செவ்வாய், 31 ஜனவரி, 2012
ஞாயிறு, 1 ஜனவரி, 2012
மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் 4
ரொம்ப காலமாச்சுது என் ப்ளாக்கைத் தொறந்து. கூகிள் பஸ்ல டெண்டடிச்ச பொறவு ப்ளாக் பக்கம் வரவே மனசு தோணலை. கூகிள் பஸ் ஒரு குறும்புக் குழந்தை. சிலீர்னு சிரிக்கும்.. அப்பிடியே அசந்த நேரம் பாத்து வெரலைக் கடிச்சி வைக்கும்.. தோணிச்சின்னா நம்ம மேல ஒண்ணுக்கடிக்கவும் செய்யும். துறுதுறுன்னு ஓடியாடி எல்லாத்தையும் கலைச்சிப் போட்டுக் கெறங்கடிக்கும். அது ஒரு அனுபவம்டா சாமீ! திடீர்னு ஒரு நாளு குழந்தை திடீர்னு காணாமப் போயிடிச்சி. அழுவுற புள்ள வாயில குச்சிமுட்டாய சொருவுற மாதிரி கூகிள் ப்ளஸ்னு ஒன்னைச் சொருவிட்டானுங்க கூகிள் காரனுங்க. அப்டியே ஒரு மாதிரி சமாளிச்சி அட்ஜஸ்ட் பண்ணி ப்ளஸ்லயும் ஓட ஆரமிச்சாச்சின்னு வைங்களேன். நேத்திக்கு ஏதோ தேடப்போயி நம்ம பபாஷா ப்ளாக் பக்கம் மேய்ஞ்சிட்டு இருந்தப்ப "மூன்றாவது பெர்த்- உமா சீரிஸ் 3" ரிலே ரேஸ் கதை கண்ணுக்குப் பட்டிச்சி. ரெண்டு மூணு மாசம் முன்னாடி இருக்கும்னு நினைக்கிறேன். மணிஜியோட ஃபேவரைட் உமாவை வெச்சி ஒரு ரிலே ரேஸ் தொடர்கதை எழுதலாமேன்னு மணிஜி ஒரு ஸ்பார்க்கைக் கெளப்ப விதூஷ் தூபம் போட, விதூஷ், மணிஜி, பபாஷா, நேசமித்திரன், நம்ம பாரா சித்தப்பூ, மனசை அள்ளுறா மாதிரி கவிமழை பொழியிற லதாமகன், அப்புறம் நானு எல்லாருமா இந்த ரிலே ரேஸ் தொடரை எழுதலாம்னு ஒரு பேச்சி. நான் அப்டியே மறந்து தொலைச்சிட்டேன். மப்புல பேசுறது எது நம்மளுக்கு ஞாவகம் இருக்கு. இப்பப் பாத்தா அப்டியே ஆடி மாசக்காவேரி மாதிரி அலை அலையா பொரளுற கூந்தலை அசால்ட்டா ஒத்தக்கையால ஒதுக்கிக்கிட்டு அச்சு அசலா முன்னாடி வந்து நிக்கிறா உமா. "சம்முவம்..எட்றா வண்டிய"ன்னு நானும் களத்துல குதிச்சிட்டேன். இதோ "மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் 4".
மொதோ மூணு பார்ட்டும் படிக்க அப்டியே இங்கிட்டு போங்க..
விதூஷ் : மூன்றாவது பர்த் (உமா சீரிஸ் - ரிலே ரேஸ் கதை)
மணிஜி: மூன்றாவது பர்த் ...உமா சீரிஸ் -2
பலாபட்டறை ஷங்கர்: மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.
***********************************************************************************
..."ரகுநாதன்" என்றான் ஸ்வீட்டாக!
பெண்களிடம், அதுவும் என்னை மாதிரி அழகான பெண்களிடம் பேசும்போது மட்டும் ஆணின் குரல் அபாரக் குழைவைப் பெற்றுவிடுவது எனக்கு எப்போதும் ஆச்சர்யம்தான். அபூர்வமாக, குரலில் வேண்டுமென்றே கொஞ்சம் கடுமையை ஏற்றிக்கொண்டு பேசும் ஆண்கள்கூட 'தப்பித்துக் கொள்ளும்' மனோபாவத்தில் பேசுவதாக எனக்குத் தோன்றுவது அங்குமிங்கும் நான் அரைகுறையாகப் படித்த ஃப்ராய்டின் பாதிப்பால்கூட இருக்கலாம். எனக்கு மீண்டும் இந்த ரிலே ரேஸ் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தில் மணிஜி குறிப்பிட்ட "கன்னியர் தம் கடைக்கண்ணை காட்டி விட்டால் காளையருக்கு மாமலையும் சிறு கடுகாம் “ வரி ஓடத் துவங்கியது. முதல் அத்தியாயத்தைத் தொடங்கி என்னை மீண்டும் 'லைம்லைட்'டுக்குக் கொண்டுவந்த விதூஷுக்கு வேறு உடம்பு சரியில்லையாம். சென்னை போய் இறங்கிய பின் ஒரு தடவை நேரில் சென்று நலம் விசாரித்துவர வேண்டும்.
இப்போது முழுசாக அவனை நோட்டம் விட்டேன். ஆள் ஜம்மென்றுதான் இருக்கிறான். முகத்தில் ஒரு 'ஃப்ரீக் அவுட் பாய்'க்கான குறும்பும், தன்னம்பிக்கையானவன் என்பதற்கான வெளிச்சமும் சரிசமமாகப் பரவி இருந்தது. பெரும்பாலான பெண்களுக்கு இந்த மாதிரி மிக்ஸிங்கில் இருக்கும் ஆண்களை மிகவும் பிடித்துவிடும் இல்லையா? எனக்கும்தான்! அச்சச்சோ.. நீங்கள் விபரீதமாக எதையும் கற்பனை செய்து தொலைத்து விடாதீர்கள்.. நீங்கள் நினைப்பதுபோல இல்லை. அவ்வப்போது என்னைப் பார்த்து ஏதோ யோசிக்கிறான் போல!
வழக்கமாக என்ன யோசிப்பார்கள்?
"அழகான பெண்களுக்கு வாய்க்கும் புருஷன்மார்களெல்லாம் முன்வழுக்கையோடும், சரிந்த தொந்தியோடும் இருப்பார்கள்" என்றுதான் யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன். புருஷன் இடத்தில் தன்னை ரீப்ளேஸ் செய்துகொள்ளும் தற்காலிக சந்தோஷம்! அவ்வளவு ஈஸியா என்ன ஒரு பெண்ணை விழவைப்பது? ச்சை! ரொம்பவும்தான் ஃப்ராய்டுத்தனமாக யோசிக்கிறேன்.
"என்னங்க.. பேரைக் கேட்டீங்க, அப்டியே யோசனையில ஆழ்ந்துட்டீங்க போல! என் பேருல ஏதாச்சும் விசேஷம் இருக்குதா என்ன?"
தூண்டில்!தூண்டில்!!
"இல்லைங்க ரகு! சும்மாதான்!"
ரகு.. ரகு.. பேரைச் சுருக்கிக் கூப்பிட்டாச்சு..செத்தான் இனி!
"தாங்க்ஸ்ங்க" என்றான்.
"எதுக்கு?"
"ரகுன்னு ஷார்ட்டா கூப்டதுக்கு" என்று சிரித்தான். ரோஸ் நிறத்தில்.. பளீரென்று...இன்னும் சிகரெட்டால் கற்பழிக்கப்படாத ஆரோக்கிய ஈறுகள்... கிள்ளலாம் போல!
"யூ ஆர் சச் அன் இண்ட்ரஸ்ட்டிங் கோ பேஸஞ்சர் ரகு"
மீண்டும் சிரித்தான்.
ரமணனின் ட்ரேட் மார்க் சிரிப்பு!
பாவி..ரமணா! இத்தனை வருஷங்கள் ஓடிய பிறகும்.. நொடிக்கு நொடி.. பாரதிக்கு நந்தலாலா.. எனக்கு ரமணன்
"கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா"
[ காக்கைச் சிறகினிலே - துள்ளாத மனமும் துள்ளும்]
லேசாகப் பொங்கித் தளும்பி சின்னக் கோடாய்க் கன்னம் வழியே கீழிறங்கியது.
"ஹலோ! என்னாச்சுங்க... திடீர்னு?"
ரகுவின் குரல் மீண்டும் ட்ரெய்னுக்குள் இழுத்து வந்தது.
"நத்திங் ரகு. திடீர்னு என்னென்னமோ ஞாபகம். ஸாரி..வெரி ஸாரி"
ஜன்னல் கம்பிகளில் கன்னத்தைச் சாய்த்து ஒரு கையை முட்டுக்கொடுத்தபடி பார்வையை வெளியே மாற்றினேன். அசுரவேகத்தில் ரிவர்ஸில் ஓடிக் கொண்டிருந்த வெளிச்சப்புள்ளிகள்.. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ரமணன். "“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” என்ற ரமணன்... " தமிழால் மட்டும் இல்லையடி பெண்ணே.. உன்னாலும்தான்" என்று குறும்பாய்ச் சிரித்த ரமணன்... கம்பனையும் ஷெல்லியையும் காதலிக்கக் கற்றுத்தந்த ரமணன்... ஃப்ராய்டு,நீட்ஷே, சார்த்தர், நெரூதா என்று ஜன்னல்களை விரியத் திறந்த ரமணன்...
களிமண்ணாய் இருந்த உமாவைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய ரமணன்...
மூளைச் சிதறல்கள் சுற்றிலும் தெறித்துக் கிடக்க வெறித்துப்போன விழிகளுடன் மல்லாந்து கிடந்த என் ரமணன்...
எனக்கு அழவேண்டும் போல இருந்தது.
மெல்ல எழுந்து நடந்து பாத்ரூமை நெருங்கி, உள்நுழைந்து தாழ்ப்பாளிட்டேன்.
ஒரு பாட்டம் அழுதுதீர்த்து, முகம் கழுவித் துடைத்துக்கொண்டு பாத்ரூம் கதவைத் திறந்து வெளியே வந்தேன்.
அங்கே... அங்கே...
டிஸ்கி: இந்த ரிலே ரேஸ் கதையின் அடுத்த பாகத்தைத் தொடர கூகிள் பஸ், ப்ளஸின் டான் அண்ணன் ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி முன் வந்திருக்கிறார். மேலும் பாரா சித்தப்பூ, நேசன், லதாமகன் ஆகியோரையும் அழைக்கிறேன்
இன்னின்ன விதம்
சிறுகதை,
ரிலே ரேஸ் தொடர்கதை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)