யுதிர்ஷ்டிரனுக்கு கடுப்பு கடுப்பாய் வந்தது. அலுத்துச்
சலிச்சி வீட்டுக்கு வந்தா கொஞ்சம் காப்பித்தண்ணி போட்டுக் கொடுக்கக்கூட ஆளில்லை. வீமன்
எங்கியாச்சும் கல்யாண வீட்டுல சமையலுக்குப் போயிருப்பான்.. சம்பளத்தோட சாப்பாடும் உண்டுங்கிறது
கூடுதல் சவுரியம்.. சின்னவனுவோ ரெண்டு பேரும் குதுர மேய்க்கவும் கதைப்பொஸ்தவம் படிக்கவும்தான்
லாயக்கு. பாஞ்சாலி அர்ச்சுனங்கிட்ட குலாவிக்கிட்டு காட்டுப்பக்கம் போயிருப்பா போலருக்கு..
பெத்த தாயாச்சும் கொஞ்சம் காப்பித்தண்ணி குடுப்பான்னு பாத்தா முந்தாநாளு உருளக்கெழங்கு
கறிய கொஞ்சம் அதிகமா தின்னுட்டு வாய்வுத்தொல்லைன்னு நெஞ்சைப் புடிச்சிக்கிட்டு சுருண்டு
படுத்திருக்கு கெழம்..
எப்பயும் ஊர்ஞாயம் பேச நாலுபேரு வந்து நிப்பானுவோ.. இன்னிக்கி
ஒரு பயலையும் காணும். மண்பானையத் தொறந்து கொஞ்சம் ஜில்லுன்னு தண்ணியக் குடிச்சிட்டு
திண்ணையில வந்து உக்காந்தான்..
“அப்பப்பப்பா.. என்னா வெயிலு.. என்னா வெயிலு.. பேருதான்
காடு... வெக்கை கொளுத்துது மச்சான்”ன்னு சொல்லிக்கிட்டே மேல்துண்டை எடுத்து வேர்வைய
தொடைச்சிக்கிட்டு தரையத் தட்டிவுட்டுட்டு பக்கத்துல வந்து உக்காந்தான் கிருஷ்ணன்.
“தங்கச்சி.. கொஞ்சம் சில்லுன்னு தண்ணி கொண்டுட்டு வாம்மா”ன்னு
குரல்கொடுத்த கிருஷ்ணன்கிட்ட கொஞ்சம் கடுப்பா “அவ நடுலவன்கூட காட்டுக்கு சுள்ளி பொறுக்கப்
போயிருக்கா போல.. உம்ம அத்தையும் மேலுக்கு நோவுதுன்னு படுத்திருக்கு.. இரும்.. நானே
போயி எடுத்தாரேன்”ன்னு சொல்லி மறுவடி எந்திரிச்சிப் போயி தண்ணி கொண்டாந்து கொடுத்த
யுதிர்ஷ்டிரன்
“என்ன மச்சான் சலிச்சிப்போயி வந்திருக்கீரு.. போன காரியம்
என்னாச்சு?
காயா பழமா?” ன்னான்.
“எங்கய்யா... நீரு விடாக்கண்டன்னா உம்ம பங்காளி கொடாக்கண்டனா
இருக்கான்.. “அவந்திமிரு... சீட்டாடித் தொலைச்சதை என்ன உரிமைல திருப்பிக் கேக்குறான்..
அப்டியே பாவம்புண்ணியம் பாத்து கொடுக்கலாம்னு பாத்தாக்கூட எங்கப்பன் வதவதன்னு நூறுபேத்த
பெத்துப் போட்டுட்டான்.. அம்பது வேலி நெலம்.. மிராசுதார்னு பேருதான்.. எழவு பாகப்பிரிவினை
பண்ணா குடிசை போடக்கூட ஆளுக்கு முப்பது குழி நெலம்தான் தேறும்.. இதுல சித்தப்பன் மக்களுக்கு
எங்கேருந்து குடுக்குறது?”ன்னு திரும்பிக் கேக்குறான் மச்சான்.. நானும் என்னன்னமோ
அகடவிகடம்லாம் பண்ணிப் பாத்துட்டேன்.. பய அசையலையே.. வயல் என்ன வரப்புகூட தரமுடியாதுங்கிறான்..ஊருல
இருக்குற பெரிய மனுசன் பூரா அவம்பக்கம்தான் பேசுறானுவோ”ன்னான் கிருஷ்ணன்.
கொஞ்சநேரம் மேலாக்க கூரைய வெறிச்சிப் பாத்துட்டு இருந்தான்
யுதிர்ஷ்டிரன்.. ரொம்ப நேரமா அசையாம நின்ன கெவுலி ஒண்ணு சுள்ளுன்னு பாய்ஞ்சி எதுத்தாப்புல
இருந்த பூச்சியக் கவ்வுனிச்சி.. கெவுலியையும் பூச்சியையும் வேடிக்கை பாத்துட்டு இருந்தவங்கிட்ட
கிருஷ்ணன்
“ஏம்மச்சான்.. நம்மகிட்டதான் டாகுமெண்ட்டெல்லாம் வலுவா
இருக்கே... பேசாம கோர்ட்டுல போட்ருவமா?”ன்னான்
“மிச்சமிருக்குறது அந்த பேப்பரும் பாஞ்சாலி காதுல மூக்குல
கெடக்குற குந்துமணி தங்கமும்தான்.. அதை வித்து வக்கீலைப் புடிச்சி நோட்டீஸ் வுட்டு
கேஸ் போட்ரலாம்தான்.. அது கோர்ட்டுக்குப் போயி நம்பராகி பெட்டிசன் காப்பிய பிரதிவாதிக்குக்
குடுக்குறதுக்குள்ளாற என்னோட புள்ளகுட்டிங்க வளந்து ஆளாயிடும் மச்சான்.. அதுக்குமேல
வாய்தாவுக்கு வாய்தா போட்டு, தீர்ப்பாயி, அப்பீலு, மேல்கோர்ட்டுன்னு
நம்ம கட்டை தெக்க போற வரைக்கும் காலணா காசுக்கு ஆவாது.. வேற ஏதாச்சும் யோசனை சொல்லும்”
“வேற என்னய்யா சொல்றது? பொண்ணு கட்டிக் குடுத்த பாவத்துக்கு நானும் உங்ககூட கெடந்து
அல்லாடுறேன்.. வேணும்னா நம்ம மாமம்மச்சானுவோ, சேக்காளியளைச்
சேத்துக்கிட்டு மோதிப்பாப்பம்.. இந்தப் பக்கம் நாலு தலை, அந்தப்பக்கம் நாலு தலை உருளத்தான் செய்யும்.. வக்காளி
நாம பெரிசா,
அவம்பெரிசான்னு பாத்துருவோம்.. என்ன சொல்றீரு?” ஆவல் ஆவலாய்க் கேட்டான் கிருஷ்ணன்..
“சொம்மாக் கெடவும் மச்சான்.. இதென்ன அந்தக்காலம் மேரின்னு
நெனைச்சீரா.. இப்போ சர்க்காரு, போலீசு, சட்டம்னு ஆயிரத்தெட்டு இருக்கு.. லாக்கப்ல போட்டு நொங்கிப்புடுவானுவோ
நொங்கி... இதெல்லாம் ஒரு மயிறும் கதைக்காவாது... நான் பாஞ்சாலி கழுத்துல கெடக்குற நகைநட்டை
வித்து பணம் ரெடி பண்றேன்.. பட்டணம் போயி நாலுக்கு எட்டு ஒரு ரூம்பைப் புடிப்போம்..
நமக்குத் தெரிஞ்ச தொழில் ஜோசியம் கைவசம் இருக்கு.. நாலைஞ்சி மாசம் கழிச்சி வீமனை வெச்சி
சின்னதா நாலு பெஞ்சுப்பலவை போட்டு மெஸ்சும் வைக்கலாம்.. வழக்கு வாய்தா, வம்பு,சண்டைன்னு
போவாம உருப்படியா பண்ணுவோம்.. நீரும் வாரும் கூடமாட ஒத்தாசையா இருக்கும்”னு சொல்லிகிட்டே
துண்டை ஒதறிப் போட்டுக்கிட்டு எந்திரிச்சான் யுதிர்ஷ்டிரன்.
இதுக்குமேல கதைய எப்டி எழுதித் தொலைக்கிறது..மொறைப்படி
பாத்தா பயலுவோ வெட்டுக்குத்துன்னு எறங்கி அடிச்சிக்கிட்டு சாவணுமே.. இப்ப என்ன பண்ணித்
தொலைக்கிறதுன்னு தாடியச் சொறிஞ்சிக்கிட்டு முழிச்சிட்டு இருந்தான் வியாசன். “நீரு என்ன
எழவோ பண்ணித் தொலையும்.. சீக்கிரம் கதையச் சொல்லி முடிச்சா நானும் டைப்படிச்சிக் குடுத்து
முடிச்சிட்டுப் போயிருவேன்.. ஆயிரத்தெட்டு சோலி கெடக்கு”ன்னு மொனகிக்கிட்டே கையில இருந்த
தந்த ஊசியால பல்லுக் குத்த ஆரமிச்சான் விநாயகன்.
.