செவ்வாய், 30 நவம்பர், 2010

ஈழமும் ஒரு பாமரத்தமிழ் இளைஞனும் : உறவின் நீட்சி! - பகுதி 2

"சொல்கிறார்கள்:

'கிளியின் கூட்டைத்
திறந்துவிடு'

முரண்படுகிறேன்...

'உடைத்துவிடு'.

- காசி ஆனந்தன்

2006 இல் தொடங்கிய நான்காம் கட்ட ஈழப்போர் மெல்ல மெல்ல அதன் உச்சத்தை அடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் அது பெரியளவு சலனத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை. ஈழத்தின் கிழக்குப்பகுதி சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்ப்ட்டு பிறகு "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில் வடக்கு மாகாணத்தின் மீதான ஆக்கிரமிப்புப்போர் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலுங்கூட தமிழகம் எவ்வித சலனங்களும் இன்றியே இருந்தது. பூநகரி வீழ்ந்த 2008 ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் ஈழத்தின் பொதுமக்கள் உயிரிழப்பு பற்றிய தகவல்கள் ஊடகங்களின் வாயிலாக தமிழக மக்களைப் பரவலாகச் சென்றடையத் தொடங்கின.

பூநகரித் தளம் வீழ்ந்தபோது நான் மிகப்பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். புலிகள் பலவீனம் அடைந்துவிட்டார்களோ என்ற ஐயம் எனக்குள் தலைதூக்கத் துவங்கியது. ஆனால் 2000 மாவது ஆண்டில் ஆனையிறவுப் பெருந்தள முற்றுகைப்போரில் புலிகள் காட்டிய கற்பனைக்கெல்லாம் விஞ்சிய வீரம் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருந்தது. பூநகரியில் புலிகளின் பின்வாங்கல் யுத்தோபாயத் தந்திரங்களின் பாற்பட்டது என உறுதியாக நம்பத் தொடங்கினேன். பூநகரி வீழ்ந்த மிகச்சில வாரங்களுக்குள்ளாகவே கிளிநொச்சி முற்றுகை தொடங்கியது.

மிகக் கடுமையான ராணுவ முற்றுகைக்கு மத்தியில் மேதகு பிரபாகரன் அவர்களது மாவீரர்தின உரையாற்றல் நிகழ்ந்தது. அவரது மாவீரர்தின உரையை உலகமே உற்றுநோக்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான் கவனித்தவரை ஏராளமான இளைஞர்கள் அந்த வருடத்தைய மாவீரர்தின உரையை மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர். நானே எனது நண்பர்கள் சுமார் 20-30 பேருக்கு பிரபாகரனது 2008 ஆம் ஆண்டு மாவீரர் உரையினை இணையதளம் மூலமாக அனுப்பி வைத்திருந்தேன்.

அந்த சமயங்களில் என் சொந்த கிராமத்தில் இருந்து தினசரி 5 தொலைபேசி அழைப்புக்களாவது எனக்கு வரும்... "டேய் மாப்ள... என்னடா ஆச்சி இன்னைக்கி? நம்மாளுவ ஏதாச்சும் அடிச்சானுவளா? எப்படியும் நம்மாளுவ செயிச்சிருவானுவள்லடா? ஒனக்கு எப்டிடா தோணுது?" அவர்கள் குரலில் ஒரு எதிர்பார்ப்பும் பரிதவிப்பும் இருக்கும். உரையாடலின் இறுதியில் நிச்சயம் ஒரு வாசகம் இருக்கும். "நீ வேணா பாரேன் மாப்ள... நம்மாளுவ லேசுப்பட்டவனுவோ இல்ல... கண்டிப்பா ஏதோ ஒரு ஐடியாவோடத்தாண்டா இருக்கானுவோ! திருப்பி அடிக்கிற அடியில சிங்களப்பயளுவோ கொழும்பு போயித்தான் எட்டிப்பாப்பானுவோ" இப்படியாக...

நம்பிக்கையின் ஆறுதலும், பரிதவிப்பின்  ஆற்றாமையுமாக நாட்கள் நகரத் தொடங்கின. பூநகரித் தளத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாளொன்றுக்கு சுமார் 18 மணி நேரங்களை நான் இணையத்திலேயே கழிக்கத் தொடங்கினேன். ஆயிற்று... புத்தாண்டின் துவக்கத்திலேயே கிளிநொச்சி வீழ்ந்தது என்ற செய்திகள் இணையத்தில் மின்னத் தொடங்கிய சில விநாடிகளிலேயே அந்த எழுத்துக்கள் மெல்ல என் விழிகளில் இருந்து மறையத் தொடங்கின... வழிந்து கொண்டிருந்த நீர்ப்படலம் என் விழிகளில் இருந்து காட்சியை மறைக்கத் தொடங்கியது. என் கிராமத்தில் இருந்து அலைபேசிய நண்பன் கதறி அழத் தொடங்கினான். என்னால் பேச இயலவில்லை. அன்று இரவு என் மனம் பல்வேறு திசைகளில் அலைபாய்ந்திருந்தது.

போரின் நேரடி பாதிப்புகள் ஏதுமற்ற எங்களுக்கே இப்படியென்றால் போரின் வலியுணர்ந்த ஈழத்தின் சகோதரர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? இப்போது கற்பனை செய்து பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தீ... ஒவ்வொன்றும் புதுப்புது வெடிகுண்டாய்... மக்கள் பிணங்களாய் கொத்துக் கொத்தாய் சாயும் வலிசுமந்த செய்திகளைத் தாங்கிய தமிழகத்தின் தினசரிகளைத் தொடவே அச்சமாக இருந்தது.

ஒவ்வொரு தமிழனுக்கும் ஈழம் தொடர்பான ஆதங்கம் இருந்தது. இந்தப்போர் நின்றுவிடக் கூடாதா என்று ஒவ்வொரு வீட்டிலும் ஏக்கம் ததும்பி இருந்தது. தமிழர்களின் நெஞ்சில் இருந்த அந்த ஆதங்கமும் ஏக்கமும் மிக எளிதாய் ஒரு பெரும் போராட்டமாய், புயலாய் மாற்றப்பட்டிருக்க முடியும். ஆனால் தமிழகத்தின் காட்சி ஊடகங்களின் துரோகமும் சுயநலமும் ஈழப்போராட்டத்தின் மற்றெந்த துரோகத்தையும்விட எள்ளளவும் குறைந்ததல்ல. தினகரன் அலுவலக எரிப்பையும், அதற்கு முன் கலைஞரின் கைதையும் மணிக்கு நூறுமுறை ஒளிபரப்பி ஆதாயம் தேடிக்கொண்ட சன் டிவி ஈழம்பற்றி மறந்தும்கூட மூச்சு விட மறுத்தது. இன்றளவும் சன் டிவியின் துரோகம் அதற்கான தண்டனையை அனுபவிக்காமலேயே இருந்து வருகின்றது. சன்னின் அயல்நாட்டுப் பார்வையாளர்களில் பெரும்பான்மையான ஈழத்தமிழர்களில் எத்தனை பேர் சன் டிவியையும் அதன் சினிமாத் தயாரிப்புக்களையும் புறக்கணித்திருக்கின்றனர்? 'எந்திரனு'ம் இன்னபிற சன் வெளியீடுகளும் இலங்கையிலும் ஏனைய அயல்நாடுகளிலும் ஈழத்தமிழர்களால் ஆதரிக்கப்பட்டுத்தானே வெற்றியடைந்திருக்கின்றன? சன் மட்டுமல்ல ஜெயா, விஜய், ராஜ் உள்ளிட்ட அத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகளுமே ஈழம் தொடர்பான செய்திகளைப் புறக்கணித்தே வந்தன. சன் டிவி ஆளுங்கட்சி ஊடகம். அதன் புறக்கணிப்பு இயல்பானதே. 'ஈழத்தாய்' என்றழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஜெயா டிவி ஏன் புறக்கணித்தது? நடுநிலைத் தொலைக்காட்சி எனப்பீற்றிக்கொள்ளும் விஜயும் ராஜும் ஏன் புறக்கணித்தன? ஜெயலலிதாவுக்கு ஈழத்தின் மேல் என்றும் பெரிதாய் அக்கறை ஏதும் இருந்ததில்லை. மாறாக ஒரு வெறுப்புத்தான் நிரம்பி இருந்தது. அது பார்ப்பனீயத்தின் வெறுப்பு. இதே பார்ப்பனீய உயர்சாதி வெறுப்பு பின்னாளில் வ்ட இந்திய ஊடகங்களின் மூலமாக மே மாதம் மூன்றாம் வாரத்தில் அப்பட்டமாக பல்லிளித்தது.

இதோ தனக்குள் ஒரு எரிமலையினைச் சுமந்தபடி விடிகிறது ஜனவரி 29. மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் வளாகத்தில் மிகத் தெளிவான ஒரு மரணசாசனத்தை விநியோகித்தபடி ஈழத்தின் தீயை தன்மேல் சுமந்து எரியத் தொடங்கினான் முத்துக்குமார். ஒற்றைத் தீக்குச்சிக்காய்க் காத்திருந்த தமிழக இளைஞர்கூட்டம் சட்டெனப் பற்றிக்கொள்ளத் தொடங்குகின்றது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கூடிய இளைஞர்படை பொங்கி வழியும் அணையென ததும்பிக் கொண்டிருந்தது. ஒரு செங்கல் உருவப்பட்டால் போதும். இந்திய அரசின் துரோக சாம்ராஜ்ய மாளிகை சீட்டுக்கட்டுபோல சரிந்துவிழத் தொடங்கும் வேளையில் வழக்கம்போல தமிழக அரசியல் நரிகள் ஊளையிடத் தொடங்கின.

தனது உடல் ஆயுதமாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற முத்துக்குமாரின் கனவுக்கும் சேர்த்தே மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த துரோகத்தைப்பற்றிய மிகத்தெளிவான கட்டுரையை இயக்குனர் ராம் தனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளார் பாருங்கள்... முத்துக் குமாரனின் இறுதி ஊர்வலம் - எனது சாட்சியம் - இயக்குநர் ராம்.

முத்துக்குமாரின் உடலம் எரிந்துபோன எட்டாம்நாள் என் அலுவலகத்துக்கு வந்தான் பதினெட்டு வயது நிரம்பிய இளமீசை அரும்பிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். அவனது விழிகளில் இருந்தது தமிழரின் எதிர்காலம்...

(... பயணம் தொடரும்)

ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஈழமும் ஒரு பாமரத்தமிழ் இளைஞனும் : உறவின் நீட்சி!

"போராளிகள்
செத்துக் கொண்டிருக்கும்
மண்" என்றார்கள்
என் மண்ணை.

திருத்தினேன்

"போராளிகள்
பிறந்து கொண்டிருக்கும்
மண்". 
       - காசி ஆனந்தன்

அது 1990. நான் ஐந்தாம் வகுப்பில். அன்று மதியம் விளையாட்டுத்திடலில் விளையாடிய பொழுது... விர்ரென்ற சத்தம் காதைப்பிளந்தது. தலைக்கு மேலே ஒரு ஐம்பது அறுபது விமானங்கள் அம்புக்குறி வடிவத்தில் அணிவகுத்து வடக்குநோக்கி விரைந்துகொண்டிருந்தன. எனக்கு பயம் தாங்கவில்லை. என் நண்பன் உற்சாகமாகக் கத்தினான்

"இந்த ஏரோப்ளேன் எல்லாம் பிரபாகரன் அடிச்சி தொரத்தினவை... தோத்தாங்குளி... பயந்து ஓடிவாரானுவோ!" . என் நண்பனின் தந்தை என் பள்ளி ஆசிரியருங்கூட. அவர் வீட்டில் அன்றாடம் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை அடித்துத் துவைத்துக் காயப்போடப் படும். நண்பனுக்கு கேள்விஞானத்தால் வந்த அறிவு!

"எலேய்! யார்ரா அது பிரபாகரன்? அவன் என்ன இத்தினி ப்ளேனையும் அடிச்சி வெரட்டுற அள்வுக்கு என்ன பெரிய்ய்ய சாமியா?"

என்னைப் புழுபோலப் பார்த்த நண்பன் சொன்னான்

"அய்யே! இதுகூட உனக்குத் தெரியாதா? நம்ம சினிமால எல்லாம் அர்ச்சூனு, விசியாந்து எல்லாம் டூப்பு போட்டுத்தான் எல்லாரையும் அடிப்பானுவளாம்... பிரபாகரன் நெசமாவே ஒத்தக்கையால அம்பது பேர அடிப்பானாம்... போடா போ... இதெல்லாம் தெரியாம ஸ்கூலுக்கு வந்துட்ட"

எனக்குக் கொஞ்சம் அவமானமாகவே இருந்தது.. 'சார்' இடம் போய் "யாரு சார் பிரபாகரன்? உங்க புள்ளைக்கு மட்டும் எல்லாம் சொல்லிக் கொடுக்குறீங்க? நாந்தான க்ளாசுல ஃபர்ஸ்ட்டு மார்க்கு... எனக்கும் சொல்லிக் கொடுங்க" என்றேன்.

எங்கள் சார் என் தலையில் லேசாகத் தட்டியபடிச் சிரித்தவர் சொல்ல ஆரம்பித்தார்.

ஈழமும் பிரபாகரனும் எனக்கு அறிமுகமானது அப்போதுதான்... சங்கரன் வாத்தியாருக்கு நன்றி!

நான் பிறந்தது 1980 ஆம் ஆண்டு முற்பகுதியில்... தமிழ்நாடு முழுதும் ஈழ அலை சுனாமி போல அடித்துக் கொண்டிருந்த ஆண்டுகள் அவை. காற்று வெளியெங்கும் ஈழத்தின் ஈரப்பதமே நிரம்பி இருந்தது. அதுவும் நான் பிறந்து வளர்ந்த பகுதி வேதாரண்யம்... இன்றுவரை இந்திய சரித்திரத்தில் இரண்டுமுறை முக்கிய இடம்பெற்ற ஊர்!

எங்கள் ஊர்ப் பெரியவர்கள் எல்லார் வாயிலும் தினமும் உச்சரிக்கப்படும் பெயராக பிரபாகரன் என்ற பெயர் இருந்தது. என் அப்பா அப்போது கோடியக்கரை- அகஸ்தியம்பள்ளி பகுதியில் ரயில்வேயில் வேலைபார்த்து வந்தார். அவர் சொல்லும் கதைகளையும் கூர்ந்து கேட்க ஆரம்பித்தேன்.

அப்புறம் தினத்தந்தியில் வரும் ஈழச் செய்திகளும் என் ஆர்வத்துக்குத் தீனிபோடத் தொடங்கின. அன்றையபொழுதில் தமிழக மக்களைப் பொறுத்தவரை ஈழப்போராளிகள் எல்லாருமே விடுதலைப்புலிகள்தான்... பிரபாகரன் தான்...!

கொஞ்சம் கொஞ்சமாக பிரபாகரன் பற்றிய பிம்பம் என் மனதில் வரையப்பட்டுக் கொண்டே வந்தது... அவன் மிகப்பெரிய வீரன்! அவனை யாராலும் தோற்கடிக்க முடியாது! அவனுடைய துப்பாக்கியில் இருந்து மின்னல்வேகத்தில் குண்டுகள் சீறிப்பாயும்! எப்போதும் ஒரு புயல்போலச் சுழன்றுகொண்டே இருப்பான்... இப்படியாக...!

அப்போது எங்கள் ஊரில் மகாபாரதக் கதை திரௌபதி கோயில் திருவிழாவில் பதினெட்டு நாட்கள் தொடர்ச்சியாகப் பாடப்படும்... நானும் விடிய விடியக் கதைகேட்பேன். கதைசொல்லி அபிமன்யூவைப் பற்றியும் அர்ஜூனனைப் பற்றியும் பாடும்போது நான் பிரபாகரனை உருவகம் செய்துகொள்வேன். பிரபாகரன் என்பவன் எப்படியெல்லாம் சண்டை போடுவான் என்று கற்பனை செய்துபார்ப்பது எனக்கு முக்கியப் பொழுதுபோக்கானது.

1991 மே மாதம். இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் அரங்கம் தகித்துக் கொண்டிருந்தது. பொதுவாகவே தமிழக மக்களுக்கு நேரு குடும்பத்தின் மீதான அபிமானம் அதிகம். காங்கிரஸை அடித்து விரட்டிய திராவிட அரசியல் தமிழக மக்களின் மூச்சில் கலந்திருந்தாலும், பெரியாரின் பாரம்பரியத் தொடர்ச்சியை அவர்கள் நெஞ்சில் நிறுத்தி இருந்தாலும் நேரு குடும்பத்தின் மீதான பற்றினை அவர்கள் அரசியலில் இருந்து தனித்துப் பார்க்கக் கற்றிருந்தனர்.

21.05.1991.

இந்திய மற்றும் ஈழச் சரித்திரங்களின் வரலாற்றுப் பக்கங்களில் இன்னுமோர் கறுப்பு தினமாகிப் போனது! ( அது கறுப்பு தினம்தானா என்பது மிக ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்... அதனை வேறொரு இடுகையில் பார்ப்போம்) தமிழ்நாடெங்கும் தி.மு.க காரர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். என் தெருவில் இருந்த திமுக தேர்தல் பணிமனையை அடித்து நொறுக்கித் தீவைத்த கும்பலில் பதினோரு வயதுச் சிறுவனான நானும் ஒருவன்!

மெல்ல மெல்ல ஜனங்களின் மத்தில் விடுதலைப்புலிகளைப் பற்றிய பேச்சு குறைந்தது. ஒரு அச்சம் நிலவத் தொடங்கியது. ஆனால் அவர்களின் அடியாழத்தில் ஈழம் எப்போதும் உறங்கிக்கொண்டே இருந்தது... எனக்கும்தான்!

தமிழகமேடைகளில் இடியாக முழங்கத் தொடங்கியது ஒருகுரல்! ஏதென்ஸ் தொடங்கி, இங்கர்சால், ஃப்ரான்ஸ், வாஷிங்டன் பிரகடனம் என்று உலக அரசியலையும் வரலாற்றையும் குழைத்து ஒரு காட்டாறாய் மேடைகளில் தமிழைப் பாயவிட்ட அந்தக் குரல் வைகோவினுடையது!வைகோவின் இன்றைய அரசியல் பலவாறு விமர்சிக்கப்படலாம். ஆனால் அவர் தமிழக இளைஞர்களின் நெஞ்சத்தில் மூட்டிய கனல் மிகப்பெரிது! யாராலும் மறுக்க முடியாதது.

எனக்குள்ளும், என் நண்பர்களுக்குள்ளும் ஈழத்தை மீண்டும் தட்டியெழுப்பியவர் அவர்தான்!. நாங்கள் மீண்டும் பற்றியெரியத் தொடங்கினோம். ஈழம் எங்களுக்குக் குளிரில் கதகதப்பாகவும், வெயிலில் சாரலாகவும், தாகத்தில் அமிர்தமாகவும் ஆனது.

2001 ஜூலை. கொழும்பு கட்டுநாயக விமானதளத் தாக்குதல் தமிழகப் பத்திரிகைகளிலெல்லாம் முதல்பக்கச் செய்தியானது. அன்று என் கல்லூரி நண்பர்களிடம் விடியவிடிய விடுதலைப்புலிகளைப் பற்றி கதாகாலட்சேபம் நடத்தியதே என் வேலையாகிப் போனது.

நான் மட்டுமல்ல, என்னையொத்த தமிழக இளைஞர் கூட்டம் முழுதுக்கும் விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் கனவுநாயகர்களாகவே இருந்தார்கள்.

காலம் றெக்கைகட்டிப் பறந்தது! நான்காம் ஈழப்போர் பிறந்தது!

....(பயணம் தொடரும்)

வியாழன், 25 நவம்பர், 2010

வார்த்தை என்னைக் கைவிடும்போது மௌனம் பேசுகிறேன்...உலர்ந்துபோன என் உதடுகளில்
ஒட்டவைத்துப் போகிறாய்
ஒரு புன்னகையை

நீண்டதூரப் பயணங்களின்
ஜன்னலோரங்களில்
எழுதிக் கொண்டே
இருக்கிறேன்
உனக்கான என் கவிதையை

தூக்கம் கலைந்த அதிகாலைகளில்
மீண்டும் தொடர்கின்றன
முத்தம் பற்றிய கனாக்கள்

இமைகளைப் பறித்துக்கொண்ட
மொட்டைமாடி இரவுகள்
எத்தனை யுகங்களாய் 
நீள்கின்றன?

கவிதைக்குச் சொற்களைத்
தேடிக்கொண்டிருந்தபோது
மெல்லக் கடந்து
செல்கிறது
உன் காதல்.


தேவதைச்சாத்தான்கள்

"சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
........................................
........................................
........................................"

மனம் புயல்காற்றில் தெறித்து வானமெங்கும் சிதறிக்கிடக்கும் மேகத்துணுக்குகளைப்போல துண்டு துண்டாய் சிதறிக் கிடக்கின்றது. பி.சுசீலா வழிந்தோடும் துயரத்தை, தனித்திருப்பதன் வேதனையை மெல்ல கீதமிசைத்துக் கொண்டிருக்கிறார். எங்கோ தொலைத்த வாழ்வின் கணங்களைப் பரணில் இருந்து தூசுதட்டப்பட்ட பழைய புகைப்படம்போல ஏக்கத்துடன் மீட்டிக் கொண்டிருக்கிறேன். தைமாசக் காவேரிபோல மெல்லமாய் அசைந்து நகர்கிறது வாழ்க்கை.

எப்போதும் பலவண்ணம் காட்டிச் செல்லும் கலைடாஸ்கோப்பில் தெரிகின்றது வாழ்வின் தரிசனம். கறுப்பு, பழுப்பு, ரத்தச்சிவப்பென மாறிமாறிச் சுழலும் வர்ணங்களால் திருடப்பெற்றுக் கொண்டிருக்கும் விழியின் நிறமறி செல்கள்.

தொலைபேசியின் ஒலிவாங்கி வழியவிட்ட கண்ணீர் ஒரு கடலாய்ப் பெருக்கெடுத்துத் துரும்பாய் மாற்றித் தன்னுள் சுழற்றுகிறது. கண்ணீர் ருசித்து, கண்ணீர் புசிக்கும் நீர்வாழ்த் தாவரமாகிவிட ஏங்குகிற மனசு... எப்போதும் மந்தையில் இருந்து விலகிய குட்டிதானே மனம்நிறைத்துக் கொண்டிருக்கின்றது?

கதறிக் கதறி வறண்ட ஆட்டுக்குட்டியின் நாவு, துரோகத்தின் காயத்தில் இருந்து கசியும் மீதமிருக்கும் குருதியை சப்புக்கொட்டத் துவங்கும் இராப்பொழுதில் செவியைத் துளைத்துக்கொண்டு அப்போஸ்தலர்களின் போதனை....

கனவினை மீறி நீளும் கற்பனைக்கரங்கள் துழாவித் திரிகின்றன தனக்கான ப்ரியங்களை!

காட்சியைப் பறித்துப்போயின கள்சுரக்கும் கண்கள்! இலவம்பஞ்சின் மென்மை இல்லாதிருக்கும் சூன்யம் இறக்கிப் போகிறது பாறாங்கல்லை! தானே தனக்குக் கல்லறையாய், தானே தனக்கு மீளுயிர்ப்பாய், தானே தனக்கு ஆதிசேஷனாய்!

புரோமிதியஸின் நெருப்பு உள்ளமெரிக்கும் வித்தை பழகியது எப்போது? தேவதைச்சாத்தான்களின் விரல்களினின்று நீளும் நகங்களின் கூர்முனையில் கருணையும் மரணமும்...!

திங்கள், 22 நவம்பர், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...21/11/2010


Street demonstration, Petrograd, 18 June 1917. The banner in the foreground reads "Down With The 10 Capitalist Ministers/ All Power To The Soviets Of Workers', Soldiers', And Peasants' Deputies/ And To The Socialist Ministers/ [We Demand That Nicholas II Be Transfered To The Peter-Paul Fortress." 

ரொம்ப நாளாச்சுங்க காத்தாட மனசுவிட்டு அரட்டை அடிச்சி! மனுஷனோட வாழ்க்கையில அன்னாடம் சாப்பாட்டுக்கும், பொழப்புக்கும் நாய் படாதபாடு பட்டுட்டு இருக்குறப்போ அரட்டைதான் விஷயமா என்ன? சரி நாம விஷயத்துக்கு வருவோம்.

1) ஒருவழியா ராசாவோட கிரீடத்தை எறக்கியாச்சு. காங்கிரஸு கவருமெண்டு இனிமே "எங்கமேல எந்த தப்புமில்ல"னு புனிதப்பசுவா வேசம்போட ஆரம்பிச்சிடும். சிவபெருமான் தலைக்குள்ளாற கங்கைய அடக்கி வெச்சிருக்குறமாரி மண்ணுமோகனும் ஸ்பெக்ட்ரம் ஊழல்ல இன்னும் எத்தினி கறுப்பாடுங்க இருக்குங்குற டீடெயில எல்லாம் தன்னோட தலைப்பாக்குள்ள மூடிவெச்சிட்டு அமைதியா புன்னகைப்பாரு. நாமளும் ரொம்ம்ம்...ப டீசண்டான பெரதமருன்னு சொல்லிக்கிடலாம்.

ராசாவும் கனிமொழியும் பவர்புரோக்கருங்ககிட்ட பேசுன டேப்பெல்லாம் வெளியவருது. பதவியப் பத்தி புரோக்கருங்ககிட்டதாம் பேசணும்னா அப்ப மண்ணுமோகனும், மைனா அம்மாவும் சும்மாவா? இல்ல ஆட்டத்துல அவங்களுக்கும் பங்குண்டா? ஞாயமான கேள்விதானே? இந்த லட்சணத்துல காங்கிரஸுகார பெருமக்கள்ளாம் திமுகவால கவருமெண்டுக்கு கெட்டபேருன்னு சலம்பிகிட்டு திரியிறாங்க. ஹ்ம்ம்ம்... "ஈயத்தப் பாத்து இளிச்சிதாம் பித்தாள!"

2) பவருபுரோக்கருங்ககூட கனிமொழியும் ராசாவும் பேரம்பேசுன தேதிய பாத்தீங்களா? 21,மே,2009 ல ஆரம்பிச்சி கிட்டத்தட்ட ஒருவாரம். ரொம்ப சீரியஸா, அழுவாச்சியா எனக்கு அந்த முட்டாயிதான் வேணும்னு சின்னப்புள்ளத்தனமா பேச்சுவார்த்தை நடந்திருக்கு. அடப்பாவியளா! எங்க சொந்தபந்தம் ஒண்ணரை லட்சம் பேரு செத்துப்போயி அவங்க ஒடம்புல சூடு அடங்குறதுக்குள்ள இப்படி நெஞ்ச அறுத்துப்போட்டுட்டு யாவாரம் பேசி இருக்கீங்களே! நீங்கள்ளாம் நெசமாவே மனுசப்பொறப்புதானா? இதுல என்ன மசுத்துக்கு ஒங்களுக்கெல்லாம் தமிழு, மசுரு, மட்டன்னு வெளிவேசம்? பக்கத்து ஊட்டுல எழவு விழுந்தாலும் பாயாசத்துக்கு சண்டை போடுற நீங்கள்ளாம் தலைவருங்க... த்தூ! பேச்சு மட்டும் பெர்ர்ருசா இனத்தைக் காக்க வந்த தேவதூதன் மாதிரி! "ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்; உத்துப்பாத்தா உள்ள ஈறும் பேனுமாம்!"

3) நண்பரு ஒருத்தருகூட ரெண்டுநாளு முன்னாடி பேசிட்டு இருந்தப்போ ஒரு சுவாரசியமான தகவல சொன்னாரு. அவரோட நெலத்துல கொஞ்சூண்டு பகுதியில தமிழ்நாட்டோட பாரம்பரிய நெல்லுவகைய சாகுபடி பண்ணிட்டு இருக்காரு. காட்டுயாணம் னு பேராம். உரம், பூச்சிமருந்து எதுவும் வேண்டாமாம். ஆறுமாசமாவும் அறுவடைக்கி. சக்கரை வியாதிக்கு கண்கண்ட மருந்தாம் அந்த நெல்லுச்சோறு.

கொஞ்சம் யோசிங்க! சக்கரை வியாதிக்காரங்க அரிசிச்சோறு சாப்புடக்கூடாதுன்னு சொல்றாங்க. கோதுமைதான் சாப்புடணுங்கிறாங்க. அப்டின்னா காலங்காலமா அரிசி சாப்பிட்ட நம்ம தாத்தன் பாட்டன்லாம்??? உணவே மருந்து, மருந்தே உணவுன்னு வாழ்ந்த ஒரு பண்பாடும் செத்துப்போச்சு, உணர்வுகளும் மரத்துப்போச்சு!

I think that one possible definition of our modern culture is that it is one in which nine-tenths of our intellectuals can't read any poetry ~Randall Jarrell

4) தொல்பழங்கலாச்சாரத்துக்கு, நாகரீகத்துக்குச் சொந்தமான எல்லா எனத்துலயும் நடுகல் வழிபாடு இருக்குங்க. சமூகத்துக்காவயும், நாட்டுக்காவயும் சண்டை போட்டு செத்துப்போனவங்க நெனவா கல்லுநட்டு கும்புட ஆரம்பிப்பாங்க! காலப்போக்குல இந்தமாரி வீரதீரமா சண்டைபோட்டு செத்துப்போனவங்க அந்தந்த இனக்குழுவுக்கு குலசாமியா ஆயிடுவாங்க. நம்மூரு மதுரவீரன், காத்தவராயன், ஒண்டிவீரன், தூண்டிகாரன் இந்தமாரி சாமியெல்லாம் ஒருகாலத்துல தேசம்காக்க சண்டைபோட்டு செத்துப்போனவங்கதான். ஒரு மனுசன் தனக்காக இல்லாம தன்னோட சமூகத்துக்காவ உசுரத் தியாகம் பண்றப்போ அவன் கடவுள்ங்கிற நிலைய அடஞ்சிடுறான்.

கிட்டத்தட்ட அஞ்சாயிரம் வருசத்துக்குமேல தொன்மையான தமிழ் இனத்துக்காவ சண்டைபோட்டு மண்ணோடயும், நம்ம மனசோடயும் கலந்துபோன நம்ம கொலசாமிகளைக் கொண்டாடுற 'மாவீரர் வாரம்'ங்க இது.  அவங்களோட மூச்சு கலந்துறக்குற காத்தை சுவாசிச்சி, உணர்வு கலந்துருக்குற நெலத்துல வாழ்ந்துட்டு இருக்குற தமிழனா பொறந்த எல்லாரும் இந்த வாரத்துல அவங்க கனவுகளைக் கொஞ்சமாச்சும் அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போறதைப் பத்தி தீவிரமா யோசிக்கணும்.

If you have much, give of your wealth; if you have little, give of your heart.- Arabian Proverb

5) நவம்பர்னா எனக்கு மாவீரர் வாரம் மட்டுமில்லீங்க; அக்டோபர் புரட்சின்னு சொல்லப்படுற ரஷ்யப்புரட்சியும் ஞாவகத்துக்கு வரும். தத்துவங்களும் அறிவியலும் சும்மா வியாக்கியானம் மட்டும் பேசிட்டு இருந்தப்போ மக்களுக்கான தத்துவமா இயங்கியல் பொருள்முதல்வாதத்தை முன்வெச்சி இதுதான் உழைக்கும் மக்களோட தத்துவம்னு மார்க்ஸ் சொல்லிட்டு போனத நெசமாக்கி கண்ணுக்குத் தெரியுற பூலோக சொர்க்கமா கம்யூனிச சமுதாயத்தை லெனின் தலைமையில ரஷ்யமக்கள் உருவாக்கிட்டுப் போன மாசம்ங்க இது! மதங்களும் கடவுள்களும் மனுசங்களுக்கு கொடுத்துருந்த போதைய தெளியவெச்ச கம்யூனிசப்புரட்சியை நாம இந்த மாசத்துல நினைவுபடுத்திக்கலாம் இல்லையா?

வயலாரோட ஒரு கவிதை எனக்கு நினைவு வருது.

"மனிதன் மதங்களைப் படைத்தான்
மனிதனும் மதமும் கடவுளைப் படைத்தனர்
மனிதனும் மதமும் கடவுளும் சேர்ந்து
மண்ணைப் பங்கிட்டுக் கொண்டார்கள்."

6) வழக்கம்போல கடைசியா எனக்குப் பிடிச்ச கவிதை ஒண்ணு. ஜீவா ரஷ்யாவைப் பத்தி எழுதினது:

ஊனில்லை உடையில்லை ஓய்வில்லை வீடில்லை
உற்ற நற்கல்வியில்லை
உரிமையும் கடமையும் ஒத்ததாயில்லை
எனும் ஒப்பாரி அங்கில்லை!
வீணில்லை வேலையற் றோரில்லை தனியுடமை
வெம்பூத ஆட்சியில்லை
வீழ்வில்லை ரஷ்யாவில் மேலில்லை கீழில்லை
வெற்றி எல்லோர்க்கும் எல்லை!

சனி, 20 நவம்பர், 2010

தீச்சுமக்கும் விழிகள்


நெருப்பைச் சுமக்கும் கருப்பை
பாரதியின் தாய்க்கு மட்டுமல்ல...
முத்துக்குமாரா!
உன் தாய்க்கும்தான்.

நீ ரௌத்திரம் பழகியதில்
கருகிப்போயின
பலரது முகமூடிகள்

கொஞ்சம் விழிதிறந்து பார்!

தேசிய வரைபடத்தில்
சில கிழிசல்கள்...
ஒட்டுப்போட முயலும்
ஓட்டுக்கோமாளிகள்

காதைக் கிழிக்கும்
ஜெய்ஹிந்த் கோஷம்...
மெல்லத் தேய்கிறது
உரிமைப்போரின் கீதம்

உணர்வினை விற்று
உணவு வாங்கும் கூட்டம்...
ஓலமிடுகிறது
தமிழனின் தொன்மை.

நரிகளின் கூட்டம்
ஒரு புலியின் சவம்
பார்த்து நடுங்கின.

புலிகளின் கூட்டமோ
நரிகளின் ஒப்பாரிக்கு
மயங்கிய கொடுமை...
ஒப்பாரியாய் 'ஜனகனமண'

சொந்தச் சோதரர்கள்
துயரத்தில் சாதல்கண்டும்
அந்திக்கு பின்தொடரும்
காரிருளாய் மனம் இருண்டு
சிந்திக்கும் திறனிழந்த
'செந்தமிழ்' மாக்களை நீ
நிந்தித்தே எரிந்துபோனாய்!

இன்னும் கனிந்து கொண்டிருக்கின்றது
எம் கண்களுக்குள்
நீ மிச்சம் வைத்த தீ!
ஆகுதியாய் முளைப்பார்கள்
முத்துக்குமார்கள்
என்றென்றும்!

நவம்பர் 19 : மாவீரன் முத்துக்குமார் பிறந்ததினம்

(நெருப்பைச் சுமக்கும் கருப்பை - நன்றி வைரமுத்து)

திங்கள், 8 நவம்பர், 2010

அஸ்வத்தாமாக்கள் சாவதில்லை!அஸ்வத்தாமனின் மனம் எரிந்துகொண்டிருந்தது. தனிமையும், துக்கமும், நிராசையும், கோபமும் அவனை அலைக்கழிக்க தன்னை துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் ஆற்றாமையின் சுவாலையும் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.

'துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டுவிட்டது. நான் தனியனானேன். எல்லோரும் என்னைக் கொண்டாடிய காலம் கனவாய்ப் போய்விட்டது. இன்று நான் யாருக்கும் உபயோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குருஷேத்திரக் களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனும் தன் பங்கை நடத்தி அழியாப்புகழ் பெற்று சுவர்க்கம் அடைந்தனர். தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியா! என் உயிரே! நண்பா! என்னால் ஏதும் கையாலாகாது என்றெண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? என்ன செய்வேன் இனி?'

அது குருஷேத்திரத்தின் பதினெட்டாம் நாள் படுகளம். எங்கும் மரண ஓலம் மட்டுமே எஞ்சி இருந்தது. குருஷேத்திரம் எனப்படும் ஸமந்தபஞ்சகத்தின் ஓரமாய் இருந்த குளக்கரையில் துரியோதனன் வீழ்ந்துகிடந்தான். ராஜ்யக் கனவுகள் கலைந்து மரணத்தில் சாயை கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகத்தில் கவியத் துவங்கி இருந்தது. துரியனின் உதடுகள் வெடித்துக் கிடந்தன. இமைகள் கிறங்கி இருந்தன. துரியனின் தலையைத் தாங்கி இருந்த அஸ்வத்தாமன் சிறிது நீரள்ளி துரியனின் உதடுகளில் தடவினான்.

"துரியா! என் அரசே! என் தோழனே! கொஞ்சம் கண்திற! எனக்குக் கட்டளை இடு" பதற்றத்தோடு கெஞ்சினான் அஸ்வத்தாமன்.

துரியன் மெல்ல இமை திறந்தான்.

"அஸ்வத்தாமா! எல்லாரும் மாண்டார்களா? என் பந்துமித்திரர் எவரேனும் எஞ்சி இருக்கிறார்களா? தர்மத்தின் பக்கம் நின்று என் ராஜ்யம் காக்க நான் முன்னெடுத்த போர் முடிந்ததா? குந்தியின் புத்திரர்கள் எப்படி நண்பா குருவம்சத்தின் ராஜ்யபாரத்தை சொந்தம் கொண்டாட முடியும்? கடைசியில் அதர்மம் வென்றதா? எல்லாரும் மாண்டபின் நான் மட்டும் ஏன் இன்னும் உயிர்த்திருக்கிறேன்?"

"இல்லை துரியா! இன்னும் யுத்தம் பாக்கி இருக்கின்றது. உன் கட்டளைக்காகத்தான் காத்திருக்கிறேன். ஒரு சொல்... பாண்டவரின் வம்சத்தை வேரறுத்து வருகிறேன். இந்த யுத்தத்தின் இறுதிப்பலியாக பாண்டவர்களின் தலைகள் இருக்கட்டும். கட்டளையிடு நண்பா!"

துரியன் முகத்தில் உயிரின் மலர்ச்சி துளிர்த்தது. சற்றே உடலை அசைத்து எழுந்தான். பிளக்கப்பட்ட தொடையின் வாதையில் அவன் முகத்தில் வேதனையின் ரேகைகள். தன் குருதி கலந்த குளத்து நீரள்ளி அஸ்வத்தாமனின் கைகளில் தெளித்தான். "இக்கணம் முதல் கௌரவசேனையின் இறுதி சேனாதிபதியாக நீயிருப்பாய் அஸ்வத்தாமா. வஞ்சம் முடித்து வா! உன் வரவுக்காய் என் மூச்சு காத்துக் கொண்டிருக்கும்"

அஸ்வத்தாமா எழுந்தான். மிச்சமிருக்கும் தன் ஆயுதங்கள் அனைத்தும் சேகரித்தான். அபாண்டவம் என்னும் தன் அஸ்திரத்தைக் கையிலெடுத்தான். மீதம் நடக்க இருப்பவற்றையும் காணச்சகியாத சூரியன் தன் மறைவிடம் புகுந்தான்.

இரவு எல்லாவற்றையும் விழுங்கிக் கொள்கிறது. அது தன் கர்ப்பப்பையில் எல்லா ஜீவராசிகளையும் பாதுகாக்கிறது. அதன் கதகதப்பில் அனைத்தும் துயில் கொள்கின்றன. ஆனால் நிராசையின், துயரத்தின், தனிமையின், துரோகத்தின் தகிப்பை, வெக்கையை உணர்ந்தவர் இரவின் கதகதப்பில் உறங்குவதில்லை. அவர்கள் இமைகள் மூடா நெடுங்கதவமாகி இரவை விழுங்கிச் செரித்துவிட முயன்றுகொண்டே இருக்கின்றன. அவர்களின் துக்கம் பெரும் ஓலமாகி தனிமையின் நிசப்தத்தை விரட்டிவிட முயன்றுகொண்டே இருக்கின்றது.

அஸ்வத்தாமன் அந்த இரவில் விழித்திருந்தான். பாண்டவர் பாசறையில் புகுந்தான். எதிர்த்தவர், உறங்கியவர் என வேறுபாடற்று இருக்க இமைகளை மூடிக்கொண்டே தன் ஆயுதங்களைப் பிரயோகித்தான். எங்கும் எழுந்த மரணஓலம் அவனை உன்மத்தனாக்கி இருந்தது. மானுடத்தின் ஆதிச் சுவையான வன்முறையை, குருதிச் சுவையை அவன் பரிபூரணமாக ருசிக்கத் துவங்கி இருந்தான். ஒவ்வொரு தலை வீழும்போதும் அவன் கரங்களுக்குள் புதிய ஜீவன் பாய்ந்தது. அவன் புலன்களனைத்தும் பரிபூரண விழிப்பில் இருந்தன. அவை மரணத்தின் விளையாட்டை உணர்ந்து கிளர்ந்தன.

அன்றைய பகலின் இழப்பைவிட அஸ்வத்தாமன் இரவில் தனித்து நடத்திய வேட்டை குரூரமாக இருந்தது.

'அதோ உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என் ஜென்மசத்ருக்கள்! என் பழி முடிக்கும் காலம் இதோ...'

அஸ்வத்தாமனின் வாளின் நுனியில் அறுந்து விழுந்தன ஐந்து தலைகள். ஆவேசத்துடன் பாய்ந்து அள்ளிக்கொண்ட அஸ்வத்தாமா காற்றினும் கடிதாய் விரைந்தான்.

"துரியா! இதோ பழிமுடித்தேன். இதோ உன் எதிரிகளின் உயிரற்ற தலைகளைப் பார்! யுத்தம் முடிந்தது. முடித்தவன் அஸ்வத்தாமன்! நீ கடைசியில் ஜெயித்துவிட்டாய் துரியா! திற! உன் விழிகள் நிறைய நிரப்பிக் கொள் இந்தத் தலைகளை!"

பழிதீர்க்கக் காத்திருப்பவர் எப்போதும் ஒரு தவமாகவே அதைக் கைக் கொள்கின்றனர். அவர்களின் புலன்களனைத்தும் ஒரு புள்ளியில் ஒடுங்கி இருக்கின்றன. வஞ்சம் தீர்க்கும் அந்த ஒற்றைப்புள்ளியை நோக்கியே அவர்களின் பாதை நீள்கிறது. பாதையெங்கும் நிறைந்திருக்கும் ஓலமும், குருதியின் வீச்சமும் அவர்களை உண்டு அவ்ர்களை உரமூட்டுகின்றன. இறுதிப்புள்ளியில் வஞ்சம் தீர்ப்பவரது அத்தனை புலன்களும் ஊழிக்காலப் பெருவெள்ளமாய்த் திறக்கின்றன. அதன் வீர்யத்தில் அத்தனை சாஸ்திரங்களும், தர்மங்களும் தாமாகவே ஒடுங்கிப் போய்விடுகின்றன. பழிதீர்த்தலின் உச்சத்தில் அவன் ஸ்கலிதம் நீக்குகிறான். லேசாக நடுங்குகிறான்.

துரியன் விழித்தான். துரியனது குரல் அஸ்வத்தாமனை பூமிக்கு இழுத்து வருகின்றது.

"மூடனே! ஆத்திரத்தில் அறிவிழந்து போனாயோ! இந்தத் தலைகளைப் பார்! அட மடையா! இவர்களின் இளமைவடியும் முகங்களைப்பார்! இளம்பஞ்சபாண்டவர்களைக் கொன்று அவர்களின் தலையைக் கொண்டு வந்திருக்கிறாயே! மூர்க்கனே! பாண்டவர்களைக் கொன்றுவருகிறேன் என்று கூறிய வார்த்தைகளை நம்பி மோசம்போனேனே! என் இறுதிப் பார்வையை நிராசைப்பார்வையாக்கிவிட்டாயே!"

வேதனையுடன் மூடிய துரியனின் விழிகள் அதன்பின் திறக்கவே இல்லை.

அஸ்வத்தாமன் விதிர்விதிர்த்துப்போனான். 'பாண்டவர்களுக்குப்பதில் அவர்கள் பிள்ளைகளையா கொன்றேன்? பாவிகள் இப்போதும் தப்பித்தார்களா?' மடங்கி அழத் தொடங்கியவனின் தோள்தொட்டான் கிருஷ்ணன்.

"அஸ்வத்தாமா! யுத்தம் முடிந்தது. இன்னும் ஏன் வஞ்சத்தோடு திரிகிறாய்! நீ பிராமணன்... கடமையை முடிப்பது மட்டும்தான் உன் பணி! இதோ சுற்றிலும் பார்... மகாபாரதமெங்கும் நிறைந்துகிடக்கின்றனர் நிராசையும், தனிமையும், துரோகமும் பீடிக்கப்பட்டோர்! அதோ பார்! ஏகலைவனை... உன் தந்தையின் துரோகத்தால் வனமெங்கும் பித்தனாய்த் திரிந்து கொண்டிருப்பதை... இன்னும்... இன்னும் துக்கத்தாலும், துரோகத்தாலும் புறக்கணிப்பாலும் எத்தனைபேர்... அம்பை தொடங்கி,சிகண்டியும், அரவானும், கர்ணனும்... இதோ உத்தரை முடிய... வேண்டாம் அஸ்வத்தாமா... உன் வஞ்சத்தை இதோ இந்த ஸமந்தபஞ்சகத்தோடு இறக்கிவைத்துவிடு. இல்லையேல் அது உன்னைத் தின்று செரித்துவிடும்."

அஸ்வத்தாமா கைகூப்பினான். "இல்லை கிருஷ்ணா! என்னால் இனி உறங்கமுடியாது. பாரதயுத்தம் நெடுகிலும் பாண்டவர்கள் துரோகத்தாலும் வஞ்சனையாலும் மட்டுமே வென்று வந்திருக்கிறார்கள். அஸ்வத்தாமா இறந்தான் என்று பொய்யுரைத்து குருத் துரோகத்தின்மூலம் என் தந்தையைக் கொன்றார்கள். ஆண்மையற்ற சிகண்டியை முன்னிறுத்தி குலத்தின் பிதாமகனான பீஷ்மனைக் கொன்றார்கள். நிராயுதபாணியான கர்ணனைக் கொன்றார்கள். மற்போரில் இடுப்புக்குக் கீழே தாக்குதல் முறையல்ல என்று தெரிந்தும் இதோ என் ஆருயிர் துரியனை வஞ்சகமாய்க் கொன்றார்கள். இன்னும்... இன்னும் பாரதயுத்தமெங்கும் துரோகம் மட்டுமே ஆட்சிசெய்து வந்திருக்கின்றது. கிருஷ்ணா! இனி நீயிருக்கும்வரை பாண்டவர்களைக் கொல்லமுடியாது என்று எனக்குத் தெரியும். நான் போகிறேன் கிருஷ்ணா! இன்னும் சொல்கிறேன் கேள்! சலனமற்று ஓடும் நதிபோன்ற வாழ்க்கையில் துரோகம் ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அதன் சுழலில் சிக்குபவர் எப்போதும் இறப்பதில்லை. அவர் கண்கள் என்றும் மூடுவதில்லை. துரோகிக்கப்பட்டவரது தீனக்குரலால்தான் பூமியெங்கும் நிரம்பியிருக்கின்றது. அதன் ஒலியில் நான் கலந்திருப்பேன் கிருஷ்ணா! பாண்டவர்களின் செவிப்பறையை அந்த ஒலி காலாகாலத்துக்கும் கதவடைத்துப் போடட்டும். அவர்களின் நெஞ்சம் இருளால் பீடிக்கப்பட்டதாய் இருக்கட்டும்"

அஸ்வத்தாமா காற்றோடு கரைந்துபோனான். யுகாந்திரங்களைத் தாண்டியும் அவன் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தாலும் வஞ்சனையாலும் யாரெல்லாம் பீடிக்கப் பட்டிருக்கின்றனரோ அவர்களில் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறான்.

அஸ்வத்தாமா இறக்கவில்லை. அஸ்வத்தாமாக்களுக்கு என்றும் சாவில்லை!
Related Posts with Thumbnails