வெள்ளி, 31 டிசம்பர், 2010

கவி

அழகான கவிதை
ஒன்றெழுத விரும்பினேன்
கவிதை எழுத எனக்கு
அமைதியும் தனிமையும் வேண்டும்
கதவுகளையும் சன்னல்களையும்
சாத்தியாயிற்று
வேறென்ன..ம்ம்ம்...
கவிமனம் வேண்டும்
தளவாடங்களைச் சேகரிக்கத் துவங்கினேன்
சன்னமாய்க் கசியும் மெல்லிசை
வழவழப்பும் புதுமணமும் நிறைந்த‌
வெள்ளைக்காகிதங்கள்
மென்மையாய் வழுக்கிச் செல்லும்
பந்துமுனைப்பேனா
ஆ...அதென்ன...
கோப்பையில் ததும்பும்
மதுவின் விளிம்பில் மிதக்கும்
ஐஸ்கட்டிகள்
அவள் கருவிழிகளைப் போலவே...
மற...எழுது...
மதுபோதைக்கு ஊறுகாயும்
மனபோதைக்கு கைதட்டல்களும்
எதிர்பார்ப்பில்...
ஒருவழியாய்...
பிரசவத்தில்
செத்துப் பிறந்தது கவிதை...
பின்னொருநாள் புரிந்தது
மனத் தெறிப்பின்
மின்னல்களில்
உணர்வொழுக்கின்
சிதறல்களில்
ஒளிந்திருப்பதே கவிதை
என்று...

சனி, 25 டிசம்பர், 2010

காற்றைக்குடிக்கும் தாவரமாகிக் காலம் கழிப்போமோ...?

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்
            - தமிழ்விடுதூது
முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் பேற்றியனாய் பேறு பெற்ற தமிழினத்தின் சிறுதுளியாய் காலக்கடலில் மிதந்துவந்த நான் பதிவுலகம் என்ற மெய்நிகர் உலகின் சிற்றுறுப்பாய் உலவத் துவங்கி ஓராண்டும் ஒரு திங்களும் முடிந்த தருணத்தில் எனது நூறாவது பதிவை எழுதத் துவங்கி இருக்கிறேன். மனம் ததும்பிக் கொண்டிருக்கின்றது! மறுபுறம் விசித்துக்கொண்டும்...

ஏனோ சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், நெகிழ்ந்துகொள்ளவும்...

2008 ஆம் ஆண்டின் ஜூன் மாதவாக்கில்தான் நான் தமிழ் வலைப்பக்கங்களைத் தேடிப்படிக்கத் தொடங்கினேன்... ஈழம் தொடர்பான செய்திகளைத் தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கு இலத்தினரியல் ஊடகங்கள் வரப்பிரசாதமாக இருந்தன. தமிழ் இணையப்பக்கங்களின் தொடர்ச்சியாய் வலைப்பூக்களும் அறிமுகமாயின. வலைப்பூக்களில் எனக்கு முதல் அறிமுகம் கேபிள்சங்கருடையதும், யுவகிருஷ்ணாவினுடையதும்... பிறிதொருநாள் பெரியார் பற்றித் தேடிக்கொண்டிருந்தபோது கூகிளில் 'ராமசாமி' என்று உள்ளிட்டுத் தேடிக் கொண்டிருந்தபோது வந்து விழுந்தவற்றுள் 'ராமசாமி அத்தியாய'மும் ஒன்று. "என்னடா இது? வித்தியாசமான தலைப்பாக இருக்கின்றதே என்று போய்ப்பார்த்தேன். அதனைப் படித்தபோது என் கிராமத்துப் பெரிசு ஒன்று வேப்பமரநிழலில் உட்கார்ந்து ஆற அமர வாழ்வை அசைபோட்டு நிதானமாகக் கதைசொல்லிக் கேட்பதுபோன்ற உணர்வு உண்டானது. ஏனோ மனதுக்கு நெருக்கமாய் உணர்ந்தேன். யார் இவர் எனப் பார்த்தபோது கேஆர்பி செந்தில் என்றிருந்தது. இடம் தி.நகராம்! "அட! நம்ம ஏரியா!" என்றெண்ணியபடி ஒரு மெயிலைத் தட்டினேன்.

வாழ்க்கையில் சில உறவுகள் பூக்கின்ற விநாடிகள் அவை நிகழும்போது மிகவும் இயல்பாக, எதேச்சையாக எந்த தனித்தன்மையையும் வெளிக்காட்டாமல் நிகழும். அவை தனக்குள் வாழ்வின் புதிய சில கதவுகளை, பாதையின் திறப்புகளைத் தாங்கியபடி ஆலமர விதையினைப் போன்று சாதாரணமாக நம்மைக் கடந்துசெல்லும். முதன்முதலில் நான் அவரிடம் "நான் உங்களை அண்ணான்னு கூப்பிடலாமா?" என்று கேட்டபோது அஸ்வினிதேவர்கள் ததாஸ்து என்று சொல்லியது எனது காதுகளில் விழவில்லை...

அந்த நேரத்தில் நவம்பர் மாதத்தில்தான் நான் எனது வலைப்பூவைத் தொடங்கி இருந்தேன். நானும் வலைப்பதிவன் என்று தெரிந்தபின் நெருக்கம் கூடுதலானது. பின் எனது வலைப்பூவுக்கு மிகப்பெரிய க்ரியா ஊக்கி அவர்தான்.

அடுத்தடுத்து கேபிள்சங்கர், மணிஜி, வினவு தோழர்கள், அப்துல்லா அண்ணன், ஜோதிஜி, தேவா, நேசமித்திரன், ரதியக்கா, வழக்கறிஞர் சாமித்துரை, குழலி, பாலபாரதி என்று நட்புக்கள் மொட்டுவிரிய மெல்லமெல்ல மணம்பரப்பத் தொடங்கியது என் வலைப்பூ. ஆரம்பகாலத்தில் என்ன எழுதுவது என்று தெரியாமல் கிறுக்கிக் கொண்டிருந்த நான் கொஞ்சங்கொஞ்சமாக எனது வலைப்பூவுக்கென ஒரு வடிவத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். இமையோரம் துளிர்க்கும் ஈரம் என் இந்த நண்பர்களுக்காக...

என்றாவது ஒருநாள் என எழுதிக் கொண்டிருந்த என்னை எதிர்மறையில் தூண்டி அநேகமாக தினம் ஒரு பதிவு எழுதும் வீரியத்தை எனக்குத் தந்து பிரிந்த என் கண்மணிக்கும்...

இலக்கேதும் இன்றி இந்தப் பதிவுலகத்துக்கு வந்தேன். இப்போது எனக்கென சில நோக்கங்களை மையப்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது... பதிவுலகம் பல சமயங்களில் எரிச்சலையும், சலிப்பையும் தந்தாலும்கூட இது ஒரு கட்டற்ற, தனிமனிதனின் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும், அதிகாரத் தூண்களுக்கு எதிரான புரட்சிகரக் கூறுகளைக் கொண்டே பயணிக்கிறது. இங்கு நானும் சில விதைகளைத்தூவிச் செல்லலாம். காலவெள்ளத்தில் எதிர்நீந்தி நிற்கும் சில நினைவுகளை ஆவணப்படுத்திப் போகலாம்.வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைப் போலவும், கைப்பேசிகளைப் போலவும், கணிணியும் இணையமும் முழுக்க முழுக்கப் பரவலாகும்போது இணையத்தின், வலைப்பூக்களின் பலம் கற்பனையை விஞ்சிநிற்கும் என்பது வெறும் கணிப்பல்ல!

இணையத்தில் கிடைக்கும் தமிழ்நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும், இலக்கியப் புதையல்களும் என்னை மலைக்கவைக்கின்றன. இதழியலாளர் பாலபாரதியிடம் ஒருநாள் ஒரு சங்கப்பாடல்பற்றிக் கேட்டபோது அவர் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கத்தையும், இன்னும் மதுரைத்திட்டம் போன்ற பக்கங்களையும் அறிமுகம் செய்வித்தார்.இன்னும் இன்னும் இணையத்தில் தமிழ் தனது எல்லைகளை விரித்துக்கொண்டே செல்கிறது.

இதோ நூறைத் தொட்டுவிட்டேன்... ஆனால் எனை இணையத்தில் படிக்கவும் எழுதவும் தூண்டிய என் இனம் வீழ்ந்து கிடக்கிறது... லெமூரியா தொடங்கித் தனது வேர்களையும் விழுதுகளையும் உலகெங்கும் பரப்பி உலகின் தலைமக்களாய்த் திகழ்ந்திருக்கவேண்டிய ஓர் இனம் தனது விழிகளில் மாத்திரம் ஜீவனை நிரப்பியபடி வீழ்ந்து கிடக்கிறது. லட்சக்கணக்கான ரத்தசொந்தங்கள் ஜீவமரணப் போராட்டத்தில் இருக்க, இங்கு நெடுந்தொடர்களிலும், நீர்த்துப்போன அரசியலிலும், குத்தாட்ட சினிமாக்களிலும், கும்பி கழுவும் பொருளாதாரப் போராட்டத்திலும் மூழ்கித் தனது சுயநினைவிழந்து கிடக்கின்ற தமிழ்நாட்டுச் சமூகம்... தன்னை வழிநடத்த ஒரு மேய்ப்பனின்றி...

ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மக்கள் என்றும் மந்தைகளாகவே இருந்துவிடமாட்டார்கள். துளிகள் இணைந்து கங்கையெனப் பெருகும். அதன் வெள்ளத்தில் கசடுகள் அடித்துச் செல்லப்பட்டு என் இனம் எழுந்துநிற்கும். இணையத் தமிழில் இணைந்து மேலெழும் இச்சமூகத்தின் பயணத்தில் மெல்லமெல்ல எல்லாவகை மக்களும் இணைந்து சமுத்திரமாக விரியும். இந்தப் பொழுதில் எனக்கு வேறேதும் எழுதத் தோன்றவில்லை. என் இரவுகளில் என்னைக் கனக்கவும், கரைக்கவும் செய்யும் ஒரு பாடலை இங்கு இணைக்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் நெஞ்சங்கள் சற்றே நிதானித்து இந்தப் பாடலைச் செவிமடுக்க வேண்டுகிறேன்.

நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்
பழம்தின்னும் கிளியோ
பிணம்தின்னும் கழுகோ
தூதோ முன்வினைத் தீதோ
களங்களும் அதிரக் களிறுகள் பிளிற
சோழம் அழைத்துப் போவாயோ
தங்கமே என்னைத் தாய்மண்ணில் சேர்த்தால்
புரவிகள்போலேப் புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அதுவரை அதுவரை....

தமிழர்காணும் துயரம் கண்டு
தலையைச் சுற்றும் கோளே அழாதே
என்றோ ஒருநாள் விடியும் என்றே
இரவைச் சுமக்கும் நாளே அழாதே
நூற்றாண்டுகளின் துருவைத் தாங்கி
உறையில் தூங்கும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே அழாதே!

புதன், 22 டிசம்பர், 2010

பதிவர் பா.ராவும் ஒரு தோழியும்...


அடடா... பதிவு போட்டு நாளாச்சுன்னு யோசித்துக் கொண்டிருந்தபோது தோழியின் எண் செல்ஃபோன் திரையில்...

வேறொன்றுமில்லை... என் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நான் அடிக்கடி ஸ்டேட்டஸ் மெஸேஜை மாற்றிக் கொண்டிருப்பேன். நான் ரசித்தவற்றை நண்பர்களும் ரசிக்க...

இன்று பதிவர் பா.ராவின் கவிதை ஒன்றை எடுத்துப் போட்டிருந்தேன்.

கவிதை என்றவுடன் ஞாபகம் வருகிறது. தமிழகத்தில் மொத்தம் ஆறுகோடிக் கவிஞர்கள் இருக்கிறார்களாம். "பெண்ணே! உன் கண்ணில் தெறித்த மின்னலில் குருடனானேன்" என்கிற ரீதியில் 'அகநானூறு' படைத்து, "ஏ! இளைஞனே... எழுந்திரு! எதிர்காலம் உன் தோள்களுக்காய்க் காத்திருக்கிறது" (எந்த பஸ்டாப்புலன்னு தெரியல!) என்று 'புறமும்' பாடி கவிதைவடித்த களைப்பில் குப்புறடித்துத் தூங்கும் கவிஞர்களின் இம்சை இருக்கிறதே! அய்யய்யய்யய்யோ....!

இரண்டு நாள்களுக்குமுன் ஒரு 'கவிஞ' நண்பரை எதிர்பாராதவிதமாகப் பார்க்க நேரிட்டது. தன் ஊர்ப்பெயரைப்போட்டு ...........கவிஞர் என்ற அடைமொழியுடன் மிடுக்காகத் திரிவார்... பின்னே? கவிஞரில்லையா...கம்பீரம் குறையக்கூடாதாம்!!! "தம்பி! என் கவிதை ஒன்று ........ இதழில் பிரசுரமாகி இருக்கிறது... பாருங்களேன்" என்றபடி தனது தோள்பையில் கையை விட்டார். எனக்கென்னவோ பாம்பு கீரி வித்தை காட்டுபவன் பாம்பை வைத்திருக்கும் கூடைக்குள் கையை விடும் காட்சி நினைவுக்கு வந்துபோனது. ஒரு சிறுவர் இதழை எடுத்து நீட்டினார் "இதுல பாருங்க தம்பி..." என்றபடி... கவிதை என்ற வடிவத்தைக் கண்டுபிடித்த படுபாவியைச் சபித்துக் கொண்டே வாசித்தேன்... அந்தக் கொடுமையை என்ன சொல்ல...

"ஆனாவுக்கு அடுத்து ஆவன்னா
அவளுக்கு வெச்ச பேரென்னா..' என்று நீண்டது அந்தக் 'கவிதை'.

இன்னும் சில கவிஞர்கள் இருக்கிறார்கள்... "பாலைநிலத்தின் கானல்வெயிலில் ஊர்ந்துகொண்டிருக்கும் பச்சைப்பாம்பின் தடமறியத் தொடரும் பீலைகாய்ந்த விழியின்..." என்று ஆரம்பித்தால் படித்துமுடித்தபின் ஒரு ஃபுல் மக்டெவலை மடமடவெனக் கவிழ்த்த எஃபெக்ட் கிடைக்கும்.

ஆனால் பச்சைக்குழந்தை கொடுக்கும் முத்தம் மனசுக்குள் போய் 'பச்சக்' என்று ஒட்டிக்கொள்வது போன்ற கவிதைவரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் பா.ராஜாராம். பிறந்த குழந்தை விழிகள் விரிய உலகத்தை முதல்முறை பார்ப்பதுபோலவே காணும், உணரும் எல்லாவற்றையும் வியந்து, நெகிழ்ந்து அன்பு வழிய வழியச் சொட்டும் கவிதைகளை எழுதுபவர். "நல்லாருக்கீங்களா மக்கா" என்ற வார்த்தைகள் இவர் உச்சரிக்கும்போது மட்டும் தனித்த நெகிழ்வுடன் தொனிக்கும்.

இவரது கவிதைகளில் ஒன்றைத்தான் என் ஸ்டேட்டஸ் மெஸேஜில் அப்டேட் செய்திருந்தேன்...

"முதுகிற்குப் பின்புறம்
மறைகிற குழந்தைகளை
முன்னிழுத்து
"சித்தப்பாடா " என்று
கண்ணீருடன்
சிரிக்கிறார்கள் காதலிகள்"

வந்தது வினை... தோழியின் ஃபோன் வடிவத்தில்...

"அதென்ன எதுக்கெடுத்தாலும் பொம்பளைங்களைக் குறைசொல்றதே உங்களுக்குப் பொழப்பா போச்சு? ஏன் ஆம்பிளைங்க மட்டும் யோக்கியமா" என்று படபடவெனப் பொரிந்தவர் "நான் இப்போ எழுதி அனுப்புறேன்...ஒழுங்கு மரியாதையா இதையும் சேத்து உன் ஸ்டேட்டஸ் மெஸேஜ்ல போடு" என்று சற்றேறக் குறைய மிரட்டியவர் இரண்டு கவிதைகளை எழுதி அனுப்பினார். ஏற்கனவே பதிவுக்கு மேட்டர் தேடிக் கொண்டிருந்தவனுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் வந்து வாயில் விழுந்த கதையாகிப்போனது. ஸோ... பதிவாவேப் போட்டாச்சு!

1)"காதலியுடன் சாலையை
அளக்கும் போது
எதிர்ப்படும் உறவினரிடம்
தோழி என்றோ
சகோதரி என்றோ
அறிமுகப்படுத்துகிறார்கள்
கூச்சமின்றி."

2)"விரல்பிடித்து
குழந்தையுடன்
நடைபயிலும் போது
முறுவலித்து
கடந்து போகும்
காதலியை
அத்தையென அறிமுகஞ்செய்கிறார்கள்
முன்னாள் காதலர்கள்."

பின்குறிப்பு: தலைப்பு எதுவும் விவகாரமாகத் தெரிந்தால் பழிபாவம் அனைத்தும் தமிழ்ப் பத்திரிகைகளுக்கே போய்ச்சேரும். சூம்பிப் போன விஷயத்துக்கெல்லாம் சுனாமி ரேஞ்சுக்குத் தலைப்பு வைத்துப் பரபரப்பாக்கும் வித்தை கற்றுக்கொடுத்தது அவர்கள்தானே?!

வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஆலமரத்துக் கலைச்செல்வி - (கிராமத்துக் கதைகள்: 5)


நெறமாச புள்ளத்தாச்சி அடிமேல அடியெடுத்து வெச்சி நடக்குறமாரி மெல்லமா நடந்துபோற ஆறு, காத்துகிட்ட செல்லமா கதெ பேசி தலையாட்டிச் சிரிக்கிற நெல்லுகருதுங்க,  தலையத் தலைய ஆட்டிக்கிட்டு மணிச்சத்தம் எழுப்பிட்டுப் போற வண்டிமாடுங்க, வைக்கலயும் புல்லையும் தின்னுப்புட்டு சாஞ்சி படுத்துக்கிட்டே அச போடுற பசுமாடுக மாதிரி சிறுவயசு நெனப்பயெல்லாம் கண்ணுமுழி சொருவ பேசிச் சிரிச்சிக்கிட்டே பொழுதத் தள்ற கெழடுகட்டைங்க, மல்லியப்பூ வாசமும் சீட்டித்துணி தாவணியுமா கருவண்டுமாரி கண்ணை உருட்டிக்கிட்டே திரியிற கன்னிப்பொண்டுவ...

கெராமம்னாலே எல்லாருக்கும் மனசுக்குள்ளாற அழகா வந்துபோற சித்திரம் இதாங்க. ஆனா கெராமங்களுக்குள்ளாற இன்னொரு மொகமும் இருக்கு. எதுத்தாப்புல வார உருவங்கூடத் தெரியாத அளவுக்குப் பேயிற மார்கழிமாசப் பனியிலயும் தீட்டுக்காரப் பொண்டுவ வீட்டுக்கு வெளியிலதான் படுக்கணும்னு சட்டம் பேசுறதும், விழுந்த பல்லுகூட சரியா மொளைக்காத எட்டு வயசு வாண்டு நாப்பத்தஞ்சி வயசு ஆம்பளையப் பாத்து "எலேய் முனியா! இங்ஙன வாடா!"ன்னு மட்டுமருவாதி இல்லாமக் கூப்புடுற அளவு சாதிக் கோராமையும் கெராமத்துக்கு மட்டுமே சொந்தமானதுங்க.

எங்கூருல ஒதுக்குப்பொறமா இருந்திச்சி அந்த ஆலமரம். தாலியறுத்த பொம்பிளை கூந்தல விரிச்சிப்போட்டுட்டு அழுவுறமாரி அது கெளைங்களை ஆட்டி காத்துல 'ஓ'ன்னு எரைச்ச போட்டுட்டே இருக்கும். அதோட கெளையில எல்லாம் சின்னச் சின்னதா வேட்டியில கட்டித் தொங்க உட்டுருக்குற பையிங்களும் ஆடிட்டு இருக்கும். ஊருல மாடுங்க கன்னு போடுறப்ப வார நஞ்சுக்கொடிய அந்த மாரி வேட்டித் துணியில கட்டித் தொங்க உட்ருப்பாங்க. அந்த ஆலமரத்தடிதான் என்னைமாரி பொட்டுபொடுசுங்க வெளையாடுற எடம். உச்சிப்பொழுதுல ஆலமரத்தடிக்குப் போனா கலைச்செல்வி புடிச்சிக்குவான்னு சொல்லி பயமுறுத்தும் எங்க பெரியம்மா.  கலைச்செல்விக்கு சின்னப்பசங்கன்னா கொள்ள ஆசையாம். கிட்டப்போனா உடவே மாட்டாளாம். கலைச்செல்விக்கு பயந்துக்கிட்டே நாங்க ஆலமரத்தடிக்கு உச்சிவேளயில போவமாட்டோம்.

ஒருநா நா ஏம்பெரியம்மாட்ட "அதாரு பெரியம்மா கலைச்செல்வி? அவ ஏன் சின்னப்பசங்கள புடிச்சிக்கணும்? எனக்கு அவ கதெ சொல்லு"ன்னு கேட்டேன். பெரியம்மா சொன்ன கதெ ஒரு பாரதக்கதெ. ரத்தமும்  கவிச்சியும் அழுவையும் ஆத்தாமையுமான கதெ. கதய சொல்றப்பவே பெரியம்மா கண்ணுலருந்து தண்ணி தாரதாரையா ஊத்த ஆரமிச்சிச்சி:

செல்லமுத்துத் தேவரு பண்றதென்னவோ மாட்டுத்தரகு வேலதான். ஆனா ஆளப்பாத்தா ஆறடி ஒசரத்துல கருந்தேக்கு மரத்துல செதுக்குன செலமாரி இருப்பாரு. ரெண்டுபக்கமும் ரெண்டு நட்டுவக்காளிய நட்டுவெச்சமாரி திருக்கிகிட்டு இருக்குற மீசை. ஏத்திச் சீவுன தல, மேலுக்கு சட்டை போடாம எட்டுமொழவேட்டிய மட்டும் கட்டி அதுக்குமேல சிங்கப்பூரு பெல்ட்டப் போட்டு இறுக்கி இருப்பாரு. நெஞ்சில இருக்கு மசுர வெலக்கிப்பாத்தா நாலணா பெரிசுக்கு ஒரு மச்சம் இருக்கும். அந்த மச்சமும் கலைச்செல்வியுந்தான் அவரோட அதிர்ஷ்டத்துக்குக் காரணம்னு அடிக்கடி சொல்லிக்குவாரு. காலங்காத்தால எந்திரிச்சி கொல்லைக்கு போயிட்டு வந்து குளிச்சிமுழுவி வந்து துன்னூத்துப்பட்டய போட்டுக்கிட்டு வெங்கலக் கூம்பா நெறெய பழையசோத்துல எருமைத்தயிர ஒரு சொம்பு ஊத்திப் பெசஞ்சி பச்சமொளகாயும், சின்ன வெங்காயமும் கடிச்சிக்கிட்டே சாப்புட்டு முடிச்சி தரகு யாவரத்துக்குக் கெளம்புனாருன்னா பொழுது சாஞ்சி வாரப்ப கையில காசும் வாயில சாராயமுமாத்தா வந்து சேர்வாரு.

கலைச்செல்வி பாக்குறதுக்கு அபிஷேக ஆராதன பண்றதுக்கு முன்னாடி இருக்குற அம்மன் செல மாரியே இருப்பா. நல்லா கருகருன்னு காக்காப்பொன் நெறம் அவளுக்கு. கருப்புல அழகுக் கருப்பு எழவுக்கருப்புன்னு ரெண்டு வெதம் இருக்கு. இவ கருப்பு அழகுக்கருப்பு. குளிச்சிட்டு தலதொவட்டாம கூந்தல விரிச்சிபோட்டுட்டு, பாவாடைய ஏத்தி மக்குட்டு கட்டிக்கிட்டு நின்னான்னா பாக்குறவங் கண்ணெல்லாம் கடமடையில ஓடுற காவேரி கணக்கா விரிஞ்சி இருக்கும். "ஆட்டுக்கு வாலை அளந்து வெச்சது ஆண்டவன் கணக்கு"ன்னு ஒரு சொலவடை சொல்லுவாங்க. ஒவ்வொரு மனுசனுக்கும் ஆண்டவன் நல்லதக் குடுத்துருக்குற மாரியே கெட்டதையும் சேத்துதாங் குடுத்துருக்கான். கலைச்செல்விக்கு ஆண்டவங் குடுத்தது சாதகத்துல ஏழுல செவ்வா. கல்யாணம் பண்ணத் தோதா ஒரு மாப்புளயும் கெடைக்கல. அவ அப்பாரு ஊரெல்லாஞ்சுத்தி ஒடம்பெல்லாம் வத்தி சல்லடபோட்டு சலிச்சிப் பாத்தும் ஒரு பய சிக்கல. அவரும் சாராயங் குடிச்ச நேரம்போக மத்த நேரமெல்லாம் சாதகத்த தூக்கிச் சொமந்து வெறுத்துப்போயி "இனி இந்த சனியனுக்கு நா மாப்ள பாக்க மாட்டேன். கெடந்து அழியட்டும்"னு சொல்லிட்டு சாதகத்தயும் தூக்கி வீசிட்டாரு. ஆச்சு அந்த பொரட்டாசியோட அவளுக்கும் வயசு இருவத்தொம்போது.

கலைச்செல்வி எப்பவும் சின்ன வயசு வாண்டுப் பயலுவளோடயே வெளையாண்டு சிரிச்சிக்கிட்டு இருந்தவ மெல்லமெல்ல ஒடுங்க ஆரமிச்சா. அவளையொத்த பொண்டுவ பூரா கையில் ரெண்டு வயித்துல ஒண்ணுன்னு சொமந்துட்டு இருக்குறப்ப அவ மட்டும் வெறும் வயித்த தடவிட்டு ஏங்கி அழுதுட்டு இருப்பா. ராப்பொழுது அவளுக்கு மட்டும் தவக்களைய முழுங்கவந்த பாம்புமாரி தெம்பட ஆரமிச்சிச்சி. அணைச்சிக்க ஒரு கையும் சாஞ்சிக்க ஒரு மடியும் இல்லையே அப்டீங்குற ஏக்கத்துல அவ ஒடம்பும் எளைக்க ஆரமிச்சது. காலாகாலத்துல கல்யாணம் ஆவாத பொண்ணுவளுக்கு மனசுக்குள்ளாற எரியிற வேதன பாதின்னா ஊருல இருக்குற மக்க மனுச வார்க்குற வார்த்தயில எரியறது மீதி. அவளும் ஊரு ஒலகத்துல ஒரு சாமி உடாம வேண்டிக்கிட்டா. வெள்ளி,செவ்வா ஆனா துர்க்கையம்மங் கோயில்ல வெளக்கேத்தி வெச்சி "எனக்குன்னு பொறந்த மவராசன எங்கண்ணுல காட்டுடி தாயே"ன்னு கண்ணுகசிய வேண்டிக்குவா. அப்பிடி ஒருநா கோயில்ல வெளக்கேத்தப் போறப்பதா அவனப் பாத்தா கலைச்செல்வி.

அவம்பேரு அறிவழகன். பேருக்கேத்தமாரியே அறிவுல அழகன். பாழாப்போன சேரியிலப் பொறந்தா அவம் அவதாரமே ஆனாக்கூடத்தான் மக்கமனுசங்க மதிக்க மாட்டாங்களே? நடராசனே கெதின்னு மனசுருகுன நந்தனாரக்கூட நெருப்புல எரிச்சித்தானே நாயனார்னு சேத்துக்கிட்டாங்க? பள்ளச்சேரியில இருந்து சிம்னி வெளக்குல படிச்சி மெல்ல மெல்ல காலேசி பக்கம் எட்டிப்பாத்தவன் அறிவழகன். தாம்படிச்சது தன்னோட மக்களுக்காவணும்னு கெவுருமெண்டு வேல கெடச்சிம் போவாம சேரிப்புள்ளங்கள கூப்புட்டு வெச்சி "படிங்கடா! படிச்சாத்தாண்டா நமக்கெல்லாம் விடிவுகாலம்"னு சொல்லி படிப்புச் சொல்லிக் குடுத்துட்டு இருக்குற மவராசன்... அவந்தான் கலைச்செல்விக்கும் மவராசங்கிறது ஆண்டவங் கணக்கு.

"என்ன சின்னம்மா நல்லாருக்கீங்களா? ஏம் ஒருமாரி களப்பாவே திரியிறீங்க?"ன்னு சம்பிரதாயமா அறிவழகன் கேட்டவொடனேயே கலைச்செல்வி கண்ணுல ரெண்டு சொட்டு தண்ணி எட்டிப்பாத்திச்சி. அனுசரணையா, ஆதரவா ஒரு சொல்லு கேட்டு எவ்ளோ நாளாச்சி?
"ம்... இருக்கேன் அறிவு"ன்னு சொல்லிட்டு நவுந்தா கலைச்செல்வி. இந்தக் காதல் இருக்கே... திருட்டுப்பூனமாரி மனசுக்குள்ளாற நமக்குத் தெரியாமலயே வந்து ஒக்காந்துக்கும். திருட்டுப்பூன வாரதும் தெரியாது சொம்புல இருக்குற பாலக் குடிக்கறதும் தெரியாது. எல்லாம் முடிஞ்சப்புறம் லபோதிபோன்னு கத்திக்கூப்பாடு போட்டு என்ன பிரயோசனம்? கலைச்செல்வி மனசுல கொஞ்சநாளா அறிவழகன் வாரதும் போறதுமா இருந்தான். "நல்லாருக்கீங்களா"ன்னு கேட்ட ஒத்த வார்த்த கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரமிச்சிச்சி. அப்பப்ப பாத்துக்கிறதும் பேசிக்கிறதுமா இருந்தாங்க. இப்பல்லாம் ராத்திரில கலைச்செல்வி தனியாத் தூங்குறது இல்ல. தலவாணிய அறிவழகனா நெனச்சிக் கட்டிப்புடிச்சிக்கிட்டுதான் தூங்குறது. பேச்சுல ஆரமிச்ச காதல்ல வயசு நெருப்பப் பத்தவெக்க மாட்டுக்கொட்டாயி, வாய்க்காக்கரெ, வைக்கப்போருன்னு அப்பப்ப கட்டிக்கிட்டு பத்தி எரிய ஆரமிச்சாங்க ரெண்டுபேரும்.

மனசுபூரா காதல் நெறஞ்சி வழிஞ்சதுல நாளுகணக்க மறந்துட்டா கலைச்செல்வி. தின்ன சோறு செரிக்காம விடியகாத்தால ஒருநா வாந்தி எடுத்தப்பதா கலைச்செல்விக்கு நெஞ்சு திக்குன்னிச்சி. தலகுளிச்சி மூணுமாசம் ஆச்சி.பயத்துல மனசு கெடந்து அடிச்சாலும் ஒரு ஓரத்துல சின்ன சந்தோசம் அவளுக்கு... 'அறிவழகனோட குட்டி சீவன் இப்ப ஏம் வயித்துக்குள்ளாற'ன்னு. நெளிஞ்சி கொழஞ்சி கன்னஞ் செவக்க அறிவுகிட்ட மெல்லமா சேதியச் சொன்னா. ராப்பூரா யோசிச்சான் அறிவு.நாலாம் நாள் காலையில கலைச்செல்வி ஆசயா வளத்த பசுங்கன்னுக்குட்டி அவளக் காணாம கத்திக்கிட்டு இருந்திச்சி.பாடஞ் சொல்லிக்குடுக்குற அறிவைக் காணாம சேரிப்பசங்க நாவப்பழம் பறிக்கப் போயிட்டாங்க.ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு கணக்குப் போட்ட ஊருக்காரங்க சேதியப் புரிஞ்சிக்கிட்டாங்க.சல்லடபோட்டுச் சலிச்சாலும் காத்துல கரைஞ்ச கற்பூரம் கைக்கு மறுவடி வருமா?

நாலுமாசம் போனிச்சி. ஒருநா ஊருக்குள்ளாற ஒரே பரபரப்பு. செல்லமுத்துத் தேவரோட பங்காளி வகையறாக்காரன் ஒருத்தன் செதம்பரத்துக்கு சாமி கும்புடப் போனவன் நடராசரப் பாத்ததோட இல்லாம கடத்தெருவுல கலைச்செல்வியயும் அறிவழகனயும் பாத்துட்டான். ஊருல சாதிக்காரங்ககிட்ட தகவலச் சொல்லி மெல்லமா வலைய விரிச்சானுவோ. மீனு ரெண்டும் சிக்குனவொடனே அள்ளிப்போட்டுட்டு வந்துட்டானுவோ. வார வழியிலயே ஊரு எல்லையில அய்யனாரு கோயில் ஓரமா அறிவழனக் கட்டிப்போட்டு அடிச்சே கொன்னு போட்டானுவோ.

கலைச்செல்விய ஊட்டுக்குக்கொண்டாந்து அவ ஆயா அப்பங்கிட்ட ஒப்படச்சி "பள்ளப்பய கரு நம்ம சாதியில பொறக்கபடாது. ஒம்பொண்ண நீயே கொன்னுடுன்னு சொல்லிட்டு வெளியிலயே நின்னுக்கிட்டானுவ. கலைச்செல்வி அழுது மொறையாறி ஆறாப் பெருகுனா. கையெடுத்துக் கும்புட்டா. "அய்யா! என்ன உட்ருங்கய்யா"ன்னு அவ அப்பன், பெத்த தாயாரு, சித்தப்பம் பெரியப்பன்னு ஒவ்வொருத்தங் கால்லயும் உழுந்து கெஞ்சுனா. ஒருத்தனும் மனசு எரங்கல. அம்மாக்காரி மடியோட சேத்துவெச்சி அழுத்திப் புடிச்சிக்க அப்பங்காரன் அவ வாயத் தொறந்து பாலிடாயில ஊத்துனான். கக்குனது பாதி, உள்ள போனது பாதின்னு மறுபடியும் அழுது கெஞ்சுனா கலைச்செல்வி. "எனக்காவ இல்லன்னாலும் எங்கொழந்தைக்காவயாவது என்ன உசுரோட உட்ருங்க சாமீ"ன்னு சொல்லிக் கதறுனா. "சாதி மானத்த வாங்கிட்டியேடி சனிப் புடிச்ச முண்ட. பள்ளப்பய புள்ளயாடி ஒனக்குக் கேக்குது?"ன்னு சொல்லி அவ வயித்துல எட்டி மிதிச்சான் அவ பெரியப்பன். "அந்த அளவுக்கு .......... அரிப்பெடுத்துத் திரிஞ்சா சாதிக்காரனா பாத்துப் படுக்க வேண்டியது தானடி?"ன்னு கேட்டு தலமுடியப் புடிச்சி இழுத்து அறஞ்சான் தாய்மாமன். மருந்து மயக்கத்துலயும், அடி தாங்க முடியாமயும் கண்ணுமுழி சொருவுனிச்சி கலைச்செல்விக்கு. அப்பிடியே தரதரன்னு இழுத்துட்டுப்போயி அடுக்கி வெச்சிருக்குற கருவக்கட்டைங்கமேல படுக்கவெச்சி கொஞ்சூண்டு மண்ணெண்ணெய ஊத்திக் கொளுத்தி உட்டான் ஒண்ணு உட்ட அண்ணங்காரன். நெருப்பு சூட்டுல மயக்கந்தெளிஞ்ச கலைச்செல்வி "அண்ணே என்னக் கொன்னுடாதண்ணே"ன்னு அலற ஆரமிச்சா. அவ தலயிலயே கட்டையால ஒரு போடு போட்டான் அண்ணங்காரன். அப்பிடியே சுருண்ட உழுந்த கலைச்செல்வி முழுசா எரிஞ்சி அடங்குனா. மறுநா காலையில மிச்சம்மீதி இருந்த சாம்பல், எலும்பயெல்லாம் கொண்டுபோயி ஊருக்கு ஓரமா இருந்த ஆலமரத்தடியில குழி தோண்டிப் பொதச்சாங்க சொந்தக்காரவங்க.

அப்பயில இருந்து ஆலமரத்தடிக்கு வெளையாட வார வாண்டுப் பசங்க, துள்ளிக்கிட்டு ஓடியாற கன்னுக்குட்டிங்க எல்லாத்தையும் கலைச்செல்வி புடிச்சிக்கிறான்னு ஊருக்குள்ளாற பலமான பேச்சு அடிபட்டிச்சி.

கலைச்செல்வி செத்துப்போன ரெண்டாவது வாரம் சேரியில செல்லத்தேவரு ஊட்டுல பண்ணையம் பண்ணிக்கிட்டு இருந்த நொண்டியன் மருமவளுக்கு ஆம்பிளப்புள்ள பொறந்திச்சி. அது நெஞ்சில நாலணா பெரிசுக்கு மச்சம் இருந்திச்சி.

திங்கள், 6 டிசம்பர், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...06/12/10


பருப்பொருள்களோட 'ஜடத்தன்மை' பத்தின நியூட்டன் விதி நம்ம எல்லாருக்கும் தெரியும். நெட்டுரு போட்டாவது படிச்சி பரிச்சை எழுதி இருப்போம். எனக்கு இந்த ஜடத்தன்மை ரொம்ப அதிகம். போட்டது போட்டபடி கெடப்பேன். திடீர்னு வெளிலருந்து வர்ற அழுத்தம் தாங்க முடியாம ஓட ஆரமிப்பேன். இந்த கட்டுரைத் தொடரை வாராவாரம் எழுதலாம்னுதான் ஆரம்பத்துல நெனச்சேன். எங்க... நாந்தான் ஜடமாச்சே! சரி... சுயபுராணம் போதும்... விஷயத்துக்கு வருவோம்.

1) ரெண்டு நாளு முன்னாடி கூகிள் பஸ்ஸுல குழலி அண்ணன் ஒரு மேட்டரைப் போட்டாரு... ஜீனியர் விகடன்ல வந்த கட்டுரை "வைமேக்ஸ் பூதம்". அப்புறம் சாட்ல புடிச்சி என்னண்ணே விஷயம்னு கேட்டா அவர் சொல்ற கதை பெரிய வயித்தெரிச்சல்ங்க. நம்ம மந்திரிங்க, ராசாங்க எல்லாம் முழு மாட்டை கொம்போட முழுங்கி இருக்காங்க. அப்பத்தான் எனக்குப் புரிஞ்சது இது 'வெறும்' ஒண்ணே முக்கா லச்சம் கோடி மேட்டர் இல்ல... அதையும் தாண்டிப் 'புனிதமானது' அப்டீன்னு. யப்பா சாமீ... இந்த அரசியல் வாதிப் பயலுங்க கட்டுற வெள்ளை உடுப்புக்குப் பின்னாடி இவ்ளோ அழுக்கு இருக்கா?!

அட்ரஸே இல்லாத கம்பெனிக்கெல்லாம் வைமேக்ஸ் டெண்டர் கொடுத்துருக்காங்க... அட்ரஸ் இல்லாத கம்பெனி யாருக்குச் சொந்தம்னு கேட்டா அங்கதான் சப்பணம் போட்டு ஒக்காந்துருக்காங்க ராசாமாருங்க. அடிக்கிறது கொள்ளைன்னு முடிவு பண்ணியாச்சு...அப்புறம் என்ன அவனுக்குப் பங்கு இவனுக்கு பங்குனு நொண்ணை மாதிரி.. நம்மளே கம்பெனிய ஆரமிப்போம்..நம்மளே டெண்டர் எடுப்போம்.. நம்மளே ராசாங்கத்த நடத்துவோம்! எதிர்க்கட்சிக்காரன் கேள்விகேட்டா அவன் வாயிலயும் ஒரு 'கட்டை'ச் சொருவு. நல்லாருக்குய்யா டெக்னிக்கு! அமைதிப்படை படத்துல ஒரு வசனம் வரும் "நம்ம கட்சிக்கு நாந்தான் தலைவரு! நீதான் பொதுச் செயலாளரு! ஒரு பயலுக்கும் ஒரு போஸ்டிங்கும் கொடுக்கப்படாது... எதுத்துக் கேள்வி கேட்டான்னா கட்டம் கட்டி உஸ்ஸு... மன்னிப்புக் கடிதம் குடுத்தான்னா இஸ்ஸு... 'உஸ்ஸு..இஸ்ஸு இதான்பா நம்ம நாட்டு அரசியலே!"

"நரிக்கு நாட்டாமை கொடுத்தா கெடைக்கு எட்டாடு கேக்குமாம்!"

2) கிட்டத்தட்ட பதினஞ்சி நாளா டெல்டா மாவட்டங்கள் பூரா அடைமழை. பொத்துகிட்டு ஊத்துது. கண்ணுக்கெட்டின தூரம் வரை வயலே தெரியல ஒரே தண்ணிக்காடா கெடக்கு. வயல்ல பணத்தையும் ஒழைப்பையும் கொட்டுனவன்லாம் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு ஒக்காந்துருக்கான். ஒருநேரம் அடைமழை... எல்லாத் தண்ணியும் கடலுக்கு சமர்ப்பணம்... இன்னொரு நேரம் சொட்டுத்தண்ணி இல்ல. எச்சிகூட ரெண்டு சொட்டுக்கு மேல ஊறாது.

ஊதாரியாத் திரியற எல்லாரும் பிச்சைக்காரனாத்தான் ஆவணும். இயற்கை கொடுக்குற மழையை எப்ப நாம சேமிச்சி வெச்சிருக்கோம்? ஒரு நாட்டுல மூணுல ஒரு பங்கு நீரும், மூணுல ஒரு பங்கு காடும் இருந்தாத்தான் அந்த நாடு சுபிட்சமா இருக்க முடியும்... ஆனா நம்ம நாட்டுல வெறுமனே மக்கள்தொகைப் பெருக்கத்தைக் காரணம்காட்டி காடுகளையும் ஏரிகளையும் அசுரன் அண்டா வாயத் தொறந்து முழுங்குற மாதிரி முழுங்கிட்டோம். மக்களோட குடியிருப்புக்கள் எல்லாத்தையும் அடுக்குமாடிக்கட்டடங்களா மாத்தி மத்த இடங்களை நீரும் காடும் நிறையச் செய்தாத்தான் இனி மனுசப்பய ஜீவிக்க முடியும்... தனித்தனி வீடுங்குறதுல்லாம் இனி சாத்தியப்படாது.

நீர்வள மேலாண்மைங்குறது எவ்ளோ முக்கியமானது... அதைச் சரியா கையாள்றப்போ எவ்ளோ பெரிய மாற்றங்கள் இருக்கும்னு கொஞ்சம் யோசிங்க... வீணாப்போற மழைத்தண்ணியெல்லாம் அங்கங்க தடுப்பணை கட்டி சேமிச்சா எப்டி இருக்கும்? ராஜஸ்தான்ல ராஜேந்தர் சிங் அப்டீங்குற மனுஷன் இதைச் சாதிச்சி காட்டி இருக்கார்... கூடுதல் தகவல் வேணுங்கிறவங்க இந்த ரெண்டு தளங்களையும் பாருங்க.

http://ramyanags.blogspot.com/2005/10/blog-post_30.html

http://www.tarunbharatsangh.org/

வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்

இது அவ்வைக் கெழவியோட பாட்டுங்க

3)  செல பேரு மூஞ்சை எத்தனை வருசமானாலும் மறக்க முடியாதுங்க... நாஞ்சொல்றது நடந்து ஒரு இருவது வருசம் இருக்கும்... எங்க வீட்டுக்குப் பக்கத்து தரிசு நெலத்துல ஒரு குரூப்பு வந்து தோல்பொம்மைக்கூத்து நடத்துனாங்க. அவங்கள அப்போ பாக்குறப்ப ரொம்ப வித்தியாசமா இருக்கும்... அதுல தலைமையா இருந்த அந்த தம்பதிகளுக்குள்ள இருந்த நெருக்கம், மத்த மனுசங்ககிட்ட அவங்க காட்டுன அன்பு, அவங்க கூடாரத்துல நான் சாப்புட்ட கருவாட்டுக் கொழம்பு... எதுவும் இன்னும் மறக்கல. எளிமையான மனுசங்ககிட்டதான் அன்பு ததும்பி இருக்கும்னு சொல்லுவாங்க... அது சத்தியமான உண்மை.

மயில்ராவணன் கதை, நல்லதங்காள் கதை எல்லாம் நான் அந்தக் கூத்துல பாத்து தெரிஞ்சிகிட்டதுதான்...கூத்து பாத்துட்டு சேக்காளிப் பசங்களோட எல்லாம் சேந்து நாங்களே மயில்ராவணனாவும் இந்திரசித்தாவும் வெளையாடுனது எல்லாம் 'பசுமை நிறைந்த நினைவுகளே'. நேத்து அந்தத் தம்பதிகளைப் பாத்தேங்க.. தோல்பொம்மையெல்லாம் இப்ப இல்லையாம். எல்லாத்தையும் ஒழிச்சிக் கட்டிட்டு கட்டடக்கூலி வேலைக்கு போறாங்க.

ரத்தமும் சதையுமா இருந்த பல கலைகளை தொலச்சிட்டு சினிமாங்குற மாயபிம்பத்துக்குப் பின்னாடி ஓடிகிட்டு தட்டையான மனுசங்களா நாம மாறி மாமாங்கம் ஆச்சுங்க. பள்ளிக்கோடத்து புள்ளைங்களைக் கூட சொந்தக் கற்பனைக்கு வழியில்லாம குட்டைப்பாவாடை கட்டி குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆட உட்டு 'ஆண்டுவிழா' நடத்திட்டு இருக்கோம்... சமுதாயம் வெளங்கும்ங்கிறீங்க?

"வர வர மாமியா கழுத போலானாளாம்... கழுதையும் தேஞ்சி கட்டெறும்பு ஆனிச்சாம்"

4) எரிமலைய எச்சி துப்பி அணைக்க முடியுமா என்ன?! விடுதலைப்போராட்டங்கள் எப்பவும் அதனோட இலக்கை அடையாம முடியறதில்லீங்க... இது தெரியாம லச்ச லச்சமா மக்களைக் கொன்னுபோட்டு ஒரு போராளி இயக்கத்தை அழிச்சிட்டா எல்லாம் முடிஞ்சிடும்னு மெதப்புல திரிஞ்ச ராஜபக்க்ஷே லண்டன்ல இருந்து பின்னங்கால் பிடரில அடிக்க திரும்பி ஓடி இருக்காரு. புலம்பெயர் தமிழ்மக்களைக் கையெடுத்து கும்புடத் தோணுது. அதே சமயம் ஒரு ஏக்கமும் வருது. தமிழ்நாட்டு ஜனங்க எப்ப சீரியல்ல இருந்தும் டாஸ்மாக்ல இருந்தும் விடுதலை அடையப்போறாங்கன்னு... மக்களை ஒரு மாதிரி போதை அடிமையா ஆக்கி வெச்சிருக்குற நம்ம நாட்டு அரசியல் எப்போ முடிவுக்கு வரும்?

“And as we let our own light shine, we unconsciously give other people permission to do the same” - Nelson Mandela

5) சமீபத்துல ஒரு கட்டுரையில ஒரு சுவாரஸ்யமான புதிர்க்கதை படிச்சேன். பிரபஞ்சன் எழுதினது... நம்மோட பழங்கதை மரபைப் பத்தின கட்டுரை. நம்ம கிராமப்புற இலக்கியங்கள்ள நிறைய சுவாரஸ்யமான விஷயம் இருக்குங்க... நகரங்கள் மாதிரி கிராமங்கள்ல காதலர்கள் அவ்ளோ சுலுவா சந்திச்சிப் பேசிக்க முடியாது. நெறைய திட்டம் போட்டு கஷ்டப்பட்டு சாடைமாடையா பேசிவெச்சி.... பாக்கப்போறப்ப ஏதாச்சும் சின்ன எடஞ்சல் வந்து நின்னுடும். அப்புறம் மறுபடி பழைய குருடி கதவத் தொறடி கதைதான்.

இந்தக் கதையில காதலன் காதலியப் பாத்து "உன்னைத் தனியா பாக்கணும்டி... எங்க பாக்குறது எப்பிடி பாக்குறது"ன்னு கேக்குறான். அவளுக்கும் மனசு ஆசையில கெடந்து அடிச்சிக்குது ஏக்கத்துல... இறுக்கத் தழுவி அணைச்சி ஒரு முத்தம் கொடுத்துக்கிட்டா அது ரெண்டு வருசத்துக்கு தாங்குமே? ஆனா ஊரு மக்களுக்குத் தெரிஞ்சா பொழப்பு நாறிடுமே? ரெண்டு பேருமே சாடையா பேசிக்கிறாங்க... அதான் இந்தப் பாட்டு...

"ஒரு மரம் ஏறி
ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து
ஒரு மரம் வீசிப்
போகிறவன்-
“பெண்ணே உன் வீடு எங்கே?”
“பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே.”
“நான் எப்போ வரட்டும்.”
“இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு
மரத்தோடு மரம் சேர்ந்த
பிறகு வந்து சேர்."

என்ன அர்த்தம்னு கொஞ்சூண்டு மூளையக் கசக்கி யோசிங்க... பாக்கிய அடுத்த வாரம் பேசிக்குவோம்.

6) கடேசியா எப்பவும்போல ஒரு கவிதை. நரன் எழுதினது:

பிரசவ வார்டு
---------------------
மருத்துவமனை பிரசவ வார்டில்
பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தன எறும்புகள்
ஈனும் வலியில்
"அம்...மா" வென அலறியது
பெண் எறும்பொன்று
அதே வார்டில்
பிள்ளைப் பெற்றிருந்தவளை
பார்க்க வந்திருந்தவர்கள்
எடுத்து வந்திருந்த பாட்டிலில்
ஹார்லிக்ஸை திருடிக்கொண்டிருந்தன
சில எறும்புகள்
பிள்ளைத்தாச்சிக்கென ...
பிள்ளைத்தாச்சிக்கென .

இவரோட மத்தக் கவிதைகளையும் படிக்கணும்னா இங்க போங்க

http://narann.blogspot.com/

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஈழமும் ஒரு பாமரத்தமிழ் இளைஞனும் : உறவின் நீட்சி! - இறுதிப் பகுதி

அகதி வாழ்வில்
அருவருப்பொன்றும்
அவ்வளவாயிருந்ததில்லை…
வாயுள் சலங்கழித்த
சமாதானச்சிப்பாயின் மூத்திரப்போக்கியை
கடித்தெடுக்க முடியாத
இயலாமையை விட...
-சக்கரவர்த்தி

ஒரு ஈழக்கவிஞனின் இந்தக் கவிதையைத் தட்டச்சும்போது என் விரல்கள் நடுங்குகின்றன. எனக்கு முன்னே என் இனம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் பாரம் என்னை அழுத்துகிறது. கைகால் இருந்தும் முடவனாய், செவியிருந்தும் செவிடனாய், விழியிருந்தும் ஊமையாய் ஆனோமே என்ற குற்ற உணர்ச்சி ஒரு கம்பளிப்பூச்சியாய் என்மேல் ஊர்கிறது.

கிளிநொச்சி நகரம் வீழ்த்தப்பட்டது என்ற செய்தி உலகத்தமிழரின் உள்ளங்களில் இடியாக விழுந்தது. உலகம் முழுதும் வாழ்ந்திருக்கும் தமிழர்கள் கிளர்ந்தெழுந்தனர். தமிழகத்திலும் நாளொரு போராட்டமும் பொழுதொரு ஆர்ப்பாட்டமுமாய் ஒவ்வொரு விடியலும் ஆட்சியாளர்களுக்கு நெருப்பை மடியில் கட்டிக்கொண்டதைப்போல விடிந்தது. மொழிப்போர் காலத்துக்குப் பிறகு தமிழன் சுரணை பெற்ற காலகட்டமாய் 2009 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்கள் இருந்தன.

தமிழகத்தில் ஈழத்தின் கொடூரங்களை சட்டங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் சளைத்துவிடாமல் பிரச்சாரம் செய்தவர்களை இந்த சமயத்தில் நன்றியோடு நினைவுகூர்ந்தே ஆகவேண்டும். நான் குறிப்பிடுவது எவ்வித தேர்தல் லாபநோக்குமின்றி இன உணர்வினையும் மனித நேயத்தையும் மட்டும் நெஞ்சில் சுமந்திருந்தவர்களைப்பற்றி மட்டுமே. தீவிர இடதுசாரி இயக்கமான ம.க.இ.க மற்றும் அதன் துணை அமைப்புக்கள், பெ. மணியரசனின் தமிழ்தேசியப் பொதுவுடைமைக்கட்சி, பெரியார் திராவிடர் கழகம், அய்யா நெடுமாறன், இன்றைய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான், தமிழர் தன்மான இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு, அவரது துணைவியாரும் கவிதாயினியும் ஆன தாமரை மற்றும் இன்னும் ஏராளமான சிறு சிறு இயக்கங்கள், இவர்களையன்றி எந்தத் தலைமையுமின்றிக் களத்தில் சுழன்ற தமிழகக் கல்லூரி மாணவர்கள் குறிப்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் இவர்களெல்லாம் ஊண் உறக்கம் மறந்து ஆற்றிய களப்பணி காலத்தின் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட வேண்டியது! கல்லூரி மாணவர்களின் அயராத உழைப்பாலும், சீமான் போன்றோரின் சீற்றம் மிகுந்த உரைகளாலுமே சிவகங்கையில் சிதம்பரமும், ஈரோட்டில் இளங்கோவனும் 'தலையால் தண்ணி குடிக்க' வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தேர்தல்வரை நாடகம் நடத்திக் கொண்டிருந்த இந்திய ஏகாதிபத்தியம் கடைசிகட்ட வாக்குப்பதிவு முடிந்ததுமே தன் முகமூடியைக் கழட்டி வீசியது. அடுத்த தேர்தலுக்குள்தான் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்களே! தனது கோரப்பற்களை விரித்து அது விழுங்கத் துவங்கியது மனிதமாண்புகளையும் மண்டை ஓடுகளையும்! எலும்புக்குவியலுக்குள் நசுங்கிச் செத்தது காந்தியத்தின் கடைசி அத்தியாயம்!

மே 18 ஆம் தேதி. பிணந்தின்னி வட இந்திய ஊடகங்கள் பிரபாகரனுடையது எனப்படும் ஓர் உடலத்தைக் காட்டி அகோரிகளைப் போலக் கூத்தாடின. பார்த்திருந்த தமிழரின் கண்ணீர் அன்று மட்டும் சிவப்பாய்ப் பொங்கியது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றதை தமிழகத் தமிழர் ஈழத்துக்குச் செய்த துரோகமாகவே சித்தரிக்க்கின்றனர். இல்லை... ஈழத்தின்மீதான தமிழக மக்களின் அனுதாபம் என்றும் 'சீஸரின் மனைவி' போல சந்தேகத்துக்கு இடமில்லாத ஒன்று. ஆனால் மக்கள் இனத்துரோகிகளுக்கு மாற்றாக ஜெயலலிதாவை நம்பத் தயாரில்லை என்பதே உண்மையானது. மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது முத்துக்குமாரின் உடல் மட்டுமல்ல; ஈழ ஆதரவுத் தமிழக அரசியல்வாதிகளின் மேலான நம்பிக்கையும்தான்.

ஈழப்படுகொலை முடிந்த மூன்றாம் நாளே பதவிக்காக அரசியல்பேரம் துவங்கியது 'தமிழினத் தலைவரின்' திமுக. அடுத்த தேர்தலுக்கு 'ஈழம்' பேசினால் போதும், அதுவரை ஓய்வு என்று கொடநாடு பயணப்பட்டார் ஜெயா. 'நீலச்சாயம் வெளுத்துப்போன' கதை தெரியாமல் கட்டுரைத்தொடர் எழுதத் தொடங்கினார் அண்ணன் திருமா. 'சுகாதாரம்' பறிபோன துக்கத்தில் முடங்கிப்போனார் தமிழர் பண்பாட்டுக்காவலர் மருத்துவர் அய்யா. உணர்வுள்ள மிச்சத் தமிழனும் நிதர்சனத்தின் வீரியம் தாங்காமல் நெடுந்தொடர்களுக்காய்க் கண்ணீர்ச் சுரப்பிகளை 'ஓவர்டைம்' செய்ய ஆரம்பித்தான். ஆக... முடிந்தது தமிழகத்தின் ஈழத்தாக்கம்...

இல்லை... முடியவில்லை. ஈழம் ஒரு எரிமலையைப்போல் எங்கள் நெஞ்சில் உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றது... மேலே பூத்திருக்கும் சாம்பல் ஊதப்பட்டு உணர்வெனும் காற்று வீசியடிக்கும் பொழுதிற்காய்க் காத்துக் கொண்டிருக்கின்றது. அந்த இறுதித்தீர்ப்பு நாளில் அரியணைகள் தூக்கி எறியப்படும்... மண்ணுக்குள் புதைந்திருக்கும் எம் மாவீரர்கள் மறுபடியும் உயிர்ப்பார்கள் என்ற நம்பிக்கை என் நெஞ்சில் என்றும் இருக்கின்றது. ஏனெனில் விடுதலைப்போராட்டங்கள் இறந்துபோனதாக வரலாறு என்றுமே பதிவு செய்ததில்லை.

ஈழத்தின் மக்கள் ஒன்றும் ஆனிப்பொன் கட்டிலும் அம்சதூளிகா மஞ்சமும்,அறுசுவை விருந்தும் கேட்டுப்போராடவில்லை. அவர்கள் போராடியது சுயமரியாதை கெடாத வாழ்வுக்கும், சுதந்திரமான காற்றுக்கும். அதற்காகவே இன்றுவரை அவர்கள் சர்வதேச சமூகத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் சர்வதேசங்களும் மனிதத்தின் மொழிமறந்து ஆண்டுகள் ஆயிற்று. இந்தச் செவிட்டுச் சர்வதேச நாடுகளின் செவிகள் துப்பாக்கிகளின் மொழியை மட்டுமே கேட்கப் பழகிவிட்டன. ராணுவச் சமநிலையை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தபோதுதான் சர்வதேசம் ஈழம் என்றொரு தேசம் இருப்பதை ஏறிட்டுப் பார்த்தன.

துப்பாக்கியின் மொழியைப் பேசத் தெரிந்த பிரபாகரா... எங்கே இருக்கிறாய் நீ?

களமாடி வீழ்ந்த
எம் தோழர்களே!
உம் உடலங்களைக்
கொடுங்கள்
ஒற்றைத் தீக்குச்சியாக...
நமுத்துப்போன நம்
மக்களின் நெஞ்சில்
உணர்வைத் தீமூட்ட...

(தொடர் முற்றும்... தேடல் தொடரும்)

புதன், 1 டிசம்பர், 2010

ஈழமும் ஒரு பாமரத்தமிழ் இளைஞனும் : உறவின் நீட்சி! - பகுதி 3


உன் கனவில்
          பாம்பு
          துரத்துகிறது
          நீ
         ஓடுகிறாய்...

குறவன் கனவில்
         அவன்
         துரத்துகிறான்
         பாம்பு
         ஓடுகிறது...

வீரம்
         தொழிலாக்கு.

- காசி ஆனந்தன்

"நல்லாருக்கீங்களாண்ணே! ரொம்ப தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணி குடுங்க" என்றபடி என் அலுவலகத்தில் நுழைந்த அவன் பெயர் வேலவன். வயது சுமார் 19. என் கிராமத்தைச் சேர்ந்தவன். ஒருவகையில் உறவுமுறையுங்கூட.

"என்னடா வேலவா? நீ சென்னையிலயா இருக்க? இத்தன நாளு எனக்குத் தெரியாம போச்சே! என்னடா பண்ற இங்கிட்டு?"

"ஆமாண்ணே! இங்கனதான் ஒரு மெடிக்கல் ஷாப்புல வேலைக்குச் சேந்து ஆறு மாசமாச்சி.மாசம் ரெண்டாயிரம் சம்பளம், ரூமு கொடுக்குறானுவோ. நம்ம வக்கீலு பாரதிண்ணேதான் ஒங்க நம்பர் குடுத்து போயி பார்றான்னு சொன்னாரு. இதுல உங்களுக்கும் ஒரு காப்பி கொடுத்துட்டு போலாம்னு ஓடியாந்தேன்"

அப்போதுதான் அவன் கையில் இருந்த பார்சலைப் பார்த்தேன். பிரதியெடுக்கப்பட்டு சிறுநூல் வடிவில் இருந்த முத்துக்குமாரின் மரணசாசனம். அவனது சம்பளத்தில் கணிசமான அளவு செலவழித்து அவன் அந்தப் பிரதிகளை எடுத்து அவனுக்குத் தெரிந்த நண்பர்கள் ஒவ்வொருவரையும் தேடித்தேடிச் சென்று கொடுத்து வருகிறான். இத்தனைக்கும் அவனது குடும்பத்திற்கு அவனது வருமானம்தான் மிகப்பெரும் ஆதாரமாக இருந்தது. அதில் ஒரு பகுதியைச் செலவிட்டு... என் கண்கள் லேசாகக் கசிந்தன.

நான் பார்த்து வளர்ந்த வேலவனைப்பற்றி எனக்குள் இருந்த சித்திரம் கலையத் துவங்கியது. அவன் பேசி நான் பார்த்ததில்லை. அதிர்ந்துகூட நடக்கமாட்டான். ஏறக்குறைய அவன் ஒரு வாயுள்ள ஊமை என்றே அதுவரை நான் எண்ணி இருந்தேன். ஆனால் இன்று...?

ஈழத்தின் வரலாற்றில் இருந்து தமிழகத்தின் மொழிப்போர், இந்திய வரலாறு, ஏகாதிபத்திய அரசியல், உலக விடுதலைப்போராட்டங்கள் என அவன் அதிவேகத்தில் வீழும் அருவியாய் இருக்க நான் தாங்கும் பாறையானேன்.

அவன் பேசிக்கொண்டே இருந்ததை நான் ஆச்சர்யமாகப் பார்த்தேன். நான் பேசாதிருந்ததை அவன் ஆச்சர்யமாகப் பார்த்தான்.

ஏறத்தாழ ஊமையாய் இருந்த வேலவனை உலக விடுதலைப்போராட்டங்களின் வரலாற்றைப் பேசவைத்தது எது? ஈழம் !

பொறியியலும் இன்னபிற உயர்தொழில்நுட்பப் படிப்புக்களும் படித்த இளைஞர்களை சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்களின் வீடுதேடிச்சென்று காலில் விழுந்து "காங்கிரஸுக்கும் சிதம்பரத்துக்கும் ஓட்டுப் போடாதீர்கள்" என்று மன்றாட வைத்தது எது? ஈழம்!

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்களை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கவைத்து அவர்களைக் கைதுசெய்து போராட்டத்தை ஒடுக்கும் நிலையை உருவாக்கியது எது? ஈழம்!

இன்னும்...இன்னும்... ஏராளமான தமிழக இளைஞர்கள் மனம் கொதித்து செய்வதறியாமல் "என்ன செய்யப்போகிறோம் எம் இனத்துக்கு?" என்று ஏங்கித் தவித்தனர். "உங்களுக்குக் கிடைத்த உன்னதத் தலைவன்போல எங்களுக்குக் கிடைக்கவில்லையே!" என்ற முத்துக்குமாரின் வரிகள்தான் அவர்களின் உள்ளக்குரலாய் இருந்தது. ஆம்! ஒரு உணர்ச்சிப்பூர்வமான பட்டாளத்தை வழிநடத்தவும், அதன் ஆற்றலை ஒருங்கிணைக்கவும் தமிழகத்தின் தலைவர்கள் தயாரில்லை. மாறாக வரவிருந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த ஈழ உணர்வினைக் களப்பலியாக்கவே அவர்கள் விரும்பினர்.

காங்கிரஸை எதிர்க்கிறேன் என்ற பெயரில் "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்!" என்ற அபத்தமான கோஷமும் எழுந்தது. இருபத்தைந்து வருட ஈழப்போராட்டத்தையும் விடுதலைப்போரில் வித்தாகிப்போன மாவீரர்களையும் இழிவுபடுத்தும் வண்ணம் "நான் ஜெயித்தால் ஈழம் அமைத்துத் தருவேன்" என்று வாய்ச்சவடால் அடித்த ஜெயலலிதாவைப் புலம்பெயர் சமூகம் கூட "ஈழத்தாய்" என்று புகழ்ந்தது. "போரென்றால் அப்பாவி மக்களும் சாகத்தான் செய்வார்கள்" என்று அம்மையார் உதிர்த்த முத்து, பாவம் 'செலக்டிவ் அம்னீஷியா' (வார்த்தை உபயம் நன்றி : ஜெயலலிதா) வால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்துக்கு மறந்துபோனது!

இந்த சமயத்தில் இந்திய அரசியலமைப்பைப் பற்றியும் சிலவார்த்தைகள் சொல்லியாக வேண்டும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் மாநில அரசு என்பது ஏறத்தாழ கங்காணி வேலைக்கு ஒப்பானதுதான். அதைத்தவிர வேறு அதிகாரங்கள் ஒரு மாநில அரசுக்குக் கிடையாது. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளிலோ பாதுகாப்புத் தொடர்பான முடிவுகளிலோ ஒரு மாநிலக் கட்சி அல்லது மாநில அரசாங்கம் தலையிடுவதை ஒருபோதும் டெல்லிதர்பார் அனுமதித்ததில்லை. டெல்லிதர்பார் என்பது வெறுமனே காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசிய அரசியல்கட்சிகளால் மட்டும் நடத்தப் படுவதில்லை. அது ஒரு சூதாட்டக்களம்! அங்கு மிகப்பெரும் முதலாளிகளும் அரசியல் தரகர்களும் கோலோச்சும் மாயதர்பார் அது! அதன் வெளியுறவு, நிதி, பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் அனைத்தும் இம்மாதிரியான முதலாளிகள் மற்றும் தரகர்களின் நலனையே முதன்மையாகக் கருதி எடுக்கப்படுகின்றன. இம்மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும்போது, கொள்கைகள் நிர்ணயிக்கப்படும்போது ஒரு மாநிலக் கட்சி அல்லது அரசின் அழுத்தம் என்பது கால்தூசுக்குக்கூட மதிக்கப்படாது.

எனவே வெறுமனே தி.மு.க வையும் கருணாநிதியையும் மட்டுமே குற்றம் சாட்டுவதென்பது குருடன் யானையைப் பார்த்த கதைக்கு ஒப்பானது. அவரது ஆட்சியை எப்போது கவிழ்க்கலாம் என்று சுற்றிலும் நிற்கின்ற ஒரு கூட்டம்... அதனிடம் இருந்து ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள அவர் எத்தகைய ஆட்காட்டி வேலைக்கும், சமரசத்துக்கும் சித்தமாய் இருந்தார். அவர் மட்டும் ஆட்சிக்குப்பதிலாக தமிழ், தமிழர் என்று பேசும் வைகோவையும் ராமதாஸையும் திருமாவளவனையும் ( இவர் இன்று காங்கிரசில் சரணாகதியாகி தன் "அடங்க மறு; அத்துமீறு; திமிறி எழு; திருப்பி அடி!" என்ற கோஷத்துக்கு புதிய பொருள்படைத்து நிற்கிறார் என்பது வேறு!) ஓரணியில் கொண்டுவர முயற்சி செய்திருந்தால்? வைகோவோ அல்லது ராமதாஸோ கருணாநிதிக்கு எதிரான தமது சொந்தப் பகையைக் கைவிட்டு "வாருங்கள் கலைஞரே! போராட்டத்தை முன்னடத்திச் செல்லுங்கள்! உமக்கு முன்னே நின்று உம்மை எதிர்ப்போருக்கு நாங்கள் முகம் கொடுக்கிறோம்!" என்று முதல் கரத்தை நீட்டி இருந்தால்? ஜெயலலிதாவோடு சேர்ந்து தமிழர் தேசியத்தை ஆதரித்தது எப்படி இருந்ததென்றால் ராஜபட்சேவுடன் இணைந்து ஈழப்போராட்டத்தை நடத்துவது போல...!

இவர்கள் யாருக்கும் நிஜத்தில் தமிழ் இனத்தின் மீதான அக்கறை இருந்திருந்தால் தமது அரசியலை மட்டும் முன்னிறுத்தி மக்களைப் பகடைக்காயாக்கி இருக்க மாட்டார்கள்.

ஈழம் என்ற ரோம் பற்றி எரிந்தபோது தமிழக அரசியல் நீரோக்கள் தேர்தல் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள். தம்மை வழிநடத்தும் தலைவனின்றி திசை சிதறி, மனம் சிதறி, இலக்கு சிதறிக் கிடந்தார்கள் தமிழக இளைஞர்கள். இன்னும் நல்ல தலைமைக்கான வெற்றிடம் தமிழகத்தில் அப்படியேதான் இருக்கின்றது. வெற்றிடம் நிரப்பும் முயற்சியில் ஸ்டண்ட் நடிகர்களுக்கும் நப்பாசை!

மொழிப்போர் காலத்தில் தமிழ் இளைஞர்களுடையே இருந்த இன எழுச்சி மீண்டும் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு அரும்பி இருந்த காலகட்டத்தில் அதனை வழிநடத்தும் தலைமையின்றி எல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது. கருணாநிதி மட்டும் துரோகியல்ல. தமிழ், தமிழர் என்று பேசிக்கொண்டு எல்லாவற்றையும் தேர்தலுக்காக அடகுவைத்த அனைத்து தமிழக அரசியல்வாதிகளுமே துரோகிகள்தாம். அவர்கள் ஈழத்துக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை. தமிழகத் தமிழருக்கும் சேர்த்தே துரோகமிழைத்தனர். ஒரு இனத்தின் உணர்வெழுச்சி காயடிக்கப்பட்டது. அவர்கள் மிகத் தந்திரமாக ஏற்கனவே பின்னப்பட்டிருந்த பொருளாதாரத் தேடலுக்கான அன்றாடப் போராட்டம், நுகர்வுக் கலாச்சாரம் ஆகிய வலைகளில் சிக்கவைக்கப் பட்டிருந்தனர். அவர்க்ளைத் தேர்தல் சந்தையில் விலைமாடுகளாக்குவது எளிதான விஷயமாகவே முடிந்தது.

நாடகத்தின் இறுதிக்காட்சி நெருங்கியது. மேமாதம் பதிமூன்றாம் தேதி கடைசிக்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்டு திட்டவட்டமாக முடிவு செய்யப்பட்டிருந்த இறுதிக்காட்சி அரங்கேற்றப்பட்டது. ஒருலட்சம் பிணங்கள் விழுந்தன. ஆறுகோடிப் பிணங்கள் அழுதன!

மேமாதம் பதினெட்டாம் தேதி விடிய விடிய அழுதுதீர்த்த உணர்வுள்ள தமிழர்கள் விடிந்ததும் அன்றைய வயிற்றுப்பாட்டுக்காய் அரக்கப்பரக்க ஓடத் தொடங்கினர்!

(கொஞ்சம் அழுகைக்குப்பின்.... தொடரும்!)

செவ்வாய், 30 நவம்பர், 2010

ஈழமும் ஒரு பாமரத்தமிழ் இளைஞனும் : உறவின் நீட்சி! - பகுதி 2

"சொல்கிறார்கள்:

'கிளியின் கூட்டைத்
திறந்துவிடு'

முரண்படுகிறேன்...

'உடைத்துவிடு'.

- காசி ஆனந்தன்

2006 இல் தொடங்கிய நான்காம் கட்ட ஈழப்போர் மெல்ல மெல்ல அதன் உச்சத்தை அடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் அது பெரியளவு சலனத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை. ஈழத்தின் கிழக்குப்பகுதி சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்ப்ட்டு பிறகு "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில் வடக்கு மாகாணத்தின் மீதான ஆக்கிரமிப்புப்போர் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலுங்கூட தமிழகம் எவ்வித சலனங்களும் இன்றியே இருந்தது. பூநகரி வீழ்ந்த 2008 ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் ஈழத்தின் பொதுமக்கள் உயிரிழப்பு பற்றிய தகவல்கள் ஊடகங்களின் வாயிலாக தமிழக மக்களைப் பரவலாகச் சென்றடையத் தொடங்கின.

பூநகரித் தளம் வீழ்ந்தபோது நான் மிகப்பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். புலிகள் பலவீனம் அடைந்துவிட்டார்களோ என்ற ஐயம் எனக்குள் தலைதூக்கத் துவங்கியது. ஆனால் 2000 மாவது ஆண்டில் ஆனையிறவுப் பெருந்தள முற்றுகைப்போரில் புலிகள் காட்டிய கற்பனைக்கெல்லாம் விஞ்சிய வீரம் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருந்தது. பூநகரியில் புலிகளின் பின்வாங்கல் யுத்தோபாயத் தந்திரங்களின் பாற்பட்டது என உறுதியாக நம்பத் தொடங்கினேன். பூநகரி வீழ்ந்த மிகச்சில வாரங்களுக்குள்ளாகவே கிளிநொச்சி முற்றுகை தொடங்கியது.

மிகக் கடுமையான ராணுவ முற்றுகைக்கு மத்தியில் மேதகு பிரபாகரன் அவர்களது மாவீரர்தின உரையாற்றல் நிகழ்ந்தது. அவரது மாவீரர்தின உரையை உலகமே உற்றுநோக்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான் கவனித்தவரை ஏராளமான இளைஞர்கள் அந்த வருடத்தைய மாவீரர்தின உரையை மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர். நானே எனது நண்பர்கள் சுமார் 20-30 பேருக்கு பிரபாகரனது 2008 ஆம் ஆண்டு மாவீரர் உரையினை இணையதளம் மூலமாக அனுப்பி வைத்திருந்தேன்.

அந்த சமயங்களில் என் சொந்த கிராமத்தில் இருந்து தினசரி 5 தொலைபேசி அழைப்புக்களாவது எனக்கு வரும்... "டேய் மாப்ள... என்னடா ஆச்சி இன்னைக்கி? நம்மாளுவ ஏதாச்சும் அடிச்சானுவளா? எப்படியும் நம்மாளுவ செயிச்சிருவானுவள்லடா? ஒனக்கு எப்டிடா தோணுது?" அவர்கள் குரலில் ஒரு எதிர்பார்ப்பும் பரிதவிப்பும் இருக்கும். உரையாடலின் இறுதியில் நிச்சயம் ஒரு வாசகம் இருக்கும். "நீ வேணா பாரேன் மாப்ள... நம்மாளுவ லேசுப்பட்டவனுவோ இல்ல... கண்டிப்பா ஏதோ ஒரு ஐடியாவோடத்தாண்டா இருக்கானுவோ! திருப்பி அடிக்கிற அடியில சிங்களப்பயளுவோ கொழும்பு போயித்தான் எட்டிப்பாப்பானுவோ" இப்படியாக...

நம்பிக்கையின் ஆறுதலும், பரிதவிப்பின்  ஆற்றாமையுமாக நாட்கள் நகரத் தொடங்கின. பூநகரித் தளத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாளொன்றுக்கு சுமார் 18 மணி நேரங்களை நான் இணையத்திலேயே கழிக்கத் தொடங்கினேன். ஆயிற்று... புத்தாண்டின் துவக்கத்திலேயே கிளிநொச்சி வீழ்ந்தது என்ற செய்திகள் இணையத்தில் மின்னத் தொடங்கிய சில விநாடிகளிலேயே அந்த எழுத்துக்கள் மெல்ல என் விழிகளில் இருந்து மறையத் தொடங்கின... வழிந்து கொண்டிருந்த நீர்ப்படலம் என் விழிகளில் இருந்து காட்சியை மறைக்கத் தொடங்கியது. என் கிராமத்தில் இருந்து அலைபேசிய நண்பன் கதறி அழத் தொடங்கினான். என்னால் பேச இயலவில்லை. அன்று இரவு என் மனம் பல்வேறு திசைகளில் அலைபாய்ந்திருந்தது.

போரின் நேரடி பாதிப்புகள் ஏதுமற்ற எங்களுக்கே இப்படியென்றால் போரின் வலியுணர்ந்த ஈழத்தின் சகோதரர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? இப்போது கற்பனை செய்து பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தீ... ஒவ்வொன்றும் புதுப்புது வெடிகுண்டாய்... மக்கள் பிணங்களாய் கொத்துக் கொத்தாய் சாயும் வலிசுமந்த செய்திகளைத் தாங்கிய தமிழகத்தின் தினசரிகளைத் தொடவே அச்சமாக இருந்தது.

ஒவ்வொரு தமிழனுக்கும் ஈழம் தொடர்பான ஆதங்கம் இருந்தது. இந்தப்போர் நின்றுவிடக் கூடாதா என்று ஒவ்வொரு வீட்டிலும் ஏக்கம் ததும்பி இருந்தது. தமிழர்களின் நெஞ்சில் இருந்த அந்த ஆதங்கமும் ஏக்கமும் மிக எளிதாய் ஒரு பெரும் போராட்டமாய், புயலாய் மாற்றப்பட்டிருக்க முடியும். ஆனால் தமிழகத்தின் காட்சி ஊடகங்களின் துரோகமும் சுயநலமும் ஈழப்போராட்டத்தின் மற்றெந்த துரோகத்தையும்விட எள்ளளவும் குறைந்ததல்ல. தினகரன் அலுவலக எரிப்பையும், அதற்கு முன் கலைஞரின் கைதையும் மணிக்கு நூறுமுறை ஒளிபரப்பி ஆதாயம் தேடிக்கொண்ட சன் டிவி ஈழம்பற்றி மறந்தும்கூட மூச்சு விட மறுத்தது. இன்றளவும் சன் டிவியின் துரோகம் அதற்கான தண்டனையை அனுபவிக்காமலேயே இருந்து வருகின்றது. சன்னின் அயல்நாட்டுப் பார்வையாளர்களில் பெரும்பான்மையான ஈழத்தமிழர்களில் எத்தனை பேர் சன் டிவியையும் அதன் சினிமாத் தயாரிப்புக்களையும் புறக்கணித்திருக்கின்றனர்? 'எந்திரனு'ம் இன்னபிற சன் வெளியீடுகளும் இலங்கையிலும் ஏனைய அயல்நாடுகளிலும் ஈழத்தமிழர்களால் ஆதரிக்கப்பட்டுத்தானே வெற்றியடைந்திருக்கின்றன? சன் மட்டுமல்ல ஜெயா, விஜய், ராஜ் உள்ளிட்ட அத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகளுமே ஈழம் தொடர்பான செய்திகளைப் புறக்கணித்தே வந்தன. சன் டிவி ஆளுங்கட்சி ஊடகம். அதன் புறக்கணிப்பு இயல்பானதே. 'ஈழத்தாய்' என்றழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஜெயா டிவி ஏன் புறக்கணித்தது? நடுநிலைத் தொலைக்காட்சி எனப்பீற்றிக்கொள்ளும் விஜயும் ராஜும் ஏன் புறக்கணித்தன? ஜெயலலிதாவுக்கு ஈழத்தின் மேல் என்றும் பெரிதாய் அக்கறை ஏதும் இருந்ததில்லை. மாறாக ஒரு வெறுப்புத்தான் நிரம்பி இருந்தது. அது பார்ப்பனீயத்தின் வெறுப்பு. இதே பார்ப்பனீய உயர்சாதி வெறுப்பு பின்னாளில் வ்ட இந்திய ஊடகங்களின் மூலமாக மே மாதம் மூன்றாம் வாரத்தில் அப்பட்டமாக பல்லிளித்தது.

இதோ தனக்குள் ஒரு எரிமலையினைச் சுமந்தபடி விடிகிறது ஜனவரி 29. மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் வளாகத்தில் மிகத் தெளிவான ஒரு மரணசாசனத்தை விநியோகித்தபடி ஈழத்தின் தீயை தன்மேல் சுமந்து எரியத் தொடங்கினான் முத்துக்குமார். ஒற்றைத் தீக்குச்சிக்காய்க் காத்திருந்த தமிழக இளைஞர்கூட்டம் சட்டெனப் பற்றிக்கொள்ளத் தொடங்குகின்றது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கூடிய இளைஞர்படை பொங்கி வழியும் அணையென ததும்பிக் கொண்டிருந்தது. ஒரு செங்கல் உருவப்பட்டால் போதும். இந்திய அரசின் துரோக சாம்ராஜ்ய மாளிகை சீட்டுக்கட்டுபோல சரிந்துவிழத் தொடங்கும் வேளையில் வழக்கம்போல தமிழக அரசியல் நரிகள் ஊளையிடத் தொடங்கின.

தனது உடல் ஆயுதமாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற முத்துக்குமாரின் கனவுக்கும் சேர்த்தே மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த துரோகத்தைப்பற்றிய மிகத்தெளிவான கட்டுரையை இயக்குனர் ராம் தனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளார் பாருங்கள்... முத்துக் குமாரனின் இறுதி ஊர்வலம் - எனது சாட்சியம் - இயக்குநர் ராம்.

முத்துக்குமாரின் உடலம் எரிந்துபோன எட்டாம்நாள் என் அலுவலகத்துக்கு வந்தான் பதினெட்டு வயது நிரம்பிய இளமீசை அரும்பிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். அவனது விழிகளில் இருந்தது தமிழரின் எதிர்காலம்...

(... பயணம் தொடரும்)

ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஈழமும் ஒரு பாமரத்தமிழ் இளைஞனும் : உறவின் நீட்சி!

"போராளிகள்
செத்துக் கொண்டிருக்கும்
மண்" என்றார்கள்
என் மண்ணை.

திருத்தினேன்

"போராளிகள்
பிறந்து கொண்டிருக்கும்
மண்". 
       - காசி ஆனந்தன்

அது 1990. நான் ஐந்தாம் வகுப்பில். அன்று மதியம் விளையாட்டுத்திடலில் விளையாடிய பொழுது... விர்ரென்ற சத்தம் காதைப்பிளந்தது. தலைக்கு மேலே ஒரு ஐம்பது அறுபது விமானங்கள் அம்புக்குறி வடிவத்தில் அணிவகுத்து வடக்குநோக்கி விரைந்துகொண்டிருந்தன. எனக்கு பயம் தாங்கவில்லை. என் நண்பன் உற்சாகமாகக் கத்தினான்

"இந்த ஏரோப்ளேன் எல்லாம் பிரபாகரன் அடிச்சி தொரத்தினவை... தோத்தாங்குளி... பயந்து ஓடிவாரானுவோ!" . என் நண்பனின் தந்தை என் பள்ளி ஆசிரியருங்கூட. அவர் வீட்டில் அன்றாடம் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை அடித்துத் துவைத்துக் காயப்போடப் படும். நண்பனுக்கு கேள்விஞானத்தால் வந்த அறிவு!

"எலேய்! யார்ரா அது பிரபாகரன்? அவன் என்ன இத்தினி ப்ளேனையும் அடிச்சி வெரட்டுற அள்வுக்கு என்ன பெரிய்ய்ய சாமியா?"

என்னைப் புழுபோலப் பார்த்த நண்பன் சொன்னான்

"அய்யே! இதுகூட உனக்குத் தெரியாதா? நம்ம சினிமால எல்லாம் அர்ச்சூனு, விசியாந்து எல்லாம் டூப்பு போட்டுத்தான் எல்லாரையும் அடிப்பானுவளாம்... பிரபாகரன் நெசமாவே ஒத்தக்கையால அம்பது பேர அடிப்பானாம்... போடா போ... இதெல்லாம் தெரியாம ஸ்கூலுக்கு வந்துட்ட"

எனக்குக் கொஞ்சம் அவமானமாகவே இருந்தது.. 'சார்' இடம் போய் "யாரு சார் பிரபாகரன்? உங்க புள்ளைக்கு மட்டும் எல்லாம் சொல்லிக் கொடுக்குறீங்க? நாந்தான க்ளாசுல ஃபர்ஸ்ட்டு மார்க்கு... எனக்கும் சொல்லிக் கொடுங்க" என்றேன்.

எங்கள் சார் என் தலையில் லேசாகத் தட்டியபடிச் சிரித்தவர் சொல்ல ஆரம்பித்தார்.

ஈழமும் பிரபாகரனும் எனக்கு அறிமுகமானது அப்போதுதான்... சங்கரன் வாத்தியாருக்கு நன்றி!

நான் பிறந்தது 1980 ஆம் ஆண்டு முற்பகுதியில்... தமிழ்நாடு முழுதும் ஈழ அலை சுனாமி போல அடித்துக் கொண்டிருந்த ஆண்டுகள் அவை. காற்று வெளியெங்கும் ஈழத்தின் ஈரப்பதமே நிரம்பி இருந்தது. அதுவும் நான் பிறந்து வளர்ந்த பகுதி வேதாரண்யம்... இன்றுவரை இந்திய சரித்திரத்தில் இரண்டுமுறை முக்கிய இடம்பெற்ற ஊர்!

எங்கள் ஊர்ப் பெரியவர்கள் எல்லார் வாயிலும் தினமும் உச்சரிக்கப்படும் பெயராக பிரபாகரன் என்ற பெயர் இருந்தது. என் அப்பா அப்போது கோடியக்கரை- அகஸ்தியம்பள்ளி பகுதியில் ரயில்வேயில் வேலைபார்த்து வந்தார். அவர் சொல்லும் கதைகளையும் கூர்ந்து கேட்க ஆரம்பித்தேன்.

அப்புறம் தினத்தந்தியில் வரும் ஈழச் செய்திகளும் என் ஆர்வத்துக்குத் தீனிபோடத் தொடங்கின. அன்றையபொழுதில் தமிழக மக்களைப் பொறுத்தவரை ஈழப்போராளிகள் எல்லாருமே விடுதலைப்புலிகள்தான்... பிரபாகரன் தான்...!

கொஞ்சம் கொஞ்சமாக பிரபாகரன் பற்றிய பிம்பம் என் மனதில் வரையப்பட்டுக் கொண்டே வந்தது... அவன் மிகப்பெரிய வீரன்! அவனை யாராலும் தோற்கடிக்க முடியாது! அவனுடைய துப்பாக்கியில் இருந்து மின்னல்வேகத்தில் குண்டுகள் சீறிப்பாயும்! எப்போதும் ஒரு புயல்போலச் சுழன்றுகொண்டே இருப்பான்... இப்படியாக...!

அப்போது எங்கள் ஊரில் மகாபாரதக் கதை திரௌபதி கோயில் திருவிழாவில் பதினெட்டு நாட்கள் தொடர்ச்சியாகப் பாடப்படும்... நானும் விடிய விடியக் கதைகேட்பேன். கதைசொல்லி அபிமன்யூவைப் பற்றியும் அர்ஜூனனைப் பற்றியும் பாடும்போது நான் பிரபாகரனை உருவகம் செய்துகொள்வேன். பிரபாகரன் என்பவன் எப்படியெல்லாம் சண்டை போடுவான் என்று கற்பனை செய்துபார்ப்பது எனக்கு முக்கியப் பொழுதுபோக்கானது.

1991 மே மாதம். இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் அரங்கம் தகித்துக் கொண்டிருந்தது. பொதுவாகவே தமிழக மக்களுக்கு நேரு குடும்பத்தின் மீதான அபிமானம் அதிகம். காங்கிரஸை அடித்து விரட்டிய திராவிட அரசியல் தமிழக மக்களின் மூச்சில் கலந்திருந்தாலும், பெரியாரின் பாரம்பரியத் தொடர்ச்சியை அவர்கள் நெஞ்சில் நிறுத்தி இருந்தாலும் நேரு குடும்பத்தின் மீதான பற்றினை அவர்கள் அரசியலில் இருந்து தனித்துப் பார்க்கக் கற்றிருந்தனர்.

21.05.1991.

இந்திய மற்றும் ஈழச் சரித்திரங்களின் வரலாற்றுப் பக்கங்களில் இன்னுமோர் கறுப்பு தினமாகிப் போனது! ( அது கறுப்பு தினம்தானா என்பது மிக ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்... அதனை வேறொரு இடுகையில் பார்ப்போம்) தமிழ்நாடெங்கும் தி.மு.க காரர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். என் தெருவில் இருந்த திமுக தேர்தல் பணிமனையை அடித்து நொறுக்கித் தீவைத்த கும்பலில் பதினோரு வயதுச் சிறுவனான நானும் ஒருவன்!

மெல்ல மெல்ல ஜனங்களின் மத்தில் விடுதலைப்புலிகளைப் பற்றிய பேச்சு குறைந்தது. ஒரு அச்சம் நிலவத் தொடங்கியது. ஆனால் அவர்களின் அடியாழத்தில் ஈழம் எப்போதும் உறங்கிக்கொண்டே இருந்தது... எனக்கும்தான்!

தமிழகமேடைகளில் இடியாக முழங்கத் தொடங்கியது ஒருகுரல்! ஏதென்ஸ் தொடங்கி, இங்கர்சால், ஃப்ரான்ஸ், வாஷிங்டன் பிரகடனம் என்று உலக அரசியலையும் வரலாற்றையும் குழைத்து ஒரு காட்டாறாய் மேடைகளில் தமிழைப் பாயவிட்ட அந்தக் குரல் வைகோவினுடையது!வைகோவின் இன்றைய அரசியல் பலவாறு விமர்சிக்கப்படலாம். ஆனால் அவர் தமிழக இளைஞர்களின் நெஞ்சத்தில் மூட்டிய கனல் மிகப்பெரிது! யாராலும் மறுக்க முடியாதது.

எனக்குள்ளும், என் நண்பர்களுக்குள்ளும் ஈழத்தை மீண்டும் தட்டியெழுப்பியவர் அவர்தான்!. நாங்கள் மீண்டும் பற்றியெரியத் தொடங்கினோம். ஈழம் எங்களுக்குக் குளிரில் கதகதப்பாகவும், வெயிலில் சாரலாகவும், தாகத்தில் அமிர்தமாகவும் ஆனது.

2001 ஜூலை. கொழும்பு கட்டுநாயக விமானதளத் தாக்குதல் தமிழகப் பத்திரிகைகளிலெல்லாம் முதல்பக்கச் செய்தியானது. அன்று என் கல்லூரி நண்பர்களிடம் விடியவிடிய விடுதலைப்புலிகளைப் பற்றி கதாகாலட்சேபம் நடத்தியதே என் வேலையாகிப் போனது.

நான் மட்டுமல்ல, என்னையொத்த தமிழக இளைஞர் கூட்டம் முழுதுக்கும் விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் கனவுநாயகர்களாகவே இருந்தார்கள்.

காலம் றெக்கைகட்டிப் பறந்தது! நான்காம் ஈழப்போர் பிறந்தது!

....(பயணம் தொடரும்)

வியாழன், 25 நவம்பர், 2010

வார்த்தை என்னைக் கைவிடும்போது மௌனம் பேசுகிறேன்...உலர்ந்துபோன என் உதடுகளில்
ஒட்டவைத்துப் போகிறாய்
ஒரு புன்னகையை

நீண்டதூரப் பயணங்களின்
ஜன்னலோரங்களில்
எழுதிக் கொண்டே
இருக்கிறேன்
உனக்கான என் கவிதையை

தூக்கம் கலைந்த அதிகாலைகளில்
மீண்டும் தொடர்கின்றன
முத்தம் பற்றிய கனாக்கள்

இமைகளைப் பறித்துக்கொண்ட
மொட்டைமாடி இரவுகள்
எத்தனை யுகங்களாய் 
நீள்கின்றன?

கவிதைக்குச் சொற்களைத்
தேடிக்கொண்டிருந்தபோது
மெல்லக் கடந்து
செல்கிறது
உன் காதல்.


தேவதைச்சாத்தான்கள்

"சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
........................................
........................................
........................................"

மனம் புயல்காற்றில் தெறித்து வானமெங்கும் சிதறிக்கிடக்கும் மேகத்துணுக்குகளைப்போல துண்டு துண்டாய் சிதறிக் கிடக்கின்றது. பி.சுசீலா வழிந்தோடும் துயரத்தை, தனித்திருப்பதன் வேதனையை மெல்ல கீதமிசைத்துக் கொண்டிருக்கிறார். எங்கோ தொலைத்த வாழ்வின் கணங்களைப் பரணில் இருந்து தூசுதட்டப்பட்ட பழைய புகைப்படம்போல ஏக்கத்துடன் மீட்டிக் கொண்டிருக்கிறேன். தைமாசக் காவேரிபோல மெல்லமாய் அசைந்து நகர்கிறது வாழ்க்கை.

எப்போதும் பலவண்ணம் காட்டிச் செல்லும் கலைடாஸ்கோப்பில் தெரிகின்றது வாழ்வின் தரிசனம். கறுப்பு, பழுப்பு, ரத்தச்சிவப்பென மாறிமாறிச் சுழலும் வர்ணங்களால் திருடப்பெற்றுக் கொண்டிருக்கும் விழியின் நிறமறி செல்கள்.

தொலைபேசியின் ஒலிவாங்கி வழியவிட்ட கண்ணீர் ஒரு கடலாய்ப் பெருக்கெடுத்துத் துரும்பாய் மாற்றித் தன்னுள் சுழற்றுகிறது. கண்ணீர் ருசித்து, கண்ணீர் புசிக்கும் நீர்வாழ்த் தாவரமாகிவிட ஏங்குகிற மனசு... எப்போதும் மந்தையில் இருந்து விலகிய குட்டிதானே மனம்நிறைத்துக் கொண்டிருக்கின்றது?

கதறிக் கதறி வறண்ட ஆட்டுக்குட்டியின் நாவு, துரோகத்தின் காயத்தில் இருந்து கசியும் மீதமிருக்கும் குருதியை சப்புக்கொட்டத் துவங்கும் இராப்பொழுதில் செவியைத் துளைத்துக்கொண்டு அப்போஸ்தலர்களின் போதனை....

கனவினை மீறி நீளும் கற்பனைக்கரங்கள் துழாவித் திரிகின்றன தனக்கான ப்ரியங்களை!

காட்சியைப் பறித்துப்போயின கள்சுரக்கும் கண்கள்! இலவம்பஞ்சின் மென்மை இல்லாதிருக்கும் சூன்யம் இறக்கிப் போகிறது பாறாங்கல்லை! தானே தனக்குக் கல்லறையாய், தானே தனக்கு மீளுயிர்ப்பாய், தானே தனக்கு ஆதிசேஷனாய்!

புரோமிதியஸின் நெருப்பு உள்ளமெரிக்கும் வித்தை பழகியது எப்போது? தேவதைச்சாத்தான்களின் விரல்களினின்று நீளும் நகங்களின் கூர்முனையில் கருணையும் மரணமும்...!

திங்கள், 22 நவம்பர், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...21/11/2010


Street demonstration, Petrograd, 18 June 1917. The banner in the foreground reads "Down With The 10 Capitalist Ministers/ All Power To The Soviets Of Workers', Soldiers', And Peasants' Deputies/ And To The Socialist Ministers/ [We Demand That Nicholas II Be Transfered To The Peter-Paul Fortress." 

ரொம்ப நாளாச்சுங்க காத்தாட மனசுவிட்டு அரட்டை அடிச்சி! மனுஷனோட வாழ்க்கையில அன்னாடம் சாப்பாட்டுக்கும், பொழப்புக்கும் நாய் படாதபாடு பட்டுட்டு இருக்குறப்போ அரட்டைதான் விஷயமா என்ன? சரி நாம விஷயத்துக்கு வருவோம்.

1) ஒருவழியா ராசாவோட கிரீடத்தை எறக்கியாச்சு. காங்கிரஸு கவருமெண்டு இனிமே "எங்கமேல எந்த தப்புமில்ல"னு புனிதப்பசுவா வேசம்போட ஆரம்பிச்சிடும். சிவபெருமான் தலைக்குள்ளாற கங்கைய அடக்கி வெச்சிருக்குறமாரி மண்ணுமோகனும் ஸ்பெக்ட்ரம் ஊழல்ல இன்னும் எத்தினி கறுப்பாடுங்க இருக்குங்குற டீடெயில எல்லாம் தன்னோட தலைப்பாக்குள்ள மூடிவெச்சிட்டு அமைதியா புன்னகைப்பாரு. நாமளும் ரொம்ம்ம்...ப டீசண்டான பெரதமருன்னு சொல்லிக்கிடலாம்.

ராசாவும் கனிமொழியும் பவர்புரோக்கருங்ககிட்ட பேசுன டேப்பெல்லாம் வெளியவருது. பதவியப் பத்தி புரோக்கருங்ககிட்டதாம் பேசணும்னா அப்ப மண்ணுமோகனும், மைனா அம்மாவும் சும்மாவா? இல்ல ஆட்டத்துல அவங்களுக்கும் பங்குண்டா? ஞாயமான கேள்விதானே? இந்த லட்சணத்துல காங்கிரஸுகார பெருமக்கள்ளாம் திமுகவால கவருமெண்டுக்கு கெட்டபேருன்னு சலம்பிகிட்டு திரியிறாங்க. ஹ்ம்ம்ம்... "ஈயத்தப் பாத்து இளிச்சிதாம் பித்தாள!"

2) பவருபுரோக்கருங்ககூட கனிமொழியும் ராசாவும் பேரம்பேசுன தேதிய பாத்தீங்களா? 21,மே,2009 ல ஆரம்பிச்சி கிட்டத்தட்ட ஒருவாரம். ரொம்ப சீரியஸா, அழுவாச்சியா எனக்கு அந்த முட்டாயிதான் வேணும்னு சின்னப்புள்ளத்தனமா பேச்சுவார்த்தை நடந்திருக்கு. அடப்பாவியளா! எங்க சொந்தபந்தம் ஒண்ணரை லட்சம் பேரு செத்துப்போயி அவங்க ஒடம்புல சூடு அடங்குறதுக்குள்ள இப்படி நெஞ்ச அறுத்துப்போட்டுட்டு யாவாரம் பேசி இருக்கீங்களே! நீங்கள்ளாம் நெசமாவே மனுசப்பொறப்புதானா? இதுல என்ன மசுத்துக்கு ஒங்களுக்கெல்லாம் தமிழு, மசுரு, மட்டன்னு வெளிவேசம்? பக்கத்து ஊட்டுல எழவு விழுந்தாலும் பாயாசத்துக்கு சண்டை போடுற நீங்கள்ளாம் தலைவருங்க... த்தூ! பேச்சு மட்டும் பெர்ர்ருசா இனத்தைக் காக்க வந்த தேவதூதன் மாதிரி! "ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்; உத்துப்பாத்தா உள்ள ஈறும் பேனுமாம்!"

3) நண்பரு ஒருத்தருகூட ரெண்டுநாளு முன்னாடி பேசிட்டு இருந்தப்போ ஒரு சுவாரசியமான தகவல சொன்னாரு. அவரோட நெலத்துல கொஞ்சூண்டு பகுதியில தமிழ்நாட்டோட பாரம்பரிய நெல்லுவகைய சாகுபடி பண்ணிட்டு இருக்காரு. காட்டுயாணம் னு பேராம். உரம், பூச்சிமருந்து எதுவும் வேண்டாமாம். ஆறுமாசமாவும் அறுவடைக்கி. சக்கரை வியாதிக்கு கண்கண்ட மருந்தாம் அந்த நெல்லுச்சோறு.

கொஞ்சம் யோசிங்க! சக்கரை வியாதிக்காரங்க அரிசிச்சோறு சாப்புடக்கூடாதுன்னு சொல்றாங்க. கோதுமைதான் சாப்புடணுங்கிறாங்க. அப்டின்னா காலங்காலமா அரிசி சாப்பிட்ட நம்ம தாத்தன் பாட்டன்லாம்??? உணவே மருந்து, மருந்தே உணவுன்னு வாழ்ந்த ஒரு பண்பாடும் செத்துப்போச்சு, உணர்வுகளும் மரத்துப்போச்சு!

I think that one possible definition of our modern culture is that it is one in which nine-tenths of our intellectuals can't read any poetry ~Randall Jarrell

4) தொல்பழங்கலாச்சாரத்துக்கு, நாகரீகத்துக்குச் சொந்தமான எல்லா எனத்துலயும் நடுகல் வழிபாடு இருக்குங்க. சமூகத்துக்காவயும், நாட்டுக்காவயும் சண்டை போட்டு செத்துப்போனவங்க நெனவா கல்லுநட்டு கும்புட ஆரம்பிப்பாங்க! காலப்போக்குல இந்தமாரி வீரதீரமா சண்டைபோட்டு செத்துப்போனவங்க அந்தந்த இனக்குழுவுக்கு குலசாமியா ஆயிடுவாங்க. நம்மூரு மதுரவீரன், காத்தவராயன், ஒண்டிவீரன், தூண்டிகாரன் இந்தமாரி சாமியெல்லாம் ஒருகாலத்துல தேசம்காக்க சண்டைபோட்டு செத்துப்போனவங்கதான். ஒரு மனுசன் தனக்காக இல்லாம தன்னோட சமூகத்துக்காவ உசுரத் தியாகம் பண்றப்போ அவன் கடவுள்ங்கிற நிலைய அடஞ்சிடுறான்.

கிட்டத்தட்ட அஞ்சாயிரம் வருசத்துக்குமேல தொன்மையான தமிழ் இனத்துக்காவ சண்டைபோட்டு மண்ணோடயும், நம்ம மனசோடயும் கலந்துபோன நம்ம கொலசாமிகளைக் கொண்டாடுற 'மாவீரர் வாரம்'ங்க இது.  அவங்களோட மூச்சு கலந்துறக்குற காத்தை சுவாசிச்சி, உணர்வு கலந்துருக்குற நெலத்துல வாழ்ந்துட்டு இருக்குற தமிழனா பொறந்த எல்லாரும் இந்த வாரத்துல அவங்க கனவுகளைக் கொஞ்சமாச்சும் அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போறதைப் பத்தி தீவிரமா யோசிக்கணும்.

If you have much, give of your wealth; if you have little, give of your heart.- Arabian Proverb

5) நவம்பர்னா எனக்கு மாவீரர் வாரம் மட்டுமில்லீங்க; அக்டோபர் புரட்சின்னு சொல்லப்படுற ரஷ்யப்புரட்சியும் ஞாவகத்துக்கு வரும். தத்துவங்களும் அறிவியலும் சும்மா வியாக்கியானம் மட்டும் பேசிட்டு இருந்தப்போ மக்களுக்கான தத்துவமா இயங்கியல் பொருள்முதல்வாதத்தை முன்வெச்சி இதுதான் உழைக்கும் மக்களோட தத்துவம்னு மார்க்ஸ் சொல்லிட்டு போனத நெசமாக்கி கண்ணுக்குத் தெரியுற பூலோக சொர்க்கமா கம்யூனிச சமுதாயத்தை லெனின் தலைமையில ரஷ்யமக்கள் உருவாக்கிட்டுப் போன மாசம்ங்க இது! மதங்களும் கடவுள்களும் மனுசங்களுக்கு கொடுத்துருந்த போதைய தெளியவெச்ச கம்யூனிசப்புரட்சியை நாம இந்த மாசத்துல நினைவுபடுத்திக்கலாம் இல்லையா?

வயலாரோட ஒரு கவிதை எனக்கு நினைவு வருது.

"மனிதன் மதங்களைப் படைத்தான்
மனிதனும் மதமும் கடவுளைப் படைத்தனர்
மனிதனும் மதமும் கடவுளும் சேர்ந்து
மண்ணைப் பங்கிட்டுக் கொண்டார்கள்."

6) வழக்கம்போல கடைசியா எனக்குப் பிடிச்ச கவிதை ஒண்ணு. ஜீவா ரஷ்யாவைப் பத்தி எழுதினது:

ஊனில்லை உடையில்லை ஓய்வில்லை வீடில்லை
உற்ற நற்கல்வியில்லை
உரிமையும் கடமையும் ஒத்ததாயில்லை
எனும் ஒப்பாரி அங்கில்லை!
வீணில்லை வேலையற் றோரில்லை தனியுடமை
வெம்பூத ஆட்சியில்லை
வீழ்வில்லை ரஷ்யாவில் மேலில்லை கீழில்லை
வெற்றி எல்லோர்க்கும் எல்லை!

சனி, 20 நவம்பர், 2010

தீச்சுமக்கும் விழிகள்


நெருப்பைச் சுமக்கும் கருப்பை
பாரதியின் தாய்க்கு மட்டுமல்ல...
முத்துக்குமாரா!
உன் தாய்க்கும்தான்.

நீ ரௌத்திரம் பழகியதில்
கருகிப்போயின
பலரது முகமூடிகள்

கொஞ்சம் விழிதிறந்து பார்!

தேசிய வரைபடத்தில்
சில கிழிசல்கள்...
ஒட்டுப்போட முயலும்
ஓட்டுக்கோமாளிகள்

காதைக் கிழிக்கும்
ஜெய்ஹிந்த் கோஷம்...
மெல்லத் தேய்கிறது
உரிமைப்போரின் கீதம்

உணர்வினை விற்று
உணவு வாங்கும் கூட்டம்...
ஓலமிடுகிறது
தமிழனின் தொன்மை.

நரிகளின் கூட்டம்
ஒரு புலியின் சவம்
பார்த்து நடுங்கின.

புலிகளின் கூட்டமோ
நரிகளின் ஒப்பாரிக்கு
மயங்கிய கொடுமை...
ஒப்பாரியாய் 'ஜனகனமண'

சொந்தச் சோதரர்கள்
துயரத்தில் சாதல்கண்டும்
அந்திக்கு பின்தொடரும்
காரிருளாய் மனம் இருண்டு
சிந்திக்கும் திறனிழந்த
'செந்தமிழ்' மாக்களை நீ
நிந்தித்தே எரிந்துபோனாய்!

இன்னும் கனிந்து கொண்டிருக்கின்றது
எம் கண்களுக்குள்
நீ மிச்சம் வைத்த தீ!
ஆகுதியாய் முளைப்பார்கள்
முத்துக்குமார்கள்
என்றென்றும்!

நவம்பர் 19 : மாவீரன் முத்துக்குமார் பிறந்ததினம்

(நெருப்பைச் சுமக்கும் கருப்பை - நன்றி வைரமுத்து)

திங்கள், 8 நவம்பர், 2010

அஸ்வத்தாமாக்கள் சாவதில்லை!அஸ்வத்தாமனின் மனம் எரிந்துகொண்டிருந்தது. தனிமையும், துக்கமும், நிராசையும், கோபமும் அவனை அலைக்கழிக்க தன்னை துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் ஆற்றாமையின் சுவாலையும் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.

'துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டுவிட்டது. நான் தனியனானேன். எல்லோரும் என்னைக் கொண்டாடிய காலம் கனவாய்ப் போய்விட்டது. இன்று நான் யாருக்கும் உபயோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குருஷேத்திரக் களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனும் தன் பங்கை நடத்தி அழியாப்புகழ் பெற்று சுவர்க்கம் அடைந்தனர். தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியா! என் உயிரே! நண்பா! என்னால் ஏதும் கையாலாகாது என்றெண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? என்ன செய்வேன் இனி?'

அது குருஷேத்திரத்தின் பதினெட்டாம் நாள் படுகளம். எங்கும் மரண ஓலம் மட்டுமே எஞ்சி இருந்தது. குருஷேத்திரம் எனப்படும் ஸமந்தபஞ்சகத்தின் ஓரமாய் இருந்த குளக்கரையில் துரியோதனன் வீழ்ந்துகிடந்தான். ராஜ்யக் கனவுகள் கலைந்து மரணத்தில் சாயை கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகத்தில் கவியத் துவங்கி இருந்தது. துரியனின் உதடுகள் வெடித்துக் கிடந்தன. இமைகள் கிறங்கி இருந்தன. துரியனின் தலையைத் தாங்கி இருந்த அஸ்வத்தாமன் சிறிது நீரள்ளி துரியனின் உதடுகளில் தடவினான்.

"துரியா! என் அரசே! என் தோழனே! கொஞ்சம் கண்திற! எனக்குக் கட்டளை இடு" பதற்றத்தோடு கெஞ்சினான் அஸ்வத்தாமன்.

துரியன் மெல்ல இமை திறந்தான்.

"அஸ்வத்தாமா! எல்லாரும் மாண்டார்களா? என் பந்துமித்திரர் எவரேனும் எஞ்சி இருக்கிறார்களா? தர்மத்தின் பக்கம் நின்று என் ராஜ்யம் காக்க நான் முன்னெடுத்த போர் முடிந்ததா? குந்தியின் புத்திரர்கள் எப்படி நண்பா குருவம்சத்தின் ராஜ்யபாரத்தை சொந்தம் கொண்டாட முடியும்? கடைசியில் அதர்மம் வென்றதா? எல்லாரும் மாண்டபின் நான் மட்டும் ஏன் இன்னும் உயிர்த்திருக்கிறேன்?"

"இல்லை துரியா! இன்னும் யுத்தம் பாக்கி இருக்கின்றது. உன் கட்டளைக்காகத்தான் காத்திருக்கிறேன். ஒரு சொல்... பாண்டவரின் வம்சத்தை வேரறுத்து வருகிறேன். இந்த யுத்தத்தின் இறுதிப்பலியாக பாண்டவர்களின் தலைகள் இருக்கட்டும். கட்டளையிடு நண்பா!"

துரியன் முகத்தில் உயிரின் மலர்ச்சி துளிர்த்தது. சற்றே உடலை அசைத்து எழுந்தான். பிளக்கப்பட்ட தொடையின் வாதையில் அவன் முகத்தில் வேதனையின் ரேகைகள். தன் குருதி கலந்த குளத்து நீரள்ளி அஸ்வத்தாமனின் கைகளில் தெளித்தான். "இக்கணம் முதல் கௌரவசேனையின் இறுதி சேனாதிபதியாக நீயிருப்பாய் அஸ்வத்தாமா. வஞ்சம் முடித்து வா! உன் வரவுக்காய் என் மூச்சு காத்துக் கொண்டிருக்கும்"

அஸ்வத்தாமா எழுந்தான். மிச்சமிருக்கும் தன் ஆயுதங்கள் அனைத்தும் சேகரித்தான். அபாண்டவம் என்னும் தன் அஸ்திரத்தைக் கையிலெடுத்தான். மீதம் நடக்க இருப்பவற்றையும் காணச்சகியாத சூரியன் தன் மறைவிடம் புகுந்தான்.

இரவு எல்லாவற்றையும் விழுங்கிக் கொள்கிறது. அது தன் கர்ப்பப்பையில் எல்லா ஜீவராசிகளையும் பாதுகாக்கிறது. அதன் கதகதப்பில் அனைத்தும் துயில் கொள்கின்றன. ஆனால் நிராசையின், துயரத்தின், தனிமையின், துரோகத்தின் தகிப்பை, வெக்கையை உணர்ந்தவர் இரவின் கதகதப்பில் உறங்குவதில்லை. அவர்கள் இமைகள் மூடா நெடுங்கதவமாகி இரவை விழுங்கிச் செரித்துவிட முயன்றுகொண்டே இருக்கின்றன. அவர்களின் துக்கம் பெரும் ஓலமாகி தனிமையின் நிசப்தத்தை விரட்டிவிட முயன்றுகொண்டே இருக்கின்றது.

அஸ்வத்தாமன் அந்த இரவில் விழித்திருந்தான். பாண்டவர் பாசறையில் புகுந்தான். எதிர்த்தவர், உறங்கியவர் என வேறுபாடற்று இருக்க இமைகளை மூடிக்கொண்டே தன் ஆயுதங்களைப் பிரயோகித்தான். எங்கும் எழுந்த மரணஓலம் அவனை உன்மத்தனாக்கி இருந்தது. மானுடத்தின் ஆதிச் சுவையான வன்முறையை, குருதிச் சுவையை அவன் பரிபூரணமாக ருசிக்கத் துவங்கி இருந்தான். ஒவ்வொரு தலை வீழும்போதும் அவன் கரங்களுக்குள் புதிய ஜீவன் பாய்ந்தது. அவன் புலன்களனைத்தும் பரிபூரண விழிப்பில் இருந்தன. அவை மரணத்தின் விளையாட்டை உணர்ந்து கிளர்ந்தன.

அன்றைய பகலின் இழப்பைவிட அஸ்வத்தாமன் இரவில் தனித்து நடத்திய வேட்டை குரூரமாக இருந்தது.

'அதோ உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என் ஜென்மசத்ருக்கள்! என் பழி முடிக்கும் காலம் இதோ...'

அஸ்வத்தாமனின் வாளின் நுனியில் அறுந்து விழுந்தன ஐந்து தலைகள். ஆவேசத்துடன் பாய்ந்து அள்ளிக்கொண்ட அஸ்வத்தாமா காற்றினும் கடிதாய் விரைந்தான்.

"துரியா! இதோ பழிமுடித்தேன். இதோ உன் எதிரிகளின் உயிரற்ற தலைகளைப் பார்! யுத்தம் முடிந்தது. முடித்தவன் அஸ்வத்தாமன்! நீ கடைசியில் ஜெயித்துவிட்டாய் துரியா! திற! உன் விழிகள் நிறைய நிரப்பிக் கொள் இந்தத் தலைகளை!"

பழிதீர்க்கக் காத்திருப்பவர் எப்போதும் ஒரு தவமாகவே அதைக் கைக் கொள்கின்றனர். அவர்களின் புலன்களனைத்தும் ஒரு புள்ளியில் ஒடுங்கி இருக்கின்றன. வஞ்சம் தீர்க்கும் அந்த ஒற்றைப்புள்ளியை நோக்கியே அவர்களின் பாதை நீள்கிறது. பாதையெங்கும் நிறைந்திருக்கும் ஓலமும், குருதியின் வீச்சமும் அவர்களை உண்டு அவ்ர்களை உரமூட்டுகின்றன. இறுதிப்புள்ளியில் வஞ்சம் தீர்ப்பவரது அத்தனை புலன்களும் ஊழிக்காலப் பெருவெள்ளமாய்த் திறக்கின்றன. அதன் வீர்யத்தில் அத்தனை சாஸ்திரங்களும், தர்மங்களும் தாமாகவே ஒடுங்கிப் போய்விடுகின்றன. பழிதீர்த்தலின் உச்சத்தில் அவன் ஸ்கலிதம் நீக்குகிறான். லேசாக நடுங்குகிறான்.

துரியன் விழித்தான். துரியனது குரல் அஸ்வத்தாமனை பூமிக்கு இழுத்து வருகின்றது.

"மூடனே! ஆத்திரத்தில் அறிவிழந்து போனாயோ! இந்தத் தலைகளைப் பார்! அட மடையா! இவர்களின் இளமைவடியும் முகங்களைப்பார்! இளம்பஞ்சபாண்டவர்களைக் கொன்று அவர்களின் தலையைக் கொண்டு வந்திருக்கிறாயே! மூர்க்கனே! பாண்டவர்களைக் கொன்றுவருகிறேன் என்று கூறிய வார்த்தைகளை நம்பி மோசம்போனேனே! என் இறுதிப் பார்வையை நிராசைப்பார்வையாக்கிவிட்டாயே!"

வேதனையுடன் மூடிய துரியனின் விழிகள் அதன்பின் திறக்கவே இல்லை.

அஸ்வத்தாமன் விதிர்விதிர்த்துப்போனான். 'பாண்டவர்களுக்குப்பதில் அவர்கள் பிள்ளைகளையா கொன்றேன்? பாவிகள் இப்போதும் தப்பித்தார்களா?' மடங்கி அழத் தொடங்கியவனின் தோள்தொட்டான் கிருஷ்ணன்.

"அஸ்வத்தாமா! யுத்தம் முடிந்தது. இன்னும் ஏன் வஞ்சத்தோடு திரிகிறாய்! நீ பிராமணன்... கடமையை முடிப்பது மட்டும்தான் உன் பணி! இதோ சுற்றிலும் பார்... மகாபாரதமெங்கும் நிறைந்துகிடக்கின்றனர் நிராசையும், தனிமையும், துரோகமும் பீடிக்கப்பட்டோர்! அதோ பார்! ஏகலைவனை... உன் தந்தையின் துரோகத்தால் வனமெங்கும் பித்தனாய்த் திரிந்து கொண்டிருப்பதை... இன்னும்... இன்னும் துக்கத்தாலும், துரோகத்தாலும் புறக்கணிப்பாலும் எத்தனைபேர்... அம்பை தொடங்கி,சிகண்டியும், அரவானும், கர்ணனும்... இதோ உத்தரை முடிய... வேண்டாம் அஸ்வத்தாமா... உன் வஞ்சத்தை இதோ இந்த ஸமந்தபஞ்சகத்தோடு இறக்கிவைத்துவிடு. இல்லையேல் அது உன்னைத் தின்று செரித்துவிடும்."

அஸ்வத்தாமா கைகூப்பினான். "இல்லை கிருஷ்ணா! என்னால் இனி உறங்கமுடியாது. பாரதயுத்தம் நெடுகிலும் பாண்டவர்கள் துரோகத்தாலும் வஞ்சனையாலும் மட்டுமே வென்று வந்திருக்கிறார்கள். அஸ்வத்தாமா இறந்தான் என்று பொய்யுரைத்து குருத் துரோகத்தின்மூலம் என் தந்தையைக் கொன்றார்கள். ஆண்மையற்ற சிகண்டியை முன்னிறுத்தி குலத்தின் பிதாமகனான பீஷ்மனைக் கொன்றார்கள். நிராயுதபாணியான கர்ணனைக் கொன்றார்கள். மற்போரில் இடுப்புக்குக் கீழே தாக்குதல் முறையல்ல என்று தெரிந்தும் இதோ என் ஆருயிர் துரியனை வஞ்சகமாய்க் கொன்றார்கள். இன்னும்... இன்னும் பாரதயுத்தமெங்கும் துரோகம் மட்டுமே ஆட்சிசெய்து வந்திருக்கின்றது. கிருஷ்ணா! இனி நீயிருக்கும்வரை பாண்டவர்களைக் கொல்லமுடியாது என்று எனக்குத் தெரியும். நான் போகிறேன் கிருஷ்ணா! இன்னும் சொல்கிறேன் கேள்! சலனமற்று ஓடும் நதிபோன்ற வாழ்க்கையில் துரோகம் ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அதன் சுழலில் சிக்குபவர் எப்போதும் இறப்பதில்லை. அவர் கண்கள் என்றும் மூடுவதில்லை. துரோகிக்கப்பட்டவரது தீனக்குரலால்தான் பூமியெங்கும் நிரம்பியிருக்கின்றது. அதன் ஒலியில் நான் கலந்திருப்பேன் கிருஷ்ணா! பாண்டவர்களின் செவிப்பறையை அந்த ஒலி காலாகாலத்துக்கும் கதவடைத்துப் போடட்டும். அவர்களின் நெஞ்சம் இருளால் பீடிக்கப்பட்டதாய் இருக்கட்டும்"

அஸ்வத்தாமா காற்றோடு கரைந்துபோனான். யுகாந்திரங்களைத் தாண்டியும் அவன் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தாலும் வஞ்சனையாலும் யாரெல்லாம் பீடிக்கப் பட்டிருக்கின்றனரோ அவர்களில் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறான்.

அஸ்வத்தாமா இறக்கவில்லை. அஸ்வத்தாமாக்களுக்கு என்றும் சாவில்லை!

சனி, 30 அக்டோபர், 2010

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்...! பதிவுலகில் அடியெடுத்து வைக்கும் ரதியக்காவுக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும்!

"ஈழத்தின் நினைவுகள்" என்ற பெயரில் நெஞ்சை உலுக்கும் கட்டுரைத் தொடரை வினவு பக்கங்களில் எழுதிவந்த ரதியக்கா அந்த தொடருக்குப்பின் தனக்கென தனி வலைப்பூ ஒன்று துவங்காமலேயே இருந்து வந்தார். நான் சிலமுறை கேட்டும் அவர் வலைப்பூ துவங்குவதில் ஆர்வம் இல்லாமலேயே இருந்து வந்தார்.

இன்று எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்த உடன் எனக்கு இன்ப அதிர்ச்சி! நானும் பதிவராயிட்டேன் என்று அக்கா மகிழ்ச்சியுடன் அனுப்பி இருந்த மின்னஞ்சல் பார்த்தேன்.

வாழ்த்துக்களும் நன்றிகளும் சமர்ப்பணம் அக்கா! ஈழத்தின் வலியை, இன்னும் உயிர்ப்போடிருக்கும் கனவுகளை, தொல்தமிழ் பண்பாட்டின் விழுமியங்களை... இன்னும் இன்னும் ஏராளமாய் உங்கள் ஈரம் சுமந்த எழுத்துகளில் காண ஆவலாக இருக்கின்றோம்.

மொக்கைகளும், சிறுமைப் புத்திக்காரர்களும் மலிந்திருக்கும் தமிழ் வலையுலகில் ரதியக்கா போன்றோரின் வருகை இன்னும் ஏராளமாக நிகழவேண்டும். எப்படி தமிழ் எழுத்துலகில் சிறுபத்திரிகைகள் ஒரு புதிய சகாப்தத்தைத் துவங்கினவோ, அதே போல இன்று வலையுலகம் திகழ்கின்றது. தமிழின், தமிழரின், தமிழ் தேசியத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலை நிகழ்த்த ரதியக்கா போன்றோர் விளங்கிட...

வாருங்கள் அக்கா! உங்களையும் ஒரு பாடலோடு வரவேற்கிறேன்!

அக்காவின் வலைப்பூ முகவரி:    http://lulurathi.blogspot.com/செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஒற்றையடிப்பாதை

சீரியல் பல்புகளின் வெளிச்சச்சிதறல்களில்  
மேய்ந்து கொண்டிருக்கும்
சுடிதார் மகளிரின் புன்னகைகள் 
பர்ஸ் பிரித்து அலைபாயும் 
டக்-இன் கணவர்கள் 
பாசத்தோடு காத்திருக்கும் கல்லாக்கள் 
பாதையெங்கும் சிதறி இருக்கும் 
ஐஸ்க்ரீம் துளிகள்
வறிய புன்னகையோடு 
கடந்து செல்கிறேன் 
பெறுவதற்கும் தருவதற்கும் 
ஏதுமின்றி!
***************************************

வியாழன், 21 அக்டோபர், 2010

இலையுதிர்காலம்சுத்தம் செய்யத் திறந்த
டிராயரில்
சேமித்துவைத்த உதிர்ந்த பூக்களும்
உடைந்த வளையல்களும்
எச்சிலின் ஈரம் சுமந்த சாக்லேட் காகிதங்களும்

ஒரு காதல் வாழ்ந்திருந்ததின்
தொல்லெச்சங்களாய்

கன்னத்தில் படிந்த
கண்ணீர்க் கோடுகளில்
மரித்துக் கொண்டிருக்கும் ஒருவனின்
விதிரேகை

மேகம் தொலைத்து ஒற்றையாய்
அலையும் சோகை நிலா

மெல்லக் காற்றில் கரையும்
விம்மலின் ஓசை

எங்கிருக்கிறாய் நீ?
*****************************************************

சனி, 16 அக்டோபர், 2010

நீயெல்லாம் ஒரு பதிவரா... ச்சீ!மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. யாரோ உள்ளுக்குள் அமர்ந்து நெஞ்சைப் பிசைகிறார்கள்....கண்கள் பொங்கி வழிகின்றன... வழியும் விழிநீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே எழுதுகிறேன்.

(ம்ஹூம்... இப்பிடி எளுதுனா வேலைக்காவாது... மச்சி கொஞ்சம் மசாலாவத் தூவுடா...!)

ஏன்யா... நீயெல்லாம் ஒரு மனுஷனா? உனக்கெல்லாம் பிரபல பதிவர்னு பட்டம் ஒருகேடா? எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு நீயி ஞாய தர்மம் பேசிகிட்டு திரியிற? உங்கூட பேசுனதுக்கும் பழகுனதுக்கும் இப்பிடித்தான் முதுகுல குத்துவியா?

கழுத கெட்டா குட்டிச்செவருங்குறமாரி எப்பவும் உங்கூட சேந்து சுத்திட்டு இருக்கான் அந்த சினிமாக்காரன். அவன் மூஞ்சியப்பாரு! எப்பவும் மொசப் புடிக்கிற கொரங்குமாரி வெச்சிட்டு...

உங்க ரெண்டு பேரையும் நல்லவங்கன்னு நம்பி உங்களோட சேந்தேன் பாரு... என்னை மாட்டுச்சாணியும் மனுசச்சாணியும் கலந்த ஐட்டத்துல முக்கி எடுத்த செருப்பால அடிச்சாலும் தகும்யா!

உன்னையும் நல்லவன்னு நம்பி நாலு பேரு படிச்சிட்டு ஜிஞ்சக்கா போடுறானுவ பாரு அந்த அறிவுசீவியளச் சொல்லணும்யா! ஏதோ ஊருல இவன் மட்டும்தான் அறிவாளி மாரியும், மத்தவங்கள்லாம் மடப்பய மக்க மாரியும் நீ அடிக்கிற கூத்துக்கு ஒருநாள் முடிவு வரும்யா! பாத்துட்டே இரு. நான் சாபம் உட்டா பலிக்கும்யா.

இப்ப நான் எளுதுறத பாத்துட்டு " நீங்களா இப்படி கண்ணியக்குறைவா எழுதுறதுன்னு நாலு அறிஞ்சவுங்க தெரிஞ்சவுங்க வருத்தப்படுவாங்கன்னு எனக்குத் தெரியும். அதனால இப்ப பாரு... உன்னை டீசண்டா திட்டிக்காட்டுறேன்.

நீங்களா... அது நீங்களா? வார்த்தைகளுக்கு வக்கிரத்தில் குழைத்த வர்ணங்களைப்பூசியும் உங்களால் பேசமுடியும் என்பதை என் புத்தி அறியத் துவங்குகையில் விண்டுபோகும் மனச்சிதறல்களின் துணுக்குகள் என் மென்னுடலெங்கும் குருதிபார்க்கும் தருணங்களிலும் உங்களோடான என் உரையாடலைத் தொடர்வதில் எவ்விதத் தடையுமற்றுத் தனித்திருக்கும் இராக்காலப் புலம்பல் கீதங்களின் வலிவழியும் வரிகளைப் பிழைதிருத்தம் செய்யத் துவங்கும் என் விரல்கள் எப்போதும் வழிய விட்டிருக்கும் உன்னதமான அன்பினைக் கொச்சைப்படுத்த நீவிர் இருவரும் துவங்கிய வினாடிப்போதுகளில் உள்ளிருந்து கசிந்த கோபத்தின் வீர்யமடக்கித் தருணம் பார்த்து நான் காத்திருப்பேன் என்பதை நீங்கள் உணராமல் போனபோதிலும்...

(யோவ் புரியிற மாதிரி திட்டுய்யா அப்டீன்னு யாரும் திட்டவேணாம்! அவ்ளோ வலி...!)

நீங்கள் என்னோடு நட்பாக இருந்த காலகட்டங்களில் என்னுடனான சாட்களில் நீங்கள் எத்தனை பேரைத் திட்டி இருக்கிறீர்கள் ( அஃப்கோர்ஸ்... நானும்கூடத்தான்), எத்தனை விஷயங்களைப் பற்றிக் நக்கலாகவும், கிண்டலாகவும், புனைவாகவும் கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள் என்றெல்லாம் சாட் ஹிஸ்டரியை வெளியிட்டு எனக்கு நானே இழிவை ஏற்படுத்திக் கொள்ளமாட்டேன் என்றபோதிலும், நீங்கள் அந்த சாட் ஹிஸ்டரிகளை வெளியிடும்பட்சத்தில் நானும் 'வெளிக்குப்'போவேன்... சீச்சீ... நானும் வெளியிடுவேன் என்பதனைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை எப்போதும் தங்களுடன் திரியும் அந்த மரணமொக்கையிடமும் தாங்களே தெரிவித்துவிடவும். இல்லையெனில் நான் எனது வழக்கறிஞரை ஆலோசித்து இது தொடர்பான நோட்டீஸ் விடுவதைப்பற்றி யோசிக்க நேரிடும்.

டிஸ்கி 1: யாரைத் திட்டுகிறேன், எதற்குத் திட்டுகிறேன் என்று தெரிந்தால்தான் பின்னூட்டமிடுவேன் என்பவர்களுக்கு..... கே.ஆர்.பி.செந்திலையும், அவருடன் எப்போதும் உலகத்திலேயே தான்தான் யூத் என்று மிதப்பில் திரியும் சினிமாக்காரரையும் தான்  திட்டுகிறேன். ஏன் என்றால் போன ஏப்ரல் மாதம் நாங்கள் மூன்றுபேரும் நுங்கம்பாக்கம் ஒருசோறு ஹோட்டலில் பிரியாணி சாப்பிடப்போனோம். பிரியாணி மிகவும் ருசியாக இருந்தாலும் என்னால் முழுதும் சாப்பிட முடியாமல் மீந்ததை பார்சல் கட்டுமாறு கேட்டபோது "மீந்தத ஏன்யா கட்டச் சொல்லுற? புதுசா பார்சல் வாங்கிக்கலாம்" என்று சொல்லி என்னை இழிவு படுத்தினார் கே.ஆர்.பி செந்தில். எல்லாம் பணக்கொழுப்பு இல்லையா? அவர்தான் அப்படி என்றால் அந்த சினிமாக்காரர் இன்னொருமுறை "வாய்யா! பஃபேக்குப் போலாம் என்று சொல்லி ஒரு சைவ உணவகத்தில் ப்ஃபே என்று சொல்லி வழங்கப்பட்ட இட்டிலியையும், ஊத்தாப்பத்தையும், ஒரு வாய் ஜிகர்தண்டாவையும் சாப்பிட வற்புறுத்தி என்னைக் கேவலப் படுத்தியதற்காகத்தான் திட்டுகிறேன்.

ஏன் அப்போதே திட்டவில்லை என்று கேட்க வேண்டாம். என் இஷ்டம்... நான் எப்போது வேண்டுமானாலும் திட்டுவேன். எப்படி வேண்டுமானாலும் திட்டுவேன். எனக்கு இன்றுதான் ரோஷம் வந்தது... நான் என்ன செய்ய?

டிஸ்கி 2 : எனக்கும் கே.ஆர்.பிக்கும் இருந்த உறவு இன்றுடன் ரத்தானதால் ஜூலைமாதம் தேவி தியேட்டர் சென்றபோது கூட்டநெரிசலில் சிக்கி அறுந்துபோன அவரது செருப்பைத் தைக்க நான் கொடுத்த பதினைந்து ரூபாவை உடனடியாக அவர் எனக்கு மணியார்டர் செய்யவேண்டும்.

டிஸ்கி 3 : இந்தப்பதிவின் ஹிட்ஸ் சரசரவென எகிறினால் தமிழ் இணையப் பதிவுகளை வாசிப்பவர்களின் மனநிலையைப்பற்றிய என் சந்தேகம் மேலும் வலுக்கும். இந்த எச்சரிக்கையையும் மீறி ஹிட்ஸ் க்ராஃப் ஏறினால் சுழற்சி முறையில் மாதம் ஒரு பதிவரை நான் திட்டிப் பதிவு போடுவேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(இவ்விடம் சாட் ஹிஸ்டரிகளின் ஸ்க்ரீன்ஷாட்டுகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் நியாயவிலையில் விற்கப்படும்)

வெள்ளி, 15 அக்டோபர், 2010

"வர்றியாடி..." (கிராமத்துக்கதைகள்-3)"வர்றியாடி..." இந்த வார்த்தய சீதாலெச்சுமியப் பாத்து வாய் உட்டு சத்தமாவோ இல்லன்னா மனசுக்குள்ளாறயோ கேக்காத ஆம்பளைங்க ஊருக்குள்ளாற இல்லன்னே சொல்லலாம். ஒத்தமரமா நிக்கிற பொண்டுவள பாத்தா கொஞ்ச நாழி நெழலுக்கு ஒண்டிட்டு போவலாம்னு நெனக்கிற ஆம்பளங்கதானே நாட்டுல நெறஞ்சிருக்காங்க!

சீதாலெச்சுமி நாலும் பொட்டப்புள்ளயா பொறந்த குடும்பத்துல அஞ்சாவதா பொறந்தவ. "அஞ்சு பொண்ணு பெத்தா அரசனும் ஆண்டி"ன்னு ஊருக்குள்ளாற ஒரு சொலவடை சொல்லுவாங்க. பெத்துப்போட்ட களப்புலயே கண்ண மூடிட்டா பெத்தவ. அக்கச்சிமாருங்ககிட்ட அம்மாவப் பாத்து வளந்த சீதாலெச்சுமி சின்ன வயசுலயே சூட்டிகையா இருப்பா. அதுனால அக்கச்சியளுக்கும் செல்லமாத்தான் வளந்தா. வயசுக்கு வந்தவொடனே நல்லா பசேலுன்னு இருக்குற நெல்லு கதுரு மாரி நெகுநெகுன்னு நின்ன சீதாலெச்சுமியக் கண்டு ராத்தூக்கந்தொலச்ச ஆம்பளைங்களவிட வயிறெரிஞ்ச பொண்டுவதா ஊருல அதிகம். நல்லாக் கனிஞ்ச நாவப்பழம் கணக்கா அப்பிடி ஒரு நெறம் அவளுக்கு.

பேருலமட்டுந்தா லெச்சுமி இருந்துச்சே ஒழிய குந்துமணி தங்கத்துக்கு வக்குல்லாம இருந்தாரு சீதாலெச்சுமியோட அப்பெ. ஒருவழியா நாலு பொண்ணுவள கரையேத்துன பொறவு சீதாலெச்சுமிய என்னடா பண்ணுறதுன்னு அவ அப்பங்காரன் முழிச்சிட்டு இருந்தப்பதாம் அவ வாழ்க்கயில வந்துநின்னா நாட்டாம ஊட்டுல பண்ணையம் பண்ணிட்டு இருந்த மாடச்சாமி. வயக்காட்டுலயும், களத்துமேட்டுலயும், கலித்த அய்யனாரு கோயிலு ஆலமர நெழல்லயும் பொத்திப்பொத்தி வளத்தாங்க காதல ரெண்டுபேரும்.

கத்திரிக்கா முத்துனா கடக்கி வந்துதானே ஆவணும்? அரசபுரசலா சேதி வெளிய வந்து காத்துல பரவ அலறிப்பொடச்ச சீதாலெச்சுமியோட அப்பங்காரெ சந்தக்கி சந்த மாடு ஓட்டிட்டுப்போயி யாவரம் பண்ணுற ஒறமொறக்கார கருப்பையன புடிச்சி கல்யாணத்த முடிச்சி வெச்சிட்டு பொண்டாட்டி போன தெச பாத்து போயிச் சேந்தாரு.

சீதாலெச்சுமியும் வேற வழியில்லாமத்தா கழுத்த நீட்டுனா. கல்யாணத்துக்கு எட்டுநாளக்கி மின்னாடி அய்யனாரு கோயிலு ஆலமரத்துக்குப் பக்கமா மாடச்சாமியப் பாத்து மாலமாலையா கண்ணால தண்ணி உட்டு அழுதா. அவ அழுத கண்ணீரு ஆறாப் பெருகி ஆனை குளிச்சேற, கொளமாப் பெருகி குதுர குளிச்சேற... காலங்காலமா காதலிச்சவன கல்யாணம் பண்ணிக்க முடியாத பொண்டுவ எயலாமையிலயும், ஏக்கத்துலயும் சொல்லுற அதே வார்த்தய மாடச்சாமிகிட்டயுஞ்சொன்னா... " எனக்கு வேற வழியில்லய்யா. என்ன மறந்துட்டு வேற நல்ல பொண்ணா பாத்து கட்டிக்கய்யா"ன்னு சொல்லிட்டு எந்திரிச்சி போனவதான். அதுக்கப்பறம் அவ வாழ்க்க வேற, அவம் வாழ்க்க வேறன்னு ஆயிப்போச்சு.

கல்யாணம் கட்டி நாலு வருசத்துல மூணு ஆம்பிளப் புள்ளய பெத்துப்போட்டா சீதாலெச்சுமி. அவ புருசனும் அவள என்னமோ கண்ணுங்கருத்துமாத்தான் பாத்துக்கிட்டான். காக்காசும், அரக்காசுமா சேத்த பணத்துல மூணாவது புள்ளப்பொறவு முடிஞ்சி பொண்டாட்டிக்கி ரெண்டு பவுனுல வளவியும் வாங்கிப்போட்டான். இப்பிடியா சின்னச் சின்ன சந்தோசத்துல நவந்துகிட்டு இருந்த சீதாலெச்சுமி வாழ்க்கயில மறுபடியும் வந்து நின்னிச்சி விதி 'உட்டனா பாரு!'ன்னு.

வாரச்சந்தக்கி மாடு ஓட்டிட்டுப்போன கருப்பையா ஊட்டுக்கு வந்து களப்பா படுத்தவம்தாம். காலையில "மூத்திரம் மஞ்சளா போவுதுடி"ன்னு சொன்னவனோட கண்ணும், ரெண்டு நகக்கண்ணும் மஞ்சக் கெழங்கு கணக்கா மஞ்சமஞ்சேர்னு இருந்திச்சி. மஞ்சக்காமால...

சீதாலெச்சுமியும் என்னென்னமோ பண்ணிப்பாத்தா, மூலிகச்சாறு குடுத்தா... கீழாநெல்லிய அரச்சி வைத்தியரு குடுத்த மருந்து உருண்டய வாங்கிக்குடுத்தா, வேருகட்டிப்பாத்தா. ஒண்ணும் ஆவாம படுக்கயிலயே கெடந்த கருப்பையாவோட நாப்பதாவது ராத்திரி விடியவே இல்ல.

இருவத்தி ரெண்டு வயசுல அறுத்துப் போட்டுட்டு மூணு வாண்டுசுண்டுவள கக்கத்துல வச்சிக்கிட்டு தனிமரமா நின்ன சீதாலெச்சுமிக்கு என்னன்னு கேக்க ஒரு நாதியத்துப்போச்சி. பொறப்போட வந்த வைராக்கியத்த நெஞ்சுல சொமந்து கொழந்தைங்கள ஒத்த ஆளா வளக்க ஆரமிச்சா.

'பொறம்போக்கு நெலந்தான... கொஞ்சநாளு நாமளும் வெள்ளாம பண்ணித்தான் பாப்பமே'ன்னு நாக்க தொங்க போட்டுட்டு திரிஞ்சானுவோ ஊருக்குள்ள பல பயலுவோ. செல பேரு அவ தனியா நடந்துபோறப்ப பாத்து "என்ன லெச்சுமி தனியாவா போற.... நா வேண்ணா தொணக்கி வரட்டுமா"ன்னு கேட்ட பயலுவள கண்ணாலயே பொளந்துபோட்டுட்டு தான் வழியில போயிட்டே இருப்பா சீதாலெச்சுமி. நல்லபாம்புமாரி புஸ்ஸுபுஸ்ஸுன்னு பெருமூச்சி உட்டுக்கிட்டே திரிஞ்ச ஆம்பிளைங்கல்லாம் நாளு போவப்போவ இவ துளிகூட எளகாத கட்டாந்தரன்னு புரிஞ்சி ஒதுங்கிக்க ஆரமிச்சானுவோ.

உள்ளுக்குள்ள ஆயிரம் இருந்தாலும் ஒரு சொட்டு கண்ணுத்தண்ணி உடாம நெஞ்சழுத்தமா நின்னு எல்லாத்தையும் சமாளிச்சா சீதாலெச்சுமி. புள்ளைங்கள ஒரு சொல்லு திட்டிப்பேச மாட்டா. "எலேய்! ஒங்கப்பன் காக்காசு இல்லாம நின்னாலும் கடேசிவரைக்கி நிமிந்தே நின்னு வாழ்ந்தாண்டா. தகப்பெ இல்லாத புள்ள தறுதலன்னு ஊருக்குள்ள ஒத்தவார்த்த சொன்னாலும் அப்பிடியே நாண்டுகிட்டு நானும் செத்துப் போயிடுவே." அப்பிடின்னு சொல்லியே நண்டுசிண்டா இருந்த புள்ளைங்கள ஆளாக்குனா.

அந்தாப்புடி... இந்தாப்புடின்னு ஓடிப்போச்சி இருவத்தஞ்சி வருசம்! மூணு புள்ளைங்களயும் படிக்கவெச்சு, அவனுவளும் டவுனு பக்கம்போயி ஆளாளுக்கு வீடு, வாச நெலம் நீச்சுன்னு கொஞ்சங்கொஞ்சமா சேக்க ஆரமிச்சானுவ. ஒரு வழியா மூணு பேத்துக்கும் ஒலகமெல்லாம் அலஞ்சி திரிஞ்சி கல்யாணத்தயும் முடிச்சிவெச்சா.

கடேசி மவனுக்கும் கல்யாணம் முடிஞ்ச மூணாம் மாசம் மூத்த மருமவதான் மொத கொள்ளிய பத்தவெச்சா. "ஏங்க! ஒங்கம்மாவ நாமளேதான் வெச்சி கஞ்சி ஊத்தணுமா? மத்த மவனுவ மட்டும் கெட்டிக்காரனுவ, நாமதான் இளிச்சவாயின்னு எழுதி இருக்கா... என்னமோ பண்ணுங்க! ஆனா அத்தை படுக்கையில கெடந்தா பீத்துணி கசக்கிப்போடணும்னு என்னப்பாத்து சொல்லிடாதிய"ன்னு அவ சொன்ன வார்த்தய அடுப்படி பக்கம் போனப்ப அகஸ்மத்தா காதுல வாங்குன சீதாலெச்சுமிக்கி அடிவயித்துல நெருப்பெடுத்து வெச்ச மாரி இருந்திச்சி.

"என்னமோ டவுனு எனக்கு ஒத்துவரலப்பா! நா ஊருக்குபோயி ஏங் காலத்த கழிக்கிறம்பா... அப்பப்ப அம்மாவ வந்து பாத்துட்டு மட்டும் போ ராசா"ன்னு மவங்கிட்ட பக்குவமா சொல்லிட்டு ஊருக்கு வந்து சேந்த சீதாலெச்சுமிக்கி இருவத்தஞ்சி வருசங்கழிச்சி அழுவணும்போல இருந்திச்சி. ரெண்டு மாமாங்கங்கழிச்சி அய்யனாரு கோயிலு ஆலமரத்தடிக்குப் போயி ஒக்காந்தவ கண்ணுல இருந்து ரெண்டு சொட்டு 'இப்பவா அப்பவா'ன்னு நின்னிச்சி.என்னன்னமோ நெனப்புல ஒக்காந்துருந்த சீதாலெச்சுமி ஏதோ நெழலாடுதேன்னு தலயத் தூக்கிப் பாத்தா.

மாடச்சாமி நின்னுட்டு இருந்தான். கடேசியா அழுதுட்டுப்போனன்னக்கிதான் அவ அவன கண்ணால நிமிந்து பாத்த கடேசிநாளு. தெகப்பூண்ட மிதிச்சமாரி தெகச்சிப்போயி நின்னா சீதாலெச்சுமி..

"இத்தினி வருசமா ஓன்னோட நெனப்புலதான் வாழ்ந்துட்டு இருக்கேன் சீதா. இப்பவாவது ஏங்கூட வருவியா?

கொஞ்சநேரம் யோசிச்ச சீதாலெச்சுமி "வாய்யா! எங்கயாவது போவலாம்"னு சொல்லிட்டே அவங்கைய புடிச்சி நடக்க ஆரமிச்சா... அதுக்கப்பொறவு சீதாலெச்சுமி எங்கன்னு அந்த ஊரும், அவளோட புள்ளைங்களும் தேடவே இல்ல.

*************************************************************

கதையச் சொல்லிமுடிச்சபொறவு சீதாலெச்சுமி ஆத்தாவப் பாத்து கேட்டே.

"ஏன் ஆத்தா? மாடச்சாமிய கையப்புடிச்சி நடக்க ஆரமிச்சப்ப ஒம்மனசுல என்னதா ஓடிட்டு இருந்திச்சி?"

"ஏம்பொறப்புலேருந்து ஏம் வாழ்க்க பூரா ஏம் ஆசக்கின்னு வாழ்ந்ததில்ல ராசா. எங்கப்பாரு மானம் மருவாத மிக்கியம்னு ஓம்பாட்டன கட்டிக்கிட்டே. ஏம்புருசன் கவுரத மிக்கியம்னு ஏம் மனசுலயிம் ஒடம்புலயிம் எரிஞ்ச தீய ராவக்கி ராவு கொடங்கொடமா தண்ணி ஊத்தி தணிச்சிக்கிட்டே. ஏம்புள்ளைங்க வவுறு மிக்கியம்னு ஏம் வவுத்துல ஈரத்துணிய போட்டுக்கிட்டே. பொம்பளப்பொறப்பே பொசக்கெட்ட பொறப்புய்யா. யாராச்சும் ஒத்தருக்காவ வாழ்ந்தே ஆவணும். ஆம்பிளைங்க வாழ்க்க அப்பிடி இல்ல. ஆனா மாடச்சாமி... நா ஆலமரத்தடில உட்டுட்டு திரும்பிப் பாக்காம போனத்துலருந்து என்ன இல்லாம வேற பொம்பளய நிமுந்தும் பாக்காம இருந்தாம்யா." கொஞ்சூண்டு பெருமூச்சு உட்டுட்டு ஆத்தா சொன்னா...

"அந்த நாப்பத்தஞ்சி வயசிலதாய்யா நா மறுவடி பொம்பளயா பொறப்பெடுத்தே"

திங்கள், 11 அக்டோபர், 2010

ஆறாவது புருஷன்திரௌபதி அந்த வனத்தையும் தன்னையும் ஒன்றென உணர்ந்தாள். சூரியனின் வெம்மை சற்றும் புகுந்துவிடாதபடி குளுமையாய் இருந்த வனம் தன் குளுமையை திரௌபதிக்குள்ளும் இறக்கியது. திரௌபதியின் மனம் எங்கெங்கோ ஓடத்துவங்கியது. வனம் எப்போதுமே ஒரு
அதீதமான மாய அழகுடன் இறுமாந்திருக்கிறது. ஒழுங்கின்மையின் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே... சுதந்திரத்தின் வீச்சினை பரப்பிக்கொண்டே... அது தன் அழகை யாருக்கும் அடகு வைப்பதில்லை... யாவரையும் தனக்குள் கபளீகரம் செய்துகொள்கிறது.

துருபதன் மகள் ஏனோ அன்று தன்னுள் அதீதக்காதல் பொங்குவதை உணர்ந்தாள். நான் அரசி... என் காதலர்கள் என் சேவகர்களும்கூட... என் கட்டளைக்காய், கண்ணசைவிற்காய் காத்திருக்கும் காதலர் ஐவருக்கும் என் காதலை நான் அவர்களுக்குள் ஊற்றிக்கொண்டே இருக்கிறேன். ஐந்து பேர்... ஐந்து பேர்!

அவளுள் ஒளிந்து எப்போதும் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருக்கும் அந்தத்தீ அன்று சற்றே சாம்பல் பூத்திருந்தது. அர்ஜுனனுக்காக அவள் மனம் எதிர்பார்த்திருந்தது. அழகன்! கம்பீரன்! பௌருஷத்தின் பொக்கிஷங்களை தனக்குள் முதன்முதல் திறந்துவிட்டவன்! இதோ வந்துவிடுவான். யோசனைகள் உந்தித்தள்ள வெகுதூரம் வந்துவிட்டாள் போலும்!

அதோ... அதோ... மதர்த்த ஆண்யானை போல் அசைந்து வருகிறான். பருத்த பிருஷ்டங்களும் சிறுத்த இடுப்பும் பெண்டிர்க்கு மட்டும்தான் அழகென்பவர் அர்ஜுனனைப் பார்க்கவேண்டும்!

"கிருஷ்ணை! என்ன இது இவ்வளவு தூரம் நடந்து வந்துவிட்டாய்? உன் முகமும் மிகவும் பொலிவுடன் இருக்கின்றதே!" வாஞ்சையுடன் கரம்பற்றிய திரௌபதி அவனோடு கரம்கோர்த்து நடக்கத் துவங்கினாள்.

'இவனுக்கு மட்டுமே உரிமையாக இருக்க வேண்டியவள்...ஹ்ஹ்ம்ம்ம்!' அவளுள் மீண்டும் அந்தத்தீ சாம்பல் உதறக் காத்திருந்தது. 'பகிர்ந்து கொள்ளுங்கள்!' குந்தியின் வார்த்தைகள் இப்போது ஒலிப்பதைப்போல...

காதலுஞ்சரி... தாபமுஞ்சரி... கோபமுஞ்சரி....திரௌபதி எப்போதுமே தீ போலத்தான்... எதுவுமே ஒரு வனமாகத்தான் அவளுள் பரவும். தீயில் பிறந்தவள் அல்லவா!

வனம் அர்ஜூனனுக்குள்ளும் தாபத்தை விசிறிவிட்டுக் கொண்டிருந்தது. பாஞ்சாலி எது சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இருந்தான். நடந்து கொண்டிருப்பது விதியை நோக்கி என்பதறியாமல் நடந்தான். சுழன்று கொண்டே இருந்த பாஞ்சாலியின் கண்களில் விழுந்து சிரிக்கத்துவங்கியது அந்த நெல்லிக்கனி. உயரத்தில் ஒற்றையாய்....!

"விஜயா! அந்த நெல்லிக்கனியைப் பாரேன்! அழகாக இல்லை?"

"உனக்கு வேண்டுமா க்ருஷ்ணை? இதோ பறித்துத் தருகிறேன்!"

நினைப்பது அர்ஜுனன் எனில் நினைத்த கணம் முடிப்பது காண்டீபம்! அறுந்து விழுந்த பழம்பொறுக்கக் குனிந்த அர்ஜூனனின் காதுகளில் விழுந்தது அந்த "ஐய்யோ!"

சுள்ளி சுமந்துவந்து கொண்டிருந்த அமித்திர ரிஷியின் சீடன் பதறத் தொடங்கினான். "பன்னிரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்... அதுவும் இந்த நெல்லிக்கனி மட்டும்தானே குருதேவனின் உணவு! அவருக்கென்று மட்டுமே படைக்கப்பட்டதை வீழ்த்தி விட்டீர்களே! அவர்வந்து சபிப்பாரே! உம்மைப்பார்த்தால் அரசகுலம்போல் தோன்றுகிறது. ஏன் இந்தப் புத்தி உமக்கு? கண்ணில் கண்டதெல்லாம் சொந்தமாக்கிக் கொள்ளும் நாகரீகவான்களின் புத்தியை காட்டுக்கு வெளியேயே கழற்றிவைத்து வரக்கூடாதா? என்ன செய்யப் போகிறீர் இப்போது?"

அர்ஜூனனும் திரௌபதியும் பதறிப்போனார்கள். செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். யுதிர்ஷ்டிரனுக்கும் செய்தி போனது. சகோதரர்களோடு வந்து சேர்ந்த யுதிர்ஷ்டிரனும் குழம்பித் தவிக்க... 'ஆபத்பாந்தவன் கண்ணனன்றி வேறு யார் இருக்கிறார் நம்மைக்காக்க?'

பதறத்துவங்கும் போதெல்லாம் பாஞ்சாலியின் மனதில் பழைய நெருப்பும் சேர்ந்தே விசிறப்படும். இப்போதும்! குருவம்சத்தில் மணம் முடித்த எல்லாப் பெண்களுமே பாவப்பட்ட ஜீவன்கள் போல! தானும்... தன்னால்தான் இன்றைய பிரச்சினை எனினும் ஏன் வனம்புக நேர்ந்தது? புகுந்திராவிட்டால்...

அர்ஜூனனைக் காதலித்தவளை ஐவருக்கும் மனைவியாக இருக்கச் சொல்லும்போது நானும் இதோ இந்தப் பழம் மாதிரித்தானே கிடந்தேன்! என் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு... சீந்துவாரின்றி... இந்த உலகம் ஆண்களால்தானே நிறைந்திருக்கின்றது? குந்தியும்தானே துணைபோனாள்? மறக்கமுடியுமா அந்த வார்த்தைகளை... "பகிர்ந்துகொள்ளுங்கள்..."   ! கல்யாணத்துக்கு முன்னரே சூரியதேவனால் கன்னிமை கழிக்கப்பட்டு கர்ணனைப் பெற்று அவனையும் தூக்கி வீசியபோதே பெண்மையின் உணர்வுகளையும் கழற்றி வைத்துவிட்டாள் போலும்! இல்லாவிடில் என்னைப் புரிந்திருப்பாள்.ஐவரையும் காலம் போகப்போக ஏற்றுக் கொள்ளத்துவங்கினாலும் என்னுள் அந்தத்தீ ஏன் இன்னும்...?

பல்வேறு திசைகளிலும் சுழலத்துவங்கிய மனக்காற்றாடிக்கு அணை போட்டது பரந்தாமனின் வருகை. விவரம் கேட்டறிந்தவன் கைகளால் முகவாய்க்கட்டைக்கு சிறிது நேரம் முட்டுக்கொடுத்திருந்தான். பின் வழக்கமான கபடப்புன்னகையுடன் பேசத்துவங்கினான் விதியின் வேடிக்கை புரிந்தவனாய்.

"பார் யுதிர்ஷ்டிரா! தர்மம் எப்போதும் தனக்குப் பிடித்தவருடன் விளையாடிப் பார்ப்பதையே பொழுதுபோக்காய் வைத்திருக்கின்றது! இப்போது மீண்டும் உன் முறை. ஆட்டத்தைத் துவங்கியாயிற்று. நீதான் முடித்துவைக்க வேண்டும்!"

"இது என்ன சோதனை க்ருஷ்ணா! என்ன செய்யச் சொல்கிறாய் என்னை?" யுதிர்ஷ்டிரன் வாயிலிருந்து உதிர்ந்த சொற்கள் சற்றே நடுங்கின.

"ஒன்றும் பயப்படாதே என் ப்ரிய மைத்துனா! இது அமித்திரமுனிவருக்குச் சொந்தமான கனி. அவர் வருவதற்குள் ஒட்டவைக்க வேண்டும். ஒரே உபாயம்தான் இருக்கிறது"

"சொல் கண்ணா! செய்கிறோம். பிரச்சினை தீர்ந்தால் சரி"

"கடினமானது ஒன்றுமில்லை! நீங்கள் ஒவ்வொருவரும் உம் மனதில் இருப்பதை ஒளிக்காமல் சொல்லுங்கள். இதுதான் உபாயம். நீங்கள் சொல்லச் சொல்ல கனி தானாகவே மேலேறும்.... ஒட்டிக்கொள்ளும்" கண்ணன் திரௌபதியை ஓரக்கண்ணால் பார்த்து லேசாய் சிரித்துக்கொண்டே சொன்ன கணத்தில் புரிந்து போனது அவளுக்கு 'இது தனக்கு வைக்கப்பட்ட சோதனை' என்று. சிந்தனையில் ஆழ்ந்தாள்.

யுதிர்ஷ்டிரன் மெல்ல வாய்திறந்தான்.

"நாடுநகரம் ஆளவேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை இல்லை கண்ணா!...."

மீதி ஐவரும் லேசாய்த் திடுக்கிடத் தொடர்ந்தான்... " நான் ஜெயிக்கவேண்டாம்.... எது தர்மமோ அது எப்போதும் ஜெயிக்க வேண்டும்"

'தர்மம்.... நீயா யுதிர்ஷ்டிரா தர்மம் பேசுவது! ஒரு பெண்ணின் காதலை வலுக்கட்டாயமாய் வரவழைத்த நீயா?' திரௌபதி மனதில் தீ லேசாக சாம்பல் விலக்கி எட்டிப் பார்த்தது.

பீமன் சொன்னான் " பரந்தாமா! என்றும் நான் பிறன்மனை வேண்டேன். பிறர்வசை வேண்டேன்! பிறர் துயர் என் துயராகக் கொள்ளவே விரும்பினேன்!"

திரௌபதி புன்னகைத்தாள்

அடுத்து அர்ஜூனன்...

"மானமே எமக்கு என்றும் உயிர் கண்ணா! மானம் துறந்து வாழ்வதை நான் என்றும் ஈனமாய்க் கருதுவேன்" என்றான்

" எத்தனை செல்வம் இருப்பினும் எத்தனை பலம் இருப்பினும், கல்வியின், ஞானத்தின் நிழல்படாதோரை என்றும் மதியேன் நான்" என நகுலனும்,  "அன்னையின் வார்த்தை, அனைத்துக்கும் மூலமான ஞானம், துணைநிற்கும் தர்மம், என்றும் பிறர்மேல் காட்டும் தோழமையே உருவான கருணை, மனைவிபோலும் தாங்கிநிற்கும் சாத்வீககுணம், நம்மை அந்திமத்தில் காப்பாற்றும் மகனைப் போன்ற வலிமை இவை ஆறுமன்றி வேறேதும் நான் உறவாக எண்ணுவதில்லை கிருஷ்ணா!" என்று சகாதேவனும் முடித்தார்கள்.

கண்ணன் திரௌபதியிடம் திரும்பினான். திரௌபதி மனதில் தீ சடசடவென எரியத் தொடங்கியது.

"பலசாலிகளும், ஞானவான்களும், அன்பு மிக்கவர்களுமான ஐவரைக் கணவராகப் பெற்ற நான் அவர்கள் நன்மைதவிர வேறேது நினைக்கப்போகிறேன் கண்ணா?"

பழம் அசையாதிருந்தது.

பரந்தாமன் புன்னகைத்தான். "ஏன் கிருஷ்ணை... பொய் சொல்கிறாய்" வார்த்தைகளை கனமாக இறக்கினான்.

திரௌபதியின் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மெல்லக் கணவர்மார்களைப் பார்த்தாள். லேசாய்ப் பெருமூச்சும், குரூரமும் கலந்தெழ மெல்ல... மெல்ல வார்த்தைகளை எண்ணிக் கோர்க்கத் துவங்கினாள். தீ பரவியது... வடவாமுகாக்கினியாய்....

"ஐந்து கணவன்மார்களும் என் ஐந்து புலன்கள் போலத்தான் அண்ணா! ஆனாலும் மனிதர் ஆறாம் அறிவை நாடி ஏங்குவதுபோல என் மனமும் ஆறாவதாய் ஒருவனுக்காய் ஏங்குகிறதே.... என்ன செய்வேன்?!"

கிருஷ்ணன் சிரிக்கத் தொடங்கினான்... அண்டமதிர...

அண்ணண்தம்பி ஐவரும் சிலையாகினர்....அவர்களது ஆண்மையின் கர்வம் செத்திருந்தது...

அதன்பின் திரௌபதியைத் தொடும்போதெல்லாம் அவர்கள் இறந்து இறந்து உயிர்ப்பிக்கப்படுவதே விதிக்கப்பட்டதானது.
*************************************************
Related Posts with Thumbnails