புதன், 26 மே, 2010

ஒரு கவிதை...

ஒரு கவிதை...

காலத்தில் மங்கிப்போன
சில
பதிவுகளை
எழுப்பிச் செல்கிறது

ஒரு கவிதை...

பூக்களோடு
சில
முட்களையும்
நம்மீது தூவிச்
செல்கிறது

ஒரு கவிதை...

கண்ணீர் துடைத்து
சில
முத்தங்களை
விட்டுச் செல்கிறது

ஒரு கவிதை...

நம்மைக்
குழந்தையாக்கிக்
கொஞ்சிச் செல்கிறது

ஒரு கவிதை...

புணர்தலின் உச்சத்தை
யுகங்களுக்கு
நீட்டித்துச் செல்கிறது

ஒரு கவிதை...

குழந்தையாய் மாறித்
தன்
மழலையைப்
புரிந்து கொள்ள
இறைஞ்சுகிறது

ஒரு கவிதை...

சனி, 22 மே, 2010

மவனே செத்தீங்கடா....(கண்டிப்பாக இது பின்,முன்,நடுசெண்டர்,சைடு நவீனக்கதையல்ல)

பாத்ரூமில் நனைத்துப்போடப்பட்டிருந்த கரிகால சுந்தரச்செழியனின் ஜட்டி தூக்கம் கலைந்து விழித்தபோது ஆளில்லா சாலையில் தன்னந்தனியே பேசிக்கொண்டு நடந்துகொண்டிருந்த உக்கிரவழுதிப்பாண்டியனுக்கு சிறுநீர் கழிக்கும் உந்துதல் வந்து ஜிப்பை தளர்த்த பேண்ட்டிற்குள் இருந்து குதித்த பாம்பு மெல்ல நழுவி 27C யில் ஏறி அமர்ந்து 1,35,87,26,49,83,48,89,95,34,732 பைசாக்களை எண்ணிக்கொடுத்து 7830B.Cக்கு டிக்கெட் வாங்கி 15 நிமிடம் கழித்து இறங்கிப் பார்க்கையில் சூரியன் தன்பழுப்பு நிறக்கிரணங்களை வீசிக்கொண்டிருப்பதை சட்டை செய்யாமல் தாவிக்குதித்து 321-ம் கிளியோபாத்ராவின் அந்தரங்க அறைக்குள் நுழைந்து தன்னை இருபத்தி நாலு அங்குல ஆண்குறியாக உருமாற்றிக்கொண்டபின் அவளது படுக்கையில் சற்றே கண்ணயர்ந்துக் கொண்டிருக்கையில், காஷ்மீரத்துக்குடிசையொன்றில் ரோஜா நிறத்தையொத்த இளங்கன்னியை வன்புணர்ந்துகொண்டிருந்த கரும்பச்சைச்சீருடையணிந்த வீர இளைஞனின் காதுக்குள் வந்து ரீங்கரித்த குளவியொன்று மெல்ல நகர்ந்துபோய் சற்று தொலைவாயிருந்த பஃகறுளியாற்றங்கரையிலமர்ந்து இந்தக்கதையை எப்படி முடிப்பது என்று தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்த இருபத்தியெட்டாம் ஈழப்போரில் எஞ்சியிருந்த இறுதித்தமிழன் குலோத்துங்கப்புலிகேசிப்பாண்டியநெடுவழுதிப்பல்லவ காளிங்கராயனினருகிலமர்ந்து “உனக்கொரு கதை சொல்கிறேன், கேள்” என்று சொல்லத்துவங்கிய கதை யாதெனின்.........

திங்கள், 17 மே, 2010

முள்ளிவாய்க்காலுக்காக துளி கண்ணீர்

இருண்மையில் கரைந்து கொண்டிருக்கிறது காலம். இன்னும் அழுகிக் கொண்டிருக்கும் உடலங்களின் மேல் அலகுகளைக் கூர்தீட்டிக் கொண்டிருக்கின்றன மானுட தர்மங்களும் மனச்சாட்சிகளும். செய்வதற்கு ஏதுமின்றி தவித்துப் புலம்பிக்கொண்டிருக்கும் ஜீவன்களும் தத்தமது வாழ்க்கைப் போராட்டத்தில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஓராண்டாயிற்று... முழுப் பூவுலகும் வேடிக்கை பார்க்க ஓர் இனத்தையே கதறக் கதறக் காவு கொடுத்து... செய்து முடித்தோர் செத்து மடிந்தோரை வரலாற்றின் பக்கங்களிலிருந்து நீக்கிவிட்ட பெருமிதத்திலும், துணைபுரிந்தோர் தண்டகாரண்யக்காடுகளில் அடுத்த வேட்டையிலும், தடுக்கும் வல்லமை கொண்டிருந்தோர் அரியணைக் கனவுகளிலும், அவர் துரோகி, இவர் துரோகி என்று மேடைகளில் ஒப்பாரிக் கச்சேரி வைத்தோர் தத்தமது துரோகங்களை ஒளித்து வைப்பதிலும் மூழ்கிவிட்டனர்.

ஆயிரமாயிரம் வகைகளில் எழுதிக் குவித்தாயிற்று... கவிதைகள், ஆய்வுக்கட்டுரைகள், வாதப் பிரதிவாதங்கள், அஞ்சலிக்கட்டுரைகள் என...அவரவர் வாழ்க்கை வழமைக்குத் திரும்பியாயிற்று.

மேலும் சொல்லவும், செய்யவும் என்ன இருக்கிறது? துளி கண்ணீரை விட ?

”விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை”

ஞாயிறு, 9 மே, 2010

மரணம் பற்றிய கனா

எப்போதும்
இணைந்தே இருக்கின்றன
வாழ்வும் மரணமும்

வட்டத்தின்
முதலும் கடைசியுமாய்

உச்சமென அறிந்தும்

ஏற்க
மறுக்கும் மனம்

‘அனுபவத்தைப்
பகிர்வது எவ்வாறு?’

முரணாய்த்தானுள்ளது

மரணத்தின்
சிருஷ்டி
இறைவன் என்பது

என்னதான் சொன்னாலும்

பயமுறுத்தத்தான்
செய்கிறது

யாருமற்ற நள்ளிரவில்
மரணம் பற்றிய கனா

சனி, 8 மே, 2010

ஆதியில் சொல் இருந்தது

வைதரணி* நதியில்
சொற்களே ப்ரவாகமாய்

தாண்டவியலா தவிப்பில்
ஆத்மாக்களின் அழுகை

சொற்களுள் இருந்தது பிரபஞ்சம்

சொற்கள் சொற்களைப்
புணர்ந்து
சொற்களைப்
பிறப்பித்தன

சொற்கள் சொற்களை
அழித்து
சொற்களை
உயிர்ப்பித்தன

நீ

நான்

சொ

ல்

ல்

சொ

சொற்களில் மட்டும்
ஜீவிக்கிறது
மானிடம்

சொற்களாலும்
ஜீவிக்கிறது
கவிதை

ஆம்

ஆதியில்
சொல் இருந்தது

சொல் மட்டுமே

( * வைதரணி- இறந்துபோகும் ஆத்மாக்கள் பூமியைத்தாண்டி போகும்போது கடந்து செல்லவேண்டிய அக்கினியாறு- இந்து புராணங்களின்படி)
Related Posts with Thumbnails