சனி, 23 ஜூலை, 2011

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பகுதி-2
எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல்கிறாரோ, அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக என்மீது பொய்யான பிரச்சாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டபோதுஏடுகள் வாயிலாகப் பரப்பினர்.அந்த கொடூரமான குற்றச்சாட்டு அடங்கிய 'இந்தியா டுடே' தமிழ்வார இதழை இணைத்துள்ளேன். தயைகூர்ந்து முழுமையாக வாசித்துப் பாருங்கள்.

என்னை விசாரணைக்கென அழைத்துச் சென்ற முதல்நாளே சிறப்புப் புலனாய்வுத் துறையின் (SIT) அலுவலகம் அமைந்திருந்த 'மல்லிகை' கட்டிடத்தின் முதல்மாடியில் இருந்த டி.ஐ.ஜி (DIG) இராஜூ அவர்கள் முன்பு நிறுத்தப்பட்டபோது அவர் எனது படிப்பு பற்றி விசாரிக்கிறார். நான் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயப் படிப்பு (DECE) படித்தவன் என்றபோது அவர் கேட்டார் "நீதான் குண்டு தயாரித்துத் தந்தவனா?" - இதை முன்பே எனது முறையீட்டுமடலில் குறிப்பிட்டிருக்கிறேன். இதையே அன்று ஏடுகள் மூலம் பிரச்சாரம் செய்தனர். அதன் ஒரு உதாரணமே மேற்சொன்ன 'இந்தியா டிடே'.

எனது பெற்றோர் கல்வி ஒன்றே பெரும் சொத்தெனக் கருதி என்னைப் படிக்க வைத்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கிணங்கவே உண்மையான ஈடுபாட்டுடன் படித்தேன். அதன் காரணமாகவே நல்ல மாணவன் என்ற பெயருடன் எனது 10ஆம் வகுப்பையும் மின்னணுவியல் (DECE) படிப்பையும் நிறைவு செய்தேன்.

எனது ஆசிரியர்கள் எனக்கு வாழ்க்கைப்பாடம் சொல்லித்தந்தனரே தவிர குண்டு செய்வதற்குச் சொல்லித்தரவில்லை. எனது பெற்றோரின் உழைப்பாலும், எனது உழைப்பாலும் நான் பெற்ற கல்வி எனக்கும் என் குடும்பத்தார்க்கும் பயன்பட்டதோ இல்லையோ புலனாய்வுத்துறையினருக்கு இவ்வழக்கில் என்னைப் பொய்யாகப் பிணைத்து தூக்குமேடையில் நிறுத்தப் பயன்பட்டது என்றுதான் சொல்வேன்.

எந்த 'இந்தியா டுடே' மூலம் என்னை வெடிகுண்டு நிபுணர் என1991ல் பொய்ப்பிரச்சாரம் செய்தனரோ, அதே ஏடு, 1996ஆம் ஆண்டு 'துப்பில் துவாரங்கள்' எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரை தீட்டியது. அக்கட்டுரை புலனாய்வுத்துறையினர் (CBI, SIT) செய்துள்ள பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது, 'வெடிகுண்டு குறித்தும் எந்தப் புலனாய்வும் செய்யப்படவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளது.

புலனாய்வுத்துறையினரின் விசாரணையை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்த அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக 'இந்தியா டுடே' இதழ்மீது அன்று சிறப்பு நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர் என்பதைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

அவ்வாறு 'குண்டு நிபுணராக' முதலில் சித்தரிக்கப் பயன்படுத்தப்பட்ட எனது கல்வி, இறுதியில் பெட்டிக் கடையிலும் மிகச்சாதாரணமாகக் கிடைக்கும் அன்றாட வாழ்வில் பயன்படும் 9 வோல்ட் மின்கலம் (பேட்டரி செல்) வாங்கித் தந்தேன் என்பதான குற்றச்சாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நான் எத்தனை தூரம் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை இது தொடர்பான ஆதாரங்களை முன்வைப்பதன் மூலம் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

எனது வழக்கு முழுக்க முழுக்க தடா ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்புக் கூறப்பட்டது. இது குறித்துத் தீர்ப்புரை பக்கம் - 2660 பத்தி (Para) 80இல், கீழ்க்கண்டவாறு உள்ளது.

80.மேற்கூறிய முக்கிய சர்ச்சையில் முடிவு காண்பதற்கு, ரசு தரப்பானது மேல்முறையீட்டாளர்கள் பலரும் அளித்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலங்களையே நம்பியுள்ளது.இந்த வாக்குமூலங்கள் தடாச்சட்டத்தின் பிரிவு 15-ன் படி பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

என்றும், பக்கம்: 2843 பத்தி 658 இல் கீழ்க்கண்டவாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

658. திரு.ராஜீவ்காந்தியைக் கொலை செய்யச் சதி புரிந்த குற்றச்சாட்டை நிறுவுவதற்கு எதிரிகள் அளித்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையே முக்கியமாக நம்பியுள்ளனர்; இந்த வாக்குமூலங்கள் தடாச் சட்டத்தின் 15(1) பிரிவின்படி பதிவு செய்யப்பட்டவையாகும்.

ஆகையால் தடா ஒப்புதல் வாக்குமூலமே முதன்மை ஆதாரமாக(Substantive Evidence)க் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இத்'தடா' வாக்குமூலங்களை நிரூபிக்கத் துணை ஆதாரங்களாகவே (Corroborative Evidence) மற்றவை பயன்படுத்தப்பட்டன. நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்சொன்ன கருத்தின் அடிப்படையிலேயே என் வாதத்தை முன்வைக்கிறேன்.

1.9 வோல்ட் மின்கலம் குறித்து எனது ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுவதில் உள்ள வாசகங்களை அப்படியே தர விரும்புகின்றேன்.

"மேலும் நான் 9 வோல்ட் மின்கலம் இரண்டு (Golden Power) வாங்கி சிவராசனிடம் கொடுத்தேன். இவைகளைத்தான் அவர் குண்டு வெடிக்கச் செய்யப் பயன்படுத்தினர்.

இவ்வழக்கில் 9 வோல்ட் மின்கலம் சம்பந்தமாக விசாரிக்கப்பட்ட சாட்சிகள் .அ.சா 91 மொய்தீன், அ.சா 252 சீனிவாசன், அ.சா. 257 மேஜர் சபர்வாள், அ.சா 280 சந்திரசேகரன் ஆகியோர் ஆகும். இவர்களில் அ.சா252, அ.சா 257, அ.சா 280 ஆகியோர் தடயவியல் நிபுணர்கள். அவர்கள் சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 9 வோல்ட் மின்கலம் பற்றி நிபுணத்துவக் கருத்து (Expert Opinion) மட்டுமே அளித்துள்ளனர். எனவே அவர்களுடைய சாட்சியம் எனது வழக்கை எவ்வகையிலும் பாதிக்கவில்லை.

அ.சா 91 மொய்தீன் என்ற கடை ஊழியரின் சாட்சியம்மட்டுமே என் வழக்கோடு தொடர்புபடுத்தி வருகிறது. அவரது சாட்சியத்தையும், அவரை விசாரித்து வாக்குமூலம் பதிசு செய்ததாகக்கூறும் ஆய்வாளர் அ.சா 266 வெங்கடேசன் சாட்சியத்தின் தொடர்புடைய பகுதியையும் உங்களது பரிசீலனைக்குத் தருகிறேன்.

இவ்வழக்கில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட 288 அரசு சாட்சியங்களில், மேற்சொன்ன ஒரே சாட்சியான அ.சா 91 மொய்தீன் நம்பகத்தன்மை குறித்து மட்டுமே உச்சநீதிமன்றத்தில் 25 மனுதாரர்களின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் தனது வாதுரையை எடுத்துரைத்தார் என்பதைத் தங்களது பார்வைக்குத் தருகிறேன்.

மேற்சொன்ன இரண்டு சாட்சிகளான அ.சா 91, அ.சா 266 ஆகியோரின் சாட்சியத்தைப் படிக்கும்போது தாங்களே உணர்வீர்கள் அ.சா 91 எத்தனை பொய்யான சாட்சியம் என்பதை. முறிப்பாக அ.சா266 கூறுவதுபோல் அ.சா 91 இன் கடையில் மின்கலம் வாங்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் எதையும் நான் கொடுக்கவில்லை என்பதால்தான் அவ்வாறான எந்த வாக்குமூலத்தையும் நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறையினரால் தாக்கல் செய்ய முடியவில்லை. அதனால்தான் அ.சா 266 தனது முதல்விசாரணை பக்கம் 6இல் 16-08-1991 அன்று நான் வாக்குமூலம் கொடுத்ததாகவும், அவரே மீண்டும் முரண்பாடாக பக்கம் 15இல் 15-08-1991 என்றும் மாற்றி மாற்றிக் கூறுகிறார்.

2. வழக்கின் மிக முக்கியமான ஆவணமாக, ஆதாரமாக அரசு தரப்பால் காட்டப்படுவதும், உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுவதுமான 7-5-1991 தேதியிட்ட ஒயர்லெஸ் செய்தி (Exh. P-392) குறித்த தீர்ப்புரைகளில் வரும் பகுதிகளைக் கீழே தருகிறேன்.

முதல் எதிரி நளினி குறித்த வழக்கைப் பற்றி விவாதிக்கும்போது நீதியரசர் வாத்வா, பத்தி. 429, 430 இல் (State of Tamilnadu Vs Nalini and Ors AIR 1999 SC 2640)-

429. 7-5-1991இல் சிவராசன், சென்னையிலிருந்து இலங்கையில் இருக்கும் பொட்டு அம்மானுக்கு கம்பியில்லாத் தந்தி வழியாக அனுப்பிய ஒரு சங்கேதச்செய்தியை விண்டு பார்த்தபோது பின்வருமாறு உள்ளது: 'அந்தப்பெண் இந்து மாஸ்டர் இல்லத்தில் மூத்த மகள் ஆவாள். நமது நோக்கம் எங்கள் மூவரைத் தவிர யாருக்கும் தெரியாது. அதிகாரத்துக்கு வரப்போகும் கட்சியின் ஆதரவைப் பெறுவதுதான் நோக்கம் என நான் அந்தப் பெண்ணுக்கும் சொல்லி இருக்கிறேன். இங்கு வி.பி.சிங் வருகிறார். நாங்கள் வரவேற்போம். இதேபோல் எல்லாத் தலைவர்களையும் வரவேற்போம்.

நான் பையப்பைய நெருங்கிக் கொண்டிருக்கிறேன். நமது நோக்கத்தை நான் சொலிவிட்டால், அந்தப்பெண் உறுதியாக நம் பக்கம் நிற்பார் என்பதில் ஐயமில்லை.

நாங்கள் அப்பெண்ணுடன் நெருங்கிப் பழகி வருகிறோம். எங்களுக்கு முழு மனநிறைவு உள்ளது. நோக்கத்தை அவரிடம் வெளிப்படுத்தலாம். அவரை நம்பலாம் என்று பெண்கள் சொல்கிறார்கள்.

நான் திரும்பி வந்தால் உங்கள் ஆளாகத் திரும்பி வருவேன். நாம் தூள் வணிகத்தில் வலுவாக இருக்கிறோம்.'

430. இந்த மூத்த மகள் என்பது நளினி(ஏ1)யைக் குறிக்கும். இந்து மாஸ்டர் முருகனை(ஏ3)க் குறிக்கும்

...தொடரும்.

5 பேரு கிடா வெட்டுறாங்க:

valaiyakam சொன்னது…

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

Bibiliobibuli சொன்னது…

பொய்யாய் ஒருவர் மீது வழக்கு புனைந்து, அதுவும் தடாவின் கீழும், பொய்யான அரசு சாட்சியங்கள் மூலமும். இப்படியா சந்தி சிரிப்பார்கள் பேரறிவாளன் வழக்கிற்கு கதை, வசனம் எழுதியவர்கள்.

இதையெல்லாம் ஏன் அருந்ததிராய் போன்றோர் ஆங்கிலத்தில் எழுதி உலகின் பார்வைக்கு கொண்டுவரவில்லை என்பது வருத்ததிற்குரியது.

பி.கு: ராசா! அ. சா. என்றால் "அரசு சாட்சியம்" என்று நினைக்கிறேன் :)

Unknown சொன்னது…

நணபரே உங்களை தான் தேடிகிட்டு இருந்தேன் வந்துட்டிங்களா வாழ்த்துக்கள்

ராஜி சொன்னது…

வணாக்கம் சகோதரரே,தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு
என் தளத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி. திருவள்ளுவர் பறிய எனது பத்விற்கு தாங்கள் இதை தினமலரில் இருந்து எடுத்தது, அதற்கு நன்றி கூட சொல்லலைன்னு சொல்லியிருக்கீங்க.
நன்றி மறப்பது நனறன்றுன்னு திருவள்ளுவரே சொல்லியிருக்கார்.
அப்படியிரூக்க அவரை பற்றி எழுதும்போது அதை மறாப்பேனா?
இது தினமலரில் வந்ததான்னு எனக்கு தெரியாது. ஆனால், என் ஒரு மணவிழாவில் அன்பளிப்பாக வந்த புத்தகத்தில் இருந்தது. அதைத்தான் பதிவிட்டேன், அதை தெளிவா டிஸ்கில சொல்லியிருந்தேன். நீங்க சரியா படிக்கலை போல மீண்டும் ஒருமுறை நன்றாக பார்த்துட்டு குற்றம் சொல்லுங்க.
குறைகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. வீணான குற்றாச்சாட்டு வேண்டாமே ப்ளீஸ்
http://rajiyinkanavugal.blogspot.com/2011/12/blog-post_28.html#comments

Sweety சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

Related Posts with Thumbnails