புதன், 13 ஜனவரி, 2010

நான் இந்தியனா? தமிழனா?

ரொம்ப நாளாச்சு நான் ப்ளாக் பக்கம் வந்து....

அண்மையில் தோழர் தமிழ்சசியின் வலைப்பக்கத்திலிருந்து ஒரு பதிவை எடுத்து என் நண்பனுக்கு மின்னஞ்சலிட்டிருந்தேன். அந்த மெயில், அதற்கு அவன் அனுப்பிய பதில், மீண்டும் எனது பதில்.... இதோ. வலையுலக நண்பர்களின் செழுமைப்படுத்த்லுக்காய்...

தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்
இன்றைய சூழ்நிலையில் நான் யார் ? தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா என்ற கேள்விகள் என்னுள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு தமிழகத் தமிழன் மனிதில் உள்ள கேள்வியும் அது தான். இது குறித்து நண்பர் சொ.சங்கரபாண்டியின் கட்டுரையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. என்னுடைய எண்ணத்தை அந்தக் கட்டுரை பிரதிபலிப்பதால் அவரது அனுமதியுடன் அதனை இந்த வலைப்பதிவில் பதிவு செய்கிறேன்.



தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்

சொ. சங்கரபாண்டி

(இக்கட்டுரையின் பெரும்பகுதி வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதப் பட்டது)

உலகத்தில் இதுவரை நாடுகளுக்கிடையே நிகழ்ந்து வரும் போர்களுக்கும், ஒரு நாட்டுக்குள்ளேயும், ஒரு மாநிலத்துக்குள்ளேயும் கூட தோன்றும் அல்லது தொடரும் பூசல்களுக்கும் அடிப்படைக் காரணம் மனிதரின் பல்வேறு அடையாளங்களும், அவற்றுக்குள்ளேயான முரண்பட்ட நிலைகளுமாகும். அடையாளம் (Identity) என்கிற பொழுது மொழி, இனம், நாடு, மதம், சாதி, வாழும் பகுதி, பண்பாடு, பால்வகை, கட்சி என பலவித அடையாளங்களைக் குறிப்பிட முடியும். இவற்றுள் சில உண்மையான அடையாளங்கள் என்று சொல்லவே தகுதியில்லாதவை என்பதை சற்றுப் பின்னால் பார்க்கலாம். இவை எல்லாமே மனிதரின் புற அடையாளங்களே என்பதையும், மனிதர்களெல்லோருமே உயிர் அல்லது ஆன்மா என்ற அகநிலையில் ஒன்றானவர்களே என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் அத்தனை முரண்பாடுகளையும் உதறித்தள்ளிப் போய்க்கொண்டிருக்கலாமே. ஆனால் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது என்பதை பிறப்பு முதல் இன்று வரை எனக்குள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்து வரும் அடையாளப் போராட்டத்தின் மூலம் உணர்ந்து வருகிறேன். ஆனாலும் ஒரு தனிமனிதனுக்கு பல்வேறு அடையாளங்கள் இருக்க முடியும் என்பதையும், அவற்றுள் சில இயல்பாகவும், சில திணிக்கப் பட்டும் இருக்க முடியும் என்பதையும் உணர்ந்து வருகிறேன். அவ்வடையாளங்கள் ஒன்றுக்கொன்று இயைந்து பரிணமித்தும் அல்லது முரண்பட்டு ஒன்றையொன்று விழுங்கியும் இயங்கக் கூடும். இயல்பாக இருந்த அடையாளங்கள் வலுவிழந்தும், திணிக்கப் பட்ட அடையாளங்கள் வலுப்பெற்றும் நிலைக்கலாம் என்றும் உணர்கிறேன். சில வேளைகளில் இம்மாற்றத்தினால் சில நன்மைகளும் அல்லது அல்லல்களும் ஏற்படலாம். உதாரணமாக என்னுடைய அனுபவத்தை இங்கு ஆராய முற்படுகிறேன்.

நான் பிறந்த பொழுது எனக்கு இயல்பாகக் கிடைத்தது ஆண் என்ற பால் அடையாளம் மட்டுமே. அடுத்து தாயுடனும், உறவுகளுடனும் இயல்பாக வளர்ந்தது தமிழன் என்ற மொழி அடையாளம். வாழும் நாட்டால் வகுக்கப் பட்டது இந்தியன் என்ற நாட்டு அடையாளம். பிறந்த உடனே கற்பனையாக என்மேல் திணிக்கப் பட்டவை சாதி மற்றும் மத அடையாளங்கள். இவ்வாறான பல அடையாளங்களில் பள்ளிக்கு உள்ளே இந்தியன் என்ற அடையாளமும், பள்ளிக்கு வெளியே சாதி மற்றும் மத அடையாளங்களும் போதனைகளால் உரமிட்டு வளர்க்கப் பட்டன. தமிழன் என்ற அடையாளம் தமிழைப் படித்தும், பேசியும் வளர்ந்தவரை கூடவே இருந்து கொண்டேயிருந்தாலும் தமிழை விட பொருள் ரீதியில் முன்னேற்றத்தை அளிக்கவல்ல ஆங்கிலத்தின் முன்பும், மதம் வழியே காதில் விழுந்த சமஸ்கிருதத்தின் முன்பும் கொஞ்சம் கூனிக்குறுகியே நின்றது. திராவிட அரசியல் பரப்புரைகளால் தமிழ் மொழியின் பெருமைகள் ஒருபுறம் ஊட்டப் பட்டு வந்தாலும், இன்னொரு புறம் தமிழன் என்ற மொழி அடையாளத்தைப் பேணுவது குறுகிய சிந்தனையாக படித்த சமூகத்தினரால் சித்தரிக்கப் பட்டதால், என்னுடைய கல்வி உயர உயர தமிழன் என்ற அடையாளம் உள்ளத்தில் மட்டுமே ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.

சைவமும், காந்தியமும் உயர்ந்த நெறியாக போற்றப் பட்ட என் சமூகச்சூழலில் மதமும், சாதியும் உண்மையிலேயே மனித அடையாளங்களல்ல என்றும், இயல்பான மனித அடையாளமான மொழி அடையாளம் பேணுவது குற்றமானதல்ல என்றும் தோன்றவேயில்லை. சாதிக்கும், மதத்துக்கும் எந்தவித புறவடிவக் கூறுகளோ, குணாதிசயங்களோ கிடையாது. பகுத்தறிந்து பார்த்து, அவற்றை ஒரு நொடிப்பொழுதில் துறக்கவும், மாற்றவும் முடியும் என்கிற போது அவற்றை அடையாளங்கள் என்று அழைப்பதை விட நிறுவனங்கள் என்று சொல்வதே சரியாகும். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தில் நாம் உறுப்பினராக இருக்கும்வரைதான் அந்நிறுவனத்தோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள முடியும். ஆனால் மொழி அடையாளம் மூளையோடும், சுவாசத்தோடும் கலந்த இயல்பான அடையாளம் என்றாலும், அதை வைத்திருப்பது தவறானது என்று நான் படித்த சில மேட்டுக்குடி மேதாவிப் பத்திரிகைகளால் கட்டமைக்கப் பட்டன.

இந்தச் சூழலில் எனக்குள் ஒரு தெளிவை அடையக் காரணமாயிருந்தது ஈழப்பிரச்னையும், அதை இந்தியா எதிர் கொண்ட விதமும். காந்தியம்தான் மனிதாபிமானம் என்றிருந்த எனக்கு போலித்தனங்களை அடையாளம் காட்டிய பெரியாரியமும், போலித்தனங்களின் பொருளாதார அடிப்படையை புரிய வைத்த மார்க்ஸியமும் பரிச்சயமானது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத்திலிருந்து துரத்தப் பட்ட தமிழரின் துயரங்களை தமிழன் என்றல்லாமல் வெறும் மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். தமிழ் மொழியை தங்களது அடையாளமாக வெளிப்படுத்திய ஒரே காரணத்திற்காக அரசு வன்முறையால் விரட்டியடிக்கப் பட்ட தமிழ் மக்களின் பிரச்னைக்குத் தீர்வாக இந்திய ஆளும் வர்க்கத் தேசியவாதம் காட்டிய வழியிலேயே நானும் முதலில் சிந்திக்கிறேன். தமிழன் என்ற அடையாளம் குறுகிய பிராந்திய அடையாளம் என்று எனக்குப் போதிக்கப் பட்டதால் எனக்கு அதுவே சரியாகப் பட்டது.

ஆனால் சில வருடங்களாக ஈழப்பிரச்னையை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த பொழுதுதான் புரிந்தது -- தமிழன் என்ற அடையாளம் இந்தியன் என்று கட்டியமைக்கப் படும் அடையாளத்துக்கு எதிராகக் கருதப் படுகிறதென்று. அதனாலேயே ஈழத்தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையில் தேடவேண்டிய தீர்வுக்குத் தடையாக அம்மக்களது தமிழ் மொழி அடையாளத்தை இந்தியா கருதுகிறதென்று. தமிழ் மொழி அடையாளம் மூடிமறைக்கப் படவேண்டிய அடையாளம் என்று கருதப் பட்டதால்தான் இலங்கையில் ஐம்பது ஆண்டுகாலமாகத் தொடரும் அடக்கு முறையைப் பெரிது படுத்தாமல், இலங்கை அரசிடம் சரணடைந்து வாழுமாறு தமிழர் வன்முறையின் மூலம் பணிக்கப் பட்டனர். இதுவே தனிப்பட்ட அளவில் என்னிடம் தமிழன் என்ற அடையாளம் மீட்டெடுக்கப் படக் காரணமாயிருந்தது. ஈழப் பிரச்னையில் தமிழர் என்று பார்க்காமல், மனித உரிமை அடிப்படையில் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தீர்வு அளிக்கப் பட்டிருந்தால் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களிடம் தமிழன் என்ற அடையாளம் வலுப்பெறாமலே கரைந்து போயிருக்கக் கூடும்.

எந்தவொரு பொருளிலும் அல்லது பிரச்னையிலும் உண்மையை அறிய வேண்டுமெனில், வெளியில் பிரபலமாக நிலவும் வெகுஜன ஊடகங்களை மட்டுமல்லாமல் அரிதாகக் கிடைக்கும் அனைத்து நூல்களையும், பிரசுரங்களையும் பாரபட்சமின்றி படிக்க வேண்டுமென்ற தூண்டுதலை மறைமுகமாக என்னுள் ஏற்படுத்தியது ஈழப் பிரச்னை. பெரியாரியம் அந்தவகையில் என்னுடைய அனைத்து அடையாளங்களையும் உடைத்துப் போட்டது. போலித்தனமான அடையாளங்களான மதமும், சாதியும் மட்டுமல்ல. புறவடிவக் கூறுகளைக் கொண்டு இயல்பாக வாய்த்த ஆண் என்ற அடையாளமும், இயல்பாக வளர்ந்த தமிழன் என்ற அடையாளமும் கூட என்னுள்ளே அடித்து நொறுக்கப் பட்டன. மாறுபட்ட அடையாளங்களுடன் உள்ளவர்களையும் சமமாக (உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ இல்லாமல்) மதிக்க வேண்டும் என்றுணர்த்தியது பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம். அடையாளங்களை முன்வைத்து ஏற்றத்தாழ்வு செய்தலின் உண்மையான நோக்கமான பொருளாதாரச் சுரண்டலைப் புரிய வைத்தது மார்க்ஸியத் தத்துவம். தமிழன் என்ற அடையாளம் என்னுள் மீட்டெடுக்கப் பட்டாலும், தமிழ்த்தேசியவாதம் உள்பட அனைத்துத் தேசியவாதங்களிடமும் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது பெரியாரியமும், மார்க்ஸியமும். மனித சமூகத்தின் சமநிலையைப் புறக்கணித்து, மனிதர்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்து ஒடுக்குமுறையைப் பயன்படுத்தும் அபாயத்தை அனைத்து தேசியவாதங்களும் உள்ளடக்கியவை.

கடந்த பல வருடங்களாக அமெரிக்க வாழ்க்கை எனக்குள் நடக்கும் அடையாளப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. அமெரிக்கன் என்ற அடையாளம் மற்ற அடையாளங்கள் போன்று புறவடிவத்தன்மை கொண்டதாக இல்லாமல், செயல்வடிவம் கொண்டதென்று சொல்லலாம். ஒருவகையில் பார்க்கப் போனால் மார்க்சியமும், பெரியாரியமும் வலியுறுத்தும் தனிமனித விடுதலையை செயல்வடிவமாகக் கொண்டதே அமெரிக்க அடையாளம். மொழி, நிறம், பால், இனம், நாடு என பலவிதங்களில் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமமாக நடத்தப் பட வேண்டும் என்ற நிலைப்பாடும், எழுத்துரிமையும், பேச்சுரிமையும் எப்பொழுதும் மறுக்கப் படக் கூடாது என்ற நிலைப்பாடும் அமெரிக்கன் என்ற அடையாளத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அமெரிக்க அடையாளத்துக்குப் புறம்பாக சில தனிநபர்களும், நிறுவனங்களும், புஷ் அரசு உள்ளிட்ட சில அரசுகளும் நடந்து வந்தாலும், அமெரிக்கன் என்ற அடையாளம் இங்கு வந்தேறியுள்ள அனைத்து மக்களிடமும் நல்லதொரு தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.

இப்படியாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் அடையாள மாற்றங்களுள் ஒரே நேரத்தில் பல அடையாளங்கள் இருப்பதில் ஆச்சரியமுல்லை. உதாரணமாக, மொழி வாயிலான தமிழன் என்ற அடையாளம் வேண்டுமென்றே ஒடுக்கப் பட்டதாக உணர்ந்ததால் கிளர்ந்தெழுந்த தமிழன் என்ற அடையாளமே என்னுடைய முதல் அடையாளம். ஆனாலும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் இந்தியன் என்ற அடையாளமும், வந்து குடியேறி வாழும் நாட்டினால் அமெரிக்கன் என்ற அடையாளமும் கூடவே இருப்பதில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த மூன்று அடையாளங்களில் என்னை மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று சொல்லுமளவுக்கும் எந்தவித பெருமையையும் நான் உணரவில்லை.

இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற அடையாளத்தை மிஞ்சிய அடையாளமாக தமிழன் என்ற அடையாளம் இருக்கக் கூடாது என்று கூற நினைப்பவர்களை நினைத்து முன்பெல்லாம் எரிச்சல் வரும், இப்பொழுதோ அனுதாபப் படுவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. தமிழன் என்ற இயல்பான அடையாளத்தை அங்கீகரிக்கும் பொழுது தான் இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற கட்டமைக்கப் பட்ட அடையாளமும் வலுப்பெற்று இயல்பான அடையாளமாக மாறும். அதுதான் அமெரிக்காவின் வெற்றிக்கும் இரகசியம். எனவே நான் முதலில் தமிழன், அதன் பிறகுதான் இந்தியன் மற்றும் அமெரிக்கன் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் பிறந்து வளரும் என் குழந்தை முதலில் தன்னை அமெரிக்கனாகவும், அதன் பின்னே தமிழனாகவும், இந்தியனாகவும் உணரலாம். அதுவே இயற்கையும் கூட!

* * *

மேலே எழுதியுள்ள கட்டுரை வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதியது. ஈழத்தமிழர் மேல் பற்றுள்ள தமிழகக் கட்சிகள் பங்கேற்றுள்ள அரசுகள் தமிழகத்திலும், டெல்லியிலும் இருப்பதால், புலிகளின் மேலுள்ள குறைபாடுகளையும் அவநம்பிக்கைகளையும் தாண்டி, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிக்காவிடினும், புரிந்து கொண்டு அரசியல் முதிர்ச்சியுடன் இந்தியா செயல்படும் என்ற நப்பாசையைத் தமிழர்கள் கொண்டிருந்த நேரம். அதன் பின்னால் 2008 அக்டோபரில் சயந்தனின் இடுகையொன்றில் (http://blog.sajeek.com/?p=431) இட்ட பின்னூட்டம் கீழே. அப்பொழுது ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும் கலைஞர் இந்திய அரசை வற்புறுத்திப் போர் நிறுத்தத்துக்கு வழிவகுப்பார் என்று பெரிதும் ஏங்கிய நேரம்.

“என்னைப் போன்ற இந்தியத் தமிழர்கள் இந்தியாவின் மேல் நம்பிக்கை வைப்பதே வீண். ஏனென்றால் இந்தியாவில் தமிழர்கள் ஓரளவுக்கேனும் தன்மானத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதன் முக்கியக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மை இனம் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு தனியொரு இனமில்லாததால்தான். எல்லா இனங்களுமே ஐம்பது விழுக்காட்டுக்கும் கீழ்தான். இல்லையெனில் நாங்களும் ஈழத்தமிழர்களைப் போலவே வன்முறையால் என்றோ ஒடுக்கப் பட்டிருப்போம். எடுத்துக் காட்டாக, கட்டாய இந்தித் திணிப்புப் பிரச்னையில் நேருவின் வாக்குறுதி என்றெல்லாம் ஒன்றைப் பார்த்திருக்க முடியாது. போதாமைக்கு சோ, இராம், சுப்பிரமணியசாமி, சிதம்பரம் போன்ற பார்ப்பனிய-பனியா-இந்தியக் கைக்கூலிகளையும் எங்களுக்குள்ளேயே எப்பொழுதும் விட்டு வைத்திருக்கிறோம். எங்களது கலைஞரின் குடும்பத்தினர் போன்றவர்கள் தமிழகக் கொள்ளையில் ஆரம்பித்து தற்பொழுது அகில இந்திய அளவில் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்த்துக் கொள்ளத் தெரிந்திருக்கிறார்கள். உணர்ச்சி வயப்படுவதைத் தவிர ஏதும் தெரியாத வைக்கோ போன்றவர்கள் இன்னொரு புறம். எனவே தன்மானம் என்பதெல்லாம் தமிழகத் தமிழனுக்குக் கிடையாது. அந்த ஈரோட்டுக் கிழவன் சமூக மற்றும் பொருளாதாரத் தன்மானம் கிடைப்பதற்காகப் போராடியதால், தமிழ்நாட்டுத் தமிழர் தம்மளவில் விழிப்புணர்வடைந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

உணமை இப்படியிருக்க ஈழத்தமிழர்கள் எம்மிடம் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத் தமிழர்கள் சொல் என்றுமே டெல்லி அம்பலத்தில் ஏறாது. ஈழத்தமிழர்கள் பட்டு வருகிற இன்னலுக்கு இந்தியா உதவ வேண்டுமானால் தமிழினம் என்ற அடிப்படையிலான அக்கறை இந்திய அரசுக்கு இருக்க வேண்டியதில்லை. வெறும் மனிதாபிமான அடிப்படை ஒன்றே போதும். அந்த அளவுக்குக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா ஒரு போதும் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவாது, இலங்கை அரசுக்குத் தான் உதவும், ஏனென்றால் இந்திய இனமும், சிங்கள இனமும் தம் அடிப்படை வேரில் ஒன்றே. இந்திய அரசு சிங்கள் அரசுக்கு உதவுவது அதன் அடிப்படையிலேயே. (இந்திரா காந்தியின் காலத்தில் உதவியதாக ஈழத்தமிழர்கள்தான் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் செய்தது கூட அப்போதைய பூகோள அரசியல் இலாபத்துக்காகத்தான்)

இந்தியாவின் பண்பாட்டு வேர்கள் என்னுள்ளே எப்பொழுதுமே இருக்கும் என்றாலும் இந்திய மக்களின் மேல் அந்த அடிப்படையிலான என்னுடைய அன்பும், ஈர்ப்பும் எதிர்காலத்திலும் எனக்கு இருக்கும் என்றாலும், ஒரு இந்தியன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறேன். வேதனைப் படுகிறேன். இந்தியா என் முகத்தில் இது வரை கரியைத்தான் பூசிக்கொண்டிருக்கிறது.

உங்களைப் போலவே ஈழத்தின் வலிகளையும், இரத்தக் காயங்களையும், வேதனைகளையும் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களையும் மன்னியுங்கள் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.”

* * *

ஆனால் இன்று இந்தியாவே ஈழத்தமிழர்களை அழிக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மிகத் தெளிவாக அறியவந்தபின் என்னுள்ளே நிகழ்ந்த அடையாளப் போராட்டமும் இப்பொழுது தெளிவடைந்திருக்கிறது. நான் இனி இந்தியனுமில்லை, இந்தியத்தமிழனுமில்லை. தமிழன் மட்டுமே. தமிழன் என்ற அடையாளத்துக்கும், இனத்துக்கும் பலமுள்ள முதல் எதிரியாக இருக்கும் நாடு இந்தியா என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. பொதுப் பண்பாட்டு அடிப்படையில் மற்ற இந்தியர்களுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதைக் கூட இனி நான் மறுக்க வேண்டும். இது இந்தியர்களின் மேலுள்ள வெறுப்பினாலல்ல. அருந்ததி ராய் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் கூட ஈழத்தமிழரின் வலி எளிதில் புரிய மறுக்கிற பொழுது மற்ற இந்தியர்களை எந்தக் காலத்திலும் புரிய வைக்க முடியாது. புரிய மறுக்கும் வரை தமிழினப் படுகொலைகளுக்கு அவர்களும் உடந்தையாகவே இருக்கின்றனர்.

சீனா, பங்களாதேசம், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் என்னைப் பொறுத்தவரை இனி எந்த வேறுபாடுமில்லை. அந்த நாடுகளிலெல்லாம் இயற்கையின் சீற்றத்தால் பேரிழப்பு ஏற்படும் பொழுது மனிதாபிமான அடிப்படையில் வருந்துவதும், சிறிய அளவில் உதவுவதும் உண்டு. அப்படியொரு உறவை மட்டுமே இந்தியாவுடனும், இந்தியர்களுடனும் கடைப்பிடிக்க விரும்புகிறேன். மற்றபடி இந்தியா தமிழர்களின் முதல் எதிரி நாடு என்ற பிரக்ஞையோடு செயல்படுவேன். தமிழர்களுக்கென்று ஒரு நாடிருந்தால் உலக நாடுகளும் இப்படி இந்தியாவின் விருப்பப்படி படுகொலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டா. எனவே உலக அளவில் தமிழர்கள் தம் அடையாளத்தை மீட்டெடுக்கும் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறேன், உறுதி பூண்டுள்ளேன், அதற்காக உழைக்கவும் இருக்கிறேன்.


ஓவியம் - நன்றி தூரிகைகளின் துயரப்பதிவுகள் மற்றும் புதினம்

இதற்கு அவன் பதில்:
Dear Rajarama!

When you sit inside the well,you feel that it is the world.I think there are so many wells in the country.If every person feels so good about his/her well.It is good.But,if the person feels that it is the only well then there is a problem.I think you got the point.Sometimes it leads to extremism.
Extremism starts with the self esteem factor/feel good factor/like to a certain thing.That is why telangana,tamil factor starts.Do you think there is only tamilian serviving in this country.If it is true then Tamil film industry should be full of Tamilians.But where are they?so called M.G.R is a malayali,Rajnikant is a Maharastrian,Ajith a malayali.
Chennai city is comprising of more than 30% of Andhra people who are driving for the Tamilnadu state development,TN tourism by every other state Indian.Apollo hospitals belongs to reddy,Coimbatore, 3/4th is dominated by rest of tamilians.Lakshmi mills is andhrites.If you feel so proud about tamil why dont tamilians fight for seperate freedom when British Raj is ruling.
I agree that Tamil is oldest language.But it does not mean that you will erase other languages.Bus names will be written in tamil,road signs in tamil,boards in tamil language.Do you think by doing all such things it will elevate ur language.No,How many people scold tamilians for not being friendly with the foreign languages,downgarde feeling towards other states.
Tamilnadu is surrounded by Kerala,Karnataka and Andhra.Tell me one state who says good about Tamilnadu.Becasue,you have a rival with karnatak-water issue and fight with rest of the states.I think you should say we are indians and imbibe indianity and oneness.When tsunami came you people didnot say that we donot need any help.tamilians will help.When problem comes you guys need support,be it other state,caste,reloigion.This is the saddest attitude that anybody digest....selfishness.

LET US UNITE AND BUILD THE COUNTRY.

No more Tamil,telugu,malayali stunts please....

எனது மறுமொழி:
அன்பின் சாரதி,
உனக்குள் பொங்கியெழும் 'இந்திய தேசபக்தி' என்னை 'சிலிர்க்க' வைக்கின்றது(!). உன்னிடம் நான் அடிக்கடி வலியுறுத்தும் ஒரு விஷயம் "நிறையப்படி". இப்போதும் அதையே வேண்டுகின்றேன்.

"எந்தவொரு பொருளிலும் அல்லது பிரச்னையிலும் உண்மையை அறிய வேண்டுமெனில், வெளியில் பிரபலமாக நிலவும் வெகுஜன ஊடகங்களை மட்டுமல்லாமல் அரிதாகக் கிடைக்கும் அனைத்து நூல்களையும், பிரசுரங்களையும் பாரபட்சமின்றி படிக்க வேண்டுமென்ற தூண்டுதலை மறைமுகமாக என்னுள் ஏற்படுத்தியது ஈழப் பிரச்னை. பெரியாரியம் அந்தவகையில் என்னுடைய அனைத்து அடையாளங்களையும் உடைத்துப் போட்டது. போலித்தனமான அடையாளங்களான மதமும், சாதியும் மட்டுமல்ல. புறவடிவக் கூறுகளைக் கொண்டு இயல்பாக வாய்த்த ஆண் என்ற அடையாளமும், இயல்பாக வளர்ந்த தமிழன் என்ற அடையாளமும் கூட என்னுள்ளே அடித்து நொறுக்கப் பட்டன. மாறுபட்ட அடையாளங்களுடன் உள்ளவர்களையும் சமமாக (உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ இல்லாமல்) மதிக்க வேண்டும் என்றுணர்த்தியது பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம். அடையாளங்களை முன்வைத்து ஏற்றத்தாழ்வு செய்தலின் உண்மையான நோக்கமான பொருளாதாரச் சுரண்டலைப் புரிய வைத்தது மார்க்ஸியத் தத்துவம். தமிழன் என்ற அடையாளம் என்னுள் மீட்டெடுக்கப் பட்டாலும், தமிழ்த்தேசியவாதம் உள்பட அனைத்துத் தேசியவாதங்களிடமும் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது பெரியாரியமும், மார்க்ஸியமும். மனித சமூகத்தின் சமநிலையைப் புறக்கணித்து, மனிதர்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்து ஒடுக்குமுறையைப் பயன்படுத்தும் அபாயத்தை அனைத்து தேசியவாதங்களும் உள்ளடக்கியவை."

அப்புறம் உன் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு இந்த 'கிணற்றுத்தவளை'யின் பதில்கள்.
பதில்கள் என்பதைவிட உன்னை சற்று சிந்திக்கத் தூண்டும் மாற்றுக்கேள்விகள்:

1) ப்ரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ந்து வரும் காவிரிப்பிரச்சினைக்கு தமிழர்கள்தான் காரணமா?கடைமடைப்பகுதிதான் வெள்ள அபாயத்தைத் தாங்குகின்றது... எனவே அதற்குத்தான் பாசன பாத்தியதை அதிகம் என்பது காலம்காலமாக பின்பற்றப்படும் உலகநியதி. இன்றளவும் உலகநாடுகளுக்கிடையேயான நதிநீர்ப் பிரச்சினை இந்த அளவுகோல் கொண்டுதான் தீர்க்கப்படுகின்றதென்பது உனக்குத் தெரியுமா? நாம் அதிக பாத்தியதைகூட கேட்கவில்லை... உரியதைக்கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம் என்பதும், இந்தியா- பாக் இடையில் சிந்து நதிநீரும், இந்தியா-சீனா-வங்காளதேசம் இடையில் பிரம்மபுத்திரா நதிநீரும் இதே முறையில் எந்த பிரச்சினையுமின்றி பங்கிடப்படுவதும் உனக்குத்தெரியுமா? (ஏனெனில் அவை தனித்த நாடுகள். பிரச்சினை வந்தால் 'பஞ்சாயத்து' பண்ண உலகளாவிய அமைப்பு உள்ளது)

2) முல்லைப்பெரியாறு பிரச்சினையை தங்கள் அரசியல் சுயலாபத்துக்காக தூண்டி விடுவது யார் தோழா?கேரளர்களா? தமிழர்களா? அணை வலிமையாக இருக்கின்றது என்று ஆய்வுக்குழு சொன்னபின்னரும் விதண்டாவாதம் செய்வது யார்?

3) இந்தியாவில் இன்று நடக்கும் அஸ்ஸாமி, மணிப்பூரி,நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களின் தேசிய இனங்களின் உரிமைப்போராட்ட வரலாறு நீ அறிவாயா? மணிப்பூரில் இன்றும் நடைமுறையில் இருக்கும் கொடிய 'சிறப்பு ஆயுதப்படைச்சட்டம்" பற்றி
நீ அறிவாயா? காஷ்மீரிகளின் சுயநிர்ணயப்போராட்டத்தின் கதை தெரியுமா
உனக்கு?
இங்கெல்லாம் காந்திதேசம் கையாளும் 'மென்மையான அணுகுமுறை'(soft approuch)யின் கொடூரம் தெரியுமா உனக்கு?
மணிப்பூரின் "ஷர்மிளா சானு"வின் பத்தாண்டு உண்ணாவிரதப்போராட்டம் தெரியுமா உனக்கு?
எம்.ஜி.ஆரையும்,ரஜினிகாந்த்தையும்,அஜித்தையும் இன்னும் பல கோமாளிகளையும் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என்று நினைக்கின்றாயா?

4)சென்னை மட்டுமல்ல... உலகின் ஒவ்வொரு அங்குலமண்ணும் உழைக்கும் மக்களால்தான்
கட்டமைக்கப்பட்டுள்ளது. "நாம் தமிழர்... அந்நியர்க்கு இடம்கொடோம்" என்று
மூடத்தனமான (அயோக்கியத் தனமானதும்கூட) கோஷங்களைஒலிக்கும் பிழைப்புவாத அரசியல்கும்பலை மனதில் கொண்டு உண்மையான உணர்வாளர்களை மதிப்பிட வேண்டாமே!

5) உண்மையிலேயே இந்தியா பல்தேசிய இனங்களின் கூட்டமைப்பாக மிளிர்ந்தால் எங்களைத்தவிர ஆனந்தப்படுவோர் யாரும் இருக்க முடியாது தோழனே! ஆனால்
உண்மை சுடுகிறதே? என்ன செய்ய?

6)"நீ இந்தியனாக இருக்காதே... தமிழனாக இரு"என்று நாங்கள் உன்னை வற்புறுத்தவில்லை. நாங்கள் அந்த மாதிரி ஃபாசிஸ்ட்டுகளும் இல்லை.
நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான்...
"நீ ஏன் இந்தியனாக இருக்கிறாய்?' என்பதை யோசி.ஆட்டுமந்தையில் ஒரு ஆடு மாதிரி இந்துதேசியவாதிகளின் ( உண்மையில் இந்திய தேசியம் என்பது இந்து பார்ப்பன தேசியம்தான்.இதைப்பற்றி தெரிந்துகொள்ள வாதம் செய்யும் மனநிலையை விட்டு விட்டு
விவாதம் செய்யும் மனநிலையோடு தேடிப்பார்) கூச்சலுக்கு தாளம்போட்டுக்
கொண்டே இருக்காதே!

7) பேச நிறைய இருக்கின்றது. ஆனால் உண்மையைத்தேடும் வேட்கை இருந்தால் மட்டுமே நாம் தொடர்ந்து விவாதிக்கலாம். இல்லை.. எமது கருத்துக்களை பரிசீலிக்கக்கூட மனமின்றி உங்கள் தேசியவாந்தியை அப்படியே குடிக்க வேண்டும் என்றால் மன்னித்துவிடு நண்பனே!

8) ஏன்?எதற்கு?எப்படி? என்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்ததனால்தான், இருப்பதனால்தான் மனித இனம் இன்றளவும் ஜீவித்துக்கொண்டிருக்கிறது நண்பனே! குறைந்த பட்சம் தற்போது நீ வாழும் ஹைதராபாத்தை உள்ளடக்கிய தெலிங்கானா மக்களின் நூற்றாண்டு கோபத்தின் வரலாறையாவது தெரிந்துகொள்...

9) நாங்கள் திராவிட இயக்க அரசியல்வியாதிகளைப்போல தமிழ்தான் மூச்சு, மூச்சா என்று உதார்விடும் நாடக நடிகர்கள் அல்லர்... அனைத்து தேசிய இனங்களும் தமது முழு உரிமைகளோடு வாழ வகைதேடும் சர்வதேசியவாதிகள்

10) இன்னும் ஒன்று... நான் சொல்லும் வாதங்களில் குறையிருந்தால் சொல்... ஆனால் ஒன்று... அந்தக்குறைகள் எமது தரப்பின் குறைகளன்று... எமது தரப்பை சரியாக விளக்க முடியாத தனிமனிதனாகிய எனது குறைகள் மட்டுமே

அன்புடன்,
( கிணற்றுத்தவளை(!) )
ராஜாராமன்

0 பேரு கிடா வெட்டுறாங்க:

Related Posts with Thumbnails