வியாழன், 20 ஜனவரி, 2011

செத்துப்போ!


"சத்த்..." என் மண்டையோடு பிளந்தது. நல்ல அழுத்தமான, கனமான இரும்பு ராடு... இருபத்தெட்டு ஆண்டுகள் உடலுக்குள்ளேயே பாய்ந்து அலுத்துப்போன கருஞ்சிவப்புத் திரவம் வெளியுலகைப் பார்க்கும் ஆசையில் கொழகொழப்பாய்ப் பீய்ச்சியது. என் கண்கள் பிதுங்கின. "ஹா.. ஹாஹ்..." நாசித்துவாரங்கள் விடைத்து மூச்சுக்காய் ஏங்க தொண்டை வறண்டு "தண்ணீர்..தண்ணீர்" என்று துடித்தது. அதிவேகமாய் இருட்டத் தொடங்கிய கண்களில் எதிரே வன்மமாய்ச் சிரித்துக் கொண்டிருந்த அவள் தெரிந்தாள்... என் பொண்டாட்டி... 'தேவிடியா முண்டை'... உடம்பு ஒருமுறை விலுக்கென்று உதறிப்போட லேசாகி மிதக்க ஆரம்பித்தேன்.

பொத்தென்று கீழே விழுந்த என் உடலைப் பார்த்து அவனும் அவளும் புன்னகை செய்தனர். அவன் இரும்புராடைக் கீழே வீசிவிட்டு அவளை.. என் பொண்டாட்டியை கட்டிப்பிடித்தான். இருவரும் வெறித்தனமாய் முத்தமிட்டுக் கொண்டனர். "டேய் பாவிகளா! தேவிடியாப் பசங்களா! நான் ஒருத்தன் இங்க இருக்கேண்டா! அவளை விட்றா" ம்ஹூம்! சுத்தமாகக் குரல் எழும்பவே இல்லை. பரிதவித்தேன்... அறைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்தேன். அழுகை அழுகையாய் வந்தது. அவர்கள் இப்போது அம்மணமாக இருந்தனர். அவன் அவள்மீது தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தான்..."தூத்தேறி!"

எதையும் பார்க்கப் பிடிக்கவில்லை. ஜன்னல் வழியே வெளியேறினேன். குளிர்ச்சியாய் வீசிக் கொண்டிருந்த காற்று கொஞ்சம் இதமாக இருந்தது. இருட்டில் ராட்சசன் மாதிரி நின்றிருந்த தூங்குமூஞ்சி மரத்தின் கிளையில் போய் அமர்ந்தேன். 'துரோகிகள்...பாவிகள்! அநியாயமாய்... ஒரு புழுவை நசுக்குவதைவிடக் கேவலமாய்... கொன்றுவிட்டாயேடி நாறமுண்டை! என்னடி செய்தேன் உனக்கு? நீ அரிப்பெடுத்துத் திரிந்தால் அதற்கு ஏண்டி என்னைக் கொன்றாய்?'... இந்நேரம் அவள் உள்ளே ஆனந்தமாய்க் கிறங்கிக் கொண்டிருப்பாள். எனக்கு உடம்பெல்லாம் தீப்பற்றியதுபோல் இருக்கிறது..ப்ச்ச்.. உடம்பு எங்கே இருக்கிறது இப்போது எனக்கு?

என்னைப் பார்த்தால் உங்களுக்கெல்லாம் பரிதாபமாக இருக்கிறதா? வேண்டாம்... தயவுசெய்து பரிதாபப்படாதீர்கள்! எனக்கு இது தேவையானதுதான். இந்த துர்ச்சாவு... இந்த துரோகம் எல்லாமே. ப்ச்.. என்ன கொஞ்சம் வலி இல்லாமல் இருந்திருக்கலாம். சரி...விடுங்கள். அவர்கள் உள்ளே ஏழாம் சொர்க்கத்தில் இருக்கிறார்கள். அதை மறக்கவேண்டும் எனக்கு. நான் கொஞ்சம் சுருக்கமாக என் கதையைச் சொல்கிறேன் அதுவரை.

உங்களுக்கு கேகேவைத் தெரியுமா? சென்னையில் இதயப்பகுதி தி.நகரை நான்காண்டுகள் முன்புவரை கட்டியாண்ட சாம்ராஜ்யாதிபதி. ஏராளமான சொத்துக்கள், ஏராளமான வைப்பாட்டிகள்,ஏராளமான வியாதிகள் இன்னும் ஏராளமான...ஏராளமான... எல்லாச் சொத்துக்களையும் ஏகபுத்திரனான என் தலையில் கட்டிவிட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன் நிம்மதியாக இறைவனடி சேர்ந்தார் அல்லது சேரவைக்கப் பட்டார்... என்னால்...

என்னால்?! ஆமாம்... நான்தான்! காரணம் சந்திரிகா! என் மனைவி! அழகான, வசீகரமான இளம் மனைவி! காசுகொடுத்து வாங்கிய எம்பிஏ பட்டத்துடனும் வாலிபத் திமிருடனும் சுற்றித் திரிந்த என்னுள் காதல் ஊற்றைப் பொங்கவைத்தவள். நுரைக்க நுரைக்கக் காதலித்தேன், காதலித்தோம். சாதி, அந்தஸ்து,லொட்டு லொசுக்கு என்று என் தகப்பனார் ஒற்றைக்காலில் டான்ஸ் ஆட ஒரு முகூர்த்தநாளில் அவரை நாற்பது வேலியம் மாத்திரைகள் துணையுடன் சிவலோகப்ராப்தி பெறவைத்தேன். இப்போது சந்திரிகா முறை. அப்பாவுக்குப் பதில் நான்!

எனக்கு இப்போது அவளைக் கொல்லவேண்டும். மூச்சுத் திணறத்திணற, பார்ப்பவரை எல்லாம் கவர்ந்திழுக்கும் கண்கள் பிதுங்கிச்சரிய "வேண்டாம்...வேண்டாம்...என்னை விட்ருங்க..ப்ளீஸ்" என்று அழ அழ அவளைக் கொல்லவேண்டும். அதற்கு முதலில் எனக்கு ஒரு உடல் வேண்டும். அதுவும் நல்ல ஆரோக்கியமான, வலுவான உடல் வேண்டும். வெறும் காற்றாய் இருந்துகொண்டு என்னால் என்ன செய்ய முடியும்? உங்களில் யாராவது எனக்கு உடல்தானம் செய்கிறீர்களா? கொஞ்சநாள் மட்டும்...ப்ளீஸ்! என் சொத்து முழுவதையும் எழுதிவைக்கிறேன்.... சரி உடனே ஓடாதீர்கள். நானே பார்த்துக் கொள்கிறேன்.

***********************************************************

அவளும் அவனும் தியேட்டரைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். அவன் அவளது இடுப்பைப் பற்றிக்கொண்டு... ஏதோ சொல்கிறான். அவள் சிணுங்கிச் சிரிக்கிறாள்.. 'தேவிடியா...தேவிடியா'! இரண்டு மாதங்களாக அவர்கள் பின்னே நாயாய் பேயாய் அலைகிறேன். கொல்லவேண்டும்... ரத்தம் பொங்கிப்பாயவேண்டும்.... இன்று முடித்துவிடுகிறேன்... முடிக்கவேண்டும். இன்று அமாவாசை. நான் வழக்கத்துக்கு மாறாக சுறுசுறுப்பாக இருக்கிறேன்... "Now here இல்லாவிட்டால் No where!" என்று எப்போதோ படித்திருக்கிறேன்.

அவன் எனது காரில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். என் பொண்டாட்டியின் தொடைகளில் கைபோட்டுக்கொண்டு... பாஸ்டர்ட்! கார் வேகமாக வழுக்க ஆரம்பித்தது. எப்படி...எப்படி.. எந்த இடம்.. பார்த்துக்கொண்டே விரைந்தேன்... ஆ..! இதோ இரும்புக்கம்பிகளை சுமந்தபடி ஒரு லாரி! அவன் காருக்கு முன்னால்! என்ன அவசரமோ? ஹார்னை பொறுமையில்லாமல் அழுத்தி வழிகேட்டுக்கொண்டே தொடர்கிறான் ராஸ்கல். லாரி விரைந்துகொண்டிருக்க நான் மெல்ல லாரியைத் தாண்டுகிறேன். அதோ சாலையோரத்தில் தள்ளாடிக்கொண்டு ஒரு 'குடி'மகன். டாஸ்மாக் தந்த அரசாங்கமே..நீ வாழ்க!

என் முழுவிசையையும் தம்கட்டிச் சேர்த்தேன். "ங்ங்... ஆஹ்.." குடிமகன் விநாடியில் லாரிக்கு இருபதடி தூரத்தில் விழுந்தான். 'க்க்க்க்க்க்றீஈஈஈஈச்ச்ச்.....' லாரி கதறிக்கொண்டது. சக்கரங்களில் தீப்பொறி பறக்க எழுந்து நின்று ப்ரேக்கை அழுத்தினான் ட்ரைவர். பின்னால் வந்த அவர்களின் கார் வேகமாகப் பாய்ந்து லாரியை முத்தமிட... நீட்டிக் கொண்டிருந்த கம்பிகள் சரக்கெனப் பாய்ந்தன.

'சந்திரிகா.. சந்திரிகா! என் கண்ணே! உன் ரத்தம் இவ்வளவு சிவப்பா?'... துடித்துக்கொண்டிருந்த அவளது விரல்கள் மெல்ல ஓய ஆரம்பித்தன. நான் சிரிக்க ஆரம்பித்தேன் "ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹ்ஹாஹா............."

*********************************************************

"ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹ்ஹாஹா............."

"இப்படித்தான் டாக்டர் அடிக்கடி ரொம்பப் பெரிசா சிரிக்கிறார். என்னால சுத்தமா கண்ட்ரோல் பண்ணவே முடியல. நேத்து ராத்திரிகூட தூக்கத்தில் சரேல்னு எழுந்தவர் பாய்ஞ்சிபோயி டிவிய அப்படியே ஸ்டேண்டோட சேத்து தள்ளிவிட்டுட்டார். வரவர ரொம்ப பண்றார். ப்ளீஸ்... எனக்கு என்ன பண்றதுன்னே புரியல" சந்திரிகா புலம்பினாள்.

"சின்ன வயசுல இருந்து நிறைய மர்மநாவல்களைப் படிச்சு அதிலேயே மூழ்கி இருந்திருக்கார்.அப்படியே தனக்குன்னு ஒரு கற்பனை உலகத்தை சிருஷ்டிச்சிட்டு அதிலேயே வாழ்ந்திருக்கார். தனிமையைக் கரைச்சுக்க அவர் தேர்ந்தெடுத்த வழி இப்போ அவரை கரைச்சிட்டு இருக்கு! இனி இவரை ரவுண்ட் த க்ளாக் மெடிகேர்லதான் வெச்சிருக்கணும்... இன்னிக்கும் வழக்கம்போல ஸ்ட்ராங்குலைஸர் கொடுத்துடலாம் சந்திரிகா! டோண்ட் வொர்ரி" என்றான்(ர்) டாக்டர் ஹரிப்ரசாத்.

"டேய்! அநியாயமா எனக்குப் பைத்தியக்காரப்பட்டம் சூட்டாதீங்கடா பொட்டைப்பசங்களா! இப்படி ஸ்ட்ராங்குலைஸர் கொடுத்தே என்னை மெண்டலாக்கிட்டீங்களேடா திருட்டு நாயே! என்னை ஹாஸ்பிடல் அனுப்பிட்டு என் பொண்டாட்டியோட கூத்தடிக்க ப்ளான் போட்றியா? உன்னையெல்லாம் உயிரோட விட்டாத்தானேடா...."

மேஜைமேல் இருந்த பேப்பர் வெயிட்டைத் தூக்கி அவன்மேல் வீசினேன். குறிதவறி அவள் உச்சந்தலையை உரசிச் சென்றது.சட்டென்று கையில் கிடைத்த கண்ணாடி டம்ளரை உடைத்து பாதி டம்ளருடன் அவன்மீது பாய்ந்தேன். எளிதாக விலகியவன் கைக்குக் கிடைத்த அந்த இரும்புராடை எடுத்தான். காற்றில் 'விஷ்' என சுற்றினான்...

"சத்த்..." என் மண்டையோடு பிளந்தது. நல்ல அழுத்தமான, கனமான இரும்பு ராடு... இருபத்தெட்டு ஆண்டுகள் உடலுக்குள்ளேயே பாய்ந்து அலுத்துப்போன கருஞ்சிவப்புத் திரவம் வெளியுலகைப் பார்க்கும் ஆசையில் கொழகொழப்பாய்ப் பீய்ச்சியது. என் கண்கள் பிதுங்கின. "ஹா.. ஹாஹ்..." நாசித்துவாரங்கள் விடைத்து மூச்சுக்காய் ஏங்க தொண்டை வறண்டு "தண்ணீர்..தண்ணீர்" என்று துடித்தது. அதிவேகமாய் இருட்டத் தொடங்கிய கண்களில்....

பின்குறிப்பு: க்ரைம் கதைகள் படிப்பது உடல்நலன் மற்றும் மனநலனுக்குத் தீங்கானது.

புதன், 19 ஜனவரி, 2011

முத்தம்

பகல்முழுக்க ஓடி
அலுத்துச் சலித்த
இரவுகளில்...
எப்போதாவது அணைக்கும்
தொந்தி குலுங்கும்
கணவனின் கீச்சுக்குரலில்...
“பன்னி மாதிரி ஆயிட்டேடி”
வார்த்தை ஊசிகள்
கிளறிவிடும்...
தாவணிப்பருவத்தில்
முதல்முத்தம் கொடுத்த
அரும்புமீசைக் காதலனின்
முகம்...
மிக மங்கலாய்...
“அப்படியே இருந்திருக்கலாமோ?”

சனி, 15 ஜனவரி, 2011

சொந்தமாக (சாமியார்)த் தொழில் தொடங்கி கோடீஸ்வரனாவது எப்படி?


இப்போதெல்லாம் மணிமேகலைப் பிரசுரப் புத்தகங்கள் கொஞ்சம் டல்லடிப்பதாலும், அண்ணன்கள் கேஆர்பியாரும் ஓஆர்பியாரும் பதிப்பகம் ஆரம்பித்து விட்டதாலும், நானும் "எப்படி?" வரிசைப் புத்தகங்களை எழுதிக்குவித்து கோடீஸ்வரனாகி விடலாம் என்று ரொம்ப சீரியஸாக யோசித்து ஒரு முடிவெடுத்திருக்கிறேன். "அப்போ கேஆர்பி, ஓஆர்பிக்களின் கதி என்ன?" என்று கேட்பவர்கள் கட்டுரையைத் தொடரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காலையில் வெளிக்குப்போவதில் ஆரம்பித்து, இரவு வீட்டுக்கு வந்து சீரியல்களுக்கு மத்தியிலும் சிரமப்பட்டு இல்லாள் சமைத்த அரைவேக்காட்டுச் சாப்பாட்டைக் கொறித்துவிட்டு படுக்கையில் அஜீரணக் கோளாறால் புரண்டுகொண்டிருக்கும் வரையிலும் ஒரு சராசரி மனிதன் "சிக்கல் சிவமயம்" என்று வாழும் வாழ்க்கையில், கோடீஸ்வரக்கனவு என்பது கந்துவட்டிக்காரனைவிடக் கொடுமையாகத் துரத்திக் கொண்டே வருகிறது. இந்தக் கோடீஸ்வரக் கனவுக்கு நீர்பாய்ச்சி, உரம்போட்டு வளர்ப்பவர்களில் இருவகையினர் முக்கியமானோராய் இருக்கின்றனர். ஒரு வகையினர் எம்எல்எம் பிருகிருதிகள். இவர்களைக் கண்டு தெறித்து ஓடுபவர்கள் இந்தக் கட்டுரையைத் தொடரும் அருகதையற்றவர்கள் என்பதை அறிக.

"சார்... ஆக்சுவலா இதுல வந்து பாத்தீங்கன்னாக்கா..." என்று அவர்கள் தன்னம்பிக்கை தெறிக்கும் குரலில் ஆரம்பிக்கும்போதே நமக்கு மஞ்சள்தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடு ஞாபகம் வந்து தொலைக்கும். இந்த பாழாய்ப்போன மனசு இருக்கிறதே, அதற்கு எப்போது எதைக் கற்பனை செய்வது என்று ஒரு விவஸ்தையே கிடையாது. ஆடாகப்பட்டது அசந்துமறந்து தலையாட்டிவிட்டால் தொலைந்தது கதை. கத்தியை நட்டநடுக் கழுத்தில் ஒரேவீச்சாக இறக்குவார்கள் "சார். நீங்க ஒரு தடவை எங்க பிஸ்னஸ் மீட்டிங்கை அட்டெண்ட் பண்றீங்க கண்டிப்பா...நாளைக்கே நான் அழைச்சிட்டுப் போறேன்" என்பதாக.

"நான் அழைத்துவரப்படவில்லை;இழுத்துவரப் பட்டிருக்கிறேன்" என்று மனோகரா பாணியில் நானும் ஓரிருமுறை இம்மாதிரியான 'பிஸ்னஸ் மீட்டிங்'குகளுக்குச் சென்றிருக்கிறேன். 'புனித ஆவி' எழுப்பும் சுவிசேஷக் கூட்டங்களுக்கும் இவற்றிற்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடு இருப்பதாக என் சிற்றறிவுக்கு எட்டித் தொலைக்கவில்லை.

கோடீஸ்வரக் கனவுப்பயிர் வளர்க்கும் இரண்டாம் வகையினர் சுயமுன்னேற்றநூல்களை எழுதிக் குவிப்போர்! இவர்களைப் பற்றி நாம் "சுயமுன்னேற்றப் புத்தகங்களை எழுதுவது எப்படி?" என்கிற இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

இப்போது விஷயத்துக்கு வரலாம்.

சொந்தத் தொழில் தொடங்கி முன்னேற நினைப்போர் ஒரு விஷயத்தில் சர்வஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். தன்னுடைய பணத்தை முதலீடாகப் போட்டுத் தொழில் தொடங்குவதைவிட முட்டாள்தனம் வேறில்லை என்ற அறிவு இருப்பது பாலபாடம்.

"என்னடா இவன் உளறுகிறான்?" என்று நினைக்கவேண்டாம். பணமுதலீடு இல்லாமல் தொடங்கி சக்கைபோடுபோடக்கூடிய இரண்டு முக்கியமான தொழில்கள் அரசியலும், ஆன்மீகமும். இதில் இரண்டாவது சற்று சுலபமானதும், சொகுசானதும்கூட. அரசியல் தொழிலில் ஆரம்பகாலகட்டங்களில் போஸ்டர் ஒட்டுவது, கொடிபிடிப்பது, தொண்டைகிழிய "வாழ்க" கோஷம் போடுவது போன்ற உடலுழைப்பிற்கான தேவைகள் அதிகம்.

ஆன்மீகத்தொழில் தொடங்கி வெற்றிபெறுவது என்ற புத்தகத்தை விரிவாக எழுதினால் அது சற்றேறக்குறைய நாலாயிரத்துச் சொச்சம் பக்கங்களாக வரும் என்பதால் இது ஒரு அறிமுகக்கட்டுரை மட்டுமே.

சாமியார்த்தொழிலில் மொத்தம் மூன்றுவகை இருக்கின்றது. முதலாவதுவகை சாமியார்கள் நம்மூர் கிராமக்கோயில்களில் இருக்கும் பூசாரிகளின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி. அதிகமான தத்துவங்களைச் சொல்லி 'காண்டு' ஏத்தாமல் எளிமையான அருளுரைகளை மட்டுமே வழங்கினால் போதும். இதற்கு நல்ல உதாரணமாக இருப்பவர்கள் மேல்மருவத்தூர் பங்காருநாயுடுவும் வேலூர் தங்கக்கோயில் நாராயணி சாமியாரும் ( இவர் மேற்படி பங்காருவின் பட்டறையில் தொழிற்பயிற்சி எடுத்துக்கொண்டு தனியாகத் தொழில் தொடங்கியவர் என்பது நோக்கத்தக்கது!). இப்படியான சாமியாராக ஆவது சுலபம்தான். முதலில் சற்று ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தைத் தேர்வுசெய்து ஒரு வேப்பமரத்தையோ அல்லது கரையான்புற்றையோ தேர்வுசெய்து கொள்ளவேண்டும். தேர்வுசெய்யப்பட்ட மரம் அல்லது புற்றுக்கு வாராவாரம் வெள்ளி செவ்வாய், நல்ல நாட்கள் கெட்டநாட்கள் இம்மாதிரியான நாட்களில் நன்கு தண்ணீர் ஊற்றிக் கழுவி (அபிஷேகம்!) புத்தாடை அணிவிப்பது ஒரு அடிப்படைக்கடமை. அணிவிக்கப்படும் ஆடை சிவப்பு, மஞ்சள் அல்லது கருப்பு நிறங்களில் இருப்பது நலம்பயக்கும். நீங்களும் அதேவகையிலான நிறத்தில் ஆடை அணியத் துவங்கவேண்டும் என்பதை மறவாதீர்கள். ஆறுமாதங்கள் தொடர்ந்து செய்தால் ஓரிரு பெண்பக்தைகள் நிச்சயம்! இவர்கள் மூலமாகப் பரப்புரை செய்து கொஞ்சம் கொஞ்சமாகத் தொழிலை அபிவிருத்தி செய்யவேண்டும். முக்கியமான விஷயம் அருள்வாக்கு சொல்லக் கற்றுக் கொள்வது. இது ஒன்றும் பெரிய கம்பசூத்திரமில்லை...ஊரில் இருக்கும் பழுத்தகிழம் ஒன்றிடம் ஒருமாதம் தொடர்ந்தாற்போல பேசிக்கொண்டிருந்து அது உதிர்க்கும் அறிவுரைகள், தத்துவமுத்துக்களை சேகரித்துக் கொண்டாலே போதும். சில உதாரணங்கள்:

1) "போடா போ! போய் வீட்டைக்கவனி...நாட்டைக்கவனி.. புள்ளைகுட்டியைப் படிக்கவை... தாயை வணங்கு. மனைவிதான் சக்திஸ்வரூபம்!"

2)"குப்பைகளைச் சுத்தம் செய்!" (நீங்கள் மனக்குப்பை, உடல்குப்பை,உலகக்குப்பை, நினைவுக்குப்பை என்று சொல்வதாக பக்தகோடிகளே குறியீடு, உருவகங்களையெல்லாம் கற்பனை செய்து கொள்வார்கள். இப்போதெல்லாம் புதுக்கவிதைகளை வாசிப்பவர்கள் செய்கிறார்களே..அதே மாதிரி!)

3) "உடலே கோயில்! உள்ளமே தெய்வம்!!" ( அப்புறம் நீ ஏன்யா வேப்பமரத்தைக் கும்பிடுறேனு கேட்பவர்களை அடுத்தமுறை உள்ளேவிட்டுவிடக்கூடாது)

 இரண்டாவது வகை சாமியாராக இருப்பதும் சுலபம்தான். எளியவகை தியானப்பயிற்சிகளை கற்றுக் கொடுத்தபடி "வாழ்க்கை வாழ்த்தான் மச்சான்", "ஃப்ரீ வுடு மாமே" என்பதுபோன்ற சுலோகங்களுடன் "டோண்ட் வொர்ரி..பீ ஹேப்பி" வகை வாழ்க்கையை உபதேசிக்கத் தெரிந்தால் நீங்கள் இந்தவகையில் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டு வெற்றிகரமான 'தொழிலதிபராக' வலம் வரலாம். நடிகை பூமிகாவின் இன்னாள் கணவர் பரத் தாக்கூர் போன்றவர்கள் இந்த வகையில் அடங்குவர்.

மூன்றாவதுவகை சாமியாராக இருப்பது என்பது கொஞ்சம் கூடுதல் உழைப்பைக் கோரும் உழைப்பாகவே இருக்கின்றது. ஆனால் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு. உங்கள் தொழிலுக்கு சர்வதேச அளவில் மார்க்கெட் இருக்கும். சண்டைநடக்கும் நாடுகளுக்கிடையில் சமாதானத்தூதுவராக 'செயல்'பட்டு நோபல் பரிசில் பெறவும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ரவிசங்கர், ஜட்டி...சீ..ஜக்கி, காலஞ்சென்ற வேதாத்திரி, நித்யானந்தன் போன்றோர் நல்ல உதாரணம்.இந்தவகைச் சாமியாராக ஆகவேண்டுமெனில் நீங்கள் சில வருடங்கள் கடுமையான தயார்படுத்தல்களைச் செய்யவேண்டும். கொஞ்சம் ஆலோசனைகள் கீழே :

1) கொஞ்சம் கஷ்டப்பட்டாவது பகவத்கீதை, மகாபாரதம், ராமாயணம், தம்மபதம், ஈசாப் குட்டிக்கதைகள், பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவற்றை நெட்டுருப் போட்டுக் கொள்ளுங்கள். சில நேரங்களில் சம்ஸ்கிருத மூல சுலோகங்களை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது. உங்களை பெரிய ஞானியாகக் காட்டிக்கொள்ள உதவும்

2) யோகாசனம் செய்வதுபற்றி தேசிகாச்சார் போன்றோர் நல்ல புஸ்தகங்கள் போட்டிருப்பதாகத் தெரிகிறது. அவற்றை வாங்கிப் படித்தபின் நாலைந்து ஆசனங்களைக் கலந்துகட்டி உங்களுக்கென்றே விசேஷமாக ஒரு சில ஆசனங்களையும் முத்திரைகளையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். சித்பத்சலாசனம், கலாசனம், மூத்ரபேதியாசனம், ஆதிமுத்ரா, பாதிமுத்ரா என்றெல்லாம் விதவிதமான பெயர்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். பழகவும் செய்யவும் எளிமையாக இருப்பது முக்கியம். அப்போதுதான் நடுத்தரவர்க்க இல்லத்தரசிகளை உங்களது ரசிகர்கூட்டத்தில் சேர்க்கமுடியும்.

3) "சாமி கிருஷ்ணரின் இருநூறாவது பிறவி, ராமானுஜரின் நூத்திச் சொச்சமாவது ஜென்மம்" என்றெல்லாம் உங்களது அடிப்பொடிகளை வைத்து கடைத்தெருக்களில் கொஞ்சம் சத்தமாக பேசிக்கொண்டிருக்கச் செய்வது நல்ல மார்க்கெட்டிங் உத்தி.

4) அடுத்த முக்கியக்கட்டம் உங்களுக்கென்று ஒரு அறிவுஜீவி வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். எங்கேயாவது சில நபர்கள் "நான் எஸ்பஞோல் மொழி படிக்கப் போகிறேன், ஃப்ரான்ஸில் நான்தான் நம்பர் ஒன், நம்பர் டூ எல்லாம் போகும் இலக்கியவாதி, 'ஷாக்கு தெரியுதா' என்கிற போலிஷ் எழுத்தாளன் என்னைப்போலவே 100 ஆண்டுகளுக்குமுன் எழுதியுள்ளான்...இத்யாதி இத்யாதி" என பினாத்திக் கொண்டு திரிவார்கள். அவர்களைக் கட்டி இழுத்துவந்து உங்கள் பிரச்சாரப்படையில் சேர்த்துக்கொண்டால் கொடுத்த காசுக்கு மேலேயே கூவுவார்கள்.

ஏற்கனவே சொன்னமாதிரி இது ஒரு அறிமுகக் கட்டுரை மட்டுமேயாதலால் இத்துடன் முடித்துக் கொள்ளப்படுகின்றது. இது தொடர்பான செயல்முறை வகுப்புக்களை வருகின்ற கடுங்கோடைகாலத்தில் (அப்போதுதான் மண்டைக்குழம்பு நன்கு கொதித்து உருகிப்போயிருக்கும்) துவங்கலாம் என்றிருக்கிறோம். விருப்பமிருப்பவர்கள் உடனே முன்பதிவு செய்யவும். வளமான எதிர்காலத்துக்கும் சொகுசான வாழ்க்கைக்கும் நாங்க கேரண்டி!

திங்கள், 10 ஜனவரி, 2011

எழுதிக் கிழித்து...'இலக்கியம்' படைத்து...

நான் பாட்டுக்கு சிவனே என்று விரலுக்கு வந்ததைக் கிறுக்கிக் கொண்டு திரிந்திருந்தேன். கதை எழுதுகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து நான்கைந்து கதைகளையும் எழுதித் தொலைக்க ஆளாளுக்கு என்னைப் 'படைப்பாளி' ரேஞ்சுக்கு ஏற்றிவைக்க என்பாடு திண்டாட்டம்...! எதை எழுதத் துவங்கினாலும் இது நம்ம ரேஞ்சுக்கு(?!) சரியா வருமா என்றெல்லாம் யோசிக்கத்துவங்க அங்கேதான் சனியன் சம்மணம் போட்டு உட்காரத் தொடங்கினான். கொஞ்சநாள் இடைவேளைக்கு அப்புறம் ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால்... ம்கூம்... மலச்சிக்கல் வந்தவன் போலாகிவிட்டேன்.

தொடர்ச்சியான வாசிப்பு என்பது தரமான எழுத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பது இந்தநாட்களில் தெளிவாகவே புரிந்தது. இருப்பதை வைத்துக் கொஞ்சநாள் ஜல்லியடிக்கலாம்...நீடித்திருப்பது கடும் உழைப்பினைக் கோரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

என்னதான் எழுதலாம் என்று குழம்பிக்கொண்டே இருந்தேன். பேசாமல் ஏதாவது 'அநியாயத்தைக்' கண்டு 'பொங்கலாமா'? என்றால் வெறுமனே இண்டர்நெட்டில் உட்கார்ந்து 'பொங்க' கூச்சமாய் இருக்கிறது. கவிதை கிவிதை....? மூச்! நினைத்தாலே கைநடுங்க ஆரம்பித்து விடுகின்றது. ஆபத்துக்குப் பாவமில்லை... சுயசரிதையைக் கொஞ்சம் உல்டா செய்து கதை எழுதலாம் என்று நினைத்தால் கனவிலும் வந்து கையில் குச்சியோடு மிரட்டுகிறார் கேஆர்பி.செந்தில். என்ன கொடுமையடா இது? ஒரு தமிழ்ப் பதிவனுக்கு வந்த சோதனை???

என்ன ஆனாலும் சரி... இன்று முடிந்தவரை முக்கிப் பார்த்துவிடுவது என்று தீர்மானம்! ஆழிசூழ் உலகெலாம் நம்முடைய தமிழை மாந்தக் காத்திருக்க(?!), எழுத்து வறண்டுபோக நானென்ன ராமநாதபுர மாவட்ட ஏரிகுளமா? என்ற ரோஷம் ஊற்றெடுக்க ஒருவழியாய் உட்கார்ந்தாயிற்று!

சரி... இன்று ஏதும் 'இலக்கியம்' படைக்கவேண்டாம் பேசாமல் அரசியல் விமர்சனக் கட்டுரை எழுதி விடுவோம்! இருக்கவே இருக்கு இட்லி உப்புமா ரேஞ்சில் ஸ்பெக்ட்ரம் ஊழல்! கொஞ்சம் தேசம் பற்றிய அக்கறை... கொஞ்சம் கருணாநிதிக்குத் திட்டு, நீரா ராடியா டேப்பில் இருந்து ஒரு நாலுவரி, கனிமொழியைப் பெற்றெடுத்த ராஜாத்தியின் ஆங்கிலப்புலமை பற்றி கொஞ்சூண்டு எள்ளல்... அடடா! மணக்க மணக்க மசாலா அரசியல் விமர்சனம் ரெடி! ஆனால் ரேஷன் கடை அரிசிச் சோற்றுக் கல் போல டான்சியும், ஹர்ஷத்மேத்தாவும், போஃபர்சும் இன்னபிற 'சாதனை'களும் நினைவில் முட்டின. சரி விட்டுத் தள்ளுவோம்! சரி போகட்டும்... தி.மு.க வைத் திட்டி இறும்பூது எய்தும் நிலை நமக்கு வேண்டாம். அம்மா தி.மு.க வை விமர்சிக்கலாம் என்று பார்த்தால் எதிர்க்கட்சிகளைத் திட்டுவது ஃபேஷன் இல்லையாம்!

ஒருபுறம் பார்த்தால் கேஆர்பியார் ரொம்ப தீவிரமாக எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். அரசியல் நிலவரங்களை மிகவும் துயரம் சுமக்கும் வரிகளில் எழுதி 'எங்கே போகிறது இந்தியா?' என்று கேட்கும்போது எனக்கு என்னமோ தமிழ்சினிமாவின் செண்டிமெண்ட் ஊற்றுக்களான அம்மாக்கள் நினைவுக்கு வருகிறார்கள். (பண்டரிபாய் நல்ல சாய்ஸ்... இல்லையா?!) யார் கண்டது? போகிற போக்கில் நாளைபின்னே கரைவேட்டியெல்லாம் கட்டி ஃப்ளக்ஸ் போர்டுகளில் கையசைப்பார்போலத் தெரிகிறது. நானும் என் பங்குக்கு "பரவக்கோட்டை தந்த பாரிவள்ளலே! தஞ்சைத் தரணியின் நெஞ்சத்து நாயகனே" என்றெல்லாம் ரெடிமேட் ஃப்ளக்ஸ் போர்டு வாசகங்களுடன் தயாராகிவிட்டேன்.

இப்படியாக விபரீதமாக யோசித்துப் பயந்துபோனதில், தமிழ்ப் பதிவனாக இருப்பதற்குப் பேசாமல் ஊர் மளிகைக்கடையில் "புண்ணாக்கு அரைக்கிலோ... புடலங்காய் முக்காக்கிலோ" என்று பொட்டலம் கட்டப்போய்விடலாம் என்று முடிவெடுத்தபின் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது கிடைத்ததய்யா ஒரு பொக்கிஷம்!

ஆளாளுக்குப் பதிவுலகத்தில் இலக்கியம் வளர்த்தலை ஏதோ முயல் வளர்த்தல், காடைகௌதாரி வளர்த்தல் கணக்காய்ப் பேசிக் கொண்டிருக்க அலர்ஜி அதிகமாகிப்போய் கொஞ்சம் பின்னோக்கித் தேடியதில் அகப்பட்டது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.

நாயக்கமன்னர்களின் காலத்தில் தொகுக்கப்பட்ட இந்த நூலிலுள்ள பாடல்கள் மிக எளிமையாய் மனதுக்குள் புகுந்து கொள்கின்றன. நிறைய கருத்துக்கள் வியப்பும் உவப்பும் அளிக்கின்றன. அதேபோல ஆணாதிக்கத்தினை வெளிப்படுத்தும் பாடல்களுக்கும் பஞ்சமில்லை.

யதார்த்த வாழ்க்கையின் நெறிகளை, நியாயங்களை நன்றாகவே உணர்த்துகின்றது விவேகசிந்தாமணி. பெரிய அளவிலான சிடுக்குப்பிடித்த சொற்கள் இல்லை. எதுகைமோனை, ஓசைநயத்துடன் செவிக்கும் சிந்தைக்கும் இனிமையாக இருக்கின்றன. ஒரு உதாரணம் மட்டும் தருகிறேன்... உலகத்தில் பயன் தராத ஏழு விஷயங்களைப் பட்டியலிடுகிறது ஒரு பாடல்...

நம்முடைய கஷ்டகாலத்தில் நமக்குத் துணையாய் இருக்காத பிள்ளைகள், பசித்த நேரத்தில் கிடைக்காத உணவு, தாகம் எடுத்த நேரத்தில் கிடைக்காத தண்ணீர், குடும்பத்தின் வறுமை நிலையை அறியாமல் அல்லது கவலை இல்லாமல் மனம்போன போக்கில் செலவுகளைச் செய்து வாழும் பெண்கள், தகுந்த நேரங்களில் தவிர்த்து மற்ற நேரங்களில் தனது கோபத்தை அடக்கிக் கொள்ளத் தெரியாத அரசன், தனக்கு வித்தைகற்றுத் தரும் ஆசிரியனின் அறிவுரைகளை மதித்து நடக்காத மாணவன், பாவங்களைப் போக்காத புண்ணியதீர்த்தம் இவை ஏழும் உலகத்தில் பயனற்றுப்போனவை என்கிறது இந்தப்பாடல்.

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே.

இந்த நூலை முழுமையாகப் படிக்க : http://library.senthamil.org/344.htm
Related Posts with Thumbnails