செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

கொஞ்சம் கவிதைகள்...


1) வலிக்கவில்லை
கடந்து செல்கிறது
அமரர் ஊர்தி
********************************
2)ஓடி விளையாட
மேகமின்றித்
தவிக்கிறது நிலா
********************************
3)ஆவேசமாய்  அலையடிக்கிறேன்
தூரத்திலிருந்து சிரிக்கிறாய்
முழுநிலாவாய்...
********************************
4) ஒளிந்திருக்கும் வன்முறையின் குரூரம்

மென்மையாய்ச் சிரித்து
வேடமிட்டுப் பின் பதுங்கி
கொஞ்சம் கொஞ்சமாய் ஈர்த்து
கூந்தல் கோதி இழுத்தணைத்து
முத்தமிட்டபின்
மனதில் நாற்றமெடுக்கிறது
கவிச்சிவாடை
********************************
5)துணுக்காய் மேகம்
என்ன செய்கிறது
தனியாக?
********************************
6)ஒவ்வொருமுறையும்
வாழ்வைக் கேலிசெய்கிறது
முன்னிருக்கைக் கூந்தலிலிருந்து
உதிரும் பூ!
********************************
7) வார்த்தையடுக்குகள்
பாடையலங்காரங்கள்
புகழுரை பற்றிய கற்பனைகள்
ஆகா!
பிறந்துவிட்டது 'கவிதை'.
********************************
(என் பழைய டைரிய பொரட்டுனப்போ கெடைச்சிது.... கடைசிக் கவிதை மத்த எல்லாத்துக்கும் பொருந்துமோ?!)

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...

 படத்துக்கு நன்றி http://southasiarev.wordpress.com

1) யப்பாடா! அந்தா இந்தான்னு மூச்ச இழுத்துட்டு இருந்த காங்கிரஸு 'இந்தாப்பா! ஆட்டத்துல நானும் இருக்கேன்'ன்னு முண்டா தட்டுதுய்யா. அறுவத்தி ஏழுல வாங்குன அடி தெளியறதுக்குள்ளதான் எவ்வளவு நடந்து முடிஞ்சிடிச்சி! திராவிடம் பேசுன எல்லாரும் தேசியம் பாட ஆரமிச்ச பொறவு 'செக்கென்ன சிவலிங்கம் என்ன?' எல்லா கழுதையும் ஒண்ணுதானன்னு நெனச்சிட்டாங்க போல. 13 பர்சண்ட் ஓட்டுக்கு 100  சீட்டு கேக்குறாங்களாம்பா... ஹ்ம்ம்... 'எடுப்பாரும் கொடுப்பாரும் இருந்தா எட்டுன மட்டும்'பாங்க... பத்தாக்கொறைக்கு கோயமுத்தூர்ல மாநாடாம்... 'சிவகங்கை கண்ணாடி'யெல்லாம் கதைக்காவாதுன்னு கழட்டுப்போட்டுட்டு 'வேதாந்தா' பிராண்ட் லென்ஸ் மாட்டிக்கிட்டு நம்ம செதம்பரம் அய்யா வர்றாராம்... எப்டியாவது கூட்டம் சேத்து படம்காட்ட வேண்டியதுதான் பாக்கி... 'அடுத்த வூட்டுக்காரி புள்ள பெத்துக்கிட்டான்னு அம்மிக் கொழவிய தூக்கி வயத்துல குத்திக்கிட்டாளாம்'

2) இருந்தாலுஞ்சரி, செத்தாலுஞ்சரி மனுசன் நெசமாவே புலியாத்தான்யா வாழ்ந்துருக்கான்.... பிரபாகரனப் பத்தி பேசாட்டி ஒரு பயலுக்கும் தூக்கம் வராதுபோல... கண்ட கருமாந்திரத்தையும் உள்ள எறக்கிட்டு செம சுதியில கொடுக்குறாங்கப்பா டீடெயிலு... 'ஹெலிகாப்டர் ஏற்பாடு பண்ணினேன்... ஆனா அவருக்கு புஷ்பக விமானம்தான் வாய்ச்சுது'ன்னு சொம்மா கண்டமேனிக்கு அடிச்சு விடுறாரு கே.பி அண்ணன்...'To where you go, do the things you see' அப்டீம்பாங்க.. ராஜபக்ஷே அண்ட் கோவுல ஐக்கியம் ஆனவொடனே எப்டில்லாம் திரைக்கதை வசனம் எழுத ஆரம்பிச்சிடுறாங்க பாருங்க.. திரைக்கதை வசனம்னு சொன்னவொடனே கலைஞர் ஞாவகம் வந்து தொலையுது...பக்கம்பக்கமா பைந்தமிழ்ல வசனம் எழுதுன மனுஷன்... 'ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா என்ன?' விடாம வெதவெதமா எழுதுறாருய்யா டெல்லிக்கு லெட்டர.. TNPL உற்பத்தி பண்ற A4 சைஸ் பேப்பருக்கு மொத்தமா குத்தகை எடுத்தாச்சு போல...ம்ம்ம்ம் நடக்கட்டும் கச்சேரி!

3) இந்தவார ஹாட் டாபிக்ல இளங்கோவன் கறுப்பு எம்சியாருக்கு கேக் ஊட்டுன கதைதான் ஓடிட்டு இருக்கு... பாவம் காங்கிரஸுக்காரங்க... அவங்களும் எத்தன வருசம்தான் சும்மாவே இருப்பாங்க? சீக்கிரம் சட்டுபுட்டுனு நாலு காசு சம்பாரிச்சு கவுரதையா வீட்டக் காப்பாத்த (வீடு சின்னதா பெருசான்னெல்லாம் கேக்கப்படாது சொல்லிட்டேன்) வேண்டாம்?அப்போ மக்கள்?! மக்கள பத்தி கவலப்பட்டா நாங்கல்லாம் எப்பய்யா அம்பானிக்கு பங்காளி ஆவுறது! வீணா மக்கிப்போற கோதுமைய கடல்லகொட்டுனாலும் கொட்டுவோமே தவிர ஏழைகளுக்குக் கொடுக்கமாட்டோம்னு தில்லா ஆம்புள சிங்கம் கணக்கா மொழங்கியிருக்காரே சரத்பவாரு... அதிலருந்தே தெரிஞ்சிக்கவேணாம்? (வாடி வா...அய்யா போடுங்க... அம்மா போடுங்கன்னு கும்புட்டுட்டே வருவீல்ல! அப்ப வெக்கிறோம் கச்சேரிய.... அப்டீன்னு சொல்றீங்களா? கிழிச்சீங்க!) We always want the best man to win an election. Unfortunately, he never runs. ம்ம்ம்... என்னத்தச் சொல்ல!

4) நக்ஸல்கள் பெண்போராளிகளை செக்ஸ் அடிமையா உபயோகப்படுத்துறாங்க! நக்ஸல் தலைவர் கிஷண்ஜி கூட பொண்ணுங்களை தப்பாத்தான் யூஸ் பண்றாங்க அப்டீன்னு சொல்லி கார்கிராம் பகுதி கமாண்டர் உமா (எ) ஷோபாமண்டி போலீஸ்ல சரண்டர் ஆயிருக்கார்.அப்டீன்னா இவரு  கமாண்டர் பொஸிஷன் வரைக்கும் எப்டி வந்தாரு? 'தெறம'காட்டித்தானா? போராளிகள்மேல இப்டி அபாண்டமா பழிசுமத்தியாவது அவங்க செல்வாக்கைக் கொறைக்கலாம்னு பாக்குறாங்களோ?! இந்த மாதிரி அழுகுணி ஆட்டம் ஆடுறதுக்கு பதிலா பேசாம கையில வெத்திலைச் செல்லமும், ஒடம்புல ஜிப்பாவும் போட்டுட்டு கெளம்பிடலாம்யா! அப்புறம் தண்டகாரண்யத்துல பாதுகாப்புப்படை, சல்வா ஜூடும் இவங்கல்லாம் பண்ற திருவிளையாடல் பத்தியும் எழுதுனா பத்திரிகைக்காரங்களுக்கு புண்ணியமா போவும்...Crime is contagious. If the government becomes a law breaker, it breeds contempt for the law.

5) காஷ்மீர் ராணுவத் தளபதிக்கு சீனா விசா கொடுக்க முடியாதுன்னு சொன்ன விஷயமும் இந்த வாரம் ஹாட் டாபிக்.... ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்துல ஒரு கலெக்டர் உத்தியோகவிசயமா சீனா விசா அப்ளை பண்ணப்போ அருணாச்சலப் பிரதேசம் சீனாவைச் சேர்ந்ததுதான், அதுனால அவரு விசா இல்லாமலேயே வரலாம்னு சீனா அழும்பு புடிச்சது எத்தன பேருக்கு ஞாவகம் இருக்கு? தெற்காசியாவுல தாதா ஆகுறதுக்கு மட்டும் ஆசை இருக்கு இந்தியாவுக்கு; வாய்க்காத் தகறாறைத் தீக்க முடியலயே? "ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க"ன்னானாம்.

6) ரொம்ப சூடா, காரமா அரசியல் பேசியாச்சு... கடைசியா ஒரு கப் காபி சாப்பிடலாமா?

ம.செந்தில்குமார் எழுதின ஒரு கவிதை

தொட்டிச் செடிகள்
மரங்களைக் கனவு
காண்கின்றன
பெருமரங்களோ
வனங்களை நினைந்து
பெருமூச்சு விடுகின்றன
நட்டநடு நிசியில்...

சனி, 28 ஆகஸ்ட், 2010

கவிதைகள் விற்பவன்


கவிதைகளுக்கு மவுசு அதிகம்
கனவுகள் கோர்த்து விற்றால்
கொள்ளை லாபம்

நகரமையத்தில் வைத்த கடையில்
காட்சிக்கு மட்டுமல்ல
கைக்கொள்ளவும் உண்டு
விதவிதமாய்க் கவிதைகள்

வியாபார உலகில்
எல்லாமே விளம்பரம்தான்
விற்பதாயினுஞ்சரி
வாங்குவதானாலுஞ்சரி

டிஸ்கவுண்ட் சேலும் உண்டு
பழையன கொடுத்து
புதியன பெறுதல்

கவிதை செய்வது தனிக்கலை
காளான்வளர்ப்பு போல...
வார்த்தைகள் இடறக்கூடாது
வர்ணங்கள் பிசகக் கூடாது

புதுசாய் விற்க வருபவர்கள்
"ஏ! தமிழா..." என்றோ
"ஏ! இளைஞனே..." என்றோ கூவினால்
கச்சிதமாய்க் களைகட்டும்

இல்லையெனில்
'உதடுகள் கவ்வும் காதலை'
ஜரிகைதூவி விற்கலாம்

இப்போது கிராக்கி
உறுப்புக்களின் குறிப்பு நவிலலுக்கு

எப்போதும் குறையாத மவுசு
ஏழைக்குடிசையின் கூரைக்கிடையில்
வழியும் நிலாவுக்கு

என்றாலுஞ்சரி
எப்போதும் அகப்படாமல்
விற்பனைக்குத் தப்பி
ஒளிந்துகொண்டே இருக்கிறது

பால்மாந்தி இருக்கும்
ப்ளாட்பாரக் குழந்தையின்
உதட்டுக்குள் மறைந்திருக்கும்
புன்னகைக்கவிதை

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

சிதறும் துண்டுகள்...


ஏழிசைகீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும்காலம் யாவும்
உனக்காக நான் தான்
காவியவீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன்
கானம்... கானம்... ஜீவகானம்

ஜேசுதாஸ் காதுகள் வழியாக நெஞ்சம் நனைத்து வருடிக்கொண்டு இருக்கிறார். மெல்லிய தூறல் கிளப்பும் மண்வாசம்... இதமான போர்வையாய் தனிமையின் அரவணைப்பில்.... சின்னக் கோப்பையில் மேன்ஷன் ஹவுஸ்...

.............................
.............................
.............................

மௌனத்தின் கவிதையை எப்படி எழுத? தனிமைதரும் குளிர் சிலபோது நரம்புகளை மீட்டும்... சிலபோது குருதிக்குள் தீமூட்டும்... மனம் ஒரு கட்டுத்தறி தாண்டிய காளையெனப் பாய்ந்துகொண்டிருக்கிறது. கழிந்துபோன காலங்கள் யாவும் உதிர்ந்துபோன ரோமத்தினும் இழிந்து போனதாய்...

கடற்கரையில் ஓடி ஓடி மூச்சிளைக்க... கிளிஞ்சல்கள் மட்டுமே கைகளில்... அவ்வப்போது அகப்பட்ட ஆரஞ்சு மிட்டாய்களும்...

வாழ்க்கையென்றால் நோக்கம் இருந்தாக வேண்டுமா என்ன!

இருட்டைப் புசித்து மின்னும் பூனையின் கண்கள் எதைச் சொல்ல நினைக்கின்றன? துண்டுதுண்டாய் ஓடி மறைகின்றன வாக்கியங்கள்... வெட்டுப்பட்ட வார்த்தைகளின் ஊர்கோலத்தில் வாத்திய இசையாய் என்ன வாசிக்கலாம்?

விலக்கிப்போன கரங்களின் சூடு தேடி அலைகிறது தேகம்... சுருட்டுப்புகையின் வளையங்களூடே பயணிக்கிறது வாழ்க்கை...

ஆ! சாம்பல்கிண்ணி...! எங்கே போயிற்று? எரிந்துபோனதன் மிச்சங்களோடு? பாறைநிலத்தில் விதைக்க முயலும் புத்தகம் பதற்றத்தில் படபடக்கின்றதே...பாவம்!

வெளிச்சம் வேண்டாத விழிகளில் மிதக்கும் கனவுகள் வர்ணங்களைக் குழைத்துப் பூசிவிளையாடும்... நீரள்ளி வீசி குதிக்கும் குழந்தைகளும்...

என்ன முயன்றாலும் வார்த்தைகளுக்கு வழுக்கி கண்ணாமூச்சி காட்டும் நினைவோட்டம்... ஒன்றும் எழுதுவதற்கில்லை...

துயரங்களே ஸௌந்தர்யமாய்... சௌஜன்யமாய்... மெல்ல நடக்கிறது இரவு... பகலை மூடிய கைகளுக்குள் சர்வஜாக்கிரதையாய் இறுக்கிக் கொண்டே....ம்ம்ம்ம்

எழுதுறதெல்லாம் எழுத்தில்ல!


மனுஷனுக்கு எப்பவுமே ஏதாச்சும் ஒரு போதை தேவைப்படுது. எவ்வளவோ வெதத்துல... எனக்கு அப்பப்போ ஒவ்வொரு போதை கெறங்கடிக்கும்... கொஞ்ச நாள் கம்ப்யூட்டர் கேம்ஸ்... கொஞ்ச நாள் யாஹூ மெஸஞ்சர்ல "hi/hw r u/ asl pls", அப்புறம் கொஞ்ச நாள் சும்மா வெறுமனே ஒக்காந்து யூடியூப்ல பாட்டு கேக்குறது அப்டீன்னு...

கொஞ்சநாளுக்கு முன்னாடி... திடீர்னு உங்கள மட்டமல்லாக்கத் தள்ளி நடுநெஞ்சுல ஏறி நங்குநங்குன்னு மிதிச்சா அந்த வலி எப்டி இருக்கும்?... அந்த மாதிரி ஒரு அடி... வலிய மறக்க என்னடா வழின்னு தவிச்சப்போ நீதான் நல்ல கிறுக்கனாச்சே.. ப்ளாக்ல வந்து ஏதாச்சும் கிறுக்குடான்னாரு கேஆர்பி செந்திலண்ணன். திடுதிடுன்னு எந்திரிச்சு கிறுக்க ஆரம்பிச்சா  இருவத்திமூணு நாள்ல இருவத்திமூணு பதிவு...

ரெண்டு நாளா ஒரு எழவும் தோணல... ஏதாச்சும் எழுதியே ஆகணும்னு வரிஞ்சிகட்டி ஒக்காந்தா... நேத்து ஒக்காந்தவாக்குலயே தூங்கித் தொலச்சிட்டேன். இன்னிக்காவது ஏதாவது எழுதிப்புடணும்னு ஒக்காந்தேன்... சட்டில இருந்தாத்தானே ஆப்பையில வரும்?

சரி சுளுவா ஒரு கவிதையாச்சும்  கிறுக்கலாம்னு யோசன பண்ணி எழுதி கேஆர்பிக்கு மெயில் போட்டு நிர்த்தாட்சண்யமா விமர்சனம் பண்ணுங்கன்னு சொன்னேன்.

எந்த அம்மா வலிக்குறமாதிரி அடிச்சிருக்கா? "கொஞ்சம் கொஞ்சம் திருத்துங்க" அப்டீன்னு  மெல்லமா சொல்லிட்டு போய்ட்டாரு. ஆனா எனக்குள்ள ஏதோ நெருடிட்டே இருந்திச்சு. கொஞ்சநேரம் கழிச்சு பாலபாரதி ஆன்லைன்ல வந்தப்போ சும்மா பேச்சு கொடுத்து பாத்தேன்.

அவரு ஒரு லிங்க் அனுப்பி இத படிச்சி பாருங்க நல்லாருக்கும்னு சொன்னவொடனே ஓப்பன் பண்ணி பாத்தா...

http://madrasdada.blogspot.com/2010/08/blog-post_22.html

விமலாதித்தமாமல்லன் எவ்ளோ அழகா பாடம் நடத்துறாரு! தெகச்சி போயிட்டேன்! அப்புறம் கவிதையாவது ஒண்ணாவது...

ஒருவரி எழுதியிருக்காரு பாருங்க...

//எல்லா விஷயங்களும்  சுயத்திற்காகவே  செய்யப்படுகின்றன. சுயத்தை திருப்த்திப்படுத்த. சுயத்தை முன்னிருத்த அல்ல.//

யப்பா... மனுஷன் மூஞ்சிக்கு நேரா வந்து கண்ணாடிய தூக்கி புடிக்குறான் பாருங்க!

நான் படிச்சத யாராவது இன்னும் ரெண்டு பேர் படிச்சுப் பாத்தா போறும்.... இன்னிக்கு என்னோட பதிவுக்கு விடிமோட்சம்!

சொறிபுடிச்சவன் கையும் இரும்பு புடிச்சவன் கையும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க...

அதனால நான் எப்பவோ கிறுக்குன கவிதை ஒண்ணு... கடேசியா..(சத்தியமா ஹைக்கூ இல்லீங்க!)

இருவர் கரங்களும்
பின்னிக்கொள்ள
மெல்ல நடப்போம்
நீ நதியாக
நான் கரையாக

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

பதிவுலகில் நான்...


1 ) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் ..?

விந்தைமனிதன்

2) அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா..? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்கக் காரணம் என்ன ..?

இல்லை. உண்மையான பெயர் ராஜாராமன். மனிதர்கள் அனைவருமே ஒவ்வொரு வகையிலும் விந்தையானவர்கள்தாமே! மனிதர்களின் மனத்தையும், அவர்களது போக்கையும் வேடிக்கை பார்த்தாலே போதும்... வேறேதும் பொழுதுபோக்கு தேவையா என்ன? அதுவே என் புனைப்பெயர் ரகசியம்

3)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி ?

சும்மா... எப்போதும் எதையேனும் கிறுக்கிக் கொண்டிருப்பேன். கிறுக்கியது மாடர்ன் ஆர்ட் சித்திரம்போல சிலசமயம் நன்றாகவும் வந்துவிடும். உடனே கையும் மனசும் பரபரக்கும். அடுத்து... அடுத்து என... தேடல்கள் திறந்துவைத்த புதியவாசல் வலையுலகம். இப்போதும் மனம் பரபரக்கின்றது... அடுத்தது என்னவென்று...

4 .) உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடைய என்ன என்னவெல்லாம் செய்தீர்கள் ..?

நல்ல சமையலின் வாசம் தூரங்கள் தாண்டியும் எல்லோர் நாசியின் கதவுகளைத் தட்டும்... நாம் செய்யவேண்டியதெல்லாம் சன்னல்களைத் திறந்துவைப்பதே!  நல்ல தலைப்பு வைப்பதும், நன்றாக எழுதப்பட்டுள்ள ஏனைய பதிவர்களின் பதிவில் பின்னூட்டுவதும் மட்டுமே நான் செய்ய முயற்சிக்கும் வேலை. எனது பதிவுகளைப்போலவே என் பின்னூட்டங்களும் ஆத்மார்த்தமாக அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புவேன். சமயங்களில் சாத்தியப்படுவதில்லை

5 .) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விசயங்களைப் பகிர்ந்ததுண்டா ..? அதன் விளைவு ..?
உண்டு. என் வாழ்க்கையையே ஒரு பெரிய கண்ணீர்த்துளியென நான் உணர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் சில பதிவுகளில் அதனை எழுதியிருக்கிறேன். என்னை நெருக்கமாக அறிந்தோர் மட்டும் புரிந்தோராக உள்ளனர்.

6 .) நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா ..?

இரண்டுமே இல்லை.வேறு காரணங்கள் சொல்லவேண்டுமெனில்

i) என் எழுத்தின் வீச்சைக் கூர்தீட்டிக் கொள்ள... ஒரு சமூக உறுப்பாய் என் பங்கினை ஆற்ற என்னைத் தயார்படுத்திக் கொள்ளவும்... அடுத்தடுத்த தளங்களை நோக்கி நகரவும்...

ii)ஒரு விஷயத்தைப்பற்றி எழுத வேண்டுமெனில் அதைப்பற்றி நன்கு படிக்கவேண்டும்... எனவே நான் எழுதத் துவங்குமுன் இருந்ததைவிட இப்போது கவனம் செலுத்தி பல திசைகளிலும் படிக்கவேண்டிய கட்டாயத்தை எனக்கு நானே ஏற்படுத்திக் கொள்கிறேன்... என் வலைப்பதிவுமூலம்.

iii) இன்னும்... இன்னும்.. என எனக்கான மனிதர்களைச் சம்பாதிக்க வலையுலகம் நல்லதோர் களமெனக் கருதுகிறேன். சம்பாதித்துமிருக்கிறேன்.

7 .) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்..? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன ..?
ஒன்றுமட்டுமே!

8 .) மற்ற பதிவர்கள் மீது உங்களுக்கு எப்போதாவது பொறாமை அல்லது கோபம் வந்ததுண்டா ..?

சிலர் எழுத்தைப்பார்த்து "எப்படி இப்படி ஒரு எழுத்து இவர்களுக்கு மட்டும் வாய்க்கிறது?" என்ற பொறாமை லேசாக எழுந்ததுண்டு

கோபம்.... சமூகப் பொறுப்புக்கள் இன்றி கண்டதையும் வாந்தியெடுக்கும் சிலர்மீது

வருத்தம்.... எழுதுவது தாய்த்தமிழில்... இருந்தும் பதிவு நன்றாக வந்துள்ளதா என்பதில் காட்டும் அக்கறையை, எழுத்துப்பிழை இல்லாமல் இருக்கின்றதா என்பதில் சில நண்பர்கள் காட்டுவதில்லை. அவர்கள்மீது...

9 .) உங்கள் வலைபதிவு பற்றி உங்களை முதல் முதலில் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார் ..?

வலையுலக நண்பராகத்துவங்கி இன்று என் வாழ்க்கையில் ஒரு கைவிளக்காய்,ஆசானாய், கூடப்பிறக்காத அண்ணனாய், என் வலிக்கு மருந்து தடவும் தோழனாய், என்னால் தவிர்க்க முடியாத மனிதராய் மாறியிருக்கும் என் அண்ணன் கே.ஆர்.பி.செந்தில்தான்.
இவர் இந்தமாதிரி இன்னும் நிறைய பேருக்கு அண்ணனாய் இருப்பதில் எனக்கு பொஸஸிவ்னெஸ் கலந்த வருத்தம் நிச்சயமாய் இருக்கிறது... என்ன செய்வது? வீசும் காற்று எல்லோருக்கும்தானே?


10 .) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்திற்குத் தெரியவேண்டிய அனைத்தையும் கூறுங்கள் ..?

எனக்கு மாலனின் ஒரு கவிதை நினைவிலாடுகின்றது.

அன்றொருநாள் அப்பாவைக் கேட்டேன்
"என்னாகும் என்வாழ்க்கை?
காற்றுப்போல் சுதந்திரமும்
கவிதைப்போல் தனிக்குணமும்
எப்போதும் உடன்வருமோ
என்னாகும் என்வாழ்க்கை?"
கலைந்த கூந்தலைக் கோதியபடியே
அப்பா சொன்னார் அணைத்துக்கொண்டே...
"கனவுகள் வேண்டாம் பெண்ணே!
நேற்றைக்கு உன்போல் நானும்
நெஞ்சுக்குள் பூச்சுமந்து
நின்றதில் நினைவே மிச்சம்....
எண்ணிப் புள்ளிவைத்து
இழையெடுத்துப் போட்ட கோலம்
வழிப்போக்கர் மிதிக்கலாச்சு
கனவுகள்விற்று அதிலே
வாழ்க்கையை வாங்கியாச்சு"

ஆம். நானும் என் கனவுகளை விற்று அதில் வாழ்க்கையைக் கரைத்துக் கொண்டிருப்பவன் தான்... இருந்தும் விடாப்பிடியாக ஓடிக்கொண்டிருக்கிறேன்... புதிதாய்ப் பூக்கும் கனவுகளுடன்.... எனக்காய் இருக்கும் மனிதர்களோடு... சக பயணியாய்... இதைத்தான் என் "தேன்கசியும் வாழ்க்கை" என்ற பதிவிலும் வெளிப்படுத்தி இருக்கிறேன்.

என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் கலாநேசனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

யாருக்குச் சொந்தம் ரோஜாக்களின் தேசம்? - காஷ்மீர் பற்றிய ஒரு பறவைப்பார்வை

என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?
- காசி ஆனந்தன்


மீண்டும் பற்றியெரிகிறது காஷ்மீர். இம்முறை தெருக்களில் இறங்கிப் போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்லர். காஷ்மீர மக்கள். சிறார்களும் இளைஞர்களும் யுவதிகளும் முதியோரும் என பால்வேறுபாடின்றி, வயது வேறுபாடின்றி எல்லோரும் வீதிகளில்.... கொப்பளிக்கும் கோபமும், குருதியும் ஒன்றாய்க் கலந்து காஷ்மீரத்தெருக்களில் ஓடுகிறது.

அவர்களின் கோரிக்கை என்ன? அதன் நியாயம் என்ன?

அதற்குமுன் நம் கவனத்திற்காக சிறு தகவல்கள்:

1) நடப்பு 2010-2011 நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட்டில் ராணுவ பட்ஜெட் மட்டும் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 344 கோடி ரூபாய். கடந்த 2006-2007 ஆம் நிதியாண்டின் ராணுவ பட்ஜெட்டைவிட 13 சதவீதம் அதிகம். உலக அளவில் பத்தாவது மிகப்பெரிய ராணுவபட்ஜெட் இந்தியாவினுடையது.  (நன்றி தினமலர்)

2) ஆனால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 6 சதம்கூட கல்விக்காக ஒதுக்க முடியாத இந்திய அரசு, உயர்கல்வித்துறையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு பந்திபரிமாறுகின்றது. நிதிநெருக்கடி!!!

3) "இந்தியாவில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் நிதியில்லை என்று சொல்வது ஆதாரமற்ற, வடிகட்டின முழுப் பொய்'' - என்கிறார் நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளியல்மேதை அமார்த்தியா சென்.

4) இன்னொரு அதிர்ச்சி:
நடப்பாண்டின் பட்ஜெட்டில் மொத்த வரவு ரூபாய் 8,27,000 கோடி
மொத்த செலவு ரூபாய் 45,09,000 கோடி.
இதில் இந்த ஆண்டு வாங்கி இந்த ஆண்டே திருப்பிக் கட்டவேண்டிய கடன்களின் மொத்தம் 33,80,000 கோடி ரூபாய்.
ஆக உண்மையான செலவு ரூபாய் 11,09,000 கோடி மட்டும். ( நன்றி துக்ளக்)

ஏன் வந்தது இவ்வளவு கடன்? ராணுவத்தின் பெரும்பகுதி ஆற்றலும் செலவும் எங்கே செல்கின்றன?

5) 1947-ல் நடந்த முதலாம் இந்தோ-பாக் போர், 1962-ல் நடந்த இந்தோ-சீனப்போர், 1965-ல் நடந்த இரண்டாம் இந்தோ-பாக் போர், 1971-ல் நடந்த பங்களாதேசப்பிரிவினையை வெளிக்காரணம் காட்டி நடந்த மூன்றாம் இந்தோ-பாக் போர், 1999-ல் நடந்த கார்கில் யுத்தம் அனைத்தின் பிண்ணனியில் இருப்பது எது?

கேள்விகள் விதம்விதம்! விடை ஒரே விதம்!! காஷ்மீர்!


ரோஜாக்களின் தேசமாக இருந்த காஷ்மீர் மண் குருதியில் சிவக்கவும், ராணுவத்துக்கு மட்டுமே மிக முக்கியம் கொடுத்து மக்களின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் இந்திய,பாகிஸ்தானிய அரசுகள் தவிக்கவும் காரணமான ஒரே பெயர் காஷ்மீர்!

தேசபக்தி முகமூடிகளைக் கழட்டிவைத்துவிட்டுக் கொஞ்சம் காஷ்மீர்ப் பிரச்சினையின் மூலத்தை ஆராய்வோமா?

1947. ஆகஸ்டு மாதம் சுதந்திரம் அடைந்த நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் என்றுதான் தலையிலடித்துச் சத்தியம் செய்கின்றன நம் வரலாற்று ஏடுகள்.ஆனால் அப்போது சுதந்திரம் பெற்ற ஐநூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள்?

அவைத் தங்கள் விருப்பம்போல இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ளலாம் அல்லது விரும்பினால் தனித்தியங்கலாம்! எலிவளையானாலும் தனிவளைதான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற சிற்றரசுகளில் காஷ்மீரும் ஒன்று. தாங்கள் சுதந்திரமான தேசத்துக்குரியவர்கள் என்ற எண்ணம் காஷ்மீரிகளுக்கு இருந்தது. ஆனால் விழுங்கக்காத்திருக்கும் வல்லூறுகளுக்கு மத்தியில் சின்னப்புறாக்கள் எவ்வளவுநாட்கள் தாக்குப்பிடிக்க முடியும்? பஸ்தூன் பழங்குடியினரைக் கேடயமாக வைத்து காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் புகுந்தபோது தாக்குப்பிடிக்க இயலாத காஷ்மீர் அரசின் மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடுகிறார்; நெருப்புக்குப் பயந்து எண்ணெய்ச்சட்டிக்குள் விழுந்த கதை அவருக்குத் தெரியாதுபோலும்!

"இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிடமுடியாது;காஷ்மீரை எங்களுடன் இணைத்துவிட்டால் இந்தியா உங்களுக்குத்தேவையான எல்லா ராணுவ உதவிகளையும் செய்யும்" என்று வலைவிரித்தார் வல்லபாய் பட்டேல். பூனை கைக்குள் அகப்படுவதைவிட கூண்டுக்குள் இருப்பது மேல் என்ற முடிவுக்கு வந்த ஹரிசிங்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி இந்த ஒப்பந்தம் (Instrument of Accession) கஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி பாதுகாப்பு, வெளியுறவு போன்ற சில துறைகளைத்தவிர்த்து ஏனைய அனைத்தும் காஷ்மீர் அரசின் வசமே இருக்கும். போர் முடிந்தவுடன் ஐ.நா சபையின் மேற்பார்வையில் ஓட்டெடுப்பு நடத்தி  காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதா, அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா, அல்லது தனித்தியங்குவதா என்பதை காஷ்மீர மக்களே முடிவு செய்வார்கள் என்று உறுதியளிக்கப்பட்டது.

ஜூன் 16.1952ல் இந்திய பாராளுமன்றத்தில் ஜவஹர்லால் நேரு உரையாற்றுகிறார்:

"முறையான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு ”நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை” என காஷ்மீர் மக்கள் கூறுவார்களானால், எங்களுக்கு அது வருத்தமாக இருப்பினும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே உள்ளோம். நாங்கள் அவர்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்பப்போவதில்லை”
காஷ்மீரில் நுழைந்த இந்தியப்படைக்கும் பாகிஸ்தான் படைக்குமான போரில் மூன்றில் இரு பங்கு நிலப்பகுதி இந்தியாவின் வசமும், எஞ்சிய பகுதி பாகிஸ்தானின் கைக்கும் போனது.


காஷ்மீர் இணைப்பிற்கென்று இந்திய அரசியல்சாசனத்தில் இணைக்கப்பட்ட பிரிவு எண் 370 காஷ்மீர் தனக்கென ஒரு அரசியல்சாசனத்தை இயற்றிக்கொள்ள வகைசெய்ததும் இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது.

இயல்பாகவே காஷ்மீரின் முஸ்லிம் மக்களும், இந்துக்களும் தங்கள் கலாச்சாரத்திலும் குணாம்சங்களிலும் பாகிஸ்தானிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வேறுபட்டிருந்தனர். காஷ்மீர் முஸ்லிம்கள் சூஃபி பிரிவைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானின் முஸ்லிம்களோ ஷியா மற்றும் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் தனித்தியங்கவே விரும்பினர்.

இப்படி தந்திரமான முறையில் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காஷ்மீர்மக்கள்தான் இன்று தெருக்களில் இறங்கிப் போராடுகின்றனர் இடைக்காலத்தில் தன் பங்குக்குப் பாகிஸ்தானும் அங்கு தீவிரவாதத்தை வளர்த்துவிடுவதற்கான எல்லா திருவிளையாடல்களையும் செவ்வனே செய்தது.

இதுவரையில் காஷ்மீரில் ராணுவத்திற்கும், தீவிரவாதத்துக்கும் இடையிலான சடுகுடுப் போட்டியில் ஏறத்தாழ ஒருலட்சம் அப்பாவி மக்களும், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், அதே அளவிலான ராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான காஷ்மீரப் பெண்கள் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் பாலியல் இரையாகினர்.

இன்றைய நிலையில் காஷ்மீரில் நிலைகொண்டிருக்கும் ராணுவத்தின் எண்ணிக்கை ஏறத்தாழ நான்குலட்சம்.

மனித உரிமைகள் அநியாயமாக மீறப்படுகின்றன. அடிப்படைத்தேவைகளுக்கான குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. ஒவ்வொருநாள் வாழ்க்கையும் காஷ்மீர மக்களுக்கு ஒரு யுகத்தைப் போன்று கழிகிறது. இன்று நம் உயிரையும் கற்பையும் சிதைக்கப்போவது தீவிரவாதிகளா, ராணுவமா என்று பூவா, தலையா போட்டுக்கொண்டே கழிகிறது சராசரி காஷ்மீரியின் தினம்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அரசுகளுமே காஷ்மீர்ப் பிரச்சினையைப்பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தும்போது காஷ்மீரிகளின் தரப்பைச் சேர்த்துக் கொள்வதே இல்லை. ஒரு அழகிய பெண்ணைத் தம் வசமாக்க இரு ஆண்கள் சண்டை போடும்போது அந்தப்பெண்ணின் கருத்தை யாரும் கேட்காவிட்டால் அதற்கு என்ன பொருள்? அந்தப்பெண் ஒரு மனிதஜீவி அல்ல; வெறும் அடிமை என்று எண்ணுவதாகத்தானே அர்த்தம்? அதுதான் நடக்கிறது காஷ்மீரில்.


உலகெங்கிலும் நடக்கும் ஒவ்வொரு உரிமைப்போராட்டத்தையும் ஆதரிக்கவேண்டியதும் கரம்நீட்ட வேண்டியதும் மனிதநேயத்தோடு வாழ நினைக்கும் ஒவ்வொருவரின் கடமையாகும். அது நம் தொப்புள்கொடி உறவான ஈழமாயினும் சரி; எங்கோ துருக்கியிலும், பாலஸ்தீனத்திலும் நடக்கும் விடுதலைப்போராயினும் சரி; காஷ்மீராயினும், வடகிழக்கு மாகாணங்களாயினும் சரி!

இந்திய ஐக்கியம் என்பது மக்கள் மனதில் கட்டப்பட்டிருக்க வேண்டும்; வெறும் புவியியல் எல்லைக்கோடுகளில் அல்ல என்பதே உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனின் ஆசை.
காஷ்மீர மக்களை ராணுவத்தால் அடக்க நினைப்பதைவிட, "தாங்கள் இந்தியர்" என்ற பெருமிதம் அவர்களுக்குள் இயல்பாகவே ஊற்றெடுக்கும் வகையில் இந்திய அரசு தமது வழிமுறைகளை மாற்றிக்கொண்டால் அதை யார் எதிர்க்கப்போகிறார்கள்?

ஈழத்துக்கவிஞன் சித்தாந்தனின் ‘தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்’ என்ற கவிதை ஈழமக்களுக்கு மட்டுமல்ல காஷ்மீரிகளுக்கும் பொருந்தும்

“…
முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்
நடமாடத் தொடங்கிய பிறகு
குழந்தைகள் தெருக்களை இழந்தன
தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி
உணவூட்டத் தொடங்கிய பிறகு
தெருக்கள் குழந்தைகளை இழந்தன
....”

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...


இப்போ பாத்தீங்கன்னா, வரவர நம்ம பெரபல பதிவருங்கள்ளாம் அவுங்கவுங்க ப்ளாக்க திங்க கெழமன்னா ஒரு தொடர், செவ்வா கெழமன்னா இன்னொரு தொடர் அப்றம் ஞாயித்து கெழமன்னா "குருமா, சட்னி, பொரியல், கூட்டு, மண்ணாங்கட்டி, தெருப்புழுதி" அப்டீன்னு தலப்பு வெச்சு ஒரு ஸ்பெஷல் தொடர்னு எழுதி வார இதழ் மாதிரி ஆக்கிட்டாங்க. அதுனால நம்மளும் ஏதாவது "புண்ணாக்கு,பொடலங்கா"ன்னு ஸ்டார்ட் பண்ணினா சீக்கிரம் பெரபலமாயிடலாம்னு மனசுக்குள்ள ஒரு கொறளி சொல்ல ரெடி,ஸ்டார்ட்... ("யப்பாடா!வாரத்துல ஒருநாளாவது இவன் செந்தமிள்ள கொல்றதுலேருந்து தப்பிச்சாச்சு"ன்னு மொனவுறது யாருப்பா? கே.ஆர்.பி யா?!)

அப்புறம் ஒண்ணு! நமக்கு இந்தந்த மாதிரி குட்டி குட்டியா உபதலைப்பெல்லாம் வெச்சு எழுத வராது. ஒரு ஃப்ளோல போயிட்டே இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!

ஆகையால் தாய்மார்களே! பெரியோர்களே! இளஞ்சிங்கங்களே! கலாரசிகப் பெருமக்களே! அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

1) இன்னிக்கு வலையுலகத்துலயும், வெளியுலகத்துலயும் ஹாட் டாபிக் யாருன்னா உமாசங்கர்தான். ஆனாலும் மனுஷனுக்கு இந்த தில்லு இருக்கப்படாது. வந்தமா,சீட்ட தேச்சமா, அப்டியே ரெண்டு தென்னங்கன்ன ஊனி ஃபோட்டாவுக்கு போஸ் குடுத்தமான்னு போவ வேண்டியதுதானே? சும்மா ஊழல கண்டுபுடிக்கிறேன், ஊறல கண்டுபுடிக்கிறேன்னு திரிஞ்சா...?

Jokes Apart, உமாசங்கர் முதலுமில்ல, கடேசியுமில்ல! நாளைக்கு வேற ஒரு நேர்மையான அதிகாரி, கருணாநிதிக்குப் பதிலா ஜெயலலிதா! கொஞ்ச வருஷம் முன்னாடி ரோமன் மகசேசே அவார்டு வாங்குன கிரண்பேடி பட்ட அவஸ்தை எத்தன பேருக்கு ஞாபகம் இருக்கு? தீர்வு? அட போங்கப்பா... இப்டி ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு கண்டுபுடிக்கிறேன் பேர்வழின்னு திரிஞ்சா அப்றம் நாப்பது வயசுலயே ப்ரஷர் ஜாஸ்தியாயி புட்டுக்க வேண்டியது தான்! Call him Dog and Law him னு ஒரு பிரிட்டிஷ் பழமொழி ஞாவகம் வருது... கவுருமெண்டு கரெக்டா ஃபாலோ பண்ணுதுய்யா...

2) "போங்கடா, போயி புள்ளகுட்டியள படிக்க வைங்கடா!"ன்னு தேவர்மகன்ல கமல் சொல்லுவாருல்ல... இனி அது நடக்காதுபோல. தோழர் பைத்தியக்காரன் எழுதுன இந்த இடுகைய படிச்சப்போ அடிவயறு பக்குன்னு ஆயிடிச்சு. ஏற்கனவே கல்விய தனியார்மயமாக்குனப்பவே அவனவன் புள்ளைங்கள படிக்கவெக்க பிச்சையெடுக்காத கொறையா திரியிறான். இந்த லட்சணத்துல பன்னாட்டு கார்ப்பொரேட் கம்பெனியெல்லாம் வரப்போவுதாம் இஸ்கோலும், காலேஜும் கட்றதுக்கு! மொத்த GDP ல முழுசா 6 சதம்கூட கல்விக்கு ஒதுக்க முடியாத கவுருமெண்டுக்கு வக்கணையப் பாரு! சர்வசிக்ஷ அபிமான் வந்தப்பவே நெனச்சேன் "எலி ஏண்டா கோவணம் கட்டி ஓடுது"ன்னு. பயபுள்ளைங்க பத்தாங்கிளாஸ் தாண்டுனாத்தானே கலகம் பண்றேன், கருமாதி பண்றேன்னு கெளம்புவாங்க... போடு நடுமண்டையில நச்சுன்னு! "IGNORANCE IS BLISS"னு சும்மாவா சொன்னாங்க?!

3) திருச்சில செம கூட்டமாமில்ல! போயிட்டு வந்த சித்தப்பு பொளகாங்கிதப்பட்டுப் போனாரு. அடுத்தாப்ல நேரா செயிண்ட் ஜார்ஜ் கோட்டைதானாம் ( புது சட்டசபையில் ஆட்சிபண்ண மாட்டேன்னு அம்மா சபதம் போட்டுருக்காங்களாம்ல!). மேடையில ஒறவுக்கு 'கை' கொடுக்கறதப் பத்தியும் பேசுனாங்களாமே! எனக்கு 'ஆண்டனியோ நைனா... ச்சீ... மைனா', 'பதிபக்தி' கதையெல்லாம் மைண்ட்ல ஓரமா ஓட ஆரம்பிச்சிடிச்சு. ஒடனே யாருய்யா அது "நேருவின் மகளே வருக!நிலையான ஆட்சி தருக!" கோஷத்த சொல்லிக்காட்டி எதிர்ப்பாட்டு படுறது? கம்னு கெடக்கணும். நம்ம மருத்துவர் கூடத்தான் கொஞ்ச வருசம் முன்னாடி ஜெயலலிதாகூட கூட்டணி வெக்கிறது எதுவோ ஒண்ணுக்குச் சமம்னு ( என்னது! டீடெயிலா சொல்லணுமா? அப்புறம் நான் அடல்ட்ஸ் ஒன்லி போர்டுதான்யா மாட்டணும்) சொல்லிட்டு திரிஞ்சாரு... அதையெல்லாம் நாங்க கேக்குறோமா என்ன? All is fair in love and war... politics too...

4) கொஞ்சநாள் முன்னாடி போபால் பத்தி வரிஞ்சிகட்டின பொறவு அடுத்த மேட்டரா உமாசங்கர் கெடச்சிட்டாரு. நாமளும் பொட்டிய தட்டி பதிவுபோட ஆரம்பிச்சாச்சு. ஆனா ஆகஸ்டு 15 அன்னிக்கு "டௌ" முற்றுகைப்போராட்டம் நடத்தியிருக்காங்க ம.க.இ.க தோழர்கள். சொதந்திர தெனத்துக்கு முட்டாய் கொடுக்குறதுதான் வழக்கம். இவங்க ஒரு சேஞ்சுக்கு பேதிமாத்திரை கொடுத்துருக்காங்க அரசாங்கத்துக்கு! அன்னிக்கு மட்டும் களவாணிப் பயபுள்ள ஆண்டர்சன் சிக்கி இருந்தான்.. செதச்சிருப்பாங்க போல. நானும் நெனச்சிப்பாத்தேன்.. போபால்ல மட்டும் அன்னைய தேதிக்கு என் அப்பனோ, தாத்தனோ, கட்டிக்கொடுத்து அனுப்புன அக்காவோ இருந்துருந்தா...? ஆப்பு அவனவன் குண்டிக்கு வந்தாத்தான் வலிக்கும்போல!

5)பெரியாரோட எழுத்துக்களை வெளியிடுறது சம்பந்தமான வழக்குல ஹைகோர்ட் தீர்ப்பு "பெரியார் தன்னோட அறிவுசார் சொத்துக்களை எந்த ஒரு தனிநபருக்கோ, நிறுவனத்துக்கோ எழுத்துப்பூர்வமா எழுதிவைக்காத நிலையில, அவை மக்கள் சொத்து ஆகும்"னு சொல்லிடிச்சு. பெரியார் தி.க காரங்க ஒடனே ஒரு ரூம்போட்டு யோசிச்சிருப்பாங்க போலருக்கு! அறிவுசார் சொத்துரிமைக்கான தீர்ப்பு அசையாச்சொத்துக்களுக்கும் பொருந்தும்தானே அப்டீன்னு குண்டக்க மண்டக்க யோசிச்சு அசையா சொத்துக்களும் மக்களுக்குத்தான் சொந்தம்னு மறுபடியும் கோர்ட்டு படியேறுறாங்க. தேவையா தி.க வுக்கு? ஆரம்பத்துலயே விட்டுக் கொடுத்திருந்தா....? "சனியன் புடிச்ச நாரை கெளுத்திய போட்டு முழுங்கிச்சாம்"

6) கடேசியா ஒரு கவிதை சி.கே.ராஜாசந்திரசேகரோடது

மழை
மழையாகவும் இருக்கிறது
கவிதையாகவும் இருக்கிறது
மனங்களுக்குத் தக்கபடி...


நல்லாருக்குல்ல....?

                          மறுபடியும் காத்தாடுவோம்...

புதன், 18 ஆகஸ்ட், 2010

தேன்கசியும் வாழ்க்கை....

நான் மனந்தளரவில்லை, நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கைதான்... என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள்; அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக இருப்பதும், எந்தத் துயரம் நேர்ந்தாலும் எப்போதும் மனிதத்தன்மையோடு இருப்பதும், வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொள்வதும் - அதுதான் வாழ்க்கை; அதுதான் மகத்தான சவால்.
            - "மரணவீட்டின் குறிப்புகள்" நூலில் தஸ்தாயெவ்ஸ்கி

இரா துவங்கி நான்கு மணிநேரங்கழித்து மின்சார ரயிலில் இருந்து இறங்கி என் புறாக்கூண்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்; வியர்வையில் சொதசொதத்து நைந்துபோயிருக்கும் என் உள்ளாடைகளுக்கும் எனக்கும் ஆறு வித்தியாசங்களைப் பட்டியல் போட்ட படி... காலையில் செல்லும்போது பாட்டுப்பாடிப் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமி எதிர்த்த தேநீர்க்கடையில் வாங்கிய தேநீரில் நனைக்கப்பட்ட ஒரு பன்னைத் தனக்கும் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த தன் தம்பிப்பாப்பாவுக்கும், காலருகே வாலாட்டிக் கொண்டிருந்த அந்தத் தெருநாய்க்கும் பங்குவைத்தபடி . எந்த இழையில் அறுந்துவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது அவளது வாழ்வின் மீதான அன்பும் நம்பிக்கையும்?

அதேபோல இன்னுமொரு இராப்போது. வெளியே மெலிதாய்த் தூறல்கள்.கும்மென்று கிளம்பிய மண்வாசனை பசுவின் மடிமுட்டிப் பாலருந்தியபின் துள்ளிவரும் கன்றின் கழுத்தைக்கட்டி முகத்தில் முத்தும்போது நாசிதுளைக்கும் பால்வாசனையை நினைவில் எழுப்பியபடி... உதிர்ந்துகொண்டிருக்கும் முன்மண்டை முடிகள் கரைந்துகொண்டிருக்கும் இளமையைக் கண்ணாடி பார்க்கும்போதெல்லாம் காட்டிக் கொண்டே இருக்கும் வலிதவிர்க்க மாதமிருமுறை தவறாமல் செல்லும் 'அவள்' வீடு. 'எல்லாம்' முடித்து ஆயாசமாய்த் தோள்சாய்ந்துப் பின் எழுகையில் பர்ஸ் பிரித்துக் கொடுக்க, வழக்கம்போல அவற்றில் சில தாள்பிரித்து ஒரு உறையிலிட்டு "மறந்துடாம நீயே அனுப்பிருய்யா"... என்றோ ஒருமுறை 'உதவி தேவை'யை எழுத்துக்கூட்டிப் பார்த்து இன்னும் அனுப்பப்படக் காத்திருக்கும் எங்கோ இருக்கும் ஏழைச் சிறுவனின் கல்விக்கட்டணம். எது 'அவளை'யும் அந்தச் சிறுவனையும் இணைத்த பிணைப்பு?

மற்றுமோர் மதியவேளை. எச்சமாய் இருக்க பிரியப்படாமல் இருந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு அருகிலிருந்த பூங்காவில் மரங்களுக்குத் துணையாய்ப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தபோது ... 'எனக்கு ஏதாச்சும் போடுப்பா'... தண்ணீர் குடித்தாவது சாந்தப்படுத்தலாம் என்று எழுகையில் "இந்தாப்பா தம்பி! சாப்டுட்டு போ! மறுக்கா வாரப்ப துட்டு குடு" ரோட்டுக்கடை மீனாக்காவின் குரல்...
எது அவளது கைச்சோற்றை என் வயிறுவரை நீட்டியது?

செவிகள் மட்டும்தான் இசை உணருமா என்ன? வயிற்றுக்கும் கேட்கும் உணவின் சங்கீதம்!

உலகெங்கிலும் மௌனமாய் வழிந்துகொண்டிருக்கிறது அன்பின் இசை!

'செவியுள்ளவன் கேட்கக் கடவது!' என்று புன்னகைக்கிறார் மீட்பர்!

காதுகளைக் கழற்றிவீசிவிட்டு, கைகளில் ஆயுதங்களும், கண்களில் கயமையும் சுமந்து திரியும் மனிதர்களும், கொஞ்சம் அன்புக்கும், எஞ்சும் மனிதத்துக்கும் ஏங்கும் ஜீவன்களுக்காய் அணைத்துக்கொள்ள கரம் விரித்துக் காத்திருக்கும் புனிதர்களும் கலந்துதான் இருக்கிறார்கள் உலகத்தில்!

நடக்கும் போராட்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம்... நம்மையும், நம் கை சார்ந்திருக்கும் மனைவி, மக்களையும் பசிதீர்த்து நாளைய விடியலுக்காய்ப் பத்திரப்படுத்த...

இடையில் எதிர்ப்படுகின்றன மோதி அறையப்படும் கதவுகள்; முகத்தில் உமிழப்படும் எச்சில்கள்; ஏளனமாய் சுழிக்கப்படும் சில உதடுகள்; நடுமுதுகில் பாய்ச்சப்படும் சில துரோக அரிவாள்கள்; கொப்பளிக்கும் குருதியின் சூடு பட்டுவிடாமல் சற்றே விலகிச் செல்லும் சில உறவுகள்;  வாசல்காட்டி நீண்டு நிற்கும் சில கரங்கள்; 'அவனவனுக்கு ஆயிரம் வேல! போவியா.." சில அலட்சியங்கள்... இன்னும்.. இன்னும்...

இவற்றோடுகூடவே... இதமாய் மிதந்துவந்து பின்னங்கழுத்தின் முடிகோதும் சில புன்னகைகளும்... "நல்லதா நடக்கும்பா!" தோள்தடவி சுகமளிக்கும் சில விரல்களும்.... "ஏங்க எப்பவுமே பேயறஞ்ச மாதிரியே இருக்கீங்க?" முந்தானை எடுத்து முகம்துடைத்து தம்வலி மறைத்து நம்வலி சுமக்கும் மனைவிமார்களின் மென்மைகளும்...

கருணையின் கனம் தாங்க இயலாமல் யாருக்கேனும் பகிர்ந்தளிக்க எதிர்பார்த்திருக்கும் எத்தனையோ மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

நாம் செய்யவேண்டியதெல்லாம் நம்மிடம் இருந்து எடுத்துக் கொடுக்க சிறிது அன்பு.... கொஞ்சம் ஆறுதல்கள்... இன்னும் மிச்சமிருக்கிறது எதிர்காலம் என்ற நம்பிக்கைகள்... ஏதிலா மானுடர் நமக்குக் கீழேயும் இருந்து எட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

"எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது"


பூக்களும்,புன்னகையும் நமக்கு மட்டுமல்ல; யாவருக்கும்தான்! துயரமும், கண்ணீரும் சுமப்பது எல்லாத் தோள்களுந்தான்!

நாளையும் விடியும்... இதே பொழுதுகள் இன்னுமொருமுறை சுழன்றுவரும்... பெறுவதும் தருவதுமாய் மாறிமாறி வர்ணம் காட்டும் காலமெனும் கண்ணாடி...என்றும் வற்றிவிடாத மனிதம் இன்று மட்டுமென்ன குறைந்தா போய்விடப் போகிறது?

நமக்கென்று இருக்கும் மனிதர்களை நாடி நம் கால்களின் பயணம் நீண்டுகொண்டே இருக்கும்!

எங்கோ மெலிதாய் இசைத்துச் செல்கிறான் ஒரு தெருப்பாடகன் 'எமிலி டிக்கின்ஸனின்' வரிகளை...

If I can stop one heart from breaking
I shall not live in vain

If I can ease one life the aching
               or cool one pain
               or help one fainting Robin
               undo his nest again
I shall not live in vain.

                                                ஒரு இதயம் உடையாமல் நிறுத்த முடிந்தால்
                                                நான் வாழ்வது வீணல்ல
                                               ஒரு உயிரின் தவிப்பையோ
                                               ஒரு வலியையோ குறைக்க முடிந்தால்
                                               நான் வாழ்வது வீணல்ல
                                               ஏன், சோர்ந்துவிழும் ராபின் பறவையை
                                              கூட்டுக்கு மீட்க உதவினாலே
                                               நான் வாழ்வது வீணல்ல.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

தொலைத்தோம் தமிழம் என எதிர்காலம் நமை உமிழும்!


குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே? 
சேரன் கணைக்காலிரும்பொறை    (புறநானூறு-74)

கொடுமையானதோர் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் சேரமாமன்னன் கணைக்காலிரும்பொறை. சுதந்திரத்தின் ஏக்கத்துக்காய் மனமும், சொட்டுத் தண்ணீருக்காய் நாவும் வறண்டிருக்கின்றன. காவலுக்கு நின்ற ஒரு வீரனை அழைத்துக் "கொஞ்சம் தண்ணீர் கொடு!" என்று கேட்கிறான்; கொடுத்துக் கொடுத்துக் கைகள் பழகியவன் முதன்முறையாய்க் கேட்பதன் வலியை நெஞ்சில் சுமந்தபடி!

கோவேந்தனானால் என்ன? இன்று நம் கொட்டடியில் கிடப்பவன் தானே! தண்ணீருக்கென்ன அவசரம் என்று ஆடி அசைந்து நேரஞ்சென்றபின் ஒரு குவளையைக் கொண்டுவந்து நீட்டுகிறான் காவலன்;காலஞ்சென்றோருக்குக் காரியம் கழிப்பது போல! பாவலர்கள் வாயினால் என்றும் புகழப்பட்ட தமிழினத்தில் கோவலர்களுக்கும் கேவலர்களுக்கும் அன்றும்கூடப் பஞ்சமிருந்ததில்லைபோல!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டால் மட்டும் அதன் சீற்றம் குறைந்துவிடுமா என்ன? தாமதம் ஒரு பொருட்டில்லை; அதன்பின்னே மறைந்திருந்த ஏளனம் பொறுக்கவில்லை மன்னனுக்கு! குவளையைச் சீந்தவும் விரும்பாத கொற்றவனின் வாயிலிருந்து விழுந்த தீக்கங்குகள்தான் புறநானூற்றின் வரிகளில் அழியாப்புகழ்பெற்றப் பாடலாய்ப் பரிமளித்தது.

அதிகமாய் விழுப்புண்களை எந்த ஆண்மகனின் மார்புகள் சுமந்திருக்கின்றதோ அவனே அழகன் என விம்மி அவன் தோள்சேர விரும்பினர் அக்கால மங்கையர். புலிகளொடு வாழ்ந்து, புலிகளையே ஈன்று பொலிந்திருப்பதுதான் வாழ்வு என்று இறுமாந்த இனத்தின் அரசன் தீப்பிழம்பாய் மாறிப் பாடுகிறான்:

"எம்மினத்தில் ஒரு குழந்தை- அது நாங்கள் தவமிருந்து பெற்றதாயினுஞ்சரி- இறந்துவிட்டாலோ, அல்லது பிறந்தது வெறுஞ்சதைப்பிண்டமாய் இருந்துவிட்டாலோ அதைக்கூட அப்படியே அடக்கம் செய்தல் மானமரபிற்கு அழகல்ல என்றெண்ணி அதை எம் வாளால் இரண்டாகப் பிளந்து பின்னரே புதைப்போம்! அந்த இனத்திலோர் அரசன் பச்சைத் தண்ணீருக்குக் கூடப் பகைவனிடம் இறைஞ்சினான் என்ற பழியை என் இனத்துக்குக் கொடுக்கமாட்டேன்! அதைவிட நான் இறப்பது மேலல்லவா? எதிரியிடம் பிச்சையெடுத்து அவன் காலை அண்டிப் பிழைப்பதும் ஒரு பிழைப்பா! இனி என் உடலுக்கு இந்த உயிர் வெறும் சுமைதான்" என்று பாடி உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்தான் கணைக்காலிரும்பொறை.

தமிழனின் தன்மையும் தொன்மையும் வெறும் பாடுபொருளாய் மட்டுமே எஞ்சிப்போனது. மாயன் இனமும், இன்கா இனமும் உள்ளிட்ட உலகின் தொல்பெருங்குடியினரில் இன்று மிச்சமிருப்பது தமிழன் மட்டுமே. மிச்சமிருப்பது பெருமைதான்; வெறும் எச்சமாய் இருப்பது...?

ஆணுமற்று, பெண்ணுமற்றுப் பிறப்போர் தம் குறியகற்றிப் பெண்தோற்றம் கொள்வதுபோல இந்தியனாய் இனமாற்றம் செய்யப்பட்ட தமிழனுக்கு இதயநீக்கம் செய்யப் பட்டதுபோலும்! 'இங்கிலீசி'ல் பிள்ளைபேச இளித்திருந்தால் அதுவே இதம் என்று மாறிப்போனோமே!

வெண்திரையில் வீராப்பு பேசும் வெற்று முகமூடிகளில் தேடினோம் நம் தலைமைகளை; சின்னத்திரையின் ஆபாச நெடுங்கதைகளில் இழந்தோம் நம் வளமிக்க தொன்கதை மரபை; பள்ளிமேடைகளைப் பள்ளியறையாக்கி நம் குழந்தைகளை நாட்டியமிடச் செய்து நசுக்கினோம் அம்மன்கூத்தும்,அன்னக்கொடியாட்டமும், இலாவணிப்பாட்டும், எக்காளக்கூத்தும், உடுக்கைப்பாட்டும்,உறுமிப்பாட்டும், ஒயில்கும்மியும், கணியன் ஆட்டமும், கரகாட்டமும், சிம்மநடனமும்,சேலையாட்டமும், தெருக்கூத்தும், தேவராட்டமும், புலியாட்டமும், பொம்மலாட்டமும், பொய்க்கால் குதிரையாட்டமும், மயானக்கொள்ளையும், மயிலாட்டமுமாய்ச் செழித்தோங்கி நின்ற நம் ஆடற்கலையை;

தமிழரின் இசைமரபின் தனித்துவம் உலக இசைமரபுகளின் முன்னோடி; தமிழிசைமரபை அணு அணுவாக வரையறை செய்கிறது சிலப்பதிகாரம்;

சங்ககாலத்துக்கு முன்னரே இசை எனப்படுவது யாது என்று இலக்கணப்படுத்தின நம் நூல்கள்:

“இசையெனப்படுவது இயம்புங் காலை
ஒத்துணர் ஒலியிஇன் நீட்சி யதாகும்”

இன்றோ தமிழ்ப்பண்களான செவ்வழி,சாதாரி, புறநீர்மை,இந்தளம், தக்கேசி முதலியன முறையே யதுகுலகாம்போதி, காமவர்த்தினி, பூபாளம், மாயமாளவகௌலை, காம்போதி   என்று திருடப்பெற்று இசைமேடைகளில் தமிழை இரண்டாந்தாரமாய்த் தள்ளிவைக்கும் கொடுமையைத் தலையாட்டி ஆமோதித்து அதுவும் போதாமல் அரைக்கிறுக்குகளின் இசைத்துணுக்குகளில் இழந்தோம் நம் இசைரசனையை.

நம் இந்திரவிழாக்களை 'வாலண்டைன்ஸ் டே'வாக்கி களவியல், கற்பியல் என்று வகுக்கப்பட்ட நம் காதல்வாழ்வினை வெறுமே உடலை ஆராதிக்கும் விலங்குத்தன்மைக்கு ஆளாக்கினோம்.

நவீன முதலாளித்துவம் பெற்றெடுத்த நுகர்வுக்கலாச்சாரத்தின் நுகத்தடிகளுக்குள் தலைநுழைத்து நுரைதள்ள, வாழ்க்கைப்போராட்டத்தின் போர்க்களத்துக்கு பலிகொடுத்தொம் தமிழனின் ஈகைக்குணத்தையும், எளிமை வாழ்க்கையையும்.

எல்லாக் கொடுமைகளுக்கும் சிகரம் வைத்தாற்போல இன்று ஈழத்தின் திறந்தவெளிச்சிறைக்குள் சிறகொடிந்த பறவைகளாய், கண்ணீருக்கும் வழியின்றிக் காய்ந்த பாலைபோன்றக் கண்களில் உலகம் கைவிட்டாலும் உறவுகள் கைவிடாது என்ற நம்பிக்கை தேக்கி வெறித்து நிற்கும் நம்தமிழ் உறவுகளுக்கு என்ன செய்தோம் தமிழர்களே! 'கண்கள் பனிக்கவும், இதயம் இனிக்கவும்' இந்திய சுதந்திரதின மிட்டாய்களை நம் நாவுகளுக்கும், "சோற்றாலடித்த பிண்டங்கள் நாங்கள்; தனித்தியங்கும் தன்மையிழந்துச் சார்ந்துவாழும் எம்மால் சோர்ந்துநிற்கும் உம் துயராற்ற முடியாது" என்ற நஞ்சை நம் உறவுகளுக்கும் பங்குவைப்பது நம் இனமானத்துக்கு இழுக்கென்று நாம் எண்ணவில்லையே!

தலைப்பாகைக்கு ஆபத்து என்றதும் துள்ளியெழுந்த சீக்கியர்களின் உணர்ச்சியலை உடனே விமானமேறிப்போய் ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தோடு பேச்சுநடத்தி விவகாரம் தீர்த்தது! தம் உரிமைகேட்டு ஆர்ப்பரித்த தெலுங்கானா மக்களின் நெஞ்சக் கொதிப்பு எரிமலையாய் மாறி இந்திய அரசின் குடுமியைச் சுட்டது! மராட்டியத்தில் பிகாரிகளுக்கு இடமில்லை என்றதும் எதிரும்புதிருமாய் இருந்த லாலுபிரசாத், நிதிஷ்குமார் இருவரது தொண்டைகளும் ஒரே குரலில் கனைத்தன! ஓர் அற்ப ரயில்வே கோட்டத்துக்காய் ஆர்ப்பரித்த மலையாளிகளின் எழுச்சிக்குப் பதிலளிக்க பறந்து பறந்து ஓடினர் மத்திய அமைச்சர்கள்!

ஆனால் நாம்...?

குறைந்தபட்சம், கடற்குருவிகளைவிடக் கேவலமாக சுட்டுவீழ்த்தப்பட்டு வீசப்படும் நம் மீனவர்களுக்காகக் கண்ணீர் சிந்தக்கூட வழியற்ற கருவாடுகளாகிப் போனோமே!

மதியிழந்தோம்! மானம் விற்றோம்! சுதந்திரம் மீட்பதும், சொந்தம் காப்பதும் நம் சுயவுரிமை என்ற சொரணை கெட்டோம்!

இனியாவது இணைவோம் தமிழர்களே! நம் சனம் காக்கவும், இனம் மீட்கவும்! இல்லையெனில்...

தொலைத்தோம் தமிழம் என எதிர்காலம் நமை உமிழும்!

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

கவிதைப்பார்வை-8 : என்னை நேசியுங்களேன்!


The body is a house of many windows: there we all sit, showing ourselves and crying on the passers-by to come and love us.  ~Robert Louis Stevenson

There are at least two kinds of cowards.  One kind always lives with himself, afraid to face the world.  The other kind lives with the world, afraid to face himself.  ~Roscoe Snowden

உங்களுக்கு மிகவும் பிடித்த குரல் எது என்று சொல்லுங்களேன்?

ஜேசுதாஸ்? எஸ்.பி.பி? டி.எம்.எஸ்? ஜானகி? சுசீலா? மைக்கேல் ஜாக்ஸன்? நான்சி அஜ்ரம்? பாப் மார்லே?

அதேபோல நீங்கள் உங்கள் வாழ்க்கையிலேயே அதிகம் நேசிக்கும் நபர்?

அம்மா? அப்பா? காதலி? உங்கள் குழந்தை? மனைவி? உற்ற ஸ்நேகிதன்?

இரண்டுக்கும் ஒரே விடைதான்! "நீங்கள்!"
ஒவ்வொரு மனிதனும் தன் குரல் ஒலிக்கப்படுவதைத்தான் விரும்புவான்!

ஒவ்வொரு மனிதனும் தன்னைவிட அதிகமாக யாரையும் நேசித்துவிட முடியாது!

தன்னை நேசிக்காதவன் எவனுமே தன்னைச் சுற்றியுள்ள எந்த உயிரையும் நேசிக்கவும் முடியாது!

அறிவியலும்,இறையியலும் எப்போதும் "நான்" என்பதை ஆராய்வதிலேயே சூல்கொண்டுள்ளது. தத்துவங்களின் தேடுபொருளும் "நான்"தான்! "நான்" என்பது என்ன அல்லது யார் என்ற கேள்வியை நோக்கி நகர்ந்த அறிவியல் 'உளவியல்' என்று வகைப்படுத்தப் படுகிறது. நவீன உளவியலின் தந்தையான சிக்மண்ட் ஃப்ராய்டு "நான்" என்ற உணர்வை id, ego, super ego என்று படிநிலைப் படுத்துகிறார்.

'நான்' என்பதை ஆராயப்புகுந்த இறையியல் பலப்பல பிரிவுகளாய்ப் பிரிந்து விதவிதமான முடிவுகளுக்கு இட்டுச் சென்றது.

கடவுள் என்ற அழகிய, ஆழமான சொல்லாட்சி 'இறை' என்பதைப் பற்றிய தொல்தமிழனின் புரிதலை விளக்குகிறது.

அனைத்தையும் கடந்து தனக்கு உள் நிற்பவனே இறைவன் என்றான் தமிழன். ஒவ்வோர் உயிரினையும் இறைவடிவாகக் காணும் இந்தியத் தத்துவமரபின் வேர் தமிழனிடமிருந்துதான் துவங்குகிறது. இன்றோ தமிழன் தொலைந்துபோய் 'இந்து'வாக மட்டும் வாழும் நிலை!

"நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?"
என்பது சிவவாக்கியச்சித்தர் பாடல்.

இப்படி 'நான்' என்பதைச் சுற்றியே உலகம் வலம் வருகையில் அந்த 'நானை' ஏனைய 'நான்'கள் புரிந்துகொள்ளவேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற இடையறாத ஏக்கத்தைச் சுமந்து திரிகிறது ஒவ்வொரு 'நானு'ம்!

என் கண்ணீரைத் துடைக்க உமது கரங்கள் நீளவேண்டும்; என் தலையைச் சாய்த்துக்கொள்ள உமது மடிகள் விரிந்திடவேண்டும்; என் அறிவினை வியந்திட உமது புருவங்கள் உயரவேண்டும் என ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றியுள்ள சக உயிர்களிடம் எதிர்பார்க்கிறான்.

"என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டியா?"

"நான் என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் புரிஞ்சிக்கயேன்"

"நம்மள யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்கப்பா"


பாருங்கள்! ஒவ்வொரு மனிதனும் தன்னைப் புரிந்துகொள்ளவேண்டி இறைஞ்சுவதை!

"கண்களால் எடை போடுகிறாய்

புறம் சார்ந்தே இருக்கிறது
உன்புரிதல் என்பதால்
கிளம்புகிறேன்

என்றாவது உணர்வாய் நீ
இழப்பின் வலி."


என்று புரிதல் மறுக்கப்பட்டதால் வரும் "இழப்பின் வலி"யை இசைத்துச் செல்கிறார் ராஜா.சந்திரசேகர்.

துரதிருஷ்டவசமாய் நாம் யாரையும் அவர்களது 'நானை' விரும்புவதில்லை. அவன் அல்லது அவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பின் பிம்பத்தை அவர்கள்மீதேற்றி அந்த பிம்பத்தையே நேசிக்கிறோம்.

நம் குழந்தைகளை நாம் 'எதுவாக' ஆசைப்பட்டோமோ 'அதுவாக' அவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்; நம் நண்பர்கள், நம் உறவுகள், நம் காதல்கள் என எல்லாவற்றையும் நமது விருப்பங்களைச் சுமந்த பிம்பங்களாகவே பார்க்கிறோம்.

ஆனால் பிம்பங்கள் நீர்க்குமிழி போன்றவை; கணநேரத்தில் காணாமல் போய்விடக்கூடியவை; உறவு வாய்க்காலில் பாய்ந்து உள்ளக் கழனியை வளப்படுத்த வேண்டிய அன்பெனும் நீரோட்டம் பிம்பங்களால் உடைபட்டு வீணாய்ப் போகிறது.

அவரவரை அவரவர் இயல்போடு நேசித்தால்? குறைகளையும் சேர்த்தால்தான் மனிதன் முழுமையடைகிறான் என்ற புரிதல் ஒவ்வொருவருக்கும் வந்துவிட்டால்?

சுவர்க்கத்தின் கதவுகள் அங்குதான் திறக்கப் படுகின்றன. சுகந்தம் அங்குதான் பரவத் தொடங்குகிறது.

மனிதர்களே! ஒவ்வொரு 'நானை'யும் 'நானா'க இருக்க விடுங்கள் என்று இறைஞ்சுகிறது லீனாமணிமேகலையின் இந்தக்கவிதை

நான்
விரும்பும் என்னை
எப்பொழுதும்
விரும்புவதில்லை
இந்த உலகம்,
யார்
விரும்பும் என்னையும்
ஒரு பொழுதும்
விரும்பியதில்லை
நான்.
விருப்புகளின் போராட்டங்களில்
வெல்வதும் தோற்பதுமாய்
மூள்கிறது வாழ்க்கை
நிர்கலனாய்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

அதாகப் பட்டது...

மயானக்கவிச்சி வேண்டி
நடனமிடும் மனப்பிறழ்வின்
உடைந்த சொற்கள்
தாய்முகத்தின் பிரேதக்களை
தாலாட்டும் ஒப்பாரியில்
மேலெழும் கிலேசங்கள்
இவ்வாறாக
கனவுகளுள்
நீள்கிறதென் இரா...

(கருத்து மூலம் : கே.ஆர்.பி.செந்தில்... நன்றி செந்திலண்ணனுக்கு)

மறைக்கப்பட்ட வரலாறுகள்- சுதந்தர தினத்தையொட்டி சில நினைவுகள்: பகுதி 2


Until lions have their historians, tales of the hunt shall always glorify the hunters.  ~African Proverb

Animals are in possession of themselves; their soul is in possession of their body. But they have no right to their life, because they do not will it.
G.W.F. Hegel


இந்தியத் துணைக்கண்டம் மட்டுமல்ல! உலகம் முழுதுமே காலனியாதிக்கக் கொடுமைகளில் இருந்து வெளிவரத் துடித்துக் கொண்டிருந்த நேரமது.

1905- பனிக்கட்டிகள் மழையாய்ப்பெய்து கொண்டிருக்கையில் கொடும் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு சீற்றத்தோடு துப்பப்பட்டது ஒரு பீரங்கிக்குண்டு; துப்பியது பொட்டம்கின் என்கிற போர்க்கப்பல்; துப்பப்பட்டது ஜாரின் ரஷ்யாவில்; ஜாருக்கெதிராக! ஒடுக்குமுறைக்கெதிராக!

அந்தக்குண்டிலிருந்து வந்த நெருப்பு ஊழித்தீயாய் மாறி 1917-ல் சோவியத் என்ற தேசத்தை நிர்மாணித்ததோடு நின்றுவிடவில்லை. உலகெங்கும் தத்தம் தளையறுக்கப் போராடிய மக்கள் அந்தத்தீயிலிருந்து கங்குகளைக் கடன்பெற்றனர்.

அதில் ஒரு கங்கு கருத்தரித்த நாள்: 18, ஃபெப்ருவரி, 1946; இடம் பம்பாய்த் துறைமுகத்தில் அன்றைய 'ராயல் இந்தியன் நேவி' என்றழைக்கப்பட்ட இந்தோ-பிரிட்டன் கப்பற்படையில் இருந்த "HMS தல்வார்" என்ற போர்க்கப்பல்.
"Operation Success; But patient out!" என்பதைப்போல இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்றாலும் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சிதைந்து கலகலத்திருந்தது பிரிட்டிஷ் பேரரசு.

இன்னும் ஒரு உதை போதும்! உடைந்து நொறுங்கிவிடும் சாம்ராஜ்ய மாளிகை! என்றிருந்த நிலையில் ஒப்புக்குச் சப்பாணியாய்ப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் இயக்கம் எப்படியாவது Dominican அந்தஸ்தைப் பெற்றால் போதும் என்று முக்கி முனகிக் கொண்டிருந்த நிலையில் வெடித்தது கப்பற்படைப் புரட்சி!

மக்கள் போராடினால் போலிஸை வத்து அடக்கலாம்! போலிஸும் போராடினால் ராணுவம் வைத்துச் சுடலாம்! ராணுவமே போராடினால்...? அதன்கூட மக்கள்திரளும் கைகோர்த்தால்....?

அன்றைய பிரிட்டிஷ் இந்திய ராணுவம்,கப்பற்படை,விமானப் படை இவற்றில் அதிகாரிகள் அந்தஸ்தில் பிரிட்டிஷார் மட்டுமே இருந்தனர். படைவீரர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்களே! சொற்ப அளவில் மட்டுமே படைவீரர் அந்தஸ்தில் ஆங்கிலேயர் இருந்தனர்.

முதலில் சிற்சில சலுகைகளுக்காகத் தொடங்கிய தல்வார் கப்பலில் தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம் இந்திய விடுதலை என்ற முழக்கத்தோடு விரிவு பெற்றது. அருகில் இருந்த கப்பல்களுக்கும் பரவியது போராட்டம். கப்பற்படையின் முழுக் கட்டுப்பாடும் அடுத்தநாளே போராடத்துவங்கிய மாலுமிகளின் கைக்குள் வந்துசேர்ந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ள மக்களுக்கும் அறைகூவல் விடுத்தனர்.

போராளிகளால் வானொலிநிலையமும் கைப்பற்றப் பட்ட நிலையில் போராட்டம் பற்றிய தகவலறிந்து இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மக்கள் தங்கள் பங்களிப்பைத் தரத்துவங்கினர்.



மும்பையில் 30,000 மக்கள் கலந்துகொண்ட வேலைநிறுத்தத்துடன் கூடிய போராட்டம்! கல்கத்தாவிலும், விசாகப் பட்டினத்திலும் கப்பற்படைப் போராட்டம்! சென்னையில் வேலைநிறுத்தப் போராட்டம்! மக்களைக் கட்டுப் படுத்த அனுப்பப்பட்ட போலிசார் மக்களோடு சேரத் தொடங்கினர். ராணுவமும் இணைந்தது போராளிகளோடு!  குண்டுவீசிக் கூட்டத்தை கலைக்க மறுத்தனர் விமானப் படையினர்!

போராட்டக்குழு அமைக்கப் பட்டு போராட்டம் முறைப்படுத்தப் பட்டது. பெரும்பான்மையான கப்பல்களில் காங்கிரஸ்கொடியும், முஸ்லிம் லீக் கொடியும், செங்கொடியும் ஏற்றப்பட்டன. நெறிப்படுத்தப்பட்டு இலக்கைக் குறிவைத்து எய்தப்பட்ட அம்பைப்போல போராட்டம் முழுவீச்சில் தொடர்ந்தது. இருபத்தைந்து வயதேயான இளஞ்சிங்கங்களான சிக்னல்மேன் எம்.எஸ்.கானும், டெலிக்ராஃப் ஆபரேட்டரான மதன்சிங்கும் முறையே தலைவர் மற்றும் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றனர்.

"எமது நோக்கம் முன்னேற்றம்! நாமே புனிதப்போராளிகள்
எமது மந்திரம் புரட்சி! புரட்சி !! புரட்சி!!!"

விடுதலை கீதம் விடியலின் வாசம் சுமந்து வீதிகளெங்கும் உலா வந்தது!

ஆனால்...?

மரணம் வாழ்வின் ஒரு முடிவல்ல
உங்கள் சொற்களை விடவும்
செயல்களை விடவும்
உங்கள் மரணம் மிகவும் வலியது !
                             சேரன்

சனி, 14 ஆகஸ்ட், 2010

மறைக்கப்பட்ட வரலாறுகள்- சுதந்தர தினத்தையொட்டி சில நினைவுகள்: பகுதி 1


“You may fool all the people some of the time, you can even fool some of the people all of the time, but you cannot fool all of the people all the time.”
                    -  Abraham Lincoln

இன்றையநாள் முடிவுக்கு வரும்போது துவங்கியிருக்கும் இன்னுமொரு சம்பிரதாயமான சுதந்தர தினக் கொண்டாட்டங்கள்!

குண்டுதுளைக்காத கூண்டுக்குள் நின்று சுதந்தரதின உரைநிகழ்த்தி வாழ்த்துவார்கள் ஜனாதிபதியும் பிரதமரும்; "வைஷ்ணவோ ஜனதோ"வும், "வந்தேமாதரமு"ம் ( வந்தே ஏமாத்துறம்?!) ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கும்; 'இன்றைய சுதந்தர தினச் சிறப்பு நிகழ்ச்சிகள்' அனைத்தையும் பெப்சி கோலா, கொக்கோகோலா மற்றும் இந்துஸ்தான் லீவர் வழங்க 'இந்தியன்' வகையறா திரைக்காவியங்கள் மீண்டும் ஒளிபரப்பப்படும்; திவசத்துக்கு திவசம் தூசு தட்டப்படும் தாத்தாவின் புகைப்படமாய்த் தேடித் தூக்கிவரப்பட்டு கவுரவிக்கப் படுவர் சில தியாகிகள்; என்றும்போல இன்றும் 'அன்னாடங்காய்ச்ச'க் கிளம்புவார்கள் விவசாயிகளும் , கூலித்தொழிலாளிகளும் இதரர்களும்!

இந்திய வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள 15.08.1947 க்குப் பின் மறைக்கப்பட்டுள்ள குருதி வீச்சத்தையும் துரோகங்களின் முடைநாற்றத்தையும் 'தேசபக்தி' செண்ட் அடித்து மறைத்துவிட்ட நிலையில் சில விஷயங்களை நினைவுபடுத்திப் பார்க்க விரும்புகிறேன்:

எத்தனை எத்தனை வீர வரலாறுகள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து துடைத்தழிக்கப் பட்டுள்ளன! எவ்வளவு அரசியல் பேரங்கள் தியாக வரலாறெனச் சித்தரிக்கப் பட்டுள்ளன!! இந்த மறைக்கப் பட்ட வரலாறுகள் மட்டுமே இந்திய சுதந்தரத்தின் உண்மையான கதையை விவரிக்கும்.



மறைக்கப்பட்ட ஒவ்வொரு பக்கங்களையும் புரட்டத் தொடங்கினால்...!

தென்னிந்தியாவின் முதல் சுதந்தரப் போராளி என்று போற்றப்படுகிறான் பூலித்தேவன். நெற்கட்டுஞ்செவ்வலை நெற்கட்டான்செவ்வலாக்கி ஆதிக்கத்துக்கு எதிராகக் கலகக்குரல் எழுப்பிய வீரன் அவன்.

ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு பூலித்தேவனின் நெடிதுயர்ந்த இரண்டு தோள்களாய் இருந்து களமாடிய ஒண்டிப்பகடையையும், காலாடியையும் தெரியும்?

கட்டப் பொம்மு ராஜாவின் பேரைக் கேட்டாலே உடனே சிவாஜி கணேசனின் வசனங்களை ஏற்ற இறக்கங்களோடுப் பேசிக்காட்டும் எத்தனை பேருக்கு சுந்தரலிங்கத்தைத் தெரியும்?


இதோ இரண்டாம் உலகப்போருக்குப் பின் புதிதாய்ப் பதவியேற்ற தொழிற்கட்சியின் தலைவரும் பிரதமருமான அட்லி இந்தியாவுக்குச் சுதந்தரம் அளிக்கவேண்டியதன் அவசியம் பற்றி பிரிட்டன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்:

"இந்தியாவில் தேசவிடுதலை என்ற அலை ஓங்கி உயர்ந்து அடிக்கிறது. அது கற்களையும் பாறைகளையும் மோதி நொறுக்குகிறது. ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். இது 1920 அல்ல (ஒத்துழையாமை இயக்கம்). 1930 அல்ல ( உப்புச் சத்யாக்கிரகம்). 1932 அல்ல ( சட்டமறுப்பு இயக்கம்). 1941 அல்ல ( தனிநபர்ச் சத்யாக்கிரகம்). 1942 அல்ல ( ஆகஸ்டுப் புரட்சி). இது 1946 ( கப்பற்படைப் புரட்சி). ஒரு சுதந்தர தேசமாக வாழ இந்தியாவுக்கு உரிமை உண்டு."

ஒவ்வொன்றையும் கழித்துக் கொண்டே வந்த அட்லி ஏன் கப்பற்படைப் புரட்சியை முக்கியக் காரணமாகக் காட்டுகிறார்? அப்படி வரலாற்று முக்கியம் வாய்ந்த புரட்சியைப்பற்றி ஏன் இன்றைய வரலாற்றுநூல்கள் இருட்டடிப்பு செய்து வருகின்றன? அப்படிப்பட்ட புரட்சியின் முன்னோடிகளாக இருந்தவர்கள் யார் யார்?

இன்னும் ஏராளமான கேள்விகளைச் சுமந்துகொண்டு நான் நடக்கிறேன் விடைகளைத்தேடி... நாளை என்பதே எப்போதும் புதிர்களை விடுவிக்கும் என்ற நம்பிக்கையில்தானே நாம் நாளைக் கழித்துக் கொண்டிருக்கின்றோம்!

"அன்பான தேசமே
உயர்த்தி அடைத்த
இரும்பு வேலியுள் இருந்து
எழுகிற எமது குரல்கள்
உங்களைக் கேட்பதெல்லாம்
போரிடுங்கள்!
அநீதிகளுக்கு எதிராக
போரிடுங்கள்
அடக்குமுறைகளுக்கு எதிராக!
போரிடுங்கள்
மனிதநேயத்துக்காக!"

        - சேரன்
                                                                                         தொடர்வோம்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தமிழகத்தில் மீளுயிர்க்கும் காங்கிரஸ் - ஒரு பைனாகுலர் பார்வை!


அது 2004-ம் ஆண்டு. பாராளுமன்றத்தேர்தல். குஜராத்தின் 'மோடி'யாட்டங்களால் நடுநிலைவாதிகளுக்கும் மனிதம் விரும்புவோர்க்கும் ஒரு பதைப்பு இருந்த காலகட்டம். மதச்சாக்கடையை சந்தனமாக்கி 'மணக்குது' என்று சொன்ன பாரதீய ஜனதா கட்சி மீண்டும் அரியணை ஏறிவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்பும் ஆதங்கமும் எனக்கும் இருந்தது.

குஜராத்தின் கவிச்சி வீச்சத்துக்கு இடையிலும் கவிதை மணம் நுகர்ந்த 'பண்பாளர்' வாஜ்பாயின் முகமூடி(உபயம்: கோவிந்தாச்சார்யா)யையும் மீறி காங்கிரஸ் மீண்டும் தனது அரியணைக்கான போட்டியில் 'தம்' கட்டி ஓடுவதற்கு அனைத்து சமரசங்களுடனும் தயாராயிருந்தது. மக்கள் காங்கிரஸை மட்டும் நம்பாமல் கம்யூனிஸ்ட்டுகளையும் காவலுக்கு வைத்தனர் 62 பாராளுமன்ற இடங்களை வழங்கி! "The Red Sweap" என்று வர்ணித்திருந்தது இந்தியா டுடே.

அது நடந்து ஆறாண்டுகள் முடிந்துவிட்டன. இந்தியாவின் பூகோள மற்றும் அரசியல் நிலையைக் கூர்ந்து கவனிப்போர் ஒரு விஷயத்தை நன்கு உணரலாம். காங்கிரஸ் ஆண்ட இந்த காலகட்டத்தில் இந்திய அரசியல் ஒரு கொந்தளிப்பான நிலையை எட்டியுள்ளதை!

இந்தியாவின் தலைப்பகுதியான காஷ்மீரில் அம்மக்களின் விடுதலைப் போராட்டம் ஓர் உச்சநிலையை அடைந்து கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாய் முக்குக்கு முக்கு, தெருவுக்குத் தெரு ராணுவம் என்ற நிலையில் மூச்சடைத்து போயிருந்தனர் காஷ்மீரிகள். ரோஜாப்பூ போன்ற காஷ்மீரப் பெண்கள் ராணுவத்தின் கோரக் கரங்களால் கசக்கி நுகரப்பட்ட வலி தேசத்தின் மற்ற பாகங்களுக்குத் தெரிந்துவிடாமலிருக்க 'கிரிக்கெட்' தேசப்பற்றும், 'கார்கில்' தேசப்பற்றும் பரப்பப் பட்டது. மக்களும் 'ரங் தே பஸந்தி'யிலும் 'லகானி'லும் ஊற்றப்பட்ட குடங்குடமான கண்ணீரில் மூழ்கி முக்குளித்து ஆனந்தித்தனர்.

இன்னொருபுறம் வடகிழக்கு மாகாணங்களிலும் 'அனுமன் வால் தீ' போல போராட்ட உணர்வு மெல்லமெல்லப் பற்றிக் கொண்டே பரவத் துவங்கியுள்ளது. ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தைப் புதுப்பித்து எரியும் நெருப்பை எச்சில் துப்பி அணைக்க முயல்கிறது டெல்லி தர்பார்!

வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்ட கதையாக 'வேதாந்தா'க்கள் வீசிய தூபப்புகையில் சாமியாடத் தொடங்கிய 'சிதம்பர'ங்கள் தண்டகாரண்யத்தில் தலையை நுழைக்க, கடிக்காமல் இருக்க பழங்குடி மக்கள் சர்க்கஸ் சிங்கமா என்ன? மாவோயிஸ்ட்டுக்களாய் அவதாரம் எடுத்துள்ளனர் ஆதிவாசி மக்கள்! 7500 கோடிகளை 'ஆபரேஷன் க்ரீன் ஹண்ட்'டுக்காய் ஒதுக்கியுள்ளது இந்திய அரசு. பசுமையை வேட்டையாடவாம்!

இந்தச் சூழலை மனதில் நிறுத்தி தமிழக அரசியலை உற்று நோக்கினால் புரியும் காங்கிரஸ் தமிழகத்தில் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மர்மம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கப்பல் தரைதட்டிப் போய் ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாகின்றது. எப்படியெல்லாமோ வளைந்து நெளிந்து திராவிடக் கட்சிகளின் தோளின்மீதேறி சவாரி செய்தாலும் நசுங்கிய சொம்பு நசுங்கியது தானே!

திராவிடக் கட்சிகளின் ஆடம்பர அலங்கார மற்றும் சுயநல அரசியலை அலசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல!

தலைவலியாய்க் காஷ்மீர்! பக்கவாதமாய் மணிப்பூரும், நாகாலாந்தும்! பைபாஸ் சர்ஜரி செய்தால்  Deadh on Table(DOT) என்ற நிலையில் இதயநோயாய்த் தண்டகாரண்யம்!

தவிர்த்துப் பார்த்தால் சாதிகளுக்குள்ளும், அறியாமைக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கும் உத்திரப் பிரதேசம் முதலான இந்தி பெல்ட் மாகாணங்கள் அவற்றிலிருந்து வெளிவரவே இன்னும் அரைநூற்றாண்டுகாலம் பிடிக்கும்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆந்திரம் தேசிய நீரோட்டத்திற்குள் பத்திரமாகவே இருக்கின்றது. கர்நாடகம் பாரதிய ஜனதாவின் அகண்டபாரத அண்டாவுக்குள் தலையை நுழைத்துவிட்டது. கேரளமோ கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என இரண்டு 'தேசிய'க்கட்சிகள் மட்டுமே இசைநாற்காலி விளையாடும் இடமாகவே உள்ளது. எனவே இம்மூன்று மாகாணங்களிலும் 'தேசிய'கீதம் நன்றாகவே ஒலித்துக் கொண்டிருக்கின்றது

ஆனால் தமிழகம்?!

2008 துவங்கி இன்றுவரையில் ஓர் எரிமலை தமிழக மக்கள் மனதில் குமுறிக் கொண்டே இருக்கின்றது. தாம் வஞ்சிக்கப்பட்ட உணர்வு அவர்கள் உள்ளத்தில் நீறுபூத்த நெருப்பாய் இருக்கின்றது. வெறுமனே காசுக்கு ஓட்டு விற்பவர்கள் என்று மக்களை ஏளனப் படுத்திக் கொண்டிருக்கும் அறிவு விற்பன்னர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவில்லை. சர்க்கஸில் நடனமாடி வயிறு நிறைக்கும் நிலையில் இருந்தாலும் புலியும் சிங்கமும் காட்டை தம் நினைவில் இருந்து அழித்து விடுவதில்லை. எப்படி படித்த நடுத்தர வர்க்கம் அடிமைத் தனத்தை கசப்பாய் விழுங்கி ஜீரணிக்க சமரசப் படுத்திக் கொண்டுள்ளதோ அதேபோன்ற நிலையில்தான் ஓட்டு விற்றாவது தற்காலிகமாய் ஆசுவாசப் படுத்திக் கொள்கிறது அடித்தட்டு வர்க்கம்.

தென்னிந்தியாவின் மற்றப் பகுதிகளில் பத்திரமாய் இருக்கும் 'தேசியம்' தமிழ்நாட்டில் மட்டும் தன் இருப்பு எந்த நேரத்திலும் தரையோடு தேய்க்கப் படலாம் என்று உணர்ந்தே இருக்கின்றது.

ஏற்கனவே உள்ளுக்குள் புதைந்திருந்த கலகக்குரலை துயிலெழுப்பி விட்டுள்ளது ஈழத்தமிழரின் தீனக்குரல். இப்போது தும்பை விட்டால் பின் வாலைப் பிடிப்பது எவ்வளவு சாத்தியம் என்ற ஐயப்பாட்டில்தான் காங்கிரஸ் தனது மாயவலையை மெல்ல விரிக்கத் துவங்கியுள்ளது.

ராகுல் காந்திக்கு வார்டு காங்கிரஸில் துவங்கி வட்டார காங்கிரஸ் தொடர்ந்து தமிழகத்தில் என்ன நடக்கும் என்ற விவரம் துல்லியமாகத் தெரியும் என்கிறார் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா. இது எப்படி சாத்தியம்? ஒருவேளை மாநில உளவுத்துறையைக் கருணாநிதி கைமாற்றி விட்டாரோ?! இல்லை 'அம்மா'வின் சிபாரிசில் யாராவது கேரளத்து ஜோசியப் பணிக்கர் ராகுலின் மந்திராலோசனைச் சபையில் சேர்ந்துவிட்டாரோ?!

இது மிகத் தெளிவான நூல்பிசகாத ஒரு திட்டம். அங்குலம் அங்குலமாய் நகர்த்தப்படும் கோயில்தேர்போல மிக மெதுவாய் செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டால் இந்திய தேசியத்துக்கு வரும் ஆபத்தில் பாதி காணாமல் போய்விடும். எனவே தமிழகத்தில் ஆட்சி என்பது வெறுமனே காங்கிரஸின் கனவு மட்டுமல்ல. அது ஏகாதிபத்திய தேசியத்தை விதந்தோதுவோரும், தேசிய முதலாளிகளும் காணும் கனவின் தொடர்ச்சி.

அந்தத் தொடர்ச்சியின் வளர்ச்சிப்போக்கில் திராவிடக் கட்சிகளிடன் சரிக்குப் பாதியாய் சட்டசபை சீட்டுக்களை பேரம்பேசத் தொடங்கியிருக்கின்றது காங்கிரஸ். "நீ அரிசி கொண்டு வா.. நான் உமி கொண்டு வருகிறேன்... இருவரும் ஊதி ஊதித் தின்னலாம்" என்ற பழமொழி யாருக்காவது நினைவுக்கு வருகின்றதா?

சகுனிகள் ஜெயிக்கலாம்... தற்காலிகமாக! சாணக்கியன்கள் வெல்லலாம் தந்திரமாக! இருந்தும் என்றும் அணைந்துவிடாது... தாடிக் கிழவன் பற்றவைத்துப் போன தன்மான நெருப்பு!!!

பின்குறிப்பு: நீ என்ன இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரியா என்று நண்பர்கள் என்னைக் கேட்கலாம். நிச்சயம் அல்லன்! ஆனால் மக்களை ஒடுக்கித் தான், அவர்களின் பிணங்களின் மீதுதான் தேசியக் கொடி பறக்கவேண்டும் என்பதை என்னால் ஏற்க இயலாது. மணிப்பூரிலும் தண்டகாரண்யத்திலும் போராடிக் கொண்டிருப்போர் இந்தியாவை உடைக்க வேண்டும் என்றல்ல; தமது மானத்தோடு கூடிய வாழ்வுரிமையைத் தக்கவைத்து அல்லது மீளப்பெற்றுக் கொள்ளவே போராடிக் கொண்டிருக்கின்றனர்! தேசிய ஒருமைப்பாடு பற்றிய விவாதப் புள்ளியை மட்டுமே நான் இங்கு தொட்டுச் செல்கிறேன்; வரையறையை அல்ல! பயணம் தொடரலாம் புரிதல் இருந்தால்....

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மேன்ஷன்வாசியாய் இருப்பது....

சனி இரவு
குவார்ட்டரில் தெரியும்
முப்பதை நெருங்கும் தங்கை
முகம்

மறுநாள் ரத்னாகபே
டிபனிலும் மேட்னி ஷோவிலும்
மறைந்து போகும்

மாலை பீச்சின்
இருட்டுக்குள்
இருவது ரூவா கேப்பா...
சலித்து ஒதுக்கி விலகும்போது
"பாவம்! என்ன கஷ்டமோ!"

திங்கள் முதல் வெள்ளி வரை
தினம் ஒரு காட்சி
மேனேஜரின் வசவிலும்
டைப்பிஸ்டின் புன்னகையிலும்
மூன்றாம் இருக்கை கிளிவேஜிலும்...

பேருந்தில் உரசும்
புட்டங்களின் அருவருப்பு
பொதுக் கழிப்பறையில் வாந்தியாய்

'எனக்குன்னு ஒருத்தி
இனியா பொறக்கணும்'
மிச்சமிருக்கும் கனவுகள்
கரையானுக்குப் பாதி
கட்டிலுக்கு மீதி

நடு இரவில்
மண்டைக்குள் ஒலிக்கும்
"கரப்பழக்கம்... துரிதஸ்கலிதம்
மூணு மாசத்துல முழுக் குணம்"

திடுக்குன்னு எந்திரிச்சா
'சே!பவர்கட்'

அடப்போய்யா!
அனுபவிச்சா தெரியும்
மேன்ஷன்வாசியின்
அவஸ்தை.

புதன், 11 ஆகஸ்ட், 2010

கவிதைப்பார்வை-7 : என் முத்தங்கள் தீர்ந்துவிட்டன


மழையில்
ஜன்னல் குருவியைப் போல
என் உதட்டில் நிற்கிறது
ஒரு முத்தம்...
உன் கூட்டுக்குள் ஓடிவரும்
தூரத்தை நினைத்து!
                        - பழநிபாரதி


அவன் அவளைக் காதலிக்கத் துவங்கியது எப்போதென்று அவனுக்கே தெரியாது. அவளது பள்ளிச் சீருடையில் ஓர் அன்னம் கரையிறங்கி ஓடுவதைப் போன்ற சிறு ஓட்டத்தைப் பார்த்தபோதா? அவளது குறும்பு தாங்காமல் அவளது அப்பா குச்சிகொண்டு துரத்தியபோது " டேய் அப்பா! நீ என்னை அடிச்சினா தூங்குறப்போ அம்மிக்குழவிய தலையில போட்ருவேன்" என்று மிரட்டியதைப் பார்த்து அருந்திக் கொண்டிருந்த தேநீர் புரையேறச் சிரித்தபோதா? இல்லை, அவளது தாவணிச்சிறகால் மெல்ல உரசிக் கடந்து சென்றபோதா?

தெரியாது! காதல் தோன்றும் கணம் தெரிந்தால் மட்டும் போதும்; பாதிப்பேர் வரிசைகட்டிக் காத்திருப்பார்கள்! மீதிப்பேர் தலைதெறிக்க ஓடியிருப்பார்கள்! இல்லையா?

அவளும் அவனைக் காதலித்தாள்போலும்! இருவருக்கும் தயக்கம் எப்படிச் சொல்வது காதலை! ஏதாவது எக்குத்தப்பாய் போய்விட்டால்?

அன்று ஏதோ ஒரு திருநாள்! ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சிறுபரிசு கொடுத்துக் கடைசியாய் வெறுங்கையனாய்ச் சென்றான் அவளிடம் விடைபெற்றுச் செல்ல! பரிசு கொடுக்கும் அளவுக்கு அவள் நெருங்கியதில்லை அதுவரை! ஆனால் கேட்டாள் " எனக்கு ஒண்ணுமேயில்லையா?"

காதலின் வேகம் உந்தித் தள்ள உள்ளிருந்த வார்த்தைகளை ஒவ்வொன்றாய் உச்சரித்தான் அவன், காலையில் ஓதும் காயத்ரி மந்திரம்போல! " கையில ஒண்ணுமில்ல! வேணா ஒரு முத்தம் தரட்டுமா?"

காற்றடிக்கக் காத்திருந்த மரக்கிளையாய் வேகமாய் அசைந்தது அவள் தலை!

இழுத்து, இறுக்கி, கூந்தல் கோதி, இமைமூடி, இழைத்துச் செதுக்கிய கன்னம் வருடி, இதழ்மாற்றி, எச்சிலருந்தி ஏகாந்தித்துத் தங்கள் காதல் கூறிக்கொண்டார்கள் இருவரும்!

கதை இருக்கட்டும். விஷயத்துக்கு வருவோம்!

தொடுகை என்ற ஒன்றுதான் உயிரினங்களின் ஆகப்பெரும் சிறந்த மொழியாய் இருக்கின்றது. சோர்ந்து சுருங்கிப்போய் அமர்ந்திருக்கும்போது நம் தாயோ, நண்பனோ வந்து தோள்தொட்டுத்  தலை தடவும்போது அந்தத் தொடுகை நம் ரத்தத்தில் ஓர் உற்சாக  வெள்ளத்தை ஊற்றெடுக்க வைக்கின்றது அல்லவா?

தொடுகையின் உச்சமாய் எப்போதும் திகழும் முத்தம்! எரிந்து கொண்டிருக்கும் மின்சாரத்தை கொஞ்சமும் இழப்பில்லாமல் இடம் மாற்றும் மீக்கடத்திகள் (Super Conductors) எப்போதும் இதழ்கள்தாமே!

முத்தமிடல் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான்!

குழந்தையைக் கொஞ்சுகையில் முத்தமின்றி முடியுமா என்ன?

மதங்களில் கூட குருமார்களின் பாதங்களையும் அவர்களின் மோதிரங்களையும் முத்தமிடும் பழக்கம் பணிந்ததற்கு அறிகுறிதான்!

நவீன அறிவியல் நம்மை அதிகம் முத்தமிடச் சொல்கிறது. முத்தமிடும்போது நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் நம் ஆயுளை அதிகரிக்கின்றனவாம்! இளமையை நீட்டித்து இதயம் வலுவாக்குகின்றனவாம்!

இதழ்கள் கவ்விக் கொள்ளும்போது இமைகள் மூடிக் கொள்வதேன்? இது ஓர் இனிய ஆராய்ச்சி!

உள்ளுக்குள் புதைந்து இறையோடு ஒன்றிப் பேரின்பம் காணும் முயற்சியோ?!

இதழ்ச்சிறை உடைத்து நாவுகளின் நளின நடனத்தை மனக்கண்ணில் காட்சிப் படுத்தும்போது வரும் வெட்கமோ?!

புரிந்தவர் தொடரலாம் முத்த ஆராய்ச்சியை!

"கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ!"


என்று சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்கூட கண்ணனிடம் முத்த ஆராய்ச்சி செய்ய ஏங்குகிறாள்!

இதயங்களின் அன்புச்சுரப்பு உதாசீனப் படுத்தப்படும் போதும், பிரியத்துக்குரியோர் நம் மனம் விட்டு நீங்கிச் செல்லும் போதும் கசக்கத் துவங்கும் முத்தங்கள்.

பரிமாறப் படாத விருந்து, சமைத்தவரின் உள்ளத்தை எப்போதுமே கொஞ்சம் கீறிப் பார்க்கின்றதல்லவா?

நேசிக்கும் ஜீவன்கள் இல்லாதபோது இதழ்களை இறுக்க மூடி முத்தக் கடைக்குப் பூட்டுப் போடுகிறது " ஆண்டாள் பிரியதர்ஷினி"யின் கவிதைக் கதாபாத்திரம்!

என் முத்தங்கள் தீர்ந்துவிட்டன

எத்தனையோ முயலுகிறேன்
நானும், இருப்பு வைக்கவென.

உச்சமாய் லயித்துக் கிறங்கித்
ததும்பும் பிரேமையில்
விநியோகிக்கவென வைத்திருந்தேன்
முத்தக்கடை ஒன்று.

போகத்துக்கும் மோகத்துக்கும்
சோகத்துக்கும் தாய்மைக்கும் எனக்
கைவசமிருந்தன
விதவிதமான் முத்தங்கள்.
நேரிலும் தொலைபேசியிலுமான
ஆர்டர்களுக்கும்
நடந்தது விநியோகம்.

சத்தமாக சத்தமின்றி
உடனடியாக எப்போதாவது
அவசரத்துக்கு நிதானமாகவெனப்
பல்வேறு வகைகளும்
தீரும்முன்பே நிரப்பப்பட்ட
நம்பகமான கடை அது.

திடீரென விலையும் தேவையும்
ஏறும் இறங்கும் என்றாலும்
கையிருப்பு குறைந்ததில்லை.

எல்லாமே இன்று
பூசணம் பிடித்துவிட்டன
கரப்பான் தின்றும்
எலி கரம்பியும் வெம்பியும்.

கமறலும் குமுறலுமான
இப்போதைய விடியலில்
முத்தக்கடையின் கதவு
திறக்க முயலுகையில்தான்
உணர்கிறேன்
என்றைக்குமே இருப்பு இனி
நிறைக்க முடியாதென.
நிரந்தரம்
இந்த அறிவிப்பு
அட்டைதான்.
'என் முத்தங்கள்
தீர்ந்துவிட்டன'.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

கடவுளும் நானும்....



"நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதுமென் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,
கோகழி ஆண்ட குறுமனிதன் தாள் வாழ்க,
வாழ்க நமச்சிவாய எனும் நாமம் வாழ்கவே!"

எங்கோ கொஞ்சம் தொலைவிலிருந்து தேவாரப் பண்ணிசையும் அதைத்தொடர்ந்த காண்டாமணியோசையும் என் செவிகளை நிறைத்துக் கொண்டிருக்கின்றன. ஏதோ ஓர் உணர்வில் நெஞ்சம் ஒரு பனிக்கட்டியாய் உருகிக் கொண்டிருக்கின்றது.

இறை என்பது மனிதர்க்கு எவ்வளவு பெரிய பற்றுகோல்! சுற்றிலும் இருக்கும் மனிதர்கள் மனம் மட்டும் தூரமாய்ப் போயிருக்க, வாழ்வின் பிடிப்பிழந்து காற்றிலாடும் பறவையின் உதிர்ந்துபோன ஒற்றைச் சிறகாய்த் திசைகளை இழந்து அலைபாய்ந்து கொண்டிருக்கும் ஜீவன்களுக்கு இறை என்பதே இறுதிப் புகலிடமாய் இருக்கின்றது என்பதை யாரால் மறுக்கவியலும்?!

"வானத்துப் பறவைகளைப் பாருங்கள்! அவை விதைப்பதுமில்லை! அறுவடை செய்வதுமில்லை" என்று ஏசுபிரானும்

"சும்மா இருக்கும் சுகம் ஒன்று அறியேன் பராபரமே" என்று தாயுமானவரும்

"செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
"சும்மா இரு! சொல்லற!" என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே!"

என்று அருணகிரியாரும் உரைக்கும் 'சும்மா இருக்கும் சுகம்' வாய்த்தால் ஒருவேளை இறை என்பது தேவையற்றுப் போகுமோ?!

இறைத் தேடல் என்பதை நோக்கி எண்ணற்ற வழிகளில் பயணப்பட்டது மானுடம். ஆம்! அது ஒரு காட்டாறு போல! பல்வேறு கிளைகளாய்ப் பல்கிப் பெருகி வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு திசைகளில் பயணப்பட்டு இறுதியில் இறை என்ற சமுத்திரத்தின் தரிசனம் காணத்துடித்தது!

இறைத்தேடல் உலகின் தத்துவமரபை இருபெருங்கூறுகளாகப் பிரித்தது. மேற்கத்திய சிந்தனை மரபு என்றும், கீழைத்தேய சிந்தனை மரபு என்றும் பிரிந்தபின் அவற்றிலிருந்து கிளைத்தன எத்தனையோ கிளைநதிகள்!

தத்துவத்தேடல் தன் போக்கில் கிழக்கு, மேற்கு என்கிற ஆடைகளைந்து கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்ற புத்தாடை புனைந்துகொண்டது.

"இறையால் ஆனது எல்லாம்!" என்றது கருத்துமுதல்வாதம்!

"பரப்பிரம்மம் ஒன்றில்லை! பருப்பொருளே பிரபஞ்சம்!" என்ற திசையில் செழித்துவந்த பொருண்முதல்வாதம் தன் பயணத்தின் ஒரு பாய்ச்சலாய் வந்தடைந்தது இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற சிந்தனைப் புரட்சிக்கு!

ஆம்! மார்க்ஸ் என்ற மகத்தான மானுடனின் சிந்தனைக்குள் விழுந்து விருட்சமாய் வெளிவந்த இயக்கவியல் பொருள்முதல்வாதம் பொதுவுடைமைப் பூபாளம் பாடியது. அதில் உறக்கம் கலைந்தெழுந்த உலகப் பாட்டாளிவர்க்கத்தின் கரங்களால் புரட்டிப் போடப்பட்ட பூமிப் பந்தின் வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் பொலிகிறது இந்த வாசகம்:

"பூமிக்குள்தான் சுவர்க்கம் இருக்கிறது! பொன்னான வாழ்க்கை இருக்கிறது! மானுடத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வும், மானுடத்தின் சுகவாழ்வும், இல்லாத இறையின்கண் இல்லை தோழர்களே! சாவியை இருட்டுக்குள் தொலைத்துவிட்டு வெளிச்சம் இருக்குமிடத்தில் தேடும் முல்லாவின் வாரிசாய் இருக்காதீர்! சமூகத்தின் இயக்கத்திலும், இயக்கவியல் விதிகளுக்குள்ளும் இருக்கும் புதிர்களை விடுவித்தால் இறை என்ற கருத்தாக்கம் இறந்துபோகும்!"

"தேநீர் வழிந்து கொண்டிருக்கிறது! கோப்பையைக் காலி செய்!" என்ற ஜென்னின் வாசகத்துக்குப் புதிய பொருளைப் புரிந்துகொண்டு இறை இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு விடையாய் நானும் தற்போது NCBH ஆல் வெளியிடப் பட்ட பழைய சோவியத் நூலான " இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?" என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

என் இறை கூடிய சீக்கிரம் இறந்துபோகும் என்றே தற்போது நம்புகிறேன்.

எனவே கொஞ்சகாலம் கழித்து இந்தப் பதிவின் இரண்டாம் பாகத்தை எழுதவேண்டும் என்ற அவாவுடன், என்னை இந்தத் தொடர்பதிவுக்கழைத்த இனிய நண்பர் சௌந்தருக்கு நன்றிகூறி தற்காலிகமாக விலகிச் செல்கிறேன்.



         

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

மன்மோகன் போற்றித் துதி



அணுசக்தி ஒப்பந்தத்தின் அய்யா போற்றி!
ஆண்டனியோ தாள் பணியும் அழகே போற்றி!
இந்தியா விற்க வந்த இறையே போற்றி!
ஈழம் எரித்த ஈசா போற்றி!

இங்கிலாந்து, அமெரிக்க எடுபிடியே போற்றி!
எண்ணை விலையை ஏற்றினாய் போற்றி!
ஈரானின் எரிவாயு என்னாச்சு போற்றி!
எத்தனில் ஜித்தனாய்த் திகழ்ந்தாய் போற்றி!

சீக்கியத் தலைப்பாகைக்காய் சீறினாய் போற்றி!
பிரெஞ்சு அரசுமுழி பிதுக்கினாய் போற்றி!
தமிழன் தாலியென்ன தகரமா போற்றி!
தமிழச்சி கற்பென்ன கடைச்சரக்கா போற்றி!

'சிதம்பர'ச் சேர்க்கையில் திளைத்தாய் போற்றி!
செழிப்பான அம்பானிதோள் சேர்ந்தாய் போற்றி!
பருத்தி விவசாயி பாவமே போற்றி!
பல்லாக்குத் தூக்கிடு எம்.என்.சிக்கு போற்றி!

ஏமாந்த இந்தியனுக்கு இரையென்ன போற்றி!
நூறுநாள் வேலைப் புழுபோதும் போற்றி!
நடுத்தரக் குடிகளுக்கு நமைச்சலாம் போற்றி!
காஷ்மீரப் புகையில் தேசபக்தத் தீபம் போற்றி!

'வேதாந்தா' விளையாட இடம்வேணும் போற்றி!
தண்டகாரண்யம் அழித்துத் தருவாய் போற்றி!
பழங்குடி வாழத் தேவையா போற்றி!
பணக்காரன் வாழ்வதுபின் எப்படி போற்றி!

பெட்ரோலில் விலைவைத்துப் பிடுங்கினாய் போற்றி!
பேராயுதம் இலங்கைக்குக் கொடுத்தாய் போற்றி!
பிறந்தபிள்ளை தலைச்சுமையில் கடன்வைத்தாய் போற்றி!
ஸ்விஸ்பேங்க் கணக்குகேட்க மறுத்ததேன் போற்றி!

குவாத்ரோச்சி குடும்பம்காத்த குலவிளக்கே போற்றி!
கும்பலாய் மக்கள்கும்பி காய்வதேன் போற்றி!
காமன்வெல்த் போட்டிகளில் கலக்குவாய் போற்றி!
காலித்திடலாய் மக்கள்வயிறு இருக்குதே போற்றி!

மாவோயிஸ்ட் மயக்கத்தில் கலங்காதே போற்றி!
சிங்களவன் பயிற்சி சிறக்குமே போற்றி!
சிதம்பரம் துணையிருக்கப் பயமேன் போற்றி!
சீராளா! கோமகனே!! உன்னடி போற்றி போற்றி!!!

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

கவிதைப் பார்வை-6 : வெறுமையைப் பரிசளிப்பவன்


தன்னுடைய 'அரசியல்' என்ற புத்தகத்தில் அரிஸ்டாட்டில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

"Hence it is evident that the state is a creation of nature and that man by nature is a political animal."

மனிதன் எப்போதும் ஒரு சமூகவிலங்காகவே தன் இருப்பை உறுதி செய்கிறான். சமூகத்தின் ஏனைய உறுப்புகளில் இருந்து அவன் என்ன பெறுகிறான்; அவன் என்ன திருப்பித் தருகிறான் என்பதில் இருந்தே அவனது இருப்பு அர்த்தமுள்ளதாகிறது. மேலும் வரலாற்றின் பக்கங்களில் அவனது வாழ்வும் இந்தக் கொடுக்கல் வாங்கல்களாலேயே பதிவு செய்யப் படுகிறது.

நாம் ஒவ்வொரு வகையிலும் சுற்றியிருப்போரை இறைஞ்சிக் கொண்டே இருக்கிறோம்; அவர்களது அன்பை, நமக்கான அங்கீகாரத்தை, காதலை, மெல்லிய அழுத்தத்தில் ஆறுதல் தரும் விரல்களை... என நம் ஏக்கங்களின் பட்டியல் மிக நீளமானது இல்லையா?

என்னைப்பார்! என் அழுகையை, ஆனந்தத்தை,வெற்றிக்களிப்பை, வெறுமையின் துயரத்தைப் பார்! என ஒவ்வோர்  உயிரும் புலம்பிக் கொண்டே இருக்கின்றது.... பல சமயங்களில் மௌனமாகவே!

நம் இலக்கியங்களின் ஊடுபொருளாய் உறைந்திருப்பது எல்லாமே இந்த இறைஞ்சுதலாகவே இருப்பதாக எண்ணுகிறேன் நான்.

என் கவிதையொன்றில் இதைத்தான் நான் வடிக்க முயன்றேன்....

"உற்றுக் கேட்கிறேன்
யாரோ யாரையோ அழைக்கிறார்கள்
மௌனமாக...
ஆனால்
பலமாக...
யாரும் யாரையும்
கவனிக்கவில்லை
அவரவர் கவனம்
அவரவர் அழைப்பில்...
அவரவர் அழுகையில்...
இருந்தும் யாரோ யாரையோ
அழைத்துக்கொண்டே
இருக்கிறார்கள்"


பெறுவதும், தருவதுமாய் இருக்கும் உறவுகளில் காதல் எப்போதுமே தன் தனித்துவத்தை நிறுவிக்கொண்டே இருக்கிறது.

காதலின் கணங்கள் நம் வாழ்வில் கடக்கும் தருணங்கள்....

அவனுக்குள்ளிருக்கும் பெண்ணை அவளும், அவளுக்குள்ளிருக்கும் ஆணை அவளும் பரிமாறிக்கொள்ளும் அற்புதப்பொழுதுகள்...

புதையலைப்போல நம்முள் புதைந்திருக்கும் காதல் தோண்டியெடுக்கப்படும் காலத்திற்காய் காத்திருக்கும் கணங்கள்...

காதல்கொடி ஒரு சிறு தளிராய் நம்மீது படரத்துவங்கினாலும் மின்னற்பொழுதில் அது நம்மை முழுதாய் மூடிக்கொள்கிறது. நம்மைப் புசித்து நமக்கே பசியாற்றுகிறது!

"எப்போதும்போல
பத்து விரல்கள்தான்
ஆனால் எப்போது
என் வலது கையும்
உன் இடது கையும்"
( பூமா.ஈஸ்வரமூர்த்தி)

பத்து விரல்களால் பயணக்கட்டுரை வடிக்கும் காதலில் ஐந்து விரல்கள் அறுபட்டுப்போனால் எஞ்சுவது வெறுமை மட்டுமே!

காதலை இழந்தவனது கனவுகளில் இருள்கூட இல்லாத சூன்யத்தை எப்படி விளக்கலாம்?

பாலருந்தும் குழந்தையை இழந்து, முலைப்பால் கட்டி வலியில் துடிக்கும் தாயின் வேதனையைப் பார்த்திருக்கிறீர்களா?

இழந்துபோய் இருப்பவனிடம் இந்த உலகம் எதைப் பெற முடியும்? எதை வேண்டிக்கேட்க முடியும்? இந்தக் கவிதையைத் தவிர?!


( கவிதையைப் பரிசளித்தவர் செந்தூரம் ஜெகதீஷ் )

இருப்பதைக் கேட்டால்...

இருப்பதைக் கேட்டால்
அதில் ஒரு சிறு பகுதியைப் பகிரலாம்
இருப்பதோ கனவுகள்
கண்களிலிருந்து அதை
கடத்துவது எப்படி?

இன்னும் உள்ளன
சில ஆறாத ரணங்கள்
மறவாத நினைவுகள்
சில துளிகளாவது கண்ணீர்
அதிலிருந்து உனக்கு என்ன கிடைக்கும்?

வானவில்லின் ஒரு நிறம்
மலரின் ஒரு மென் இதழ்
அதன் நறுமணத்தின் சிறுநுகர்வு
காற்றின் ஒரு அசைவு
நதியின் சிறு சுழல்
மலையின் மௌனங்களில்
எப்போதோ கேட்கும்
ஓர் எதிரொலி
தனிமையின் தவிப்பில்
எழுதிய கவிதையின் வரி
இழந்த காதலின் ஒரு கணம்
இவைதான் என்னிடமிருப்பவை
அதிலிருந்து உன்னுடைய உலகை வர்ணம்
தீட்டவோ
அதை மணக்கச் செய்யவோ
தென்றலில் ஊஞ்சலாட வைக்கவோ
புதுவெள்ளப் பெருக்காக்கவோ
உன் கேள்விக்கெல்லாம்
பதிலுரைக்கவோ
இயலாது என்னால்.

தரலாம்
என் துயரங்களை
உருகவும் நெகிழவும் நீ தயார் எனில்.

சனி, 7 ஆகஸ்ட், 2010

கவிதைப்பார்வை-5 : பால்யம்

குழந்தைகளின் உலகம் ஒரு மாயக்கோட்டைக்குள் இருக்கின்றது. அதனைச் சுற்றி ஏழுமலைகளும், ஏழு கடல்களும் இருக்கின்றன. அதனைக் காவல்காக்கும் பூதமானது எப்போதும் குழந்தைகளின் கண்ணை மட்டும் குத்தாது! அங்கு இயற்பியல், உயிரியல் விதிகளுக்கும், மனதில் லௌகீகத்தின் சாயல் அழுந்தப்படிந்த பெரியவர்களுக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

உங்களுக்கு ஞாபகமிருக்கின்றதா.... நீங்கள் எப்போது அந்த உலகத்தில் இருந்து தூக்கி வீசப் பட்டீர்களென்று?!

தாத்தாக்களை உங்களுக்கு நினைவிருக்கின்றதா.... வெட்ட வெட்டத் தலைமுளைக்கும் அசுரனையும், தலைக்குமேல் ரத்தினங்களை வைத்துக்கொண்டு பறந்து திரியும் பாம்புகளையும், அண்டபேரண்டப் பட்சிகளையும், கிளிக்குள் உயிர்புதைத்துத் திரிந்த மந்திரவாதிகளையும் உங்களோடு ஸ்னேகிதப்படுத்திய தாத்தாக்கள் இன்று எங்கே போய்விட்டார்கள்?

கனவுகள் மேகங்களென மிதந்து மிதந்து நிழல்தரும் உலகினில் உறவாட வேண்டிய குழந்தைகளை இன்று வார்ப்பச்சுகளினூடே வழிந்தோடும் உலோகக் குழம்பென இறுக்கமாய் மாற்றிவிட்டதன் குற்றவுணர்வை என்றேனும் உணர்ந்திருக்கிறீர்களா?

அவர்களின் சிறகுகளை மழுங்கச் சிரைத்து அதனிடத்தில் புத்தகப்பைகளைப் பொருத்திய குற்றத்தின் வீரியத்தை எண்ணி ஏங்கியிருக்கிறீர்களா என்றேனும்?

முதலீட்டியத்தின் கொடுங்கரங்களுக்கு நம்மை ஒப்புக் கொடுத்தது போதாதென்று அதன் நுகத்தடிகளுக்குள் நுழைந்துகொள்ளும் பயிற்சியாய் குழந்தைகளின் முதுகை புத்தகப்பைகளால் கூன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்!

"அவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்.. பிதாவே! அவர்களை மன்னியும்!" என்ற இறைமைந்தனின் வார்த்தைகளுக்கு நாம் தகுதியானவர்கள்தானா?

"வாருங்கள் தோழர்களே! அரங்கத்திலேயே புணரும் அங்க அசைவு நடனங்களில் இருந்தும், இந்திரிய வாசனை வழியும் திரையிசை வரிகளிலிருந்தும் குழந்தைகளை விடுவித்து, கதைகள் மிதக்கும் காட்டையும், விட்டு விடுதலையாகிப் பறப்பதற்கான சிறகுகளையும் குழந்தைகளுக்குத் திருப்பித் தருவோம்"

என்று இந்தக் கவிதையில் வாணியம்பாடி குலசேகரன் உங்கள் காதுக்குள் மெல்ல இறைஞ்சும் தொனி உங்களுக்குப் புரிகிறதா?

காடு

சிறுவனுக்கு காட்டின் கதையை
தந்தை சொல்ல ஆரம்பித்தான்
ஒரு காடு இருந்தது
அது மிகவும் பெரிதானது
காட்டிற்குள் சிறுவன் ஓடினான்
பாறைகளும் செடிகொடிகளும் அடர்ந்திருந்தன
அவற்றைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான்
அவனைப்பிடிக்க தந்தையும் சென்றான்
குன்று ஒன்று எதிர்ப்பட்டது
சிறுவன் ஒரே தாவில் மறுபுறம் குதித்தான்
பின்னாலேயே தந்தையும் வந்ததால்
கையைப் பிடித்து தாண்ட வைத்தான்
தந்தையால் நம்பவே முடியவில்லை
ஒரு நதி குறுக்கிட்டது
மகனும் தந்தையும் நிற்காமல்
நீரின்மேல் நடந்து கடந்தார்கள்
சிறுவன் வேகமாக மரங்களின் மீது
பறந்து கொண்டிருந்தான் தொடரும் தந்தை
கடைசியாக குகையை அடைந்தார்கள்
அங்கு ஒரு புலி காத்துக் கொண்டிருந்தது
சிறுவன் அதனுடைய வரிகளை
இழுத்து விளையாடத் தொடங்கினான்
தந்தை பயந்தபடி
குகைக்கு வெளியிலேயே அமர்ந்து
தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்
மகன் தூக்கத்திலேயே உம் கொட்டிக் கொண்டிருந்தான்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

பாரத் மாதா கீ ஜே!

தண்டகாரண்யப் பாஞ்சாலிகளைத்
துகிலுரியும் பாண்டவர்கள்
சிங்கு, சிதம்பரம்,
எம்.என்.சி, சல்வாஜூடும்,
ரிசர்வு போலீசு

சிங்குக்கும் ஒபாமாவுக்கும்
கள்ளக்காதலாம்
அவமான சாட்சியாய்
அணு ஒப்பந்தக் குழந்தை

மைனா அம்மாவுக்கு
கவுதாரிக்கறி பிரியமாம்
காஷ்மீரும் ஈழமும்
தோதான இடம்

அம்பானி குடும்பத்துல
அடிபுடி தகறாறு
அய்யோ பாவங்குது
ஆங்கிலப் பத்திரிகை

அரிசில புழு இருக்கா
புழுவுக்குள்ள அரிசி இருக்கா
ஆராய்ச்சி பண்றான்
அழுக்கு கோமணத்தோட

இரண்டாயிரத்தி இருவதுல
இந்தியா வல்லரசாம்
எழுதி மாயுறாரு
கலாம் அய்யரு

இருந்துட்டு போவட்டும்
இருக்கவே இருக்கு
கிரிக்கெட்டு, கிசுகிசு,
அரையாடை நடிகை
அறைக்குள்ள புளூபிலிம்

எதுக்கும் சொல்லிவைப்போம்
"பாரத் மாதா கீ ஜே!"

இல்லன்னா பாயுமாம்
தேசிய பாதுகாப்பு(!) சட்டம்

புதன், 4 ஆகஸ்ட், 2010

கவிதைப்பார்வை-4: தீராக்காமம் (18+)

மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார். (குறள் :1289)


மலரைவிட மென்மையானதா காமம்?! அட...! ஆனால் ஏன் அது பலபொழுதுகளிலும் மின்னும் வைர ஊசி போலக் கூர்மையாய் இருக்கிறது.....? குத்திக்கிழிக்கப் படுவது மனங்களும் உறவுகளுமாய் இருக்கின்றனவே!

இல்லை... மெய்யாகவே காமம் மலரைவிட மெல்லியதுதான்..... அது முகிழ்க்கும் மனக்குளங்கள் சாக்கடையால் நிரம்பாதிருக்கும்போதும்..... நேருக்குநேர் வாள்கொண்டு மோதும் 'நீயா.. நானா?' போட்டியாக மாறாதிருக்கும்போதும்...... இமயமல்ல தாம் ஏறப்போவது; சின்னஞ்சிறு இதயம்... எனவே நுழைதலில் நுணுக்கம் தேவை என்ற புரிதலால் புலன்கள் விழிக்கும்போதும்...

உலகம் காமத்தால்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று நிறுவுகிறார் ஃப்ராய்டு.

தவறான திசையில் செலுத்தப்படும் அம்புபோல, கரைகடந்து நிலமழித்துப்போடும் புயல்போல காமம் கட்டற்றுப் பாய்வதினால்தான் பூவுலகு போருலகாகிறது. மறுபக்கம் மதங்களின் மயக்கத்தில் காமம் என்பது களைந்தெறியப்படவேண்டிய கந்தல்துணி என்ற கருத்தாக்கத்தில் சிறையில் பூட்டப் படும் காமம் சமூகம் மீறி, மானுடத்தின் மகத்தான அறமான பரஸ்பர நம்பிக்கைமீறி எரிமலையாய் வெடித்துச் சிதறுகின்றது.

"கற்பெனப்படுவது சொல்திறம்பாமை"- என்கிறாள் அவ்வை!

காமம் காதலோடு சாத்தியப்படும்போதுதான் அது தன் எண்ணற்ற வாசல்களைத் திறந்து வைக்கிறது. அல்லாமல் வெறுமனே உறுப்புக்குள் உறுப்பு நுழைத்து, உடலுக்குள் உடல்புதைத்து இயங்கிக் களைப்பது கழிப்பறைக்குள் சென்றுவருவதைப் போலத்தான்! அது காமம் துய்த்தல் அல்ல;காமம் கழித்தல்.

காமக்கிணற்றில் காதலமுது சுரக்கும்போதுதான் அது தாகம் தணிப்பதோடன்றி நம் விரல்பிடித்து சில விசித்திர உலகங்களுக்குள் அழைத்துப்போகிறது.

காமக்கலையினை கவிதையொழுக்கில் இசைத்துச்செல்கிறது வாத்ஸாயனம்:

இதழ்பொருத்தி, எச்சில் மாற்றி, கன்னமும், கழுத்தும், கழுத்துமுடிகளும், அக்குளும், அமுதகலசங்களும், உட்குழிந்த தொப்புளும், உட்புறத்தொடைகளும் ஏங்க ஏங்க முத்தமிட்டு, அல்குல் வாசம் பிடித்து, அங்கங்கள் மீதமின்றித்தழுவி, அரவங்களைப்போலப் பிண்ணிப்பிணைந்துப் புணரச் சொல்கிறார் வாத்ஸாயனர்.

அங்கங்கள் குழைய, அதரங்கள் துடிக்க, இமைகள் இழுத்துக் கிறங்க, நாசிகள் அனல்காற்றை வெளித்தள்ள புணர்தலின் நிலைகளை காட்சிப் படுத்துகிறார் மேலும் அவர்.

காமந்தீர்த்தல் என்பது வெறும் கடமையாகச் செய்யப் படும்போதும், துணையின் உணர்வுகள் துச்சமாக எண்ணப்படும்போதும், ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அங்கு கட்டுமீறுதலுக்கான விதையொன்று முளைவிடத்துவங்குகின்றது.

"வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?"


என்று கேள்வியெழுப்புகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

ஆயினும் இன்னும் இருக்கிறார்கள் இன்னொரு வகையினர்! காமத்தை வெறும் உறுப்புக்களின் இணைதலாகவும், விதவிதமான உணவுகளும் உடல்களின் சங்கமிப்பும் ஒன்றுதான் என்றும் கருதுவோரில் ஆணும் உண்டு; சில பெண்டிரும் உண்டு. அவர்களுக்கு உணவு மட்டுமல்ல; உடல்களும் வெவ்வேறு வகையினதாய் இருக்க வேண்டும்.

இம்மாதிரியானவர்களின் புணர்ச்சியில் உயிரும் இருக்காது; உள்ளத்திலிருந்து கசியும் அன்பின் ஈரமும் இருக்காது

உளவியல் இவர்களை மனநோய்க்கூறு கொண்டோர் எனக்கூறி ஆணின் நோய்க்கூறை satyriasis என்றும், பெண்ணின் நோய்க்கூறை nymphomania என்றும் வகைப்படுத்துகின்றது.

ஆனால் தன்னுச்சம் மட்டுமெண்ணி துணையுச்சம் துச்சமாக்கித் துயிலும் கணவனைப் பார்த்து ஒரு அபாக்கியவதி விடும் ஏக்கப்பெருமூச்சின் மிச்சத்தைக் கவிதையாக்குகிறார் "இன்றைய காட்சி" என்ற தலைப்பில் உமா மகேஸ்வரி:

"நிராசைகள் கொப்பளிக்கும்
நம் படுக்கையில் நிகழ்த்துவோம் இன்றும்
திரைநியமங்கள் விலகாத,
எண்ணிக்கையுள் வராத இன்றைய காட்சியை;
நீயே நிர்மாணித்த சுலபப்பாதையை
நிறுவிக் கொள்கிறாய் நீயாகவே;
இறுதி நிறுத்தத்தை வெற்றிப்புள்ளியென்று.
அணுசரணைகள், பூசிமெழுகல்கள்
சம்பிரதாயங்கள், சமரசங்கள்
மூடிய புதைகுழிகளினூடாக
அடைய முடியாது நாம் என்றைக்குமே
ஆதிக்காதலின் பாதாள வனத்தை;
புதர்கள் தாண்டிப் பூத்த அந்த
ஒரே ஒரு உச்சி மலரை;
செய்வதொன்றுமில்லை இனி.
திரும்பிய முதுகோடு உன் ஒரே நொடி உறக்கம்;
சில்லிடும் தரை; ஒண்டிய சுவர்;
சுருண்ட பூனையாக என் உளைச்சல்கள்"
Related Posts with Thumbnails