வியாழன், 20 ஜனவரி, 2011

செத்துப்போ!


"சத்த்..." என் மண்டையோடு பிளந்தது. நல்ல அழுத்தமான, கனமான இரும்பு ராடு... இருபத்தெட்டு ஆண்டுகள் உடலுக்குள்ளேயே பாய்ந்து அலுத்துப்போன கருஞ்சிவப்புத் திரவம் வெளியுலகைப் பார்க்கும் ஆசையில் கொழகொழப்பாய்ப் பீய்ச்சியது. என் கண்கள் பிதுங்கின. "ஹா.. ஹாஹ்..." நாசித்துவாரங்கள் விடைத்து மூச்சுக்காய் ஏங்க தொண்டை வறண்டு "தண்ணீர்..தண்ணீர்" என்று துடித்தது. அதிவேகமாய் இருட்டத் தொடங்கிய கண்களில் எதிரே வன்மமாய்ச் சிரித்துக் கொண்டிருந்த அவள் தெரிந்தாள்... என் பொண்டாட்டி... 'தேவிடியா முண்டை'... உடம்பு ஒருமுறை விலுக்கென்று உதறிப்போட லேசாகி மிதக்க ஆரம்பித்தேன்.

பொத்தென்று கீழே விழுந்த என் உடலைப் பார்த்து அவனும் அவளும் புன்னகை செய்தனர். அவன் இரும்புராடைக் கீழே வீசிவிட்டு அவளை.. என் பொண்டாட்டியை கட்டிப்பிடித்தான். இருவரும் வெறித்தனமாய் முத்தமிட்டுக் கொண்டனர். "டேய் பாவிகளா! தேவிடியாப் பசங்களா! நான் ஒருத்தன் இங்க இருக்கேண்டா! அவளை விட்றா" ம்ஹூம்! சுத்தமாகக் குரல் எழும்பவே இல்லை. பரிதவித்தேன்... அறைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்தேன். அழுகை அழுகையாய் வந்தது. அவர்கள் இப்போது அம்மணமாக இருந்தனர். அவன் அவள்மீது தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தான்..."தூத்தேறி!"

எதையும் பார்க்கப் பிடிக்கவில்லை. ஜன்னல் வழியே வெளியேறினேன். குளிர்ச்சியாய் வீசிக் கொண்டிருந்த காற்று கொஞ்சம் இதமாக இருந்தது. இருட்டில் ராட்சசன் மாதிரி நின்றிருந்த தூங்குமூஞ்சி மரத்தின் கிளையில் போய் அமர்ந்தேன். 'துரோகிகள்...பாவிகள்! அநியாயமாய்... ஒரு புழுவை நசுக்குவதைவிடக் கேவலமாய்... கொன்றுவிட்டாயேடி நாறமுண்டை! என்னடி செய்தேன் உனக்கு? நீ அரிப்பெடுத்துத் திரிந்தால் அதற்கு ஏண்டி என்னைக் கொன்றாய்?'... இந்நேரம் அவள் உள்ளே ஆனந்தமாய்க் கிறங்கிக் கொண்டிருப்பாள். எனக்கு உடம்பெல்லாம் தீப்பற்றியதுபோல் இருக்கிறது..ப்ச்ச்.. உடம்பு எங்கே இருக்கிறது இப்போது எனக்கு?

என்னைப் பார்த்தால் உங்களுக்கெல்லாம் பரிதாபமாக இருக்கிறதா? வேண்டாம்... தயவுசெய்து பரிதாபப்படாதீர்கள்! எனக்கு இது தேவையானதுதான். இந்த துர்ச்சாவு... இந்த துரோகம் எல்லாமே. ப்ச்.. என்ன கொஞ்சம் வலி இல்லாமல் இருந்திருக்கலாம். சரி...விடுங்கள். அவர்கள் உள்ளே ஏழாம் சொர்க்கத்தில் இருக்கிறார்கள். அதை மறக்கவேண்டும் எனக்கு. நான் கொஞ்சம் சுருக்கமாக என் கதையைச் சொல்கிறேன் அதுவரை.

உங்களுக்கு கேகேவைத் தெரியுமா? சென்னையில் இதயப்பகுதி தி.நகரை நான்காண்டுகள் முன்புவரை கட்டியாண்ட சாம்ராஜ்யாதிபதி. ஏராளமான சொத்துக்கள், ஏராளமான வைப்பாட்டிகள்,ஏராளமான வியாதிகள் இன்னும் ஏராளமான...ஏராளமான... எல்லாச் சொத்துக்களையும் ஏகபுத்திரனான என் தலையில் கட்டிவிட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன் நிம்மதியாக இறைவனடி சேர்ந்தார் அல்லது சேரவைக்கப் பட்டார்... என்னால்...

என்னால்?! ஆமாம்... நான்தான்! காரணம் சந்திரிகா! என் மனைவி! அழகான, வசீகரமான இளம் மனைவி! காசுகொடுத்து வாங்கிய எம்பிஏ பட்டத்துடனும் வாலிபத் திமிருடனும் சுற்றித் திரிந்த என்னுள் காதல் ஊற்றைப் பொங்கவைத்தவள். நுரைக்க நுரைக்கக் காதலித்தேன், காதலித்தோம். சாதி, அந்தஸ்து,லொட்டு லொசுக்கு என்று என் தகப்பனார் ஒற்றைக்காலில் டான்ஸ் ஆட ஒரு முகூர்த்தநாளில் அவரை நாற்பது வேலியம் மாத்திரைகள் துணையுடன் சிவலோகப்ராப்தி பெறவைத்தேன். இப்போது சந்திரிகா முறை. அப்பாவுக்குப் பதில் நான்!

எனக்கு இப்போது அவளைக் கொல்லவேண்டும். மூச்சுத் திணறத்திணற, பார்ப்பவரை எல்லாம் கவர்ந்திழுக்கும் கண்கள் பிதுங்கிச்சரிய "வேண்டாம்...வேண்டாம்...என்னை விட்ருங்க..ப்ளீஸ்" என்று அழ அழ அவளைக் கொல்லவேண்டும். அதற்கு முதலில் எனக்கு ஒரு உடல் வேண்டும். அதுவும் நல்ல ஆரோக்கியமான, வலுவான உடல் வேண்டும். வெறும் காற்றாய் இருந்துகொண்டு என்னால் என்ன செய்ய முடியும்? உங்களில் யாராவது எனக்கு உடல்தானம் செய்கிறீர்களா? கொஞ்சநாள் மட்டும்...ப்ளீஸ்! என் சொத்து முழுவதையும் எழுதிவைக்கிறேன்.... சரி உடனே ஓடாதீர்கள். நானே பார்த்துக் கொள்கிறேன்.

***********************************************************

அவளும் அவனும் தியேட்டரைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். அவன் அவளது இடுப்பைப் பற்றிக்கொண்டு... ஏதோ சொல்கிறான். அவள் சிணுங்கிச் சிரிக்கிறாள்.. 'தேவிடியா...தேவிடியா'! இரண்டு மாதங்களாக அவர்கள் பின்னே நாயாய் பேயாய் அலைகிறேன். கொல்லவேண்டும்... ரத்தம் பொங்கிப்பாயவேண்டும்.... இன்று முடித்துவிடுகிறேன்... முடிக்கவேண்டும். இன்று அமாவாசை. நான் வழக்கத்துக்கு மாறாக சுறுசுறுப்பாக இருக்கிறேன்... "Now here இல்லாவிட்டால் No where!" என்று எப்போதோ படித்திருக்கிறேன்.

அவன் எனது காரில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். என் பொண்டாட்டியின் தொடைகளில் கைபோட்டுக்கொண்டு... பாஸ்டர்ட்! கார் வேகமாக வழுக்க ஆரம்பித்தது. எப்படி...எப்படி.. எந்த இடம்.. பார்த்துக்கொண்டே விரைந்தேன்... ஆ..! இதோ இரும்புக்கம்பிகளை சுமந்தபடி ஒரு லாரி! அவன் காருக்கு முன்னால்! என்ன அவசரமோ? ஹார்னை பொறுமையில்லாமல் அழுத்தி வழிகேட்டுக்கொண்டே தொடர்கிறான் ராஸ்கல். லாரி விரைந்துகொண்டிருக்க நான் மெல்ல லாரியைத் தாண்டுகிறேன். அதோ சாலையோரத்தில் தள்ளாடிக்கொண்டு ஒரு 'குடி'மகன். டாஸ்மாக் தந்த அரசாங்கமே..நீ வாழ்க!

என் முழுவிசையையும் தம்கட்டிச் சேர்த்தேன். "ங்ங்... ஆஹ்.." குடிமகன் விநாடியில் லாரிக்கு இருபதடி தூரத்தில் விழுந்தான். 'க்க்க்க்க்க்றீஈஈஈஈச்ச்ச்.....' லாரி கதறிக்கொண்டது. சக்கரங்களில் தீப்பொறி பறக்க எழுந்து நின்று ப்ரேக்கை அழுத்தினான் ட்ரைவர். பின்னால் வந்த அவர்களின் கார் வேகமாகப் பாய்ந்து லாரியை முத்தமிட... நீட்டிக் கொண்டிருந்த கம்பிகள் சரக்கெனப் பாய்ந்தன.

'சந்திரிகா.. சந்திரிகா! என் கண்ணே! உன் ரத்தம் இவ்வளவு சிவப்பா?'... துடித்துக்கொண்டிருந்த அவளது விரல்கள் மெல்ல ஓய ஆரம்பித்தன. நான் சிரிக்க ஆரம்பித்தேன் "ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹ்ஹாஹா............."

*********************************************************

"ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹ்ஹாஹா............."

"இப்படித்தான் டாக்டர் அடிக்கடி ரொம்பப் பெரிசா சிரிக்கிறார். என்னால சுத்தமா கண்ட்ரோல் பண்ணவே முடியல. நேத்து ராத்திரிகூட தூக்கத்தில் சரேல்னு எழுந்தவர் பாய்ஞ்சிபோயி டிவிய அப்படியே ஸ்டேண்டோட சேத்து தள்ளிவிட்டுட்டார். வரவர ரொம்ப பண்றார். ப்ளீஸ்... எனக்கு என்ன பண்றதுன்னே புரியல" சந்திரிகா புலம்பினாள்.

"சின்ன வயசுல இருந்து நிறைய மர்மநாவல்களைப் படிச்சு அதிலேயே மூழ்கி இருந்திருக்கார்.அப்படியே தனக்குன்னு ஒரு கற்பனை உலகத்தை சிருஷ்டிச்சிட்டு அதிலேயே வாழ்ந்திருக்கார். தனிமையைக் கரைச்சுக்க அவர் தேர்ந்தெடுத்த வழி இப்போ அவரை கரைச்சிட்டு இருக்கு! இனி இவரை ரவுண்ட் த க்ளாக் மெடிகேர்லதான் வெச்சிருக்கணும்... இன்னிக்கும் வழக்கம்போல ஸ்ட்ராங்குலைஸர் கொடுத்துடலாம் சந்திரிகா! டோண்ட் வொர்ரி" என்றான்(ர்) டாக்டர் ஹரிப்ரசாத்.

"டேய்! அநியாயமா எனக்குப் பைத்தியக்காரப்பட்டம் சூட்டாதீங்கடா பொட்டைப்பசங்களா! இப்படி ஸ்ட்ராங்குலைஸர் கொடுத்தே என்னை மெண்டலாக்கிட்டீங்களேடா திருட்டு நாயே! என்னை ஹாஸ்பிடல் அனுப்பிட்டு என் பொண்டாட்டியோட கூத்தடிக்க ப்ளான் போட்றியா? உன்னையெல்லாம் உயிரோட விட்டாத்தானேடா...."

மேஜைமேல் இருந்த பேப்பர் வெயிட்டைத் தூக்கி அவன்மேல் வீசினேன். குறிதவறி அவள் உச்சந்தலையை உரசிச் சென்றது.சட்டென்று கையில் கிடைத்த கண்ணாடி டம்ளரை உடைத்து பாதி டம்ளருடன் அவன்மீது பாய்ந்தேன். எளிதாக விலகியவன் கைக்குக் கிடைத்த அந்த இரும்புராடை எடுத்தான். காற்றில் 'விஷ்' என சுற்றினான்...

"சத்த்..." என் மண்டையோடு பிளந்தது. நல்ல அழுத்தமான, கனமான இரும்பு ராடு... இருபத்தெட்டு ஆண்டுகள் உடலுக்குள்ளேயே பாய்ந்து அலுத்துப்போன கருஞ்சிவப்புத் திரவம் வெளியுலகைப் பார்க்கும் ஆசையில் கொழகொழப்பாய்ப் பீய்ச்சியது. என் கண்கள் பிதுங்கின. "ஹா.. ஹாஹ்..." நாசித்துவாரங்கள் விடைத்து மூச்சுக்காய் ஏங்க தொண்டை வறண்டு "தண்ணீர்..தண்ணீர்" என்று துடித்தது. அதிவேகமாய் இருட்டத் தொடங்கிய கண்களில்....

பின்குறிப்பு: க்ரைம் கதைகள் படிப்பது உடல்நலன் மற்றும் மனநலனுக்குத் தீங்கானது.

16 பேரு கிடா வெட்டுறாங்க:

Philosophy Prabhakaran சொன்னது…

நீங்களும் க்ரைம் நாவல்கள் படித்துதான் இப்படி கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள் போல :)
எனிவே கதை அருமையாக இருந்தது கடைசி பத்தியில் மட்டும் பல்ப் தந்துவிட்டீர்கள்...
இப்பொழுதெல்லாம் க்ரைம் நாவல் படிக்கவேண்டுமென்று அவசியம் இல்லை... மெகா சீரியல் பார்த்தாலே இந்நிலைக்கு ஆளாகி விடுவார்கள்...

skaamaraj சொன்னது…

பயமாருக்குப்பா..
நல்லா கதை சொல்ல முடியுது.
நல்ல கதையும் சொல்லவரும்.

Unknown சொன்னது…

அடடே கிரைம் கதைகள் கைவருகிறதே!!! . முடிவை யூகிக்க முடியாது வைத்திருப்பதும், கதை மீண்டும் முதல் பாராவுக்கு பயணம் செய்வதும் அசத்தல்..

கைகுடுங்க தம்பி ....

dheva சொன்னது…

ஹாட்ஸ் ஆஃப்... டா.. படைப்பாளி.....!

என்ன என்னதான் நீயும் எழுதுவேன்னு பாக்குறேன்....ஹா.. ஹா.. ஹா!

ஊகிக்க முடியாத கதையின் ஓட்டத்தின் பின் புலத்தில் அசுரத்தனமான ஆற்றல் தெரியுது தம்பி!

முல்லை அமுதன் சொன்னது…

nallathu.
vaazhthukal.
mulaiamuthan

பாரதசாரி சொன்னது…

செம ஃப்லோ வாழ்த்துக்கள்

ஜோதிஜி சொன்னது…

இடையில் உள்ள வார்த்தைகள் சற்று சங்கடத்தை உருவாக்கினாலும் இது போன்று என்னால் எழுத முடியாது என்பதில் இருந்து உன்னோட திறமையை புரிந்து கொள்வாய் என்று நம்புகின்றேன்.

ஜோதிஜி சொன்னது…

மின் அஞ்சல் வசதிக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

செமத்தியா இருக்கு சகா! :)

Unknown சொன்னது…

அருமை ரசித்து படித்தேன்

அன்புடன் நான் சொன்னது…

சில வார்த்தைகளை தவித்து கதை மிகவும் பிடித்திருக்கிறது.

vinthaimanithan சொன்னது…

வழக்கம்போலவே ஒவ்வொரு போஸ்டையும் போடும்போது பயந்துகொண்டே போடுகிறேன். நண்பர்களின் மனந்திறந்த பாராட்டுக்கள் இன்னும் இன்னும்... என உத்வேகம் கொள்ளச் செய்கின்றன. பின்னூட்ட அரசியலை செய்யாத போதும் என்னை முன்னோக்கி நகர்த்தும் நெஞ்சங்களுக்கு...

நன்றியும் நெகிழ்ச்சியும்!

shortfilmindia.com சொன்னது…

நல்லாருக்கு.. கேபிள் சங்கர்

ஹேமா சொன்னது…

வாசிக்க வாசிக்க என்னமோ பயமாத்தான் இருந்திச்சு !

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

அருமையா கதை எழ்துறீங்க பி.கே.பி சாயல் உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்...பாராத்துக்கள்....

தருமி சொன்னது…

//க்ரைம் கதைகள் படிப்பது உடல்நலன் மற்றும் மனநலனுக்குத் தீங்கானது. //

ஆமாமா ... பார்த்தா அப்படித்தான் தெரியுது!! :)

Related Posts with Thumbnails