வியாழன், 10 பிப்ரவரி, 2011

ப்ரிய ஜெனீ....

ப்ரிய ஜெனீ,
கடிதங்கள் தீண்டாத் தொலைவில் இருந்து என்னை எப்போதும் எழுதவைத்துக் கொண்டிருக்கும் என் சகீ! என் முடிவுறாப் பயணம் முழுதும் நான் தேடிக் கொண்டிருப்பது தொலைந்துபோன உன் பிம்பம்தான் என்பதை நீ அறிவாயா? காற்றுவெளியெங்கும் கிளைத்துக் கொண்டிருக்கின்ற என் விழுதுகள் உன் அன்பின் ஈரம் தேடியபடியே! அந்தியில் கருத்தரித்த மென்பனித்துளிகளை ஒன்றோடொன்று காதலோடு உரசிக் கொண்டிருக்கும் மெல்லிலைகளிலும், புல்லிதழ்களிலும் பிரசவித்தபடி மெல்லமாய் நகர்ந்துகொண்டிருக்கும் நள்ளிரவு உன் காதலின் வாசனையைப் பரவவிட்டபடி என்னை அணைத்துக் கொண்டிருக்கின்றது. நாம் நம்மோடு கலந்திருந்த நாட்கள் நட்சத்திரங்களாய் மாறிச் சிதறிக்கிடக்கின்றன. நினைவுகளை மூட்டையாய்ச் சுமந்தபடி வசந்தம் கடந்துசென்ற பாதையில் அடியொற்றி நடக்கிறேன்.

அன்பே ஜெனீ,
"நாம் பிரிந்தபோது கண்ணீரும் அமைதியும் மட்டுமே இருந்தன" என்றொரு வாசகம் படித்திருக்கின்றேன். நாம் பிரிந்தபோது கூடுதலாய் இன்னொன்றும் இருந்தது... மிச்சமிருந்த காதலும்! இல்லையா? என் தொடைகளில் கைதாங்கி, மார்பினில் தலைசாய்த்து அமர்ந்திருந்தாய் நீ! தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த ஆட்டுக்குட்டிக்கும் உனக்கும் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடித்தவாறு இருந்தேன் நான்! பிரிவின் வாசகங்களுக்கு ஒத்திகை பார்த்தபடி வார்த்தைகளை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்தோம் நாம்! உறைந்திருந்த காலத்திலிருந்து வழிந்துகொண்டிருந்தது உளிச்சத்தம்... 'நமது' என்றிருந்தவற்றையெல்லாம் 'எனது' என்றும் 'உனது' என்றும் செதுக்கியபடி... ஆனாலும் எனக்குப் புரிபடவில்லை 'நமக்கு' என்றிருந்த கற்பனைக் குழந்தையைக் காணாமலடிப்பது எப்படியென்று!

ஜெனீ,
நிலவைத் தொலைத்துத் தனித்திருந்த கரிய இரவொன்று என் ஸ்நேகம் தேடி வந்தபோது, "அப்படி என்னதான் இருக்கோ இந்தக் கருமத்துல" என்று இருமிக்கொண்டே முதலும் கடைசியுமாய் நீ புகைத்த சிகரெட் துண்டு சுமந்து கொண்டிருக்கும் உன் இதழ்ரேகைகளைக் கோர்த்து நான் எழுதிக் கொண்டிருந்தேன் எனது கானல்வரிகளை... முன்னம் நீ கைகோர்த்திருந்த விரல்களைக் கதறக்கதறத் தேய்த்துக் கிழித்துக் கிழித்து எழுதிக் கொண்டிருக்கிறேன் இறந்துபோன ஒரு காதல்கதைக்கான அஞ்சலிக் குறிப்புக்களை...காதலை எப்படிக் காகிதங்களுக்குள் உறையச் செய்வது என்றும்...என் குருதியை திராட்சைரசமாகவும், என் உடலத்துணுக்குகளை அப்பமாகவும் நம் காதலுக்கான இறுதி விருந்தென நீ பரிமாறிச் சென்ற பொழுதுகளின் இடைவெளியினின்றும் கசிந்துகொண்டிருக்கும் வார்த்தைகளைக் கோர்த்தெடுத்தபடியும்...

தேவதா ஜெனீ,
காய்ந்து கரைந்துபோன ஆற்றின் தடம்பிடித்து ஒற்றையாய் நடந்துகொண்டிருக்கும் பயணத்தினூடே மனதின் தகிப்பைக் கண்களின்வழி வழியவிட்டுப் பாடிப்போகிறேன் ஒரு ஒப்பாரிப்பாடலை... காதல் சுமந்த கணங்கள் காணாமல்போனபின்பு எனதுடலைச் சுமக்கும் கனம் என்னை அழுத்தியபடித் தள்ளாடித் தொடரும் பயணத்தின் இறுதிப்புள்ளியைத் தேடிக்கொண்டும்...

ஜெனீ... என் குட்டிப் பிரபஞ்சமே,
பிரசவிக்கப்படாத நம் குழந்தையைப்போலவே உறைகிழிக்கப்படாமலேயே இற்று உதிர்ந்துபோவதற்காக எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த முற்றுப்பெறாத கடிதத்தில்....

( கடந்துபோன காலங்களின் நினைவுகளைக் கண்ணீரால் கழுவிவிட்டுக் கொண்டிருக்கும் நண்பனின் கத்தை கத்தையான காதல் கடிதங்களையும், கதைகளையும் "ரகுநாதனின் டைரிக் குறிப்புகள்" என்ற பெயரில் தொகுப்பாக வெளியிடலாம் என்று உத்தேசித்து உளுத்துப்போன அவனது பழைய பையை பீராய்ந்தபோது கிடைத்த இந்தக் கடிதத்தின் இரண்டாம் பாகமாக ஜெனீ அவனுக்கு எழுதப்போகும் பதில்கடிதத்தை வெளியிடலாம் என்று உத்தேசம்...)

8 பேரு கிடா வெட்டுறாங்க:

vasu balaji சொன்னது…

வார்த்தையில் பின்னூட்டமிட முடியாது இதற்கு. கனத்த மனதும் மௌனமுமே இதற்குச் சாட்சி.

காமராஜ் சொன்னது…

ஆஹா இந்தக்கதல் இருக்கிறதே அள்ளும் கிள்ளும் அழவைக்கும் அருகிருந்து வருடிக்கொடுக்கும்.

Unknown சொன்னது…

ரைட்டு... இது முதல் மரியாதை ...

Anbu சொன்னது…

ஜி, கலக்குரீங்க போங்க.

இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

ஜோதிஜி சொன்னது…

நம் இருவரின் வயதும் சிந்தனைகளும் வெவ்வேறாக இருப்பதால் இது போன்ற கடந்து வந்த நிகழ்வுகள் ஒரு சம்பவமாகத்தான் மனதில் இருக்கிறது. கடந்து போகும் சாலையில் ஓரத்தில் இருட்டில் தினமும் நான் பார்க்கும் பலரின் பாதிப்புகளும் மனதில் வந்து போகின்றது.

ராஜவம்சம் சொன்னது…

வலிகள் நிறைந்த கடிதம் பலரின் உண்மை நிலைபோல்.

Philosophy Prabhakaran சொன்னது…

// பீராய்ந்தபோது //

இதென்ன புதிய சொலவடையாக இருக்கிறது...

Unknown சொன்னது…

கனமான வார்த்தைகளை கொண்டு காதலை கோர்த்து இருக்கிறீர்கள்... என் பாராட்டுக்கள் தம்பி..

Related Posts with Thumbnails