வியாழன், 17 பிப்ரவரி, 2011

ஸ்வர்ணா என்றொரு தேவதை

நீண்டதூரப் பேருந்துப் பயணங்களில் ஜன்னலோர இருக்கையும், "சார் என்ன பண்றீங்க" ரீதியில் ஆரம்பித்து உயிரை எடுக்காத, தொந்தரவற்ற பக்கத்து இருக்கைப் பயணியும் வாய்க்கப்பெற்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ரகுநாதன் அன்று கொஞ்சம் விசேஷமாகவே ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான்... முன்னிருக்கையில் அடர்த்தியான கூந்தலில் கதம்பச்சரம் சூட்டி அமர்ந்திருந்தவளின் ஒன்றிரண்டு முடியிழைகள் முகத்தில் உரசப்பெறுவதன் மூலம்! ரகுநாதனுக்குக் கவிதை எழுதும் உந்துதல் வந்தது... ஸ்வர்ணலக்ஷ்மியின் நினைவுகளும்.

ஸ்வர்ணலக்ஷ்மி பதினொண்ணாங்கிளாஸ் அட்மிஷனுக்காக நுழைந்தபோது மொத்த ஸ்கூலுமே "கால் கண்டார் காலே கண்டார்! தோள் கண்டார் தோளே கண்டார்" என்று பார்த்தவிழி பூத்து நின்றது.வாத்தியார், பையன்கள் என்ற வித்தியாசங்கள் மறைந்து சகலரும் ஜோதியில் ஐக்கியமாகி இருந்தனர்.

கால்விரல்கள்கூடத் தெரிந்துவிடாதபடிக்கு சர்வஜாக்கிரதையாய் அசைந்துவரும் தாவணிகளை மட்டும்தான் அவன் கண்டிருக்கிறான்.
கணுக்கால் தெரியும் மினிஸ்கர்ட், வினோதமான மேல்சட்டை, சுமார் மூன்றடி நீளத்தில் காற்றில் கொஞ்சிக் கொண்டிருக்கும் கூந்தலை அடிக்கடி சரிசெய்யும் நீண்ட மெல்லிய விரல்கள்... இத்யாதி,இத்யாதி! ஆற்றில் வலைக்குச் சிக்காமல் துள்ளி நழுவும் கெண்டைமீன் போல கண்கள் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஸ்வர்ணாவுக்கு. நொடிக்கு மூன்றுதரம் சிரிக்கும் வித்தையை எங்கிருந்துதான் கற்றாளோ! சாயங்கால வெயில் மாந்தளிரில் பட்டால் ஒருமாதிரி மின்னுமே, அதுபோல வெளுப்புமில்லாமல் மாநிறமும் இல்லாமல் ஒரு நிறம் அவளுக்கு... ராட்சஸி!

கூடப்படிக்கும் பெண் எவளாவது லேசாகத் திரும்பிப் பார்த்தாலே அடுத்தநாள் சுவரிலோ போர்டிலோ இன்னாருக்கும் இன்னாருக்கும் லவ்வு எனக் காவியம் படைக்கும் கிறுக்குப்பயல்கள் ஊர் அது. ஸ்வர்ணலக்ஷ்மியோ முழுக்க முழுக்க ஸ்நேகம் ததும்பி நின்றாள். எல்லோருக்கும் ஒரு சிரிப்பு... ஒரு தொடுகை... ! பையன்கள் அவ்வப்போது லீவ்லெட்டர் கொடுப்பதற்காகவே ஸ்டாக் வைத்திருக்கும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி இன்னபிற வியாதிகள் எல்லாம் ஸ்வர்ணலக்ஷ்மி வந்தபின் மாயமாய்ப் போயின... தேவதைகள் சொஸ்தப்படுத்துவதற்காகவே அவதரிக்கின்றனர் போலும்!

ஏகப்பட்ட பையன்கள் தப்பும் தவறுமாய் காதல்கடுதாசிகளை விதம்விதமாக எழுதிக்குவிக்க ரெண்டுகுயர், மூணுகுயர் நோட்டெல்லாம் இளைத்துத் துரும்பாய்ப்போன கொடுமையெல்லாம் நடந்தேறின. பனிரெண்டாவதுக்கு கெமிஸ்ட்ரி வகுப்பெடுக்கும் பாலமுருகன் வாத்தியாரும் கைநோக லெட்டர் எழுதியதாகச் செவிவழிச் செய்திகள் உண்டு! எல்லாக் கடுதாசிகளையும் சின்னப்புன்னகையாலும் "சேச்சே! நான் உன்ன லவ்வெல்லாம் பண்ணலடா" என்று ஒற்றைவாசகத்துடனும் எளிதாகக் கடந்து கொண்டிருந்தாள் ஸ்வர்ணா. 'சிரிச்சி சிரிச்சி பேசறா... அப்புறம் ஏன் லவ்வு பண்ணலங்கிறா?' என்ற கேள்வி, ஒதுக்கி வீசப்பட்ட பாடப்புத்தகங்களைக் கரையான் அரிப்பதுபோல ஒவ்வொருத்தனையும் அரித்துத் தின்றது. காதல் துளிர்க்கப்பெற்றவர்களும், காதல் மறுக்கப்பட்டவர்களுமாக ஏகப்பட்ட புதுக்கவிஞர்கள் பிறப்பெடுத்தனர். மொத்தத்தில் "எங்கெங்கு காணினும் ஸ்வர்ணாவடா" என்றாகிப்போனது.

ஒண்ணாங்கிளாசிலிருந்து கூடப்படிக்கும் பெண்களிடம் பேசியறியாத ரகுநாதனுக்கு ஸ்வர்ணா அவனிடம் வந்து எது பேசினாலும் ஏதோ மந்திர உச்சாடனம்போல இருந்தது. "ஹோம் வொர்க் முடிச்சிட்டியாடா?" என்று கேட்டால்கூட மிதத்தல், பறத்தல் போன்ற அதிமானிட வேலைகளெல்லாம் செய்ய ஆரம்பித்தான். ஒன்றரை குயர் நோட்டு முழுக்க "அன்பே ஸ்வர்ணா!ஆருயிர் செய்யுதடி உன்னால் தர்ணா" என்று ஆனாவுக்கு ஆவன்னா, ணாவன்னாவுக்கு ணாவன்னா எல்லாம் போட்டு படுஜோராகக் கவிதை எல்லாம் எழுதத்தான் செய்தான். ஆனால் ஸ்வர்ணாவிடம் பேசித் தொலையும்போது மட்டும் நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டு சதிவேலை செய்யும். நாலு பசங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து கதைபேசத் தொடங்கினால் ஸ்வர்ணாவுக்கு என்ன பிடிக்கும், ஸ்வர்ணா நாளைக்கு என்ன ட்ரெஸ்ஸில் வருவாள், ஸ்வர்ணாவின் அண்ணன் ஏன் இவ்வளவு தடியாக ராட்சசன் மாதிரி இருக்கிறான் என்பது போன்ற விவரங்கள் அலசி ஆராயப்பட்டன.

ஸ்வர்ணாவுக்கு மொத்த ஸ்கூலுமே தன்னைச் சுற்றி இயங்கி வருவதெல்லாம் ஒரு விஷயமாகத் தோன்றவே இல்லை. வந்தாள்... சிரித்தாள்.. பேசினாள்..சிரித்தாள்.. படித்தாள்..சிரித்தாள்..ஹோம்வொர்க் செய்தாள்..சிரித்தாள்...ஹோம்வொர்க் செய்யாமல் திட்டு வாங்கினாள்..சிரித்தாள்.. இன்னும் தாள்..தாள்..தாள்! அழகான பெண்களுக்கு அறிவு என்பது ஆட்டுக்கு வால்போல என்ற தொன்மொழிகளெல்லாம் ஸ்வர்ணாவுக்கு செல்லுபடியாகாது. ஹெட்மாஸ்டர் பஞ்சாபகேச அய்யருக்கு ஸ்வர்ணா என்றாலே ஒரே பூரிப்புதான். ப்ராக்ரஸ் ரிப்போர்ட் பார்த்து வயிறெரிந்தவர்கள் சுதந்திரதினக் கலை நிகழ்ச்சிகளில் பாரதமாதா வேஷம் கட்டியபோது குளிர்ந்துபோனார்கள். "பாரதி கனவில் வந்த" கவிதையைப் படித்தபோது தமிழ்வாத்தியார் வாயில் எத்தனை பல் சொத்தைப்பல்லென்ற நெடுநாள் சந்தேகம் தீர்ந்துபோனது.

இப்படியான பிரக்யாதிகள் கொண்ட ஸ்வர்ணா ரகுநாதனையும் நண்பனாக ஏற்றுக்கொண்டதற்கு பாட்டன் முப்பாட்டன் உள்ளிட்ட பரம்பரையே பூர்வஜென்ம புண்ணியங்கள் செய்திருப்பதாகக் கருதிக் கொண்டான் ரகுநாதன். ஒருவழியாகப் ப்ளஸ்டூ பரிட்சை முடிவுகளும் வெளிவந்து மார்க் ஷீட்டும், கையுமாக "போயிட்டு வரேண்டா" என்று சொல்லி ஸ்வர்ணா விடைபெற்றபோது "ராசாத்தீ... ஏம் உசிரு என்னதில்ல..." என்று பக்கத்து ஆடியோகேசட் கடையிலிருந்து ஷாகுல் ஹமீது உருகிக் கொண்டிருந்தார்.

"வெளங்காமுட்டி பய.. ஒழுங்கா படிடான்னு கழுதமாரி கத்தியும்.... பாருடி ஒம்புள்ளையை! தொள்ளாயிரத்தி அம்பது மார்க்கோட பேந்தப் பேந்த முழிச்சிட்டு இருக்கு. எம்மவன் டாக்டருக்கு படிக்கப்போறான்னு நானும் ஊரெல்லாம் பீத்திக்கிட்டு வந்ததுக்கு இதான் லட்சணம்..."
கத்திக் கொண்டிருந்த அப்பாவுக்குத் தெரியுமா ஸ்வர்ணா சிரிப்பால் களவாண்டு போன மார்க்குகள் ஒரு நூத்தம்பது இருக்குமென்று? அவரவர் பாடு அவரவர்க்கு... அவரவர் கவலை அவரவர்க்கு.

காலம் ரகுநாதன் கையில் ஒரு எஞ்சினியரிங் பட்டத்தையும், அவன் தகப்பனாருக்கு நான்குலட்சம் கடனையும் பரிசாகத் தந்ததும், இடையில் அவனது வாழ்க்கையில் சுமார் மூன்று ஒருதலைக் காதல்களும் இரண்டு இருதலைக் காதல்களும் கடந்துபோனதும், ஒவ்வொரு காதல் கடந்து போகும்போதும் ஸ்வர்ணாவின் முகம் மின்னிப் போனதும், முப்பதாயிரம் மாதவருமானமும் முன்னந்தலை வழுக்கையுமாக முதிர்கண்ணனாகி நின்ற ரகுநாதனுக்கு கல்யாண மார்க்கெட்டில் நல்ல விலைபடிய பேரம் பேசப் பட்டுக் கொண்டிருப்பதுமாக சுமார் ஒரு மாமாங்கம் ஃப்ளாஷ்பேக்கை விரித்துச் சொன்னால் கோடிபெறும்.

என்றாவது ஒருநாள் கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்கும், பழங்கதைகளும், கொசுவர்த்திக் கொளுத்தல்களுமாகக் கூடிக்கலையும் நண்பர்குழாத்தின் பேச்சுக்களின் இறுதிப்புள்ளி சுற்றிச்சுற்றி ஸ்வர்ணாவில் வந்துநின்று சின்ன மௌனத்துடனும் பெருமூச்சுடனும் முடிவுபெறுவதும் வாடிக்கை. அப்படித்தான் ஒருநாள் அந்த அரிய பெரிய தகவலைக் கண்டுபிடித்து வந்து சொன்னான் ஆரம்பப்பள்ளி ஆசிரியனாகக் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் தங்கபாண்டியன்... "டேய் ஸ்வர்ணா ஊருக்குப் போயிருந்தேன். அவ தஞ்சாவூர்ல பிஎஸ்ஸி படிச்சிட்டு இருந்தப்பவே ஒரு பையனோட லவ்வாம்... ஃபைனல் இயர்ல பிரச்சினையாகி அந்தப் பையனோட ஓடிப்போயிட்டா. இப்போ அவ கோயம்புத்தூர்லதான் இருக்காளாம். புருஷன் ஆடிட்டரா இருக்கார்போல. நல்லா செட்டிலாயிட்டா. ரெண்டு குழந்தைங்க பொறந்தப்புறம் வீட்டுலயும் ராசியாயிட்டாங்களாம். அவளும் எம்பிஏ முடிச்சிருக்காளாம்" என்றபோது அரிஸ்டாட்டில் 'யுரேகா' சொல்லி ஓடிக் கொண்டிருந்தபோது அடைந்திருந்த உணர்ச்சிகளை அவன் முகத்தில் காண முடிந்தது. அப்போது முடிவு செய்தான் ரகுநாதன் எப்படியாவது ஒருதடவை ஸ்வர்ணாவைப் பார்த்துவிட்டு வந்துவிடுவதென்று.

ஒருவழியாக ஸ்வர்ணாவின் கோயம்புத்தூர் முகவரியைக் கண்டுபிடித்து ஒரு சுபமுகூர்த்த சுபநாளில் கோயமுத்தூருக்கு ஆம்னி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்ததுதான் ஆரம்ப பாராக்களுக்கு அடிப்படை. ஒருவழியாக சிங்காநல்லூரில் இறங்கி அட்ரஸ் விசாரித்துக்கொண்டு காலிங்பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருந்தபோது பத்து விநாடிகளுக்குள் பதினைந்துமுறை வியர்த்திருத்தான்.

"யாரு" என்றபடியே கதவைத் திறந்த ஸ்வர்ணா லேசாகப் பூசினாற்போல இருந்தாள். ஆடிமாசக்காவேரிபோல் அலைபாய்ந்திருந்த கண்களில் மார்கழிமாச அகண்டகாவேரிபோல அமைதியும் ஆழமும் நிறந்திருந்தன. அதே ஸ்வர்ணா! இன்னும் ஸௌந்தர்யமாக...

"நீங்க...நீ... ஹேய் ரகுதான! என்னடாது? வானத்துலருந்து குதிச்சமாதிரி திடீர்னு வந்து நிக்கிறே?" ஆச்சர்யமாக வரவேற்றாள்.

"சும்மாதான்பா. கோயமுத்தூருக்கு வேலையா வந்தேன். பசங்ககிட்ட பேசிட்டு இருந்தப்போ நீ இங்கதான் இருக்கிறதா சொன்னாங்க. அதான் அப்பிடியே உன்னைப் பாத்திட்டு போகலாம்னு.."

அதே சிரிப்பு! "தாங்க்ஸ்டா! ஸ்கூலுக்கு அப்புறம் நம்ம க்ளாஸ்மேட் யாரையுமே பாக்கலை. மொதமொதல்ல உன்னைத்தான் பாக்குறேன்"

பேசினாள்..சிரித்தாள்..பேசினாள்..சிரித்தாள்...புருஷன் பற்றி... குட்டி ஸ்வர்ணா பற்றி... சாகசங்கள் நிறைந்த அவளது காதல்கதை பற்றி... எப்போது பார்த்தாலும் இங்கிலீஷில் பீட்டர் விடும் ஃபிஸிக்ஸ் வாத்தியார் பற்றி... காதலித்தே ஆகவேண்டும் என்று கெஞ்சி காலில் விழுந்த பனிரெண்டாம் வகுப்பு குமாரசாமி பற்றி.. இன்னும் ஏதேதோ.

புருஷனுக்கு ஃபோன் பண்ணி அவனிடம் கொடுத்தாள். ஸ்வர்ணாவிடம் இருந்து சிரிப்பையும், வழியும் அன்பையும் கடன்வாங்கியனைப்போலவே அவரும் பேசினார். ஹ்ம்ம்.. கொடுத்து வைத்த மனிதன்! மதியம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அவள் புருஷன் சொல்ல, அவனும் தலையாட்டினான். சாப்பாடு முடிந்து "நான் கெளம்பறேன் ஸ்வர்ணா! நேரமாச்சு" என்று எழுந்தவனிடம் "இருடா! கொஞ்சநேரம் பேசிட்டுப் போ! அவருக்கு ஆஸ்திரேலியா விசா அப்ரூவ் ஆயிடிச்சு. அடுத்தமாசம் ஃபேமிலியோட கெளம்பிடுவோம். ஆமா உனக்கு எப்படா கல்யாணம்?" என்றாள்.

"பார்த்துகிட்டு இருக்காங்க ஸ்வர்ணா. கூடிய சீக்கிரம் ஆயிடும்னு நினைக்கிறேன்" என்றபடி இன்னும் அரைமணிநேரம் ஓடிப்போனது. ரகுநாதன் ஸ்வர்ணாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

கதவைத் திறக்குமுன் "ரகு... ஒரு நிமிஷம்" என்ற ஸ்வர்ணா லேசாக அவன் முன்னுச்சி மயிரைக் கலைந்திட்டு அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டுச் சொன்னாள்.

"நீ என்னை லவ் பண்ணேனு எனக்கு தெரியும்டா. உன்னோட காதலுக்கு இதான் என்னோட கிஃப்ட். சரி போயிட்டு வாடா. ஆஸ்திரேலியா போறதுக்கு முன்னாடி ஃபோன் பண்றேன். மறக்காம ஏர்போர்ட் வந்திடு" என்று கதவைத் திறந்தாள்.

வெளியேவந்து ஆட்டோ பிடித்து ரயில்நிலையம் வந்து சீட் சரிபார்த்து அமர்ந்த ரகுநாதனுக்கு ஏனோ கொஞ்சம் அழவேண்டும் போலத் தோன்றியது... கவிதை எழுத வேண்டும் போலவும்...

இந்தக் கதையின் கவிதை வெர்ஷனை அண்ணன் கேஆர்பி காதல்கடுதாசி என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார். இங்கே பாருங்களேன்.

21 பேரு கிடா வெட்டுறாங்க:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>
கால்விரல்கள்கூடத் தெரிந்துவிடாதபடிக்கு சர்வஜாக்கிரதையாய் அசைந்துவரும் தாவணிகளை மட்டும்தான் அவன் கண்டிருக்கிறான்.

கலக்கல்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>சாயங்கால வெயில் மாந்தளிரில் பட்டால் ஒருமாதிரி மின்னுமே, அதுபோல வெளுப்புமில்லாமல் மாநிறமும் இல்லாமல் ஒரு நிறம் அவளுக்கு... ராட்சஸி!


அடடா கவித கவித

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>தேவதைகள் சொஸ்தப்படுத்துவதற்காகவே அவதரிக்கின்றனர் போலும்!


எனக்கு புரியல.. சொஸ்தப்படுத்துதல்னா? சுறு சுறுப்பா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>
"நீ என்னை லவ் பண்ணேனு எனக்கு தெரியும்டா. உன்னோட காதலுக்கு இதான் என்னோட கிஃப்ட். சரி போயிட்டு வாடா. ஆஸ்திரேலியா போறதுக்கு முன்னாடி ஃபோன் பண்றேன். மறக்காம ஏர்போர்ட் வந்திடு" என்று கதவைத் திறந்தாள்.

கண் கலங்க வைத்த வரிகள்.

பெயரில்லா சொன்னது…

முதன் முறை தங்கள் தளத்திற்கு வந்துள்ளேன். பதிவுகளை படித்துவிட்டு ஒரு நாள் நேரில் பேசுகிறேன். கவுண்டமணி - செந்தில் ரசிகர் மன்றம் சார்பாக தங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன். நன்றி!

iniyavan சொன்னது…

நண்பரே,

அருமையா எழுதி இருக்கீங்க. இது போல இன்னும் நிறைய எழுதுங்க.

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

ஜோதிஜி சொன்னது…

அதென்ன அர்த்த ஜாம ஆலாபனையா? சும்மா பொங்குது? தெளிவான எழுத்துப் பயணத்தில் இதுவொரு மர நிழலாக நினைத்துக் கொண்டு பயணம் தொடரட்டும். கிளுகிளுப்பு என்பது சற்று நேரம். எழுதுவனுக்கு கொடுக்கும் தூண்டுதல்கள் உங்கள் எழுத்து எழுத தொடங்கும் போது வந்து விழவேண்டும்.

கிறுகிறுக்கும் வரிகள் தான் பல மாற்றங்களை இங்கே உருவாக்க காரணமாக இருக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

சுவாரஸ்யமாய் இருக்கிறது உங்கள் பதிவு

vasu balaji சொன்னது…

இந்த கவிதைக்கு அங்கே கதைக்கு இங்கே நல்லாருக்கு. ரெண்டுமே நல்லாருக்கு. பதின்ம உலகம், யதார்த்தம், நட்பூ..ம்ம்ம்.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

உங்க எழுத்து நடையில் நானும் அப்படியே கொஞ்சம் பின்னாடி போயிட்டேன். பாராட்டுக்கள்

Philosophy Prabhakaran சொன்னது…

நான் ரசித்த வரிகள்:
ஸ்வர்ணா... தர்ணா...
தாள்... தாள்... தாள்...
தமிழ்வாத்தியார் வாயில் எத்தனை பல் சொத்தைப்பல்லென்ற நெடுநாள் சந்தேகம் தீர்ந்துபோனது...

இன்னும் நிறைய...

Philosophy Prabhakaran சொன்னது…

கடைசி நாலு பத்திகள் சூப்பர்ப்... அண்ணனின் கவிதையை படிச்சிட்டு மறுபடி வர்றேன்...

Philosophy Prabhakaran சொன்னது…

செய்யுளை விட உரைநடை அருமை...

Unknown சொன்னது…

wow..so beautiful

wonder full

color full..

dont know what to say..

Unknown சொன்னது…

விந்தை அண்ணா
மிக அருமை
என்னே ஒரு தமிழ் உரைநடை

Unknown சொன்னது…

அருமை அண்ணா!! கவிதையும் உரைநடையும் புதுமை..

sathishsangkavi.blogspot.com சொன்னது…

Nice...

நந்தா சொன்னது…

பாஸ். உரைநடையை ரொம்பவே ரசித்தேன். பல இடங்கள் அட்டகாசம் செய்கின்றது.

ஆனால் மன்னிக்கவும், கடைசியில் உச்சியில் முத்தம் கொடுத்து அனுப்பி வைத்து பேசிய பேச்சுக்கள் ரொம்ப மெலோ டிராமாட்டிக்காய் இருந்தது.

அழகாயிருக்கும் பெண்களின் வாழ்வில் எத்தனை ரகுநாதன்களோ, எத்தனை உச்சி முத்தங்களோ? அழகா இருக்கும் பெண்ணைக் கட்டியவன் எல்லாம் பாவப்பட்ட ஜென்மம்தான் போல.

அவளைக் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து, சந்தோஷமாய் வாழ்ந்து, செட்டிலாகி இருக்கும் போது எங்கிருந்தோ ஒரு ரகுநாதன் வருவான். அவனுக்கு என் பொண்டாட்டி உச்சியில முத்தம் கொடுத்து அனுப்பறாளாமாம். அப்போ நான் என்ன கேனையனா?

மன்னிக்கவும். நீங்கள் ரகுநாதன் பார்வையிலிருந்து கதை சொன்னீர்கள். நான் ஸ்வர்ணாவின் கணவன் பார்வையிலிருந்து யோசித்தேன். அதனாலேயே மற்றவர்களுக்கு பிடித்த இறுதிப்பகுதிகள் எனக்கு பிடிக்க வில்லை.

இதே போன்று சாயலுள்ள ஒரு கதையை முன்பெப்போதோ எழுதி இருக்கிறேன். நேரமிருப்பின் படிக்கவும்.

http://blog.nandhaonline.com/?p=26

தருமி சொன்னது…

முதன் முறை தங்கள் தளத்திற்கு வந்துள்ளேன்.

உங்க எழுத்து நடையில் நானும் அப்படியே கொஞ்சம் பின்னாடி போயிட்டேன்.

பல இடங்கள் அட்டகாசம் செய்கின்றது.

அருமையா எழுதி இருக்கீங்க. இது போல இன்னும் நிறைய எழுதுங்க.

மேலேஉள்ளது எல்லாமே “காப்பி” அடிச்சது!!!

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

அருமையான சிறுகதை,,,,,அதை கொடுத்த எழுத்துநடை சூப்பர்,,,,i enjoy more than i explained,,,

Related Posts with Thumbnails