வியாழன், 31 மார்ச், 2011

விலக்கப்பட்ட கல்லே வீட்டுக்கு மூலைக்கல்லாயிற்று ( வைகோ பற்றிய பார்வை)


தமிழக அரசியல்களம் முன்னெப்போதையும் விட பல விசித்திரக்காட்சிகளைக் கண்டு வியந்து நிற்கிறது.  தேர்தல் கூட்டணி என்பது கொள்கைக்கூட்டணியல்ல, வெறும் கொள்ளைக்கூட்டணியே என்பதை பிரதான அரசியல்கட்சிகள் அனைத்துமே மெய்ப்பித்து அம்மணமாகி நிற்கின்றன. ஒருபுறம் "காங்கிரஸ் செய்வது நியாயமா?" என்று வீராவேசத்துடன் முழங்கி மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக ஓர் ஓரங்க நாடகத்தை நடத்தி திராவிட இயக்கத்தின் சுயமரியாதை, தன்மானம் என்கிற எல்லாவற்றையும் உதறிப் போட்டுவிட்டு பதவி என்னும் கோவணத்துக்காக அலைகிறார் 'கலைஞர்' கருணாநிதி.

தன்னை நம்பி உடனிருக்கும் கூட்டணிக்கட்சிகளைக்கூட துச்சமாகத் தூக்கியெறிந்து என்றுமே தானொரு தான்தோன்றித்தனமான, அகங்காரம் பிடித்த தற்குறித்தனமான தலைவிதான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார் ஜெயலலிதா. ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை ஒரே இரவில் டிஸ்மிஸ் செய்தும், சுப்பிரமணியசாமிக்கு மகளிர் அணி 'ஷோ' காட்டியதும், இன்னபிற அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகங்களையும், சர்வாதிகாரத்தையும் கைக்கொண்டு இன்னும் மிச்சமிருக்கும் 'மைசூர் திவான் பங்களாவில் அரண்மனை வைத்தியம் பார்த்தவரின் பேத்தி' என்கிற 'கெத்'தில் நிற்கிறார் ஜெயலலிதா.

இந்த இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் மாற்றாக வேறு யாரும் இல்லையே என்று புழுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு ஒரு தற்காலிக வடிகாலாய் வந்து சேர்ந்தார் விஜயகாந்த். நீண்ட நெடுங்காலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு மல்லுக்கட்டியதில் அலுத்துப்போய் அவ்வப்போது சுகன்யாக்களின் தொப்புள்களில் பம்பரம் விட்டதும் சலித்துப்போய் இறுதியாக அவர் கரைசேர்ந்த இடம் அரசியல். மாமண்டூரில் அரசுப் புறம்போக்கு நிலங்களை வளைத்துப்போட்டு ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியைத் துவங்கி 'தூய்மை'யான பொதுவாழ்வுக்கு அடித்தளம் போட்டுக்கொண்டு நுழைந்தார். பக்கத்தில் பிரேமலதாவையும், அவர்தம் இளவலார் சுதீஷையும் வைத்துக்கொண்டே கூச்சநாச்சமின்றி கருணாநிதியின் குடும்ப அரசியலை எதிர்த்து கொஞ்சகாலம் லாவணி பாடவும் செய்தார். எத்தனைகாலம்தான் 'சுட்டி சுட்டி உன் வாலைக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி' என்று பாடிக் கொண்டிருப்பது?! தனி ஆவ்ர்த்தனமெல்லாம் இனி கவைக்குதவாது என்றுசொல்லி மூட்டையைக் கட்டிக்கொண்டு போயஸ் கார்டனுக்குள் தஞ்சம் புகுந்துவிட்டார்.

இவர்களில் இருந்து எந்த வகையில் மாறுபடுகிறார் அல்லது எந்தெந்த வகைகளில் ஒன்றுபடுகிறார் வைகோ என்கிற அரசியல்வாதி?

மறுமலர்ச்சி திமுக என்ற கட்சியைத் துவங்கிய போதிலிருந்தே அந்தக்கட்சிக்கான சவக்குழியை கூடிய சீக்கிரம் வெட்டிவிட வேண்டும் என்கிற குறிக்கோளில் 'ஓடமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்கும் கொக்கு' போல அல்லும் பகலுமாக அயராது பணி செய்துவரும் கருணாநிதி, 'பகையாளிக் குடியை உறவாடிக் கெடு' என்கிற வித்தைகளையெல்லாம்கூட செய்து பார்த்தார். 2001 தேர்தலிலும், 2006 தேர்தலிலும் அவர் ஆடிய சதுரங்கத்தில் வெட்டுப்படும் குதிரையானார் வைகோ.

தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்தக்கட்சியும் சமரசங்களைத் தவிர்க்க முடியாது என்ற சூழ்நிலையில் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேறு வழியின்றி போயஸ் தோட்டத்தில் சரண்புக வேண்டிய இழிமைக்கும் தள்ளப்பட்டார். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று தேவை என்று இன்றைய நிலையில் ஏற்பட்டிருக்கிற ஒரு வெற்றிடம் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டிருக்கவில்லை.

தனித்து நின்றே தனது கட்சியைக் காபந்து செய்ய வேண்டும் என்பது பெரியளவில் மக்களிடம் செல்வாக்கு இல்லாத நிலையில் சாத்தியமில்லை. மேலும் கட்சியில் அவருடன் இருந்த சாறுண்ணிகளும், ஒட்டுண்ணிகளுமான எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் போன்றவர்களின் 'காயசண்டிகை'ப் பசிக்கும் தீனி போட வேண்டிய கட்டாயம்.

எனவே கூட்டணி அரசியல் சகதியில் அவரும் தாராளமாகப் புழங்கியவர்தான்... மறுக்கவில்லை. அவரது வார்த்தைகளிலேயே சொல்லப்போனால் காட்டாற்று வெள்ளத்திலே சந்தன மரங்களும் அடித்துச் செல்லத்தான் படும் என்கிற தமிழக அரசியல் சூழலில் கரையொதுங்க வேண்டிய நிர்ப்பந்தங்களிலும் அவருக்கென்று சில தனித்தன்மைகள் இருந்தன. மற்றெந்த அரசியல் தலைவர்களிடமும் இல்லாத அந்தத் தன்மைகள்தான் இன்று அவரைத் தனித்துக் காட்டி இருக்கின்றன.

1) முதலானதும் தலையாயதுமானது வாரிசு அரசியலை இதுவரை வைகோ முன்னெடுக்கவில்லை. அவரது பிள்ளைகளான துரைவையாபுரியையும், கண்ணகியையும், தடா சட்டத்தில் சிறைவாசமிருந்த தம்பி ரவிச்சந்திரனையும் இதுவரை கட்சிக்கு பட்டாதாரர்களாக மாற்றவில்லை.

2) இதுவரை மத்திய அரசில் பங்கேற்று மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைக்குபோதெல்லாம் அவற்றைப் புறம்தள்ளி தனது சகாக்களுக்கே பதவியைத் தாரைவார்த்தவர் வைகோ.

3) கூட்டணிக்கேற்றவாறு கொள்கைகளை மாற்றிப்பேசும் வழக்கமும் அவரிடமில்லை. இதுவரை புலிகள் ஆதரவுக் கொள்கையையோ, சேது சமுத்திரத் திட்டத்தின் பாலான தமது உறுதிகளையோ மாற்றிக்கொள்ளவில்லை.

4) ஸ்டெர்லைட் ஆலைப்பிரச்சினையில் எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தபோதிலும் இன்று அவரது அரசியல் எதிகாலத்துக்கு சவாலாக வந்தபோதிலும் கூட தனது உறுதியை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இன்று ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் அந்த நிர்வாகத்தால் செய்யப்பட்ட நிலையில் இன்றளவும் சட்டரீதியாக அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர் வைகோ ஒருவர் மட்டுமே.

5) முல்லைப்பெரியாறு அணைக்கட்டு தொடர்பான போராட்டங்களிலும் முன்னிற்பவர் வைகோ மட்டுமே.

6) நெய்வேலி அனல்மின் நிலையத்தை தனியார்மயமாக்க முயற்சிகள் நடந்தபோது அதனைத் தடுத்து நிறுத்திய காரணகர்த்தாக்களில் வைகோ முக்கியமானவர்.

இப்போது அரசியல்களத்தில் அவமானப்பட்டு நிற்கும் நிலையில், இருபெரும் திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் வாய்ப்பை காலம் அவருக்கு வழங்கி இருக்கின்றது.

வைகோவின் அரசியல் இப்போது துவங்குகிறது எனக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்தலுக்குப் பிறகும் அவரிடம் மிச்சமிருக்கும் தொண்டர்கள் இனி எக்காலத்திலும் விலைபோக மாட்டார்கள் என்று நம்பலாம்.

இந்த தொண்டர் பலத்தை வைத்து அவர் தமிழக அரசியலில் ஒரு புதிய பாதையைத் துவங்கிட வேண்டும் என்பதே தமிழுணர்வாளர்களின் எதிர்பார்ப்பு. சரியான திசையில் பயணிப்பாரா வைகோ?

"வீடுகட்டுவதற்கு வேண்டாம் என்று விலக்கிவைக்கப்பட்ட கல் மூலைக்கு தலைக்கல்லாயிற்று" என்கிறது விவிலியம்..(மத்தேயு சுவிசேஷம் 21)

பின்குறிப்பு : இந்தக் கட்டுரை ஆக்கத்திற்கு பெருமளவு துணைபுரிந்த என் இனிய நண்பரும், என் வாழ்வில் பகிர்தலுக்கும், புரிதலுக்குமாக இருக்கும் மிகச்சில சுமைதாங்கிகளில் ஒருவருமான கா.அன்புவேலுக்கு என் நன்றிகள்

செவ்வாய், 29 மார்ச், 2011

திசைமறந்து திரியும் பறவையொன்றின் புலம்பல்கள்...


அலங்காரங்களின்றி 
எழுத நினைத்தேன்
ஒரு கவிதையை
கண்ணீராலும் துக்கத்தாலும்...
வழியும் கண்ணீரில்
காகிதக் கப்பலாய் என் காதல்...


வரிகளைத் தேடும் 
வலிமையில்லை


பின்னொரு பொழுதில்


திசைமறந்து திரியும் 
பறவையொன்றின் புலம்பல்களைக்
கோர்த்து
எழுதத் துவங்கினேன்
ஒரு கவிதையை.
குஞ்சுகளைத் தொலைத்த 
குருவியொன்று
ஒப்பாரி வரிகளுக்கு
ஒப்பனை செய்ய முன்வந்தது...


எழுதி முடித்த கவிதையில்
மிதந்து கொண்டிருந்தன
கனவுகளின் சடலங்கள்

வியாழன், 24 மார்ச், 2011

கொஞ்சம் ரசிக்க... கவிதை, எதிர்க்கவிதை, எதிருக்கு எதிர்....


கவிதை எழுதி ரொம்பநாளாச்சேன்னு கை அரிச்சி ஒக்காந்திருந்தேன். இன்னிக்குன்னு பாத்து கூகிள் பஸ்ஸுல கவிதை மழையா பொழிஞ்சிட்டு இருந்தாரு அண்ணன் கேஆர்பி.செந்தில். அவரோட கவிதைய பாத்தவொடனே அப்பிடியே எதிர்க்கவிதை பொங்கிடுச்சி! எதிர்க்கவிதை போட்டுட்டு பொசுக்குன்னு வந்துரலாம்னு பாத்தா "என்ன கைய புடிச்சி இழுத்தியா"ன்னு இழுத்து வெச்சி வம்பளந்தாரு நண்பர் பலாபட்டறை சங்கர். மனுசன் பின்னி பெடலெடுத்துட்டாரு. கவிதை, எதிர்க்கவிதை, எதிருக்கு எதிர் அப்டீன்னு மூணுமணி நேரம் போனதே தெரியல

நண்பர்களும் நாங்க அடிச்ச கூத்தை ரசிக்கணும்ல! அதான் இந்தப் பதிவு

krpsenthil kumar - Buzz - Public

சொல்லிவிட்டு பெய்வதில்லை
எப்போதும் மழை ..
அது காதலைப்போல்
வரமாய் வரும் ..

இப்போதும் பெய்கிறது
பெருமழை அவ்வப்போது,
உடன் நனைய
நீதான் இல்லை...

உடைந்து அழும் கண்களின்
உப்பு
மழையில் கலந்து
கடலெல்லாம் உப்பாச்சு..

10 people liked this - subramanian rajaraman, Karthik L (LK), ४१ தோழி १४, எஸ். கே, ஓம் அருணையடி ஓம் and 5 others

nesamitran online - ஆஹா ...

இந்த நரகத்தில் நான் மட்டும் உழலுவதோன்னு கடலெல்லாம் உப்பாக்குறான்யா/கடலளவு அழுகுறான்யா கவிஞன் :)11:54 am

subramanian rajaraman -

எதிர்கவுஜ எழுதி நாளாச்சு... அதுனால

கண்ணு ரெண்டும் கொளமாச்சு
கடலெல்லாம் உப்பாச்சு
காஞ்சி போன நெலமெல்லாம்
கழனியா மாறிப்போச்சு

கொஞ்ச மழை பேஞ்சாலும்
கூதலில ஒன் நெனப்பு
கோரமழை பேயிறப்போ
கொமரி உன்னை காங்கலியேEdit12:42 pm

ஷங்கர் Shankar - எதிருக்கு எதிர்

வானம் பார்த்த பூமியிலே
பெஞ்ச மழை ஈரத்துல
விளைச்ச கீர காசக் கொண்டு
பெத்த புள்ளை பட்டணம் போயி
காதலிக்கான கண்ணீருல
கடலெல்லாம் உப்பாச்சுன்னு
கவித ஒன்னு எழுதினானே
பாடுபட்டு அனுப்பிவெச்ச
ஆத்தாளோட வேர்வை
கரிக்காத காரணமென்ன
ராஜாராமா கரிக்காத காரணமென்ன?12:56 pm

subramanian rajaraman -

ஆத்தாவோட வேர்வையெல்லாம்
ஆனிப்பொன் தங்கமய்யா
அவ மனசு பூக்கணும்னு
அச்சுவெல்ல மருமவன்னு
ஆறு கொளம் ஏரி கரை
அத்தனையும் வல போட்டு
ஆப்புட்டுது கன்னிமீனு
அசந்திருக்கும் நேரத்துல
வலையறுத்து பாஞ்சதென்ன
வாழ்க்கையெல்லாம் மாஞ்சதென்ன

வானமெல்லாம் பூத்திருக்க
வறண்ட நெஞ்சு இருட்டடிக்க
எசப்பாட்டு நாம்படிக்க
எதிர்ப்பாட்டு ஏதுக்கய்யா
சங்கரனே
எதிர்ப்பாட்டு ஏதுக்கய்யா?Edit1:09 pm (edited 1:10 pm)

ஷங்கர் Shankar -

Yes Sir
Yes Sir
Three Bags Full! :))1:11 pm

subramanian rajaraman -

 புரியலயே?Edit1:15 pm

ஷங்கர் Shankar -

இக்கட்டான நிலைமைல மாட்டிக்கிட்டா இப்படி சொல்லிட்டு எஸ்கேப்பாகறது என் ஃபார்முலா! :))))))1:16 pm

subramanian rajaraman -

அடடா.. அப்பிடியே கொஞ்சநேரம் கண்டினியூ பண்ணினா எடுத்து பதிவா போட்ரலாம்னு பாத்தேனே? :)Edit1:17 pm

ஷங்கர் Shankar -

பத்து மாசம்தான் சொமந்து
ரத்தம் வத்தப் பால் கொடுத்து
குத்தம் கொற இல்லாம
நான் வளத்த என் புள்ள

பத்து நாளு முன்னாடி
பளபளன்னு சேலகட்டி
பல்லக் காட்டி வந்தவ
பறிச்சிட்டுத்தான் போனாளே

சுள்ளி சொமந்த தலையிலே
கள்ளி வந்து போட்ட மண்ணு
கொள்ளி வரை மறக்காதே

என்ன செய்வேன் ராஜாராமா
யார் தடுப்பா ராஜாராமா1:36 pm

subramanian rajaraman -

பெத்ததொரு தாயாரு
சித்தமெல்லாம் கலங்கி நிக்க
குத்தமென்ன நாஞ்செஞ்சேன்
சத்தமாக சொல்லுமய்யா

வாழக் குருத்தாட்டம்
வளந்திருக்கும் பொண்ணொருத்தி
வாக்கப்பட்டு வந்து நின்னா
வாண்டாமுன்னா சொல்லப் போறா

செல்ல மவன் வாழ்க்கையில
செல்வமெல்லாம் நெறஞ்சிருக்க
குத்து வெளக்கு ஒண்ணை
கொண்டுவந்தா கோவமென்ன

மாமியாரும் மருமவளும்
மனம் நெறஞ்சி கதைபேச
கொணவதியா வரணுமின்னு
கொண்டிருந்தேன் கனவு ஒண்ணு

கனவுல வெதச்ச வெத
கருகித்தான் போகுமின்னு
கண்டேனா பாவிமவன்
கசங்கித்தான் போனேனய்யா
சங்கரரே
கசங்கித்தான் போனேனய்யாEdit1:50 pm

ஷங்கர் Shankar -

அடியாத்தீ என்று சொல்லி
நாலு வெரலு மடக்கி
மோவாயி தாங்க நாம் பாத்த
படமொன்னு டிவியிலே
வந்துச்சே குடும்ப கொடுமையெல்லாம்
சொல்லிச்சே,

மரம்போல நாங்கிடந்து
மந்திகத கண்ட நேரம்
புத்தியில ஏறலியே
புள்ள இப்படி பண்ணுமின்னு

அந்திசாயும் நேரம்தானே
என் புள்ளையும் வந்தானே
கண்ணீரத் தொடச்சி
சொன்னானே குத்திக் கொன்னானே

பக்கத்து வீட்டு கோவால நான்
கட்டிக்கிட்டா போதுமம்மா
மருமவ தொல்லை ஏது
நீ கவலப்படவேணாம்மா

என்ன செய்வேன் ராசா ராமா
சொல்லு என்ன செய்வேன் ராசாராமா?2:12 pm

subramanian rajaraman -

அய்யய்யோ சங்கரரே
அபச்சாரம் அபச்சாரம்
ஆம்பளையும் ஆம்பளையும்
அணைச்சிக்கிடும் குடித்தனமும்
அடுக்குமா சாமிக்கும்?

வாலைக் கொமரிப்பொண்ணு
வரிசைகட்டி நின்னிருக்க
வந்த பொண்ணு போனா என்ன
வந்திடுவா அடுத்தொருத்தி

வாழ்க்கையில காதலெல்லாம்
வாசல் தாண்டிப் போனாலும்
வசந்தங் கெட்டு போவாதின்னு
வந்திடுச்சி புத்தி அய்யா

செவத்த தோலு பொண்ணொருத்தி
சிங்காரிச்சி வந்துநின்னா
சிலுத்துக்கிட்டு காதலிச்சேன்
செருப்படியும் வாங்கி நின்னேன்

அத்தமவ ஒருத்தி அழகான கருப்பட்டி
சித்தமதிர வைக்கும் செலமாரி நின்னிருக்கா
கத்துங் குயிலோச கானம் சொக்கவைக்கும்
கருத்த பொண்ணுகூட வாழ்க்க இனிச்சிருக்கும்Edit2:30 pm (edited 2:31 pm)

ஷங்கர் Shankar -

தேலிக்கை சொல்லாலே
மனம் கேளிக்கை அடையும் நேரம்
துடுப்பாட்ட காணொளியை
காண மனம் விழையுதே

அன்பான கேஆர்பி
இனி கவித எழுதலேன்னு
முடிவேதும் எடுக்கும் முன்னே

இம்புட்டு நேரமா இழுத்திழுத்த
இந்தக் கத முடிச்சிக்கலாம்
நான் ஆவறேன் அப்பீட்டு
அதுவே நீங்களும் ரிப்பீட்டு!
யப்பா சாமி முடியல!
வெளிலதான் என்னா வெயிலு!
:)))))))))))2:32 pm (edited 2:33 pm)

subramanian rajaraman -

இழுத்துவெச்சி கதையளந்த
இனிய நண்பர் சங்கரரே
இப்போ போயி நாளைவாரும்
எசப்பாட்டு பாடிடலாம்

எசப்பாட்டு தான் கேக்க
இங்க வந்து காது தந்த
எல்லாரும் நலம்வாழ
எஞ்சாமி காத்திருக்கும்

திங்கள், 21 மார்ச், 2011

கச்சத்தீவும் நமதே! கீழைக்கடலும் நமதே!! #DefeatCongress


காங்கிரஸை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து எதிர்வரும் 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரஸை மண்ணைக்கவ்வச் செய்யவேண்டும் என்று சிலநாட்களுக்கு முன் நானும் அண்ணன் கேஆர்பி.செந்திலும் பதிவுகளை வெளியிட்டிருந்தோம். எதிர்பார்த்த அளவிற்கு தமிழ்ப்பதிவுலத்தினரின் ஒத்துழைப்பு கிட்டவில்லை என்றபோதிலும், எதிர்பாராத திசைகளிலிருந்து இணைய நண்பர்கள் மூலம் ஆதரவு குவிகின்றது.

நானும், அண்ணன் கேஆர்பியும் இது தொடர்பான மேலதிகச் செயற்பாடுகளையும், நடைமுறைத் தந்திரங்களையும் பற்றி தொடர்ந்து நண்பரும் பதிவருமான கும்மியுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு முன்னெடுப்பு செய்து வருகிறோம். நண்பர் கும்மி ஏற்கனவே தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான இணையநண்பர்களின் முன்னெடுப்புகளை ஒருங்கிணைத்து வருகிறார். நேற்று மாலை தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலை முடித்துவிட்டு, மேற்கொண்டு, வரும் தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிப்பது தொடர்பான கலந்துரையாடலை நடத்தலாம் என்று கூறியிருந்தார். அது தொடர்பானவற்றைப் பேசிமுடித்தபின் தியாகராயநகரில் , 'மே பதினேழு' இயக்கமும், தமிழக மக்கள் உரிமைக்கழகமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த "தமிழக மீனவர் படுகொலையும், மக்களை திசை திருப்பும் சதியும்" என்கிற கலந்துரையாடலில் கலந்துகொண்டோம்.

மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ் வெப்துனியா இணைய இதழ் ஆசிரியர் கா.அய்யநாதன், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் பா.புகழேந்தி(வழக்கறிஞர்), கச்சத்தீவு மீட்பு இயக்கம் சீதையின் மைந்தன், பாரம்பரிய மீனவர் சங்கம் மகேஷ் ஆகியோரின் உரைகளின் சாராம்சத்தைத் தொகுத்துத் தருவதன் முலம் இந்திய நடுவண் அரசு தமிழனிடம் காட்டிவரும் மாற்றாந்தாய் மனப்பான்மையும், ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் என்கிற காவாலிக்கட்சி தமிழக மண்ணுக்கும், மானவாழ்விற்கும், மனித உரிமைக்கும் செய்துவரும் பச்சைத் துரோகங்களையும் ஓரளவு எடுத்துக்காட்ட முடியும் என்று நம்புகிறேன்.

மேற்சொன்ன நண்பர்களின் உரைகளிலிருந்து :

எந்த ஒரு மக்கள்பிரச்சினையும் அதன் அளவில் தீவிரமடையத் துவங்கும்போது ஆளும் மத்திய அரசு தன் கைக்கூலிகளான உளவுத்துறையினர், எலும்புத்துண்டுகளுக்கு எச்சில் ஒழுக நிற்கின்ற, ஊடகதர்மம் பிறழ்ந்த பத்திரிகையாளர்கள், போலி முற்போக்கு அறிவுஜீவிகள் ஆகியோர் மூலம் மக்கள்பிரச்சினைகளில் புதிய கதையாடல்களை பரப்புரை செய்து போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்கின்றது. அதே போலத்தான் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து கொல்லப்படும் கொடுமைகள் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக மாறிப்போவதைப் பார்த்த நடுவணரசு, மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர், தடைசெய்யப்பட்ட இருமடி மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துகின்றனர், அதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டு வருகின்றனர். "தமிழக மீனவர்கள் பேராசையால் எல்லை தாண்டுகின்றனர்" என்று கொஞ்சம்கூட மனச்சாட்சியும், கூச்ச உணர்வுமின்றி தமிழக முதல்வர் கருணாநிதி சில மாதங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது ஞாபகம் இருக்கும் ( லட்சக்கணக்கான கோடிகளுக்கெல்லாம் தனது குடும்பம் ஆசைப்படுவது 'ஞாயமான' ஆசையாகவும், அன்றாட பிழைப்புக்காக மீனவன் எல்லை தாண்டிச் செல்வது 'பேராசை'யாகவும் அவருக்குத் தோன்றுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. கொட்டுவது எப்போதுமே தேளின் குணம்! கொட்டாது என்று எதிர்பார்ப்பது நமது மடமை!).

ஆனால் மீனவர்களை அவர்களின் வாழ்வாதாரங்களிலிருந்து அப்புறப்படுத்துவது என்பது பன்னாட்டு முதலாளிகளிடம் தேசத்தைக் காட்டிக் கொடுப்பதற்கான அயோக்கியத்தனத்திற்கு மீனவர்களிடமிருந்து எவ்வித இடைஞ்சலும் வராமல் இருப்பதற்கான ஒரு யுக்தியாகவே மைய அரசால் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனைப் புரிந்துகொள்ள முதலில் மீன்பிடித்தொழில் தொடர்பான சில தகவல்களை அறிந்துகொள்வது அவசியம்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் கடல்பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அப்புறப்படுத்துவதற்காக நார்வே அரசு இரும்பாலான சிறப்பு வலைகளைப் பயன்படுத்தத் துவங்கியது. மீனவர்கள் பயன்படுத்தும் சாதாரண வலைகள் கடலின் பாதி ஆழத்தோடு நின்றுவிடும். ஆனால் இப்படிப்பட்ட இரும்புவலைகள் கடலின் அடியாழம்வரை இறங்கிச்சென்று கண்ணிவெடிகளை அப்புறப்படுத்த உதவின. அதே சமயம் அந்த வலைகளில் மிக அதிகமான அளவில் மீன்களும் பிடிபட்டன். இந்த கூடுதல் உபயோகத்தைக் கண்டுகொண்ட மேலைநாடுகள்  தங்களுக்கான கடலுணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இவ்வகையான வலைகளை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தன. அளவுக்கு அதிகமாக இவ்வகை வலைகளைப் பயன்படுத்தியதால் இன்று மத்தியத் தரைக்கடல் பிரதேசமே மீன்வளம் இழந்து காணப்படுகின்றது. எனவே மேலைநாடுகள் தங்களது மீன் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள புதிய கடல்பரப்புகளைத் தேர்வுசெய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின.

எனவே அவர்களின் பார்வை, வளம் மிகுந்த இந்தியக் கடற்பகுதியின் மீது திரும்பியது. இந்தியக் கடற்பகுதியில் குறிப்பாக மன்னார் வளைகுடா, பாக் நீரிணை பகுதிகளில் அவர்கள் மீன்பிடித் தொழிலை நடத்துவதற்கு பெரும் இடைஞ்சலாக உள்ளூர் மீனவர்களே இருப்பார்கள். அவர்களை மீன்பிடித்தொழிலில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால்...???

இந்தியாவில் இழுவைப்படகு மீன்பிடித்தொழில் :

மேலைநாடுகள் இருமடி வலைகளைப் பயன்படுத்த ஆரம்பித்த சிறிது காலம் கழித்து இந்தியக் கடல்பரப்பில் இருமடி வலைகளைப் பயன்படுத்துவதை இந்திய அரசே மீனவர்களுக்கு மானியங்களும் சலுகைகளும் கொடுத்து ஊக்குவிக்க ஆரம்பித்தது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் காமராசர் ஆட்சிக்காலத்தில் இருமடி வலைகளையும் ட்ராலர்கள் எனப்படும் இழுவைப்படகுகளையும் பயன்படுத்தி மீன்பிடித்தொழிலைச் செய்ய மிகப்பெரும் அளவில் ஊக்குவிக்கப்பட்டது. இந்திய கடலுணவுத்தேவை வருடத்திற்கு ஏறக்குறைய ஐந்தரை மில்லியன் டன்கள். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே அரசு மீனவர்களை மானியங்களும், சலுகைகளும் கொடுத்து ஊக்குவித்தது. ஆனாலும் மீன்வளம் குறைந்துவிடாமல் பாதுகாக்கும் பொருட்டு மீன்கள் குஞ்சு பொறிக்கும் பருவகாலத்தில் மட்டும் இருமடி வலைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தமிழக மீனவர்களில் ஏறத்தாழ முப்பதுசத மீனவர்கள் மட்டுமே இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலை நடத்தி வருகின்றனர். ஏனையோர் பாரம்பரிய மீன்பிடிப் படகுகளையே பயன்படுத்துகின்றனர்.

காலங்காலமாக இந்திய மீனவர்கள் இலங்கையின், நெடுந்தீவு, தலைமன்னார், யாழ்ப்பாணம் வரையிலும் சென்று மீன்பிடிப்பதும், இலங்கை மீனவர்கள் தமிழக எல்லையில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதும் வழக்கமாகவே இருந்து வருகின்றது. இந்திய மீனவருக்குத் தேவையான மீன்கள் இலங்கைப் பகுதியிலும், இலங்கை மீனவருக்குத் தேவையான மீன்கள் இந்தியப்பகுதிகளிலும் பெருமளவு கிடைப்பதே இதற்குக் காரணம்.

புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் துவங்கியபின் சிங்களப்படைக்கு இயல்பாகவே தமிழக மீனவர்கள் மீதான வெறுப்பு அதிகரிக்கத் துவங்கியது.தமிழக மீனவர்கள் மீதான அவர்களின் தாக்குதலும் பெருமளவில் நிகழ ஆரம்பித்தது. தற்போது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக்கொல்வதும், நடுக்கடலில் சித்திரவதை செய்வதும், அவர்களின் மீன்பிடிச் சாதனங்களை நாசப்படுத்துவதும் நின்றபாடில்லை.

கச்சத்தீவைக் கொடுத்த அயோக்கியத்தனம்:

இதற்கிடையில் கச்சத்தீவினை தாரைவார்த்துக் கொடுத்த அயோக்கியத்தனமும் சிங்களத்துக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. கச்சத்தீவானது பிரிட்டிஷார் காலத்திலும், அதற்கு முன்னும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான நிலமாக இருந்ததை பிரிட்டிஷ் ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இலங்கையில் ஆட்சி செய்த பண்டாரநாயகா குடும்பமும், இந்தியாவின் ஜவகர்லால்நேரு குடும்பமும் ஒன்றுக்கொன்று நட்பாக இருந்துவந்தன. நேருவுக்குப் பின்னரும் இந்த நட்பு தொடர்ந்து நீடித்து வந்தது. இந்திராவின் ஆட்சிக்காலத்தில், இலங்கையில் திருமதி.பண்டாரநாயக பிரதம மந்திரியாக இருந்துவந்தார். தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது செல்வாக்கு மக்கள்மத்தியில் குன்றியிருந்த நேரத்தில் இலங்கையில் பொதுத்தேர்தலுக்கான காலமும் வந்தது. மக்கள் மத்தியில் குறைந்துபோன தனது செல்வாக்கினை மீண்டும் உயர்த்திக்கொள்ள அவர் கச்சத்தீவினைப் பெற்று இலங்கையோடு இணைக்க முயற்சித்தார். அதற்குத்தான் ஏற்கனவே குடும்ப நண்பரான இந்திராகாந்தி இருக்கிறாரே?! சேதுபதி மன்னருக்கும், தமிழக மீனவர்களுக்கும் சொந்தமான கச்சத்தீவு இவர்கள் யாருடைய அனுமதியும் இன்றி சட்டத்துக்குப் புறம்பான வகையில் ஒரு (அ)சுபயோகத்தில் இலங்கைக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தாரைவார்க்கப்பட்டது. இது நடந்தது 28-06-1974-ல்.

இது தொடர்பான பாராளுமன்ற விவாதங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், பி.கே.என் தேவர், முகமது ஷெரீஃப் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக மீனவர்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று தெரிந்தும்கூட இந்திய அரசாங்கம் தமிழகத்துக்கு இந்த இரண்டகமான வேலையைச் செய்தது. இதற்கு தோதாக ஏற்கனவே கடல் எல்லையைக் குறிக்கும் வரைபடங்கள் திருத்தப்பட்டு, கச்சத்தீவானது இலங்கைக்குச் சொந்தம் என்று காட்டுமாறு வரைபடங்கள் மாற்றப்பட்டன.

கச்சத்தீவினைத் தாரைவார்க்கும் ஒப்பந்தம் எட்டாவது ஷரத்தின்படி இந்த ஒப்பந்தமானது அரசியல்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தின் இருவகைகளிலும் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும். ஆனால் நாளது தேதிவரையிலுங்கூட இந்த ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படவோ, பாராளுமன்ற அவைகளில் ஒப்புதல் பெறப்படவோ இல்லை.

உதாரணமாக, நான் ஒருவரிடம் அவரது நிலத்தை கிரய ஒப்பந்தம் செய்து வாங்கிக் கொள்கிறேன் என்று கொள்வோம். அந்த ஒப்பந்தம் முறையாக குறிப்பிட்ட பதிவாளர்/சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டால்தானே அந்த கிரய ஒப்பந்தம் சட்டப்பூர்வமானதாக இருக்கும்? அப்படி பதிவு செய்யப்படவில்லையென்றால்...?

ஆக, ஒரு திருட்டுத்தனமான, அயோக்கியத்தனமான, தமிழக மக்களின் நலனை அழிக்கக்கூடிய ஒரு ஒப்பந்தம் இன்று வரையிலும் அரசியல் சாசனத்துக்கு விரோதமான முறையில் இருப்பதைக்கூட கண்டுகொள்ளாத காங்கிரஸ் அரசின் காவாலித்தனத்தை என்னவென்று சொல்வது?

காலங்காலமாய்த் தமிழர்களுக்கு துரோகம் செய்துவரும் காங்கிரஸ் :

இப்படி பரம்பரை பரம்பரையாகவே காங்கிரஸ் கட்சியானது தமிழர்களுக்கு துரோகம் செய்தே வருகின்றது. இன்றும் சிங்களக் கடற்படை தமிழக மீனவனை சுட்டுக் கொல்வதற்கு இந்திய அரசு உடந்தையாக இருப்பது அதன் கள்ளமௌனத்தின் மூலமே வெட்டவெளிச்சமாகிறது.

தாங்கவொண்ணாக் கொடுமைகள் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து அவர்களை மாற்றுத் தொழிலை நோக்கி திசைமாற்றிவிட்டால், ஏற்கனவே அகோரப் பசியில் இருக்கும் பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களைக் கூப்பிட்டு ஆசை, ஆசையாக பந்தி வைக்கலாமே?

எல்லை தாண்டும் பிரச்சினை :

ஐக்கியநாடுகள் சபையின் வழிகாட்டுதல்களின்படி கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பவும், ஒருவேளை சந்தேகம் எழுந்தால் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் மட்டுமே செய்யவேண்டும். அதைமீறி அவர்களைக் காயப்படுத்துவதும், மரணம் ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றங்கள்.

தனது சொந்த நாட்டு மீனவன் செத்தால் என்ன, வாழ்ந்தால் என்ன என்ற ஆண்மைகெட்ட தேசத்துக்கு என்ன மயிர்பிடுங்கி இறையாண்மை இருக்க முடியும்? தன் பெண்டு, பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாத ஒரு குடும்பத்தலைவனை பேடி என்று சொல்லித்தான் எங்களுக்குப் பழக்கம்.

தம் மக்களை அநியாயமாகக் கொன்றுகுவிக்கக் கள்ளத்தனமாக துணைபோகும், கொன்று குவிக்கப்படுவதை விழிவிரிய வேடிக்கை பார்க்கும், தன் மக்களுக்குச் சொந்தமான சொத்தை திருட்டுத் தனமாக ஊரானுக்கு பட்டா போட்டுக்கொடுக்கும் காங்கிரச் கட்சியும், அரசும் நமக்குத் தேவைதானா?

தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும், உடலில் தமிழ்க்குருதி பாயும் ஒவ்வொருவனும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தமிழ் இளைஞனும் குறைந்தது பத்து வாக்குகளையாவது காங்கிரஸுக்குப் போகாமல் தடுக்க வேண்டும்.
***************************************************

கூட்டம் முடிவடைந்த பின்னர் 'மே பதினேழு' இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தியுடன் நானும் கேஆர்பி அண்ணனும் எமது இணைய நண்பர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னது:

"தொகுதிக்கு பத்துபேர் இருந்தால்கூட போதும் தோழர். மிகத் தீவிரமான பிரச்சாரத்தின்மூலம் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸை மண்ணைக் கவ்வச் செய்யலாம். பத்து நூறாகவும், ஆயிரம், லட்சங்களாகவும் மாறும் நாள் தொலைவில் இல்லை. "நாம் தமிழர்" போன்ற இயக்கங்களுடனும் நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம்"

என்றார் திருமுருகன்.

இன்னும் ஓரிரு நாட்களில் பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கம், தமிழ் தேசிய உணர்வுள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் இவர்களையும் சந்திக்க உள்ளோம். இணைய நண்பர்கள் மென்மேலும் களப்பணியாற்ற வரவேண்டுமாய் இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.

தொடர்புக்கு :

கேஆர்பி.செந்தில் - 8098858248
விந்தைமனிதன்( ராஜாராமன்) - 9500790916

" ஹே... பூதலமே! என் போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் அந்தப் போதினிலே"


ஞாயிறு, 20 மார்ச், 2011

காங்கிரசை தோற்கடிப்போம் #DefeatCongress in #TNae11...


எல்லா அரசியல் கட்சிகளுமே மக்கள்நலன், தேசநலன் போன்றவற்றைத் தலைமுழுகிவிட்டு ஆட்சி, அதிகாரம், பதவிசுகம், பணபேரம் என மூழ்கிக் கிடந்தாலும் காங்கிரஸ் கட்சிமட்டும் எப்போதும் ஒரு தனித்தன்மையுடனேயே வலம் வருகின்றது. கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையை ஐ.நா சபை முன்னிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்திக் காப்போம் என்றுகூறி கபளீகரம் செய்தலில் இருந்து துவங்குகிறது சுதந்திரத்துக்குப் பிறகான காங்கிரஸின் லீலைகள். தேசநலன் என்ற பெயரில் வடகிழக்கு மாகாணங்களின் நலன்களை பலிகொடுத்ததன் மூலம் தனது கொடுங்கரங்களை தேசமெங்கும் நீட்டியது. ராணுவ ஒடுக்குமுறையின்கீழ் கட்டமைக்கப்படும் எந்த தேசியமும் தேசத்தினை அமைதியாக வாழவிட்டதாக சரித்திரமே இல்லை. நாடெங்கும் வன்முறை தலைவிரித்தாட மறைமுகமாகப் பங்காற்றி ராணுவத்திற்கென பெரும்பகுதி வளங்களைச் செலவழித்து உலகின் மிகப்பெரும் ஜனநாயக தேசத்தினை ஓட்டாண்டியாக மாற்றியதே ஐம்பதாண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சாதனை.

தமிழகத்தை எடுத்துக்கொண்டாலும்கூட இதுவரையிலும் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளான காவேரி, முல்லைப்பெரியார், பாலாறு போன்றவற்றிலும், கச்சத்தீவு மற்றும் தேவிகுளம், பீர்மேடு பிரச்சினைகளிலும் எதிலுமே காங்கிரஸ் ஒரு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போட்டதில்லை.

(சிறுகுறிப்பு : காமராஜர் ஆட்சிதான் அதைச் செய்தது; இதைச் செய்தது! என்று வாய்ஜாலக்குகளைக் காட்டுவது காங்கிரஸ்காரர்களின் ரத்தத்தில் ஊறிய விஷ(ய)ம்! ஆனால் காமராஜர் அந்த இயக்கத்தில் ஒரு விதிவிலக்கு. அப்படிப்பட்ட காமராஜரையே அவரது இறுதிக்காலத்தில் தலையால் தண்ணிகுடிக்க வைத்த மகானுபாவர்கள்தான் இந்த காங்கிரஸ்காரர்கள். தனது இறுதிக்காலத்தில் காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸ்காரனாக அல்ல; ஸ்தாபன காங்கிரஸ்காரனாகவே இறந்தார். இந்த விஷயங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் ஞாபகமறதியின் பாற்பட்ட அலாதி நம்பிக்கையில் மூடிமறைத்துவிட்டு 'காமராஜர்' ஆட்சி என்று பசப்புவார்கள்.)

இறுதியாக ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக ஒன்றரைலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவிக்க சிங்கள அரசுக்கு துணையாக மட்டுமன்றி, அந்த பச்சைப்படுகொலைகளில் மறைமுகப் பங்கெடுப்பாளர்களாகவும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது என்பதை சமீபத்தைய விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரியப்படுத்தியுள்ளன.

தமிழினத்தையே கருவறுத்த காங்கிரஸ் கட்சி, தமிழ்மீனவன் தனது கெண்டைக்கால் ரோமத்துக்குச் சமம் என்று அலட்சியமாய்ப் புன்னகைக்கும் காங்கிரஸ் கட்சி, இதோ மீண்டும் ஒருமுறை நமது ஞாபகமறதிமீது அதீத நம்பிக்கை வைத்து ஓட்டுகேட்டு வீதிகளில் பவனி வரத் தொடங்கிவிட்டது.

தலைப்பாகைப் பிரச்சினைக்கு பஞ்சாயத்து பேசாவிட்டால் சீக்கியன் விரட்டி விரட்டி அடிப்பான்! தெலுங்கானா உரிமைப்போராட்டத்தில் அயோக்கியத்தனம் செய்தால் தெலுங்கன் துரத்தித் துரத்தி வெட்டுவான் என்கிற பயம் இருந்ததால்தான் அந்தந்த மாநிலங்களிலெல்லாம் காங்கிரஸ் பூனை வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்தது. இங்கும் எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இல்லாமல் துரத்தப்பட்டால்தான் தமிழனுக்கும் சூடி,சொரணை மிச்சமிருக்கிறது என்பது காங்கிரஸ் புத்திஜீவிகளின் மண்டையில் உறைக்கும்.

வரும் 2011 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் பாடம் கற்பிக்காவிட்டால் 'என்ன செய்தாலும் தமிழ்நாட்டானுக்கு உறைக்காது' என்கிற திமிர் ஊறிப்போய்விடும்.

ட்விட்டரில் ஏற்கனவே #defeatcongress என்று செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இணையத்தில் காங்கிரஸை எதிர்க்கும் அதேசமயம் வீதிகளிலும் இறங்குவோம்.

இணையநண்பர்கள் நேற்று மாலை தி.நகரில் ஒன்றுகூடி இது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டோம். அதுபற்றிய தெளிவான இடுகை ஒன்றை கேஆர்பி.செந்தில் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.நண்பர்களின் பங்களிப்பை இன்னும் எதிர்பார்க்கிறோம்

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு காங்கிரஸும் அவசியமற்றவை நண்பர்களே! விரட்டுவோம் காங்கிரஸை திருத்தணிக்கு அப்பால்!

Related Posts with Thumbnails