புதன், 18 மே, 2011

கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட... (வயதுவந்தோர் மட்டும்)
இப்பல்லாம் ப்ளாக் பக்கம் எட்டிப் பாக்குறதே இல்ல. முழுநேர கூகிள் பஸ்ஸராயிட்டேன்.அரட்டைக்கு அரட்டை, விவாதத்துக்கு விவாதம், நட்புக்கு நட்பு, ஜாலிக்கு ஜாலின்னு எல்லாமே தெகட்டத் தெகட்ட கிடைக்குது. அதுவும் கொஞ்சநாளா நைட் சர்வீஸ் பஸ் வுடுறேன் பேர்வழின்னு தமிழிலக்கியப்பாடல்களா எடுத்து செம்ம அரட்டை. இன்னிக்கு நைட் சர்வீஸ் பஸ்சு 18 +னு வெச்சிக்கிட்டு குற்றாலக்குறவஞ்சில இருந்து கொஞ்சம் பாட்டை எடுத்து அரட்டை அடிக்க ஆரமிச்சேன். பஸ் உலக நண்பர்களின் ஆலோசனைப்படி அதை எடுத்து இங்க பதிவா போடுறேன்.

சிற்றிலக்கியங்கள்ல குற்றாலக்குறவஞ்சியும் ஒண்ணு. ரொம்ப இண்ட்ரஸ்டிங். அதுல இருந்து சில பகுதிகள்:

குறிசொல்லும் குறவனும், குறத்தியும் ஊடல்கொண்டாடும் பாட்டுக்கள். குறவன் காதல் பித்தேறித் தவிக்கிறான். குறத்தி அவனை எள்ளிச் சிரிக்கிறாள்.


குன்றத்தைப் பார்த்தால் கொடியிடை தாங்குமோ சிங்கி! தன்
கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா!

குன்றுமாதிரி நிமிர்ந்து நிக்கிற உன் கொங்கைகளைப் பாத்தாலே மலைப்பாய் இருக்கிறதடி சிங்கி!. சின்னக்கொடி போன்ற இடை எப்டியடி இவ்ளோ கனத்தைத் தாங்கும்?!

சிங்கி சொல்றா:

யோவ்! அதப்பத்தி நீ என்னாத்துக்கு கவலைப்படுற. சுரைக்காய் காய்ச்சிருக்குற செடிக்கு சுரைக்காய் பாரமா என்ன? போவியா வேலைய பாத்துக்கிட்டு!

இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய்நீ சிங்கி! நாட்டில்
நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா!

முன்னாடியெல்லாம் இப்டி நெளிவு சுளிவா ஒனக்கு பேச வராதேடி சிங்கி! எப்டிடி இப்போ மட்டும் என்னாமா தளுக்கி குலுக்கி பேசுற! எங்க போய்டி கத்துகிட்ட இதெல்லாம்?!

உன்னைமாரி ஊட்ல குழிபறிச்சிட்டு இருந்தா ஆவுமாய்யா! நாடு,நகரம்னு நாலு எடம் சுத்தி நாலு நல்ல மனுசன், பெரிய மனுசனைப் பாத்து குறி சொல்லிட்டு வாரப்ப, அவங்ககிட்ட இருந்து நல்ல விஷயமா நாலு கத்துக்கிட்டு வரலாம்யா!

பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி! நடுப்
பட்டப் பகலில்நான் எட்டிக் கொடுப்பேனா சிங்கா!

பொட்டில கெடக்குற பாம்புமேரி என்னா அழகா வளைஞ்சு சுருண்டு இருக்குற உன்னோட பெண்மைய மோகத்துல ஆடவைக்க வேண்டாமாடி என் செல்லச் சிங்கி?!

யோவ்! என்னய்யா மனுசன் நீ! எந்த மறைப்பும் இல்லாத வெட்டவெளியில நல்ல சாதிப் பாம்பா இருந்தா ஆடுமாய்யா? ஒனக்குத்தான் புத்திகெட்டு அலையிதுனா நானுமா அலையணும்! மருவாதியா அப்பால போயிடு!

கட்டிக்கொண் டேசற்றே முத்தம் கொடுக்கவா சிங்கி! நடுப்
பட்டப் பகலில்நான் எட்டிக் கொடுப்பேனா சிங்கா!

சரி அத வுடு! கொஞ்சநேரம் உன்னைக் கட்டிப் புடிச்சிக்கிட்டு ஒரு முத்தமாவது கொடுத்துக்கிறேனேடி சிங்கி!

என்னாது! முத்தமா? யோவ்! பட்டப்பகல்ல வேலவெட்டிய பாக்காம பேசுற பேச்சாய்யா இது? வெக்கங்கெட்ட மனுசா! மொதல்ல நீ எடத்த காலி பண்ணு. போ போ

முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கி! காம
மட்டுப் படாவிடில் மண்ணோட முட்டடா சிங்கா

ஏண்டி சிங்கி! ஆனைக்குட்டிங்க மேரி இருக்குதுங்களே ஒன்னோட மாருங்க! என்னோட தலையால முட்டிப் பாக்கணும்னு தோணுதுடி! முட்டிப்பாக்கவா?

இந்தாய்யா! இந்த இழுவயெல்லாம் எங்கிட்ட ஆவாது. ஒனக்கு அரிப்பெடுத்தா தோ இருக்கு பாரு மண்ணுமுட்டு! அதுல போயி முட்டிக்க போ!

சேலை உடைதனைச் சற்றே நெகிழ்க்கவோ சிங்கி! சும்மா
நாலுபேர் முன்எனை நாணம் குலையாதே சிங்கா

ஏண்டி சிங்கி! சீலைத்துணிய இம்புட்டு இறுக்கமாவா கட்டுவ? இந்தா பாரு, தோலு எப்பிடி செவந்திருக்கு! நான் வேணா கொஞ்சம் லேச தளத்தி வுடவாடி?

ந்தே! அந்தாண்ட போ மொதல்ல! நாலு மக்கமனுசங்க இருக்குற எடத்துல என் மானத்த வாங்குறதே ஒனக்கு வேலையா போச்சு

பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி! மனப்
போதம் வருடிப்போய்ப் பூனையைக் குத்தடா சிங்கா

அடியே என் சிங்காரி! என்னால இதுக்கு மேல தாங்காது! நீயும் ஊரு ஒலகம்லாம் சுத்தி வந்துருப்பே! வாடி, உன்னோட காலை மெதுவா புடிச்சி வுடுறேன். அப்புறமா ஆகவேண்டிய 'முக்கிய'மானதை ஆரமிக்கலாம்.

யோவ்! ஒடம்புபூரா கொழுப்பேறித்தான் முறுக்கிக்கிட்டு திரியிற. ஒருத்தி ஊரெல்லாம் சுத்தி களைச்சிப்போயி வந்தா.... போயி அந்தால ஓடுது பாரு பூனை, அதப்புடிச்சி நீ பண்ண வேண்டிய 'காரிய'த்தை பண்ணிக்கோ!

நாக்குத் துடிக்குதுன் நல்வாயிதழுக்குச் சிங்கி! உன்றன்
வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா

உம்பேச்சே இம்புட்டு இனிப்பா இருக்கே! உன்னோட நாக்கும், எச்சியும் எம்புட்டு இனிப்பா இருக்கும். கொஞ்சூண்டு சாப்டு பாத்துக்கிறேனேடி செல்லம்! என் சிங்கி!!

என்னாய்யா இது புதுசா இருக்கு! ஒனக்கு எப்பவும் கள்ளுதானேய்யா ருசியா இருக்கும். இன்னிக்குத்தான் தேடுறியாக்கும் என்னோட நாக்கை? நீ வேணும்னா தர்றதுக்கும் வேண்டாம்னா போறதுக்கும் நான் ஆளு இல்ல ஆமா. முடியாது முடியாது

ஒக்கப் படுக்க ஒதுக்கிடம் பார்க்கவோ சிங்கி! பருங்
கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா

அடியேய் சிங்கி! ஏண்டி என்னை இப்டி சூடேத்திக்கிட்டு இருக்குற? சரி சரி வா! நல்ல மறைவா ஒரு பாத்துட்டு வாரேன். கொஞ்ச நேரம் படுத்து தூங்கிட்டு போவலாம்.

அய்யே! தூங்க கூப்புடுற மூஞ்சை எங்களுக்குத் தெரியாது? தூங்கலாம் அப்டீனு கூப்டுவே. அப்டி இப்டி கூத்தாடி எல்லாக் 'காரிய'த்தையும் பண்ணிடுவ. எங்களுக்குத் தெரியாது ஒன்னோட பவுசு?! ஒழுங்கு மரியாதையா மொதல்ல சோத்துக்கு வழி பாரு மாமா. போயி கொக்குப் புடிச்சி அடிச்சி ஆக்குறதுக்கு ஒரு எடத்தைப் பாரு மொதல்ல

வித்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதடி சிங்கி! அது
சந்தேக மோவுன் தலைப்பேனைக் கேளடா சிங்கா

எப்பிடிப் பேசிப் பாத்தாலும் மடங்க மாட்றியேடி! ஏண்டி, ஒருவேள என்னாலதான் உன்னை மடக்க முடியலையா இல்ல எவனுக்கும் மடங்காத ராட்சசியா. சொல்றி சிங்கி!

யோவ்! என்னைப் பத்திதான் ஊரு ஒலகத்துக்கே தெரியுமேய்யா. இந்தா.. அடுத்தாப்புல எதைச் சொன்னா கவுருவான்னு தலையச் சொறிஞ்சிட்டே நிக்கிறியே. ஒந்தலையில இருக்குற பேனைக் கேட்டுப்பாரு. அது சொல்லும்யா என்னோட பவுச!

தென்னா டெல்லாமுனைத் தேடித்திரிந்தேனே சிங்கி! அப்பால்
இந்நாட்டில் வந்தென்னை எப்படி நீகண்டாய் சிங்கா

ஏண்டி இப்டி இரக்கமில்லாம பேசுற? நானும் உன்னைத்தேடி தெக்கத்திச்சீம பூரா தேடித்தேடி களைச்சிப்போயிதானேடி வந்துருக்கேன்?

சரி அதெல்லாம் கெடக்கட்டும். அப்பறம் எப்டிய்யா என்னைக் கண்டுபுடிச்ச?

நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கி! மணிப் 
பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா

தோ இருக்காரு பாரு திருக்குற்றாலநாதர்! அவர்ட்ட வேண்டிக்கிட்டேண்டி. எப்டியாவது என்னோட ஆள எனக்கு கண்ணுல காட்டிடுன்னு!

அய்ய! ரொம்பத்தான் ஆசையா அலைஞ்சிருக்க போல! சரிசரி வாய்யா! அதான் என்ன கண்டுபுடிச்சிட்டல்ல. போயி மறுக்கா கும்புட்டுட்டு வந்துடுவோம்

பாடிக்கொள் வாரெவர் ஆடிக்கொள் வாரெவர் சிங்கி! நீதான்
பாடிக்கொன் டாற்போதும் ஆடிக்கொள் வேனடா சிங்கா

சரிடி என் தங்கம்! சாமிய யாரு பாடுறது? யாரு பாட்டுக்கு ஆடுறது?

இந்தா... நீ ஆடி ஒரு கழுதையும் பாக்காது. நானே ஆடுறேன். நீ பாடுய்யா

பார்க்கப் பொறுக்குமோ பாவியென் ஆவிதான் சிங்கி! முன்னே
ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறார்களோ சிங்கா!

அடிப்பாவி மவளே! ஏற்கனவே நான் ரொம்ப சூடா இருக்கேண்டி. இதுல நீ ஆட வேற போறேன்னு சொல்ற. நீ ஆடுறதைப் பாத்தா எனக்கு அடக்கிக்கிட்டு இருக்க முடியாதேடி! செத்தே போயிடுவேண்டி.நான் என்ன பண்ணுவேன்?!

ஏய்யா பொழப்பு கெட்ட மனுசா! ஆக்கப் பொறுத்த நீரு ஆறப் பொறுக்க மாட்டீரோ?! இருய்யா, பூசையெல்லாம் முடிச்சிட்டு, அப்புறமா வீட்டுக்கு போயி நெதானமா எல்லா 'காரிய'த்தையும் பாக்கலாம்
**************************************
அடுத்தாப்புல ஒரு டவுனு பொண்ணு.வசந்தவல்லின்னு பேரு. ரொம்ப பவுசா நாகரீகமா வளந்த பெரியதனக்காரரு வூட்டுப்பொண்ணு! குற்றாலநாதர் கோயில் வீதியில பந்து வெளையாண்டுட்டு இருக்கா. அவளைப் பாக்குறாரு கவிஞரு. ஒடனே கவிதை கரைபொரண்டு ஓடுது. அவளை வர்ணிக்கிறாரு பாருங்க! யாத்தேய்....

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்செயம் என்றாட- இடை 
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட-இரு 
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட- மலர்ப் 
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!

"நல்லா கலரா செவசெவன்னு செவந்த கைய்யில போட்ருக்குற அந்த வளவியெல்லாம் இருக்கே அதெல்லாம் கலின் கலின் னு சத்தம் போடுறது "வெற்றி!வெற்றி"னு கூப்பாடு போடுறாமேரியே இருக்கு! இவ பாட்டுக்குக்கு எதப்பத்தியும் ரோசன இல்லாம குதிச்சிக் குதிச்சி வெளையாடுறாளே, எவ்ளோ பெரிய மாருங்களை வெச்சிக்கிட்டு இருக்கா.. இந்த ஆட்டம் போட்டாக்கா சின்னூண்டு இடுப்பு ஒடிஞ்சி போனாலும் போயிடுமேன்னு அவ கால்ல கெடக்குற சிலம்பும், தண்டையும் பொலம்பிகிட்டே ஆடுதுங்க. இவளோட மாருங்க இருக்கே! அது ரெண்டும் அசப்புல அவ வெச்சிக்கிட்டு வெளையாடுற பந்து மாதிரியே இருக்குங்க. அதுங்களோட திரட்சியான வடிவத்துக்கு அந்த பந்துதான் போட்டியா, எதிரியா இருக்கும்போல அப்டி ஒரு அழகு! ஆனா யார்ட்ட போட்டி போடுறது?! பந்து தோத்துடுது. அதான் அந்த கொடும்பகையான பந்தை தோக்கடிச்ச கர்வத்துல அவளோட மாருங்களும் குதிச்சி வெளையாடுது. பூமாலைமேரி இருக்குற வசந்தவல்லி பந்தாடுனதைப் பாத்தா இப்டியெல்லாம் தோணுதுய்யா! இது மட்டுமா... இன்னம் இருக்குங்காணும்!"

அடுத்த பாட்டு

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாடக் - குழல் 
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட - இனி 
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிசை திண்டாட - மலர்ப் 
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!

"அவளோட காதுல போட்ருக்குற தோடுஜிமிக்கி இருக்கே, அதுங்க அவளோட கண்ணு ரெண்டுமேலயும் பொரண்டு பொரண்டு ஆடுதுங்க. அது எப்டிய்யா தோடுஜிமிக்கி கண்ணுக்கு வந்திச்சின்னு கேக்குறீங்களா? அவ கண்ணு ரெண்டும் அவ்ளோ பெரிசுய்யா. காது வரைக்கும் நீண்டுருக்கு. சொம்மா ஆறடி நீளத்துக்கு மேகம் மேரி விரிஞ்சி கெடக்குதுல்ல கன்னங்கரேல்னு அவளோட கூந்தல்! அதுல அவ வெச்சிருக்கிற பூவுல இருக்குற வண்டுங்கல்லாம் அவ போடுற ஆட்டத்துல கூந்தல்ல இருந்து எந்திரிச்சி ஓடுதுங்க. அதப் பாத்துட்டு மம்முதன் வில்லுல நாணா இருக்குற வண்டெல்லாம் கலைஞ்சி ஓடுதுங்களாம். அவளோட சின்னஞ்சிறு இடை தளந்து தளந்து ஆடுதாம், ஏன்? நம்ம அழக பாத்துட்டு இந்த ஒலகம் என்ன பாடு படுதோன்னு கவலையில ஆடுதாம். சொம்மா பூ கணக்கா அப்டி பந்து வெளையாண்டுட்டு இருக்கா நாம் ஈரோயினு!"

அதுக்கடுத்த பாட்டு

இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மனம் 
முந்திய தோவிழி முந்திய தோகரம் முந்திய தோவெனவே - உயர் 
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிய 
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரிபொற் பந்து கொண்டாடினளே!

"இந்தமேரி கெட்ட ஆட்டம் போடுறாளே... இவ மகாலட்சுமியா இல்ல ரதியா இல்ல தேவலோக ரம்பையா இல்ல யாராச்சும் மோகினியா! என்னமா மின்னல் மேரி ஆடுறாய்யா!! இவ மனசுதான் அவ்ளோ வேகமா முன்ன போயி ஆடுதா? இல்ல அவளை முந்திக்கிட்டு கண்ணு ரெண்டும் ஆடுதா? இல்ல நெசமாமே கையாலதான் ஆடுறாளா? ஆட்டத்துக்கு பேர்போன அந்த கூத்தபெருமானே, அதாம்யா மூணாம்பிறைய தலையில வெச்சிக்கிட்டு ஆடுவாரே அவரு! நல்லா பொருத்தமாத்தான் அவரு கோயிலு இருக்குற தெருவுல நம்ம ஈரோயினு அம்சமா பந்து வெளையாடுறா. பொற்பந்துன்னா பொன்னாலான பந்து இல்ல. அம்புட்டு கனத்தை பூ மேரி இருக்குற இவ எப்டி சொமப்பா! இவ கைய்யி பட்டு அந்த பந்து தங்கம் மேரி தகதகன்னு மின்னுது. அந்த பந்த வெச்சிட்டு ஆடுறா இவ!"

ஹும்ம்! இந்தமாதிரி தேன்சிந்தும் பாட்டையெல்லாம் விட்டுப்புட்டு, காக்காவலிப்பு வந்தவன் மாதிரி வெட்டிவெட்டி பாடுற, ஆடுற பாட்டுக்களை ரசிக்கவேண்டிய நெலைமைக்கு ஆளாயிட்டோம்!
Related Posts with Thumbnails