதிக்குவித்து கோடீஸ்வரனாகி விடலாம் என்று ரொம்ப சீரியஸாக யோசித்து ஒரு முடிவெடுத்திருக்கிறேன். "அப்போ கேஆர்பி, ஓஆர்பிக்களின் கதி என்ன?" என்று கேட்பவர்கள் கட்டுரையைத் தொடரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காலையில் வெளிக்குப்போவதில் ஆரம்பித்து, இரவு வீட்டுக்கு வந்து சீரியல்களுக்கு மத்தியிலும் சிரமப்பட்டு இல்லாள் சமைத்த அரைவேக்காட்டுச் சாப்பாட்டைக் கொறித்துவிட்டு படுக்கையில் அஜீரணக் கோளாறால் புரண்டுகொண்டிருக்கும் வரையிலும் ஒரு சராசரி மனிதன் "சிக்கல் சிவமயம்" என்று வாழும் வாழ்க்கையில், கோடீஸ்வரக்கனவு என்பது கந்துவட்டிக்காரனைவிடக் கொடுமையாகத் துரத்திக் கொண்டே வருகிறது. இந்தக் கோடீஸ்வரக் கனவுக்கு நீர்பாய்ச்சி, உரம்போட்டு வளர்ப்பவர்களில் இருவகையினர் முக்கியமானோராய் இருக்கின்றனர். ஒரு வகையினர் எம்எல்எம் பிருகிருதிகள். இவர்களைக் கண்டு தெறித்து ஓடுபவர்கள் இந்தக் கட்டுரையைத் தொடரும் அருகதையற்றவர்கள் என்பதை அறிக.

"சார்... ஆக்சுவலா இதுல வந்து பாத்தீங்கன்னாக்கா..." என்று அவர்கள் தன்னம்பிக்கை தெறிக்கும் குரலில் ஆரம்பிக்கும்போதே நமக்கு மஞ்சள்தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடு ஞாபகம் வந்து தொலைக்கும். இந்த பாழாய்ப்போன மனசு இருக்கிறதே, அதற்கு எப்போது எதைக் கற்பனை செய்வது என்று ஒரு விவஸ்தையே கிடையாது. ஆடாகப்பட்டது அசந்துமறந்து தலையாட்டிவிட்டால் தொலைந்தது கதை. கத்தியை நட்டநடுக் கழுத்தில் ஒரேவீச்சாக இறக்குவார்கள் "சார். நீங்க ஒரு தடவை எங்க பிஸ்னஸ் மீட்டிங்கை அட்டெண்ட் பண்றீங்க கண்டிப்பா...நாளைக்கே நான் அழைச்சிட்டுப் போறேன்" என்பதாக.

"நான் அழைத்துவரப்படவில்லை;இழுத்துவரப் பட்டிருக்கிறேன்" என்று மனோகரா பாணியில் நானும் ஓரிருமுறை இம்மாதிரியான 'பிஸ்னஸ் மீட்டிங்'குகளுக்குச் சென்றிருக்கிறேன். 'புனித ஆவி' எழுப்பும் சுவிசேஷக் கூட்டங்களுக்கும் இவற்றிற்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடு இருப்பதாக என் சிற்றறிவுக்கு எட்டித் தொலைக்கவில்லை.

கோடீஸ்வரக் கனவுப்பயிர் வளர்க்கும் இரண்டாம் வகையினர் சுயமுன்னேற்றநூல்களை எழுதிக் குவிப்போர்! இவர்களைப் பற்றி நாம் "சுயமுன்னேற்றப் புத்தகங்களை எழுதுவது எப்படி?" என்கிற இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

இப்போது விஷயத்துக்கு வரலாம்.

சொந்தத் தொழில் தொடங்கி முன்னேற நினைப்போர் ஒரு விஷயத்தில் சர்வஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். தன்னுடைய பணத்தை முதலீடாகப் போட்டுத் தொழில் தொடங்குவதைவிட முட்டாள்தனம் வேறில்லை என்ற அறிவு இருப்பது பாலபாடம்.

"என்னடா இவன் உளறுகிறான்?" என்று நினைக்கவேண்டாம். பணமுதலீடு இல்லாமல் தொடங்கி சக்கைபோடுபோடக்கூடிய இரண்டு முக்கியமான தொழில்கள் அரசியலும், ஆன்மீகமும். இதில் இரண்டாவது சற்று சுலபமானதும், சொகுசானதும்கூட. அரசியல் தொழிலில் ஆரம்பகாலகட்டங்களில் போஸ்டர் ஒட்டுவது, கொடிபிடிப்பது, தொண்டைகிழிய "வாழ்க" கோஷம் போடுவது போன்ற உடலுழைப்பிற்கான தேவைகள் அதிகம்.

ஆன்மீகத்தொழில் தொடங்கி வெற்றிபெறுவது என்ற புத்தகத்தை விரிவாக எழுதினால் அது சற்றேறக்குறைய நாலாயிரத்துச் சொச்சம் பக்கங்களாக வரும் என்பதால் இது ஒரு அறிமுகக்கட்டுரை மட்டுமே.

சாமியார்த்தொழிலில் மொத்தம் மூன்றுவகை இருக்கின்றது. முதலாவதுவகை சாமியார்கள் நம்மூர் கிராமக்கோயில்களில் இருக்கும் பூசாரிகளின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி. அதிகமான தத்துவங்களைச் சொல்லி 'காண்டு' ஏத்தாமல் எளிமையான அருளுரைகளை மட்டுமே வழங்கினால் போதும். இதற்கு நல்ல உதாரணமாக இருப்பவர்கள் மேல்மருவத்தூர் பங்காருநாயுடுவும் வேலூர் தங்கக்கோயில் நாராயணி சாமியாரும் ( இவர் மேற்படி பங்காருவின் பட்டறையில் தொழிற்பயிற்சி எடுத்துக்கொண்டு தனியாகத் தொழில் தொடங்கியவர் என்பது நோக்கத்தக்கது!). இப்படியான சாமியாராக ஆவது சுலபம்தான். முதலில் சற்று ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தைத் தேர்வுசெய்து ஒரு வேப்பமரத்தையோ அல்லது கரையான்புற்றையோ தேர்வுசெய்து கொள்ளவேண்டும். தேர்வுசெய்யப்பட்ட மரம் அல்லது புற்றுக்கு வாராவாரம் வெள்ளி செவ்வாய், நல்ல நாட்கள் கெட்டநாட்கள் இம்மாதிரியான நாட்களில் நன்கு தண்ணீர் ஊற்றிக் கழுவி (அபிஷேகம்!) புத்தாடை அணிவிப்பது ஒரு அடிப்படைக்கடமை. அணிவிக்கப்படும் ஆடை சிவப்பு, மஞ்சள் அல்லது கருப்பு நிறங்களில் இருப்பது நலம்பயக்கும். நீங்களும் அதேவகையிலான நிறத்தில் ஆடை அணியத் துவங்கவேண்டும் என்பதை மறவாதீர்கள். ஆறுமாதங்கள் தொடர்ந்து செய்தால் ஓரிரு பெண்பக்தைகள் நிச்சயம்! இவர்கள் மூலமாகப் பரப்புரை செய்து கொஞ்சம் கொஞ்சமாகத் தொழிலை அபிவிருத்தி செய்யவேண்டும். முக்கியமான விஷயம் அருள்வாக்கு சொல்லக் கற்றுக் கொள்வது. இது ஒன்றும் பெரிய கம்பசூத்திரமில்லை...ஊரில் இருக்கும் பழுத்தகிழம் ஒன்றிடம் ஒருமாதம் தொடர்ந்தாற்போல பேசிக்கொண்டிருந்து அது உதிர்க்கும் அறிவுரைகள், தத்துவமுத்துக்களை சேகரித்துக் கொண்டாலே போதும். சில உதாரணங்கள்:

1) "போடா போ! போய் வீட்டைக்கவனி...நாட்டைக்கவனி.. புள்ளைகுட்டியைப் படிக்கவை... தாயை வணங்கு. மனைவிதான் சக்திஸ்வரூபம்!"

2)"குப்பைகளைச் சுத்தம் செய்!" (நீங்கள் மனக்குப்பை, உடல்குப்பை,உலகக்குப்பை, நினைவுக்குப்பை என்று சொல்வதாக பக்தகோடிகளே குறியீடு, உருவகங்களையெல்லாம் கற்பனை செய்து கொள்வார்கள். இப்போதெல்லாம் புதுக்கவிதைகளை வாசிப்பவர்கள் செய்கிறார்களே..அதே மாதிரி!)

3) "உடலே கோயில்! உள்ளமே தெய்வம்!!" ( அப்புறம் நீ ஏன்யா வேப்பமரத்தைக் கும்பிடுறேனு கேட்பவர்களை அடுத்தமுறை உள்ளேவிட்டுவிடக்கூடாது)

 இரண்டாவது வகை சாமியாராக இருப்பதும் சுலபம்தான். எளியவகை தியானப்பயிற்சிகளை கற்றுக் கொடுத்தபடி "வாழ்க்கை வாழ்த்தான் மச்சான்", "ஃப்ரீ வுடு மாமே" என்பதுபோன்ற சுலோகங்களுடன் "டோண்ட் வொர்ரி..பீ ஹேப்பி" வகை வாழ்க்கையை உபதேசிக்கத் தெரிந்தால் நீங்கள் இந்தவகையில் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டு வெற்றிகரமான 'தொழிலதிபராக' வலம் வரலாம். நடிகை பூமிகாவின் இன்னாள் கணவர் பரத் தாக்கூர் போன்றவர்கள் இந்த வகையில் அடங்குவர்.

மூன்றாவதுவகை சாமியாராக இருப்பது என்பது கொஞ்சம் கூடுதல் உழைப்பைக் கோரும் உழைப்பாகவே இருக்கின்றது. ஆனால் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு. உங்கள் தொழிலுக்கு சர்வதேச அளவில் மார்க்கெட் இருக்கும். சண்டைநடக்கும் நாடுகளுக்கிடையில் சமாதானத்தூதுவராக 'செயல்'பட்டு நோபல் பரிசில் பெறவும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ரவிசங்கர், ஜட்டி...சீ..ஜக்கி, காலஞ்சென்ற வேதாத்திரி, நித்யானந்தன் போன்றோர் நல்ல உதாரணம்.இந்தவகைச் சாமியாராக ஆகவேண்டுமெனில் நீங்கள் சில வருடங்கள் கடுமையான தயார்படுத்தல்களைச் செய்யவேண்டும். கொஞ்சம் ஆலோசனைகள் கீழே :

1) கொஞ்சம் கஷ்டப்பட்டாவது பகவத்கீதை, மகாபாரதம், ராமாயணம், தம்மபதம், ஈசாப் குட்டிக்கதைகள், பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவற்றை நெட்டுருப் போட்டுக் கொள்ளுங்கள். சில நேரங்களில் சம்ஸ்கிருத மூல சுலோகங்களை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது. உங்களை பெரிய ஞானியாகக் காட்டிக்கொள்ள உதவும்

2) யோகாசனம் செய்வதுபற்றி தேசிகாச்சார் போன்றோர் நல்ல புஸ்தகங்கள் போட்டிருப்பதாகத் தெரிகிறது. அவற்றை வாங்கிப் படித்தபின் நாலைந்து ஆசனங்களைக் கலந்துகட்டி உங்களுக்கென்றே விசேஷமாக ஒரு சில ஆசனங்களையும் முத்திரைகளையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். சித்பத்சலாசனம், கலாசனம், மூத்ரபேதியாசனம், ஆதிமுத்ரா, பாதிமுத்ரா என்றெல்லாம் விதவிதமான பெயர்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். பழகவும் செய்யவும் எளிமையாக இருப்பது முக்கியம். அப்போதுதான் நடுத்தரவர்க்க இல்லத்தரசிகளை உங்களது ரசிகர்கூட்டத்தில் சேர்க்கமுடியும்.

3) "சாமி கிருஷ்ணரின் இருநூறாவது பிறவி, ராமானுஜரின் நூத்திச் சொச்சமாவது ஜென்மம்" என்றெல்லாம் உங்களது அடிப்பொடிகளை வைத்து கடைத்தெருக்களில் கொஞ்சம் சத்தமாக பேசிக்கொண்டிருக்கச் செய்வது நல்ல மார்க்கெட்டிங் உத்தி.

4) அடுத்த முக்கியக்கட்டம் உங்களுக்கென்று ஒரு அறிவுஜீவி வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். எங்கேயாவது சில நபர்கள் "நான் எஸ்பஞோல் மொழி படிக்கப் போகிறேன், ஃப்ரான்ஸில் நான்தான் நம்பர் ஒன், நம்பர் டூ எல்லாம் போகும் இலக்கியவாதி, 'ஷாக்கு தெரியுதா' என்கிற போலிஷ் எழுத்தாளன் என்னைப்போலவே 100 ஆண்டுகளுக்குமுன் எழுதியுள்ளான்...இத்யாதி இத்யாதி" என பினாத்திக் கொண்டு திரிவார்கள். அவர்களைக் கட்டி இழுத்துவந்து உங்கள் பிரச்சாரப்படையில் சேர்த்துக்கொண்டால் கொடுத்த காசுக்கு மேலேயே கூவுவார்கள்.

ஏற்கனவே சொன்னமாதிரி இது ஒரு அறிமுகக் கட்டுரை மட்டுமேயாதலால் இத்துடன் முடித்துக் கொள்ளப்படுகின்றது. இது தொடர்பான செயல்முறை வகுப்புக்களை வருகின்ற கடுங்கோடைகாலத்தில் (அப்போதுதான் மண்டைக்குழம்பு நன்கு கொதித்து உருகிப்போயிருக்கும்) துவங்கலாம் என்றிருக்கிறோம். விருப்பமிருப்பவர்கள் உடனே முன்பதிவு செய்யவும். வளமான எதிர்காலத்துக்கும் சொகுசான வாழ்க்கைக்கும் நாங்க கேரண்டி!

9 பேரு கிடா வெட்டுறாங்க:

ஜோதிஜி சொன்னது…

ராஜாராமன்

நான் உன்னோட எழுத்தை படித்த வரையில் மிகச் சிறந்த எழுத்து நடையும் தெளிவான சிந்தனைகளும் உடைய இந்த தலைப்புக்கு என்னுடைய முதல் வாழ்த்துகள்.

நக்கலாக எழுத முடியாமல் என்னை கட்டிப் போட்டு விட்டாய் ராசா.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நீங்க ஆசிரமம் ஆரம்பிச்சு அடிச்ச பணத்தை பாதுகாக்குற பொறுப்பு என்னோடது. # டவுட்டுகள் இருந்தால் கிளீயர் செய்யப்படும்.

பாரத்... பாரதி... சொன்னது…

பதிவு முழுவதும் நக்கலும், நையாண்டியும் இழையோடுகிறது. மூட நம்பிக்கைகளை போட்டுத்தாக்குகிறீர்கள். நடையும் , விஷயமும் அருமை.
சில இடங்களில் தேவன் மற்றும் கல்கியின் நடை ஞாபகம் வருகிறது.

பாரத்... பாரதி... சொன்னது…

சாருவையும் சன்னமாக வாரி இருக்கிறீர்கள், நடக்கட்டும்...

பெயரில்லா சொன்னது…

அருமையான கட்டுரை. தகுந்த படத்தை தேர்வு செய்து போட்டுள்ளீர்க்ள். ஆனாலும் மக்கள் புரிந்துக் கொள்ள மற்க்கிறார்க‌ளே

Rathi சொன்னது…

கோடீஸ்வரன் ஆக வழி சொன்னீங்க சரி. அதுக்கேன் இல்லத்தரசிகளின் சமையலை கிண்டல் செய்கிறீர்கள். வரவர பெண்கள் பற்றி நக்கல் யாஸ்தி ஆயிடிச்சு. மேலேயுள்ள படத்தையும் சேர்த்து சொன்னேன். :))

யாராவது ஒரு பெண்ணிடம் மாட்டாமலா போகப்போகிறீர்கள். அப்ப இருந்து பார்க்கத்தானே போகிறோம்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா... இந்த தமிழ் எழுதியில் எழுதி பார்க்க ஆசைப்பட்டு எப்படியோ எழுதிவிட்டேன்.

பெயரில்லா சொன்னது…

nalla erukku nanmba unga katturai muthuraman thiruthuraipoondi

தருமி சொன்னது…

சார்,
உங்க நடை ரொம்ப பிடிக்குது!

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

நக்கல்ஸ்,,,, இந்த அறிமுக கட்டுரையை படித்து கூட சில சாமியார்கள் உருவாகிஇருக்கக்கூடும்.....

Related Posts with Thumbnails