புதன், 5 மே, 2010

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை
அது பற்றிய கற்பனைகள்

பதின்பருவச்
சுயமைதுனங்களின் இறுதியில்
எப்போதும்
எட்டிப் பார்க்கும்
துளி கண்ணீர்

"படத்தோட இருவது ரூவா"
"படமில்லாம பத்து ரூவா"
ரோட்டுப் புத்தகங்கள்...
கதைகளின் நீதி
"தவறுக்கு வருந்துகிறேன்"...

"புள்ளிராஜா"க்களின்
பயமுறுத்தல்களிலும்
ஆணுறை வாங்க அச்சத்திலும்
காற்றில் பீய்ச்சப்பட்டு
கழிந்துபோயின கல்லூரிக்காலங்கள்

'வாலிப வயோதிக
அன்பர்களை'த் தேடும்
விடுதி வைத்தியர்களும்

'அது மிகப் புனிதமானது'
கட்டுரைகளின் நாயகர்களும்

காம்புகள் மட்டும் மூடப்பட்ட
"கவர்ச்சி தப்பில்லை" பேட்டிகளும்

கனவுகளின் சன்னல்களைத்
திறப்பதுவும் மூடுவதுமாய்....

பிறிதொருநாள்...

அரையிருட்டின் ஐந்தாம் நிமிட
இறுதியில்
தோன்றியது

இந்தக் கவிதையை எழுத...

புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை
அது பற்றிய கற்பனைகள்...

திங்கள், 3 மே, 2010

நிரம்பி வழிகிறதென் கோப்பை

இதோ
நிரம்பி வழிகிறதென் கோப்பை

அருந்திக்கொள்ளலாம்
ஆளுக்கொரு ‘ஸிப்’

எங்கள் வலிகளின்மீதான
நிராகரிப்புக்களுக்காக....

எமது துயரங்களை

செய்தித்தாள் எழுத்துக்களாகவும்
ரயில்பயண அரட்டைகளின்
“த்சொ த்சொ”க்களாகவும்

இரண்டுநிமிட மவுனாஞ்சலிகளாகவும்
மாற்றியமைக்காக...

எமது
முலைச்சீலை உரியப்பட்டபோதும்
நீவிர் நிகழ்த்திய
’பாஞ்சாலி சபத’க் காலட்சேபங்களுக்காக...

எமது கண்ணீரோடு
உங்கள் சிங்காதனக் கனவுகளை
சமப் படுத்தியமைக்காக...

இதோ
நிரம்பி வழிகிறதென் கோப்பை

அறுத்தெறியப்பட்ட
எமது அங்கங்களிலிருந்து
வழியும்
குருதியாலும்

உமது பேடிமையாலும்...

யாஹூ மெஸஞ்சரும் சில தேவதைகளும்....- ஹிஸ்டரி 2

தழுவிய சுகம்
உணருமுன்னே
தாண்டிப் போகிறதொரு தென்றல்
உன்னைப்போலவே


”நிரஞ்சனா... வாவ்.. ஸ்வீட் நேம்!” ஆதாம் காலத்து மொக்கையை அட்சரம் பிசகாம ஆரம்பிச்சான் ஆனந்து.

“தாங்க் யூ... உங்க பேரு?” ஒரு மொட்டு இதழ்விரித்தது.

“ஆனந்து.... நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“பி.காம்... நீங்க?”

.... .... ....
.... .... ....
... .... ....

”அழகா பேசுறீங்க நிரஞ்ச்....” நிரஞ்சனாங்கிற கவிதையான பேரு ஆனந்து வாயில இருந்து ஏதோ ‘சிரிஞ்ஜ்’ ’சிரிஞ்ஜ்’ங்கிற மாதிரி வர ஆரம்பிச்சிச்சி

“நீங்களும்தான் இண்ட்ரஸ்டிங்...”

.... .... ....
.... .... ....
.... .... ....
“நான் உங்களை ஆட்(add) பண்ணிக்கலாமா நிரஞ்ச்?”

“ஓ!ஷ்யூர்”

கொஞ்சநாளா வறண்டு போயிருந்த முகிலனுக்கு அன்னிக்கு அடிச்சுது லாட்டரி. மட்டன் பிரியாணியும், V.S.O.P யும், ஒரு பாக்கெட் வில்ஸ் ஃபில்டரும் கண்ணுல பட்டவுடனேயே
வாயில இருந்து குட்டி கூவம் வழிஞ்சோடி மெரினா வழியா வங்காளவிரிகுடால சங்கமமாச்சு..

ஒரு ஸ்மால் உள்ள போனவுடனே உருண்டு பொரள ஆரம்பிச்ச ஆனந்து “ அவ என்னை ஆட் பண்ணிட்டாண்ணே...அவ என்னை ஆட் பண்ணிட்டாண்ணே...”ன்னு ஆலாபனைய
ஆரம்பிச்சான்.

அதுக்குள்ள முக்கால் பாட்டிலை மொக்கியிருந்த முகிலன் காதுல என்ன எழவு விழுந்துச்சோ தெரியல

“மொதல்ல ஆடு பண்ணனும்... அப்புறம்தாண்டா பிரியாணி பண்ணனும்” எடுத்துவுட்டான் எதிர்க்கச்சேரிய.

அடுத்தநாள்ள இருந்து, வயசுப்பொண்ணுங்க வாராவாரம் வெள்ளிக்கிழமை 6 மணியானா கோயிலுக்குப் போற மாதிரி, சாயங்காலம் 6 மணியானா கரெக்டா பக்கத்து ப்ரௌசிங் செண்டர்ல
ஆஜராயிடுவான் ஆனந்து.

பொம்பளப்புள்ளங்ககிட்ட நேர்ல பேசினாத்தானே நம்மாளுக்கு நாக்குல நண்டு கடிச்ச மாதிரி சுளுக்கிக்கும்? இது ஸைபர் ஃப்ரெண்ட்ஷிப்தானே... பரோட்டா கடையில பயில்வான் பூந்தமாதிரி
வீடுகட்டி விளையாட ஆரமிச்சான்.

“உங்களுக்கு என்னல்லாம் புடிக்கும்?” இது அவ

“எனக்கு கவிதைன்னா உசிரு... பாரதியார்லேருந்து வைரமுத்து, தபூஷங்கர்னு எல்லார் புக்கும் படிச்சிருக்கேன்”

“அய்யோ! எனக்கும் தபூஷங்கர்னா ரொம்ம்ம்ம்ப பிடிக்கும்”

“பாருங்க.. நாம எல்லாத்துலயும் ரொம்ப ஒத்துப்போறோம்ல” சைடுகேப்புல சரக்கு ரயிலையே ஓட்டுனான்

அதுக்குப் பிறகு அரியர் எக்ஸாமை அந்தரத்துல பறக்கவிட்டுட்டு அரிஸ்டாட்டில் ரேஞ்சுக்கு புத்தகமும் கையுமா திரிஞ்சான், பின்ன கவிதை படிப்பேன்னு சொல்லியாச்சு. தபூஷங்கரை எல்லாம் தாண்டி
கவிதை எழுதவேண்டாமா?

இப்படியாக கம்ப்யூட்டர்லயே காதல்கோட்டை கட்டிட்டு இருந்த ரெண்டு பேரும் ஒருநாள் மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணி, எங்க பார்க்கலாம்னு ஆன்லைன்ல மெட்ராஸ் மேப்பை ஓப்பன் பண்ணி
அங்குலம் அங்குலமா அலசி ஆராய்ஞ்சி கடேசியா தி.நகர் சிவாவிஷ்ணு கோயில்ல பார்த்து பேசிட்டு நடேசன் பார்க் பக்கமா நடையக் கட்டலாம்னு முடிவு பண்ணாங்க...

வெப்கேம்ல பார்த்தா த்ரில் போயிடும்னு வீராப்புல இருந்த ரெண்டு பேரும் எப்படி அடையாளம் கண்டுக்கிறது? அதான் காலங்காலமா தமிழ் சினிமா காதலுக்கு ஆயிரம் டெக்னிக்கை சொல்லிக்
கொ(கெ)டுத்திருக்கே... இவன் சந்தனகலர் சட்டை கறுப்பு கலர் பேண்ட்... அவ மெரூன் கலர் சுடிதார்.

அடுத்துவந்த நாலுநாளும் ஆனந்தோட ஆக்டிவிட்டீஸ் இருந்ததை பார்க்கணுமே... ‘தேன்குடிச்ச நரி’ உவமைல்லாம் அரதப் பழசு... கஞ்சாவை கஷாயம் வெச்சுக்குடிச்ச சாமியார் ரேஞ்சுக்கு ஒரே அளப்பறைதான்.

அந்த நாளும் வந்தது.

கோயில்ல ஒரு மூலையில மூளை ஆர்வத்துல கொதிக்க கொதிக்க நிக்கமுடியாம நின்னுட்டு இருந்தான் ஆனந்து..

கரெக்டா மணி அஞ்சரை..

கோயில் வாசல்ல மெரூன் கலர் சுடிதார்ல ஒரு சிலிண்டர் உருண்டு வந்துட்டு இருந்தது......

(சாட்டிங் ஹிஸ்டரி தொடரும்)

சனி, 1 மே, 2010

அது எப்படி?

ஒருநாள் கூட
என் தலைவலிக்காய்
நீ
மருந்து தடவியதில்லை

எனது
கவிதைகளை
வாசித்ததில்லை

“இந்தப் புடவை
உனக்கு நன்றாயிருக்கும்”
என்று சொன்னதில்லை

அலுத்திருக்கும் இரவுகளில்
என் சம்மதம்
கேட்டதில்லை

அழுதிருக்கும் பகல்களில்
என்னை
அணைத்ததில்லை

இருந்தும்
வெளியில்
சொல்லிக் கொள்கிறாய்
நீ என் ‘கணவன்’ என்று!

யாஹூ மெஸஞ்சரும் சில தேவதைகளும்....

தணலாய் எரிக்கிறது
காதல்
தாவணியால்
விசிறிவிட்டுப் போ



2002 ஜூன்.

ஒரு சூட்கேஸ், ரெண்டு செட் ஷூ, கையில ஒரு பயோடேட்டாவோட தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்குன ஆனந்துவுக்கு அப்போ தெரியாதுங்க... அவந்தான் இந்த கதையோட ஹீரோனு.

எப்டி இந்த கதைக்கு ஹீரோவானான், யாரு ஹீரோயினு, வில்லன் மத்த வெங்காயம்லாம் அப்றமா வெச்சுக்கலாம்... மொதல்ல ஆனந்து சாப்டர்

பன்னெண்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்ச ஸ்கூல்ல பொண்ணுங்ககூட ஒரு வார்த்த பேசினாலே அடுத்தநாள் ”டேஷுக்கும் டேஷுக்கும் லவ்வுடோய்”னு பரபரப்பு பத்திக்கிற ஊருல மொதொமொதோல்ல எஞ்சினியரிங்க எட்டி பார்த்தவன்.

காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சவுடனே யாருக்கு சந்தோஷமோ இல்ல சோகமோ தெரியாது... ஆனா பட்டில சும்மா கிண்ணுனு திரிஞ்சிட்டுருந்த ரெண்டு கிடாய்க்கு சோகம்... மழைக்கு கூரைகூட
இல்லாம ஏங்கிட்டு இருந்த கலித்தய்னாருக்கு (அதாங்க கலிதீர்த்த அய்யனார்) ஜாலியோ ஜிம்கானா...

அப்பிடி இப்பிடினு ஊருல இருந்த வட்டிக்காரங்ககிட்டல்லாம் பணம்பொரட்டி காலேஜுக்குள்ள நொழஞ்ச ஆனந்துவுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி!

இருக்காதா பின்னே!

எல்லா பொம்பளை புள்ளங்களும் பசங்களுக்கு சரிக்கு சரியா நின்னு பேசிட்டு இருந்தா....?!

நம்மாளுக்கும் என்னிக்காவது ஒருநாள் ஏதாவது ஒரு புள்ளகிட்டயாவது பேசி ஃப்ரண்டாயிடணும்னு ஆசதான்...

என்னத்த பண்றது? பட்டனத்துப் புள்ளைங்க தஸ்ஸு..புஸ்ஸுனு இங்கிலீஷ் பேசுறத பாத்தாலே ஏதோ பாம்பு புஸ்ஸு புஸ்ஸுனு மூச்சுவிடற மாதிரி ஃபீலிங்கு... ராத்திரி பூரா கெட்ட கெட்ட கனா..

ம்ஹும்.. நாலு வருசமும் பொட்டப்புள்ளங்கள பார்த்து ஜொள்ளு விட்ருக்கானே ஒழிய ஒரு சொல்லு விட்டதில்ல

ஒருவழியா 10 அரியரோடயும், கேர்ள்ஃப்ரண்ட் ஆசை நிறைவேறாத ஏக்கத்தோடயும் சென்னையில கால்வெச்ச ஆனந்துவுக்கு திடீர்னு டார்ச் லைட் (சிகரெட் லைட்டர்னும் வெச்சிக்கலாம்)
வெளிச்சத்த பாய்ச்சினான் முகிலன்.. அவன் காலேஜ் சீனியர்... இப்போதைக்கு ஐடியாமணி (பின்ன... சிகரெட்டு, தண்ணி, அக்கா கடை பரோட்டா, ஆஃப் பாயிலுக்கு இந்த மாச உபயதாரர் ஆச்சே!)

ஓவர் டு முகிலன் - ஆனந்து

”பொண்ணுங்கள ஃப்ரண்ட் புடிக்கறதெல்லாம் ஒரு மேட்டரே இல்லடா... யாஹூ மெஸஞ்சர் போ! அங்க இருக்கும் ஆயிரம் ஃபிகரு.. ஈசியா புடுச்சிக்கலாம்”

”அது எப்டிண்ணே! நம்மள எப்டி நம்புவாங்க? அப்டீல்லாம் பேசுவாங்களா?”

“ட்ரை பண்ணி பாருடா! நானே நாலு ஃபிகர்கூட இப்போ பேசிட்டு இருக்கேன்”

ஆனந்து கண்ணுக்கு முன்னாடி இப்போ ஆல்பர்ட்டு ஐன்ஸ்டைன், ஐசக் நியூட்டன் எல்லாரும் தெரிய ஆரம்பிச்சாங்க... முகிலன் ரூபத்துல..

கைல இருந்த அம்பது ரூபாவோட ப்ரௌசிங் செண்டர்குள்ள நுழைஞ்சு ஆனந்து க்ரியேட் பண்ண ஐ.டி anand_chem.engg@yahoo.com.( அய்யா எஞ்சினியர்னு சொன்னாக்கத்தான் ஃபிகர் மடியுமாம்...
உபயம் முகிலன்)

இனி ஆனந்துவும் யாஹூ மெஸஞ்சரும் சில தேவதைகளும்....

“ஹாய்..”.

”ஹாய்...”

“ஹௌ ஆர் யூ?”

“ஃபைன். யூ?)

“யா.ஃபைன்”

"asl pls?"

"m,21,ch, engg... யூ?"

”மீ டூ.. பை”

என்னடாது எழவாப் போச்சு! எங்க பார்த்தாலும் சுத்தி சுத்தி பசங்களாவே வர்றானுங்களேனு யோசிக்க ஆரம்பிச்ச ஆனந்து ஆறு மாசத்துல மெஸஞ்சர்ல ஒரு நூற்றாண்டுப்போரையே நடத்தி கடேசியா
புடிச்சான்யா ஒரு ஃபிகர....

“ஹாய்”

“ஹாய்”

”asl pls?" (இப்போல்லாம் ஆனந்து டைம் வேஸ்ட் பண்றதே இல்ல... ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வந்துடறது.. ”நீ ஆணா பொண்ணா?")

“f,20,கோயமுத்தூர்”

ஆனந்துவுக்கு மண்டைக்குள்ள மணியடிக்க ஆரம்பிச்சது... கண்ணுக்கு முன்னாடி பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சது.... டெம்போரல் லூப்புக்குள்ள கஜோல் ரேஞ்சுக்கு ஒரு பொண்ணு வந்து “ ஊ... லலல்லா” பாட ஆரம்பிச்சா

“யுர் நேம்?”

“நிரஞ்சனா”

( சாட்டிங் ஹிஸ்டரி தொடரும்)
Related Posts with Thumbnails