வியாழன், 21 ஜூலை, 2011

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பகுதி-1
பதிவுலகம் பக்கம் வந்து நீண்ட காலமாகிவிட்டது. எதையும் தொடர்ந்தாற்போல் சற்றுநேரம் சிந்திக்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்ததே காரணம். வெறுமனே கூகிள் பஸ்ஸில் கும்மியடித்துக் கொண்டிருந்துவிட்டேன். தொடர்ந்தாற்போல ஒரு நல்ல கட்டுரையையோ, கதையையோகூட வாசிக்கும் அளவு மனதை ஒழுங்கு செய்ய இயலவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் மிகவும் வைராக்கியத்துடன் ஒரு புத்தகத்தை வாசித்திருந்தேன். என் மனதில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்திய புத்தகங்களுள் அது முக்கியமான ஒன்று!

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தனது வாழ்வின் மிகப்பெரும் பகுதியை சிறைப்பறவையாகவே கழித்துக் கொண்டிருக்கும் பேரறிவாளனின் "தூக்குக்கொட்டடியில் இருந்து ஒரு முறையீட்டு மடல்" என்ற நூல்தான் அது. அதனை தமிழ் இணையவாசிகள் எத்தனைபேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. என்னால் ஒரு பத்துபேர் அந்தப் புத்தகத்தை வாசிக்க நேர்ந்தால், அது என் பாக்கியம் எனக் கருதி அந்த நூலை தட்டச்சு செய்து எனது வலைப்பூவில் ஏற்றுகிறேன். ஒரு சிறு துரும்பாக எனது பணி அமையும் என்று கருதுகிறேன்.

இந்த நூலுக்கு நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களும், நீதியரசர் எச்.சுரேஷ் அவர்களும் எழுதிய அணிந்துரைகளை இத்தொடரின் கடைசியில் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.

எனது கருத்துக்கள் போதும். இனி, புத்தகத்துக்குள் நுழையலாம்.

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். - அ.ஞா.பேரறிவாளன், மரணதண்டனைச் சிறைவாசி, த.சி.எண். 13906, நடுவண் சிறை, வேலூர்-2.

மதிப்பிற்குரிய அம்மா/அய்யா! வணக்கம்!

நான் அ.ஞா.பேரறிவாளன்.ராஜீவ் கொலைவழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு மரணதண்டனைச் சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன்.எனது கருணைமனு மேதகு குடியரசுத்தலைவர் அவர்களின் மேலான பரிசீலனையில் இருப்பதால் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதுச் சிறுவனாக அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட நிலையில் கடந்த 14 1/2 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப்பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும் உயிர்காப்புப்போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான்.

துன்பம் சூழ்ந்த தீவில் நிற்பினும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. தங்களைப்போன்ற மனிதநேய உள்ளங்களின் துணை இருப்பதால், மரணத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை உண்டு. ஏற்கனவே நான் கைது செய்யப்பட்டதன் பின்னணி, சட்டப்புறம்பான காவல், துன்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் பெற்ற முறை, வாக்குமூலம் தொடர்பான முரண்பாடுகள், சிறைத்துன்பங்கள் எனப் பல்வேறு செய்திகளை உள்ளடக்கி, முறையீட்டுமடல் ஒன்றை 1999-2009 ஆண்டுக் காலப்பகுதியில் தங்களுக்கு அனுப்பி இருந்தேன். (இணைப்பு-1)

அம்மடலோடு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ள முரண்பாடுகள், பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டி ஒரு ஆவணமும் இணைத்திருந்தேன். (இணைப்பு-2) அவற்றில் எனது தரப்பின் நியாயத்தைப் படித்துணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்நிலையில் மீண்டும் ஒரு மடல் எழுதக்காரணம், மரணதண்டனைத் துன்பத்தோடு 14 1/2 ஆண்டுகளின் பின்னும் சிறைவாழ்வு நீடிக்கிறதே என்பதால் மட்டுமல்ல. இருவேறு முக்கியத் திருப்பங்கள் ஏற்பட்ட காரணத்தினால் இம்மடல் எழுதுகிறேன்.

முதலாவது காரணம், மேதகு குடியரசுத் தலைவர் எமக்குக் கருணை காட்டும்படி அரசுக்குப் பரிந்துரைத்த செய்தி அறிந்தபின் கொண்ட நம்பிக்கையும், மகிழ்ச்சியும்.

மேதகு குடியரசுத்தலைவர் அவர்களின் பரிந்துரையோடு, 1999 ஆம் ஆண்டில் திருமதி சோனியா அவர்கள் எம் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நான் உள்ளிட்ட நால்வருக்கும் தண்டனையை நிறைவேற்றுவதில், தனக்கோ, தனது குடும்பத்தினருக்கோ விருப்பம் இல்லை எனச்சொல்லி, மேதகு குடியரசுத்தலைவர் அவர்களுக்கு எழுதிய மடல், எனது தண்டனையை மாற்றியமைத்துவிடும் என்ற நம்பிக்கையை மேலும் வலுவாக்கியுள்ளது.

தற்போதைய அரசு திருமதி சோனியா அவர்களின் தலைமையிலான கூட்டணி அரசு என்பதால் அவரது விருப்பத்தைப் பிரதிபலிப்பதாகவும் மனிதநேயக் கண்ணோட்டத்தோடு மேதகு குடியரசுத் தலைவர் எடுத்துள்ள நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் அரசின் பரிந்துரை அமையும் என்ற நம்பிக்கையோடு உள்ளேன்.

இம்முறையீட்டுமடலுக்கான இரண்டாவது மிக முக்கியக் காரணம், எமது வழக்கில் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகவும், பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் (MDMA) அதிகாரியாகவும் அங்கம் வகித்து இவ்வாண்டின் (2005) மார்ச் திங்களில் ஓய்வு பெற்றவரான திரு.இரகோத்தமன் அவர்கள் இக்கொலை தொடர்பாக, 'குறுந்தகடு' (CD) ஒன்றை வெளியிட்டு, அது தொடர்பாக ஏடுகளுக்கு வழங்கிய பேட்டியே.

10-08-2005 தேதியிட்ட 'குமுதம்' வார இதழின் பேட்டியின் இறுதியில் திரு.இரகோத்தமன் சொல்கிறார்-

"கொலை நடந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் இதுவரை விடை இல்லை" என்கிறார் இரகோத்தமன். அவை "ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கொலைக்குப் பிறகு சிவராசனும் சுபாவும் ஆட்டோவில் தப்புகிறார்கள். அவர்களுடன் மூன்றாவது நபர் ஒருவரும் பயணிக்கிறார். அவர் யார் என்பது இன்றுவரை தெரியவில்லை.

மனித வெடிகுண்டு தனு பயன்படுத்திய வெடிகுண்டு பெல்ட்டைத் தயாரித்துக் கொடுத்தது யார் என்பதும் தெரியவில்லை."

உங்களில் யாருக்காவது தெரியுமா?

31-07-2005 தேதியிட்ட 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழின் பேட்டியில் இறுதிக்கேள்வியும் அவரின் பதிலும்:

"ராஜீவ் கொலைவழக்கில் கண்டுபிடிக்க முடியாத விஷயம் ஏதாவது உண்டா?"

"ஒரே ஒரு விஷயம் இருக்கிறது... தனு தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு 'பெல்ட்'டைச் செய்து கொடுத்த நபர் யார்... என்கிற விஷயம்தான்!"

ஆம். இதுவரை வெளிவராத, கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள, பல்நோக்குக் கண்காணிப்புக்குழு (MDMA) விசாரணைக்கான கருப்பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான், எனது வாழ்வும் கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு என்னைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தியிருக்கிறது.

...தொடரும்

9 பேரு கிடா வெட்டுறாங்க:

இராமசாமி சொன்னது…

நன்றி விரா.. மிச்ச பகுதிகளையும் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.. சீக்கிரம் பதிவேற்றுங்கள் ....

வீ.வி சொன்னது…

நல்லா முயற்சி வாழ்த்துக்கள் அண்ணா ஆரம்பித்த உடனே முடிந்ததை போன்ற உணர்வு மீதமுள்ள பகுதிகளையும் விரைவில் வெளியிடுங்கள்

...αηαη∂.... சொன்னது…

எந்த பதிப்பகம் ? எந்த கடையில் கிடைக்கிறது...

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நல்ல பதிவு

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

உங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?

பலே பிரபு சொன்னது…

காத்திருக்கிறோம் அடுத்த பதிவுக்கு .

Rathi சொன்னது…

இப்பத்தானே அமெரிக்க ராஜாங்க செயலர் இந்திய ஜனநாயகம் குறித்து பாராட்டுப்பத்திரம் வழங்கினார். அவருக்கு இந்தியாவின் பேரறிவாளன் குறித்து தெரியாதோ!!!!

ஓசூர் ராஜன் சொன்னது…

நல்லா முயற்சி வாழ்த்துக்கள்

chicha.in சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

Related Posts with Thumbnails